திமிங்கல பாஜக தின்று செறிக்கவுள்ள இரு தமிழக கட்சிகள்!

-சாவித்திரி கண்ணன்

சமீபகால நிகழ்வுகள் சந்தேகமின்றி தனித்திருக்கும் தவெகவையும், கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவையும் விழுங்குவதற்கு பாஜக காய் நகர்த்தி வருவதை கட்டியம் கூறுகின்றன. திரளான வெகுஜனங்களின் ஆதரவு பெற்ற இரு மாநில கட்சிகளும் பாஜகவிடம் இருந்து துணிந்து விடுபடுமா? அதற்கு செய்ய வேண்டியது என்ன..?

பெயர் தான் தமிழக வெற்றிக் கழகம்…!

மாற்றத்திற்கான தேவை,

பெரும் இளைஞர் படை,

இரு திராவிடக் கட்சிகளையும் மாறி, மாறி அரியணையில் ஏற்றியதில் ஏற்பட்ட சலிப்பு …

ஆகியவை த.வெ.கவிற்கு சாதகமான அம்சங்களாக இருந்தன…!

ஆனால், தேர்தல் வருவதற்கு முன்பாகவே அதன் அரசியல் நகர்வுகள் தோல்வியை நோக்கி விரைவது எதிர்பாராத ஒன்றாகும்.

அரசியல் என்பது எதிர் நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்த களமாகும்.

வீசப்படும் பால்களை எல்லாம் திருப்பி அடிக்காமல், பேட்டை வெறுமனே வைத்து நின்று கொண்டிருந்தால்…, கவர்ச்சிக்காக கூடிய கூட்டம் மெல்ல, மெல்ல கரையத் தானே செய்யும்…!

ஆம், த.வெ.கவின் கவர்ச்சி அரசியல் தற்போது தடுமாறிக் கொண்டுள்ளது…!

தான் யார்? என்று தன்னையே மக்களுக்கு வெளிப்படுத்த முடியாத  தனிமை விரும்பிகள் தலைவர்களாக ஆனதாக சரித்திரமில்லை.

மக்களுக்கான தலைவர் என்றால், அந்த தொண்டுக்கு தோள் கொடுக்க வருபவர்களை சந்திப்பதிலும், அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவது தான் இயல்பு…!

தன்னைச் சுற்றிலும் இரும்பால் வேலி அமைத்து,

தன் இருப்பை எப்போதும் இருளுக்குள் நுழைத்து,

பொறுப்பில் இருப்போர்களையும் சந்திக்க மறுத்து,

நெருப்பாய் எரியும் உள்கட்சி பகைகளை உதாசீனப்படுத்தி,

தன்னை நம்பி வந்தோர்களை தவியாய் தவிக்கவிட்டு,

கண்ணைக் கட்டி காட்டில்விட்ட கதையாய் – இன்னும்

எத்தனை நாட்கள் இந்த இயக்கம்  பயணிக்க முடியும்…?

விஜய் தன்னை முதலில் தனிமையில் இருந்து முற்றாக விடுவித்துக் கொண்டு, பொது மனிதனாக மக்களோடு கலக்க வேண்டும்.

‘ஆட்சிக்கு வர முடியாத ஆரம்ப நிலையிலேயே கட்சி பொறுப்புகளைக் கொண்டே கல்லா கட்டி வரும் நிர்வாகிகளின் கைகளை கட்டிப் போட முடியவில்லை’ என்பதற்கு விஜய்யின் அரசியல் அனுபவமின்மையே காரணமாகும்.!

எந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்றாலும், அதற்கு பணம் ஒன்றே தகுதி. ‘மாவட்ட பொறுப்பு தொடங்கி கிளை பொறுப்பு வரை காசில்லாமல் பெற முடியாது’ என்றுள்ள இந்தக் கட்சியின் நிலைமை மாற வேண்டும்.

ஒவ்வொரு பொறுப்பில் இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் கீழே இறக்கி அந்த இடத்தை தான் அடைவதற்கு இடையறாத  யுத்தம் நடத்திக் கொண்டிருந்தால், இவர்களுக்கு மக்கள் பிரச்சினை பற்றி சிந்திக்கவே நேரம் எங்கு கிடைக்கும்…?

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் என்ன நடந்தது..? தன் தவறுகள் என்ன? என்ற சுயபரிசோதனையும் இல்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிரிகள்  ஆதாய அரசியல் நடத்தி, அபரிமிதமாக பலனடைந்ததைக் குறித்த படிப்பினையும் பெறவில்லை.

இதோ இப்போது சி.பி.ஐ மூலம் அரசியல் அழுத்தம் தரப்படுகிறது. ”நான் உன்னை எப்படி அடித்தாலும் நீ வெளியே போய்  அழப்போவதில்லை. அடங்கி அடக்கம் காண்பித்து காரியம் சாதிக்கலாமா என்று பார்க்கிறாய். மவனே நீ மாட்டிக் கொண்டாய். வந்துவிடு கூட்டணிக்கு! நீயெல்லாம் தனியாய் நின்று ஒன்றும் கிழிக்க முடியாது..” என்று தூக்கி வைத்து நொங்கு எடுக்கிறார்கள்.

காவல்துறை கெடுபிடிகளுக்கே பல இடங்களில் தவெகவினர் கவிழ்ந்து போனால், அரசியல்வாதி என்பதற்கே… அர்த்தமில்லை.

ஜனநாயகன் படத்திற்கு ஏன் தடை போட்டீர்கள்? ஏன் என அரசியலை முளையிலேயே கிள்ளி எறிய துடிக்கிறீர்கள்…? என துடித்தெழுந்து போராட்டம் நடத்தும் அறச் சீற்றம் அறவே இல்லாத ஒருவர், அரசியல் தலைமைக்கே அருகதையற்றவர் என்று தான் பொருளாகும்.

தேர்தல் வெற்றி என்பதை திருடிச் செல்ல காத்திருக்கும் பழம் தின்று கொட்டை போட்ட இரு திராவிடக் கட்சிகளும், த.வெ.கவின் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு நிகழ்த்தப் போகும் ஆள் தூக்கி கண்ணாமூச்சி விளையாட்டில் தப்பிப் பிழைப்பது அரிதினும் அரிதாகும். அப்படியே ஒரு சிலர் தப்பினாலும், பூத்தில் நடக்கும் புரியாத மாய்மாலங்களால்  வெற்றியின் முகவரியே மாறிவிடும்.

மொத்தத்தில் அனுபவமுள்ள பாரம்பரியமான பழைய வலுவான கட்சி ஒன்றை கூட வைத்துக் கொள்ளாமல், தேர்தல் தில்லுமுல்லுகளையும், தகிடுதத்தங்களையும் த.வெ.கவால் ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது. தனித்து நின்று தழைத்தோங்குவதற்கான வாய்ப்பு தவெகவிற்கு அறவே இல்லை என்பதே நிதர்சனம்.

காங்கிரசோடு சேரும் வாய்ப்பில் களம் இறங்கத் தயாரின்றி, வேடிக்கை மட்டுமே பார்த்த காரணத்தால், அந்த வாய்ப்பும் நழுவிவிட்டது.

பாஜகவும், எதிரி திமுகவும் எதிரி என்ற நிலைபாட்டை விஜய் முதலிலேயே திட்டவட்டமாக அறிவித்த நிலையில், அதிமுகவோடு ஆரம்பத்திலேயே கை கோர்த்திருக்கலாம். அலட்சியமாக அதிமுகவை டீல் செய்த காரணத்தால், அந்த இடைவெளியில் பாஜக பாய்ந்து வந்து அதிமுகவை அள்ளிச் சென்று விட்டது.

நிர்பந்தத்தால் நிகழ்ந்த உறவென்பதால், அதிமுகவும் சங்கடங்களுடனேயே பாஜகவுடன் வலம் வருகிறது. அதிமுகவின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் பாஜகவின் கூட்டணியை விரும்பவில்லை. கூட இருந்தே குழி பறிக்கும் அதன் அரசியலை அனுபவ பூர்வமாகவே அறிந்து கொண்டனர். பாஜகவின் நகர்வுகள் அனைத்தும் முதலில் அதிமுகவை அரவணைத்து பலவீனப்படுத்தி, அப்புறம் திமுகவை மெல்ல வீழ்த்திக் கொள்ளலாம் என்பதாக இருக்கிறது.

இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடித்துக் கொண்டு, முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆக்டோபஸ் தான் பாஜக. ஒரே ஒரு முறை அது கூட்டணி மூலம் தமிழகத்தில் தடம் பதித்தால் கூட, அதற்கு பிறகு அதன் வளர்ச்சியை தடுப்பது அரிது. எனவே, முளையிலேயே அது அதிகாரத்திற்கு வருவதற்கு தடை போட வேண்டும். தமிழகத்தில் மதவெறி அரசியல் மலர்வதற்கு முட்டுக்கட்டை போட இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

ஆகவே, பாஜகவினால் பாதிப்புக்கு உள்ளாகும் அதிமுகவும், த.வெகவும் முதலில் தங்களை தற்காத்துக் கொள்ள உடனடியாக துணிந்து – பாஜகவின் அழுத்தத்தில் இருந்து – தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இந்த இரு கட்சிகளும் ஒன்று சேர முடியுமானால், அவர்களும் அழிவில் இருந்து தப்பி பிழைக்கலாம். அத்துடன் தீவிரமாக முயன்றால், வெற்றிக் கனியை பறிக்கவும் வாய்ப்புள்ளது.

இதனால் எல்லாம் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடிவிடாது. அந்த மாபெரும் தேசியத் திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று மடியவுள்ள  பெருந்திரளான மக்களின் ஆதரவை பெற்ற இரு தமிழக கட்சிகள் காப்பாற்றப்படும் என்பதால் சொன்னோம். அவ்வளவே!

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time