தில்லுமுல்லுகளின் வழியே ஒரு ஒற்றை மனிதன் இந்திய மக்களின் தேர்தல் தீர்ப்பையே திருத்தி எழுதி, ஜனநாயகத்திற்கே சவக்குழி தோண்டுகிறார். அதிகாரமிக்க பதவியில் பாரபட்சமாக நடப்பதையே தன் பண்பாகக் கொண்டுள்ள தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சி எம்.பிக்கள் அணி திரண்டுள்ளனர்;
இந்திய அரசியல் வரலாற்றில் இன்று குறிப்பிடத்தக்க நாளாகும்.இன்றைய தினத்தில் இந்திய ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திகழ்கிறார்.
சுதந்திர இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் இன்று நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது இதுவே முதல் முறையாகும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்கு இணையான இந்த செயல்பாட்டை செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்கட்சிகளை தள்ளினார், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வரன் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுத் தளத்தில் – மக்கள் மன்றத்தில் – தலைமை தேர்தல் ஆணையரின் நேர்மையற்ற நடத்தைகளும், சார்பு நிலையும் அப்பட்டமாக அம்பலப்பட்டாலும் கூட, சட்டப்படி அவரை நீக்குவது என்பது ஒரு சவாலான செயல் திட்டமாகும். அதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் எம்.பிக்களின் ஒத்துழைப்பு தேவையாகும்.
நாடாளுமன்ற செயல்முறை மற்றும் விதிகளின்படி பதவி நீக்குதலுக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் ஒரே நேரத்தில் கொண்டு வரலாம். மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை அவசியம். வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. ஒரு சிறப்புப் பெரும்பான்மையால் இது நிறைவேற்றப்பட வேண்டும்.
முன்னதாக மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் செய்த தில்லுமுல்லுகளை உச்ச நீதிமன்றத்திற்கு தானே நேரடியாகச் சென்று வெளிப்படுத்திய திரிணமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்களே, தற்போதைய முன்னெடுப்புகளுக்கும் காரணமாகும். திரிணமுள் காங்கிரஸ் எம்.பிக்களே தீயாய் சுழன்று இந்த காரியத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது மேற்கு வங்கத்தில் அடையாளம் காணப்பட்ட சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது அல்லது சரி பார்க்கப்படுவதில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காண்பது குறித்து தற்போது வரை தலைமைத் தேர்தல் ஆணையர் எந்த பொறுப்பான பதிலையும் அளிக்கவில்லை. குறிப்பாக, நிலுவையில் உள்ள இந்த பெயர்களைச் சரி பார்க்க முறையான காலக்கெடுவைக் கூட அவர் குறிப்பிடாதது திரிணமுள் காங்கிரசை சூடாக்கிவிட்டது.
பொதுவாக மக்களவையில் இது போன்ற பதவி நீக்க தீர்மானத்திற்கு 100 எம்.பி.க்கள் கையெழுத்தும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் கையெழுத்தும் வேண்டும்.
ஆனால், இந்த பதவி நீக்கத் தீர்மானத்திற்கு மக்களவையில் நோட்டீஸ் தாக்கல் செய்ய 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையெழுத்திட்டதே முதல் கட்ட வெற்றியாகும்.

ஞானேஷ் குமார் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முக்கிய குற்றச்சாட்டுகள் நோட்டீஸில் பட்டியலிடப்பட்டுள்ளன.
# ஜனநாயக செயல்பாட்டிற்கான வாக்காளர்களின் உரிமையைப் பறித்தது
# அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி பாரபட்சமாக செயல்பட்டது
# விசாரணையை வேண்டுமென்றே தடுத்தது.
# குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக போலி வாக்காளர்களை சேர்த்தது.
# நேர்மையற்ற வழிமுறைகளில் தேர்தல் ஆணையத்தை இயக்குவது
# முறையான கால அவகாசம் எடுத்து முடிக்க வேண்டிய பணிகளை அவசரகதியில் தப்பும்,தவறுமாக செய்வது.
# பாதிக்கப்பட்ட கோடானுகோடி வாக்காளர்களின் குரலுக்கு செவி கொடுக்க மறுப்பது
ஆகியவை நோட்டீசில் கவனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் இந்த நோட்டீஸில் தவறாமல் கையெழுத்திட்டுள்ளனர். அத்துடன் இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களும், சுயேட்சை எம்.பிக்கள் சிலருமே கூட ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தீர்மானம் ஏற்கப்பட்டால், நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968ன்படி குழு அமையும். நோட்டீஸ்கள் இரு அவைகளிலும் ஒரே நாளில் ஏற்கப்பட வேண்டும். மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் சேர்ந்து அந்தக் குழுவை அமைப்பார்கள்.
தற்போது எதிர்க்கட்சிகளுக்கு இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு பலம் இல்லை என்றாலும், இந்த தீர்மானம் தேசிய அளவில் பொதுமக்களின் பெரும் கவனத்தை பெற்று விவாதமாகிற வகையில் இதுவே தலைமை தேர்தல் ஆணையருக்கு பெருத்த அவமானமாகும். அவருக்கு தன்மான உணர்வு இருக்கும் பட்சத்தில், தன்னைக் குறித்த எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் கோபத்திற்கு வெட்கி தலை குனிந்து, தானே பதவியை ராஜுனாமா செய்ய முன் வர வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
























மிகப்பெரிய சனநாயகக் கூட்டரசில் , முக்கியமான அரசியலமைப்பு அடிப்படையிலான தலைமை தேர்தல் அலுவலர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழும் சூழல் உருவாகியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சூழல் எழுந்துவிட்ட பிறகு அந்த பதவியில் உள்ள நபருக்கு தான் எந்த சார்பும் இல்லாதவர் என நிரூபிக்கும் கடமை அதிகரித்துள்ளது.
இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.