திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எரிவாயுத் தட்டுப்பாடு!

-சாவித்திரி கண்ணன்

இந்த இக்கட்டான சூழலைத் தான் எதிர்பார்த்திருந்தனர். அன்று அபரிமிதமாக இந்தியாவிற்கு ரஷ்யா மிக மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த போதும் சரி, தற்போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஆயிலை இறக்குமதி செய்வதிலும் சரி மோடியின் உற்ற நண்பரே அட்டகாசமாக லாபம் ஈட்டுகிறார்;

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்ததின் விளைவாக சமையல் உபயோகத்திற்கும், வாகன ஓட்டத்திற்குமாக பொது மக்கள் பயன்படுத்தும் கேஸ் எனப்படும் எரிவாய்வு பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கேஸ் மூலம் ஓட்டப்படும் பல லட்சம், ஆட்டோக்களும், பல லட்சம் கார்களும் இன்று முதல் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதற்கும் இரு நாட்கள் முன்னதாகவே பல சிறு, பெரு நகரங்களில் கேஸ் சிலிண்டர்கள் பற்றாகுறையால் ஹோட்டல்களின் செயல்பாடு 50 சதவிகிதம் ஸ்தம்பித்துள்ளது. விமான கட்டணங்களையும் ஏற்றிவிட்டார்கள். எரிவாயு சார்ந்த பற்பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புனேயில் ஒரு சுடுகாடே பிணங்களை எரிக்க வழியின்றி மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில், எல்பிஜியைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 33 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. கடந்த பல மாதங்களாகவே இதை உலகமே எதிர்பார்த்தது. போர் உருவானால் ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூட நேரும் என்பதும், அதனால் உலக நாடுகள் பலவற்றின் வணிகமும், வாழ்வும் பாதிக்கப்படும் என்பதும் எதிர்பாராதது அல்ல.  குறிப்பாக இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்பது மிக நன்றாக உணரப்பட்ட உண்மை.

இந்தச் சூழலில் மத்திய ஒன்றிய அரசு என்ன செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்காவது தாக்குபிடிக்கும்படியான கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பெட்ரோலிய அமைச்சர் , ‘நமக்கு 72 நாட்களுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. LPG கையிருப்பும் உள்ளது, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

ஆனால், தற்போது தட்டுப்பாடு என்று சொல்லி  சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதோடு, அதிக விலைக்கும் கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளது.  இதெல்லாம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த இக்கட்டைப் பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க பாஜக அரசு துணை போவதையே காட்டுகின்றன.

இதனால் தான் இவ்வளவு சீக்கிரமாகவே வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. எல்பிஜி-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாம் யாரிடம் இருந்து எதை இறக்குமதி செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என தீர்மானிக்கும் அதிகாரத்தை அமெரிக்காவிடம் தந்துவிட்டது, இந்தியாவை ஆளும் பாஜக அரசு.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை சகாய விலைக்கு பல்லாண்டுகளாக  தந்து கொண்டிருந்தது ஈரான். அந்த ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2017 ஆம் ஆண்டே அமெரிக்க கட்டளைப்படி நிறுத்திய  அரசு தான் நமது பாஜக அரசு.

ரஷ்யா – உக்ரைன் போரின் போது ரஷ்யாவிற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்த தடை காரணமாக நம்ப  முடியாத மலிவு விலையில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை கப்பல் கப்பலாக இறக்கியது ரஷ்யா. அதன் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது அம்பானியின் ஆயில் நிறுவனம். இது அமெரிக்காவின் கோபத்தைக் கிளறி, இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் அனைத்துக்கும் 50 சதவிகித வரி விதித்து வாட்டியது.

அமெரிக்காவின் நோக்கம் அனைத்து அரபு நாடுகளும் எண்ணெய் வளத்தால் தான் செழித்தோங்கி உள்ளன. அதனால் அவற்றின் எண்ணெய் வளத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு போரை நிகழ்த்துவது என்பது தான்.

இதனால் தான் ஒன்றுபட்டிருந்த அரபு நாடுகளுக்குள் பூசல்களை உருவாக்கி இன்று தன் கட்டுப்பாட்டில் பல அரபு நாடுகளை வைத்துக் கொண்டு, ஈரான் மீது போர் தொடுக்கின்றன, அமெரிக்காவும், இஸ்ரேலும். இந்த அரபு நாடுகளில் தன் போர்த் தளவாடங்களையும் வைத்துக் கொண்டு அமெரிக்கா ஈரானை மிரட்டியதால், ஈரான் இந்த அரபு நாடுகள் மீதும் ராக்கெட் ஏவுகணைகளை விட்டு, சேதாரத்தை உருவாக்க நேர்ந்தது. குறிப்பாக எண்ணெய் வளம் அதிகமுள்ள கத்தார் இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவும் அதனை கைவிட்டது. எந்தெந்த நாடுகள் எல்லாம் கத்தார், சவுதி அரேபியா போன்றவற்றில் இருந்து எண்ணெய் வாங்கினார்களோ, அவை எல்லாம் இனி தங்களிடம் வாங்கலாம் என அமெரிக்கா கூறியதோடு, சப்ளையையும் ஆரம்பித்துவிட்டது. எனவே, எந்த நோக்கத்திற்காக அமெரிக்கா போர் தொடுத்ததோ, அந்த நோக்கத்தை அது நிறைவேற்றி வருகிறது.

”எரிசக்தி துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது” என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆம், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அம்பானியின் ஆயில் நிறுவனத்திடம் அமெரிக்கா 300 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போட்டு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பித்துவிட்டது.

இனி  அமெரிக்க கச்சா எண்ணெய் காரணமாக இந்தியாவில்  பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் தாறுமாறாக ஏறும். அத்துடன் இவை சார்ந்த பொருட்களின் விலையும், போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும். பல தொழில்கள் முடங்கலாம். பலரது வேலை வாய்ப்பு பறி போகலாம். அதே சமயம் இந்திய எரி பொருள் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்தும், அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதிலும் தொழில் அதிபர் அம்பானி அதிக லாபம் பார்ப்பார் என்பது உண்மை.

மொத்தத்தில் மோடியின் உலகளாவிய எஜமானரான டிரம்ப்பும், இந்திய எஜமானரான அம்பானியும் கன ஜோராக லாபம் பார்க்க இந்திய மக்கள் இளிச்சவாயர்களாக்கப்படுகின்றனர்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time