அமெரிக்கச் சார்பும், அழிவை நோக்கிய பயணமும்!

ச. அருணாசலம்

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வருமா? ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் தயவை நாடிடும் இந்தியா, ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்காமல் கனத்த மெளனம் சாதிக்கிறது. உலக நாடுகளுடனான உறவில் சமநிலையை பேணாமல் அமெரிக்காவை சார்ந்து மட்டுமே  இந்தியா  இருப்பது சாத்தியமாகுமா ஒரு அலசல்;

இந்தியாஉலக மக்கள் எது நடக்க கூடாது நினைத்தார்களோ, அந்தப் போர் நடந்து கொண்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தொடுத்த கொலை வெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.

எது விரைவில் நடந்து முடிந்து விடும் என டிரம்ப்பும், நெதன்யாகுவும், அவர்களின் அடிமை மோடியும் எண்ணினார்களோ, – ஈரான் வீழ்ந்து விடும் என மனப்பால் குடித்தார்களோ – அது நடக்காமல் போர் தொடருகிறது…!

ஆம், மிகப்பெரிய ராணுவ வல்லமையும், பண பலமும் அதிகாரமும் நிறைந்த அமெரிக்க வல்லரசும், அதன் ஏவல் நாயான இஸ்ரேல் ஒரு புறமும், மறுபுறத்தில் 40 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளில் அமிழ்ந்து நலிந்து கிடக்கும் ஈரான் நாடும் மோதும் இந்த யுத்தம் ஈரான் தொடங்கிய யுத்தமல்ல!

இறுதி மூச்சு வரை உறுதி குலையாமல் போராடும் மனோ திடம் ஈரானுக்கு உள்ளது. ஆயினும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் தற்போது மூன்று  நிபந்தனைகளை (three specific conditions) முன் வைத்துள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது  அறிவிப்பில்,

# இந்தப் போரை நிறுத்த ஈரானின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்,

# போர்க்கால இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

#  ஈரானின் எதிர்கால பாதுகாப்பிற்கு சர்வதேச உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

என மூன்று கண்டிஷ்ன்களைத் தெரிவித்துள்ளார். Iran ceasefire conditions மற்றும் அமைதிக்கான இந்த முன்னெடுப்பு சர்வதேச நாடுகளில் வரவேற்பு பெற்றுள்ளது.

போருக்காக ஆகும் செலவு ( Cost of War)

தாக்கப்பட்ட ஈரான், தலைவர்களை ‘பலி ‘ கொடுத்தாலும் தாக்கு பிடித்து எதிர்தாக்குதல் நடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. எதிரிகளை மலைக்க வைக்கும் எதிர் தாக்குதலை நடத்தி வரும் ஈரான் இந்த போருக்காக அமெரிக்கா செலவிடும் பணமே அமெரிக்காவின் தோல்வியை உறுதி செய்வதாக அமைத்துள்ளது உலகோரை வியக்க வைக்கிறது.ஏற்கனவே 2 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறை விழுந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தப்போர் ( பிப்28 மற்றும் மார் 1 ஆகிய இரு நாட்களின் போர்ச் செலவு 5.6 பில்லியன் டாலர்களாம்) மிகப்பெரிய பொத்தலை போட உள்ளது.

வெறும் 5,000 டாலர் முதல் 35,000 டாலர் வரை மதிப்புள்ள ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் பயன்படுத்தும் ஈரானிடம் இன்று குறைந்தபட்சம் 45,000 ஏவுகணைகளும் 10,0000 ட்ரோன்களும் இருப்பதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

இவற்றை எதிர் கொள்ள அமெரிக்கா ஒவ்வோரு எதிர் கொள்ளும் ஏவுகணைக்கும் (interceptor missile) 12.7 மி. டாலர் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏவுகணையும் – பேட்ரியாட்,தாட், மற்றும் சாம் 3 மற்றும் சாம் 6 ஏவுகணைகள்- உற்பத்தி செய்ய அமெரிக்க 12.7 மி. டாலர் செலவு செய்கிறது என்பதும், ஈரான் ஏவும் ஒரு ஏவுகணையை சமாளிக்க அமெரிக்கா குறைந்த பட்சம் இரண்டு எதிர்கொள் ஏவுகணைகளை (interceptors) பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் இந்த போர் நீடித்தால் அது அமெரிக்காவை அதி விரைவில் போண்டியாக்கி விடும் என்பதே பல வல்லுனர்களின் கணிப்பாகும். இப்பொழுதே – போர் துவங்கி 12 நாட்களுக்குள்ளாகவே பேட்ரியாட், தாட் ஏவுகணைகளின் கையிருப்பு கரைந்துள்ளதால் அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு விற்ற ஏவுகணைகளை வம்படியாக திரும்ப மேற்காசியா பகுதிக்கு கொண்டு வந்துள்ளது.

யுத்தம் துவங்கி 13 நாட்களாகியும் ஏவுகணைகளின் தாக்குதலின் தீவிரம் குறைந்த பாடில்லை.

ஈரான் மீது ஆயிரக்கணக்கான இலக்குகளின் மீது அமெரிக்க இஸ்ரேல் படையினர் குண்டுமழை பொழிந்தாலும், ஈரான் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை, உளவுத் தளங்களை, நுண்கருவி தளங்களை (சுமார் 70 தளங்கள்) பஹ்ரைன், குவைத், துபாய், கத்தார்

ஈராக், சௌதி அரேபியா, ஜோர்டான், லிபியா என பல்வேறு இடங்களிலுள்ள தளங்களை தாக்கி அமெரிக்க படைகளின் கண்கள் மற்றும் காதுகளை தாக்கி தரைமட்டமாக்கி உள்ளனர் ஈரானியப் படையினர்.

சிக்கலில் இந்திய மக்கள்!

போருக்கான காரணங்களை நாளுக்கு ஒருவிதமாக திரித்து உளறும் டிரம்ப் , ஈரான் யுத்தம் இன்னும் ஓரிரு நாள்களில் முடிந்து விடும் என்றும் தொடரும் என்றும் மாறி, மாறிப் பேசி வருகிறார். ஆனால், ஈரான் தரப்போ, ஹோர்முஸ் நீரிணையை (Hormuz strait) நாங்கள் மூடவில்லை என்று கூறினாலும், ஈரானின் அனுமதி இன்றி எந்த கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாத நிலை உள்ளது என்பதே உண்மை.

பட்டும்படாமல் தனது தாட்டியத்தை இந்த விவகாரத்தில் காட்டிவரும் ஈரான் உலக எண்ணெய் வர்த்தகத்தையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 25 விழுக்காடும், உலகின் இயற்கை எரிவாயு வினியோகத்தில் (LPG) 27 விழுக்காடு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது என்பதால் அந்த பாதை மூடப்பட்டால் அல்லது தடை செய்யப்பட்டால் உலகின் எரிசக்தி வினியோகமும், அதன் வர்த்தகமும் சீர்குலையும்.

குளிர்காய்வதற்காக குடியிருக்கும் குடிசையின் கூரையில் தீ வைத்த கோமாளி போல மோடி வஞ்சகம் செய்யும் அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளுடன் கை கோர்த்து, இந்திய நாட்டிற்கு இதுவரை உதவியே செய்து வந்த ஈரானை பகைத்துக் கொண்டார். இந்திய மக்களை சிக்கலில் மாட்டி விட்டுள்ளார். ஈரான் தலைவர்களை கொன்றொழித்தை இன்று வரை கண்டிக்காத மோடி, இன்று ஹோர்முஸ் பகுதியில் சிக்கியுள்ள 24 இந்திய எண்ணெய் கப்பல்களை காப்பாற்ற ஈரானுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உருவானதை முன் கூட்டியே யோசித்திருக்க வேண்டும்.

ஈரான் மீதான கொலை வெறித் தாக்குதலை, பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகியவை கண்டித்தன. இந்தியா – பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்த ஆண்டின் தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா- இது நாள் வரை கண்டிக்கவில்லை. மாறாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை தாக்கியதை கண்டித்தது, அதை கண்டிக்கும் ஐநா தீர்மானத்தை இந்தியா முன் மொழிந்து வாக்கும் அளித்துள்ளது.

இந்தியாவின் இத்தகைய துரோகத்திற்கு மத்தியிலும் ஈரானின் அதிபர் பெஷஸ்கியான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அமைச்சர் அராக்சியடன் நான்கு முறை இந்திய கப்பல்களை பாதுகாப்பாக இந்தியா கொண்டு வருவதற்காக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். இந்திய ஊடகங்கள் ஈரான் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கொண்டு, கப்பல்கள் செல்ல அனுமதித்து உள்ளது என்றும், பிரதமர் மோடியின் வெற்றி இது என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரணை வழியாக செல்லும் கப்பல்கள்

ஆனால், உண்மையில் ஈரான் அமெரிக்க இஸ்ரேல் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலைபாட்டில் தொடர்ந்து வருகிறது. அந்த கூட்டமைப்பில் இந்தியாவை மோடி அரசு பின்னி பிணைத்துள்ள நிலையில் இந்தியாவின் நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது. “ஷிவ்லிங்க் “ எனப்படும் இந்திய கப்பல் நிறுவனத்தை சார்ந்த கப்பல் நீரிணையை கடந்ததாக மெரைன் டிராபிக் என்ற இணைய தளம் கூறியதாக இந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது, ‘ஷென்லாங்’ என்ற கப்பல் மும்பை வந்ததாக முன்னர் ராயட்டர் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.

இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) தேவையில் 65% சதவீதத்தை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதில் 90% வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது எனலாம். இத்தடங்கலினால்

இந்தியாவில் எரிவாயு வினியோகத்தில் தட்டுப்பாடுகளும்,குழப்பமும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் தேவையை முன்னிறுத்தி அரசு விளக்கமளித்தாலும் வணிக தோக்கில் உணவு விடுதிகள் , சிற்றுண்டி கடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடும், விலையேறினாலும் கிடைக்காத நிலையினால் பல உணவகங்கள் மூடப்படுகின்றன. இவை பாமர மக்களை வெகுவாக பாதிக்கின்றன. அமைச்சர்கள் போதிய கையிருப்பு உள்ளது , வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறினாலும் தட்டுப்பாடுகளும் குழப்பமும் களத்தில் நிலவுகின்றன. இதை சமாளிக்க இந்திய அரசு தவறிவிட்டது. நிலைமைகள் மோசமடையலாம் என்ற எதிர்பார்ப்பில் போதிய கையிருப்பை சேமிக்க இந்திய அரசு தவறிவிட்டது. இந்தியா மாத்த்திற்கு 3மில்லியன் டன் சமையல் எரிவாயுவை உபயோகிக்கிறது, இது உலகில் இரண்டாவது மிக அதிகமான நுகர்வாகும். இதில் இறக்குமதி யின் அளவு 2014ல் 47% சதவிகிதமாக இருந்தது. மோடியின் ஆத்மநிருபர முயற்சியால் இறக்குமதியின் அளவு தற்பொழுது 80% சதவிகித்த்தை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு வர்த்தக இடையூறால் மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமின்றி விவசாயத்திற்கு தேவையான உர உற்பத்தி மற்றும் தொழில் உற்பத்திகளையும் இவை பாதிக்கிறது. இறக்குமதி சிக்கல்கள் மட்டுமின்றி, இந்திய பொருட்கள் மேற்காசிய நாடுகளுக்கு அனுப்ப இயலாத சிக்கலும் இதனால் ஏற்படுகிறது. இதனால் வர்த்தக தடைகளும்,உற்பத்தி முடக்கமும், பணவீக்கமும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்யும் . ஏற்கனவே, அமெரிக்காவின் வர்த்தக வரிச்சுமையும், அமெரிக்க பொருட்களின் இறக்குமதியும் இந்தியாவை பாதித்துள்ள வேளையில் இந்த போரினால் ஏற்படும் சிக்கல்களை மோடி அரசு எண்ணிப்பார்த்ததா..? என்பது கேள்விக்குறியாகும்.

அடுத்து இந்திய கப்பல்களில் மட்டுமின்றி சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள தற்பொழுது பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 964 கப்பல்களில் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடுகிறது. இவர்களின் உயிருக்கு இந்திய அரசினால் உத்திரவாதம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 10 மில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்தியா நடவடிக்கைகள் எடுக்கிறது என மோடி அரசு தெரிவித்தாலும் இந்தப்போரை துவக்கி வைத்தது அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் என்பதை கூறவோ , அதைக் கண்டிக்கவோ தயங்குவது ஏன்?

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினரான ஈரான் நாட்டின் மீது, அத்துமீறி குண்டுவீசி இறையாண்மையை கடித்து குதறி , ஆட்சி பொறுப்பிலிருந்த தலைவர்களை – சமயக்குரவர் அலி காமெனி உட்பட- நாற்பதுக்கும் அதிகமான தலைவர்களை கொலை செய்த கொடுமையை கண்டிக்காத இந்தியா , பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியதை மட்டும் கண்டிப்பதும், கண்டனம் செய்வதும் துரோகத்தின், ஓர வஞ்சனையின் உச்சமில்லையா?

நேற்று வரை உலகின் அமைதி பூங்காவாக, வர்த்தகத்தின் சொர்க்க பூமியாக , முதலீடுகளை கவர்ந்திழுக்கும் கலைக்கூடமாக திகழ்ந்த வளைகுடா நாடுகளின் ( துபாய்,அபுதாபி, பஃஹ்ரைன், தோஹா, ரியாத் மற்றும் குவைத்) இமேஜ் தகர்க்கப்பட்டுள்ளது. அதன் எதிர்காலம் இன்று கேள்விக் குறியாக மாற்றியது. ஈரான் நாடா? அல்லது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடாவடியான ஆக்கிரமிப்பா? இதன் மூலம் அங்கு வாழும் இந்தியர்களின் நிலைமை பரிதாபம் அடைவதோடு, அவர்கள் இந்தியாவிற்கு ஈட்டித் தரும் அன்னியச் செலவாணிக்கும் குந்தகம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா பகுதிகளில் உள்ள எண்ணெய் வளத்தை சுரண்டி கொழுக்கவும் பெட்ரோ டாலர் மூலம் உலகை ஆளவும் , அதற்காக வளைகுடா நாடுகளை சேக்குகளின் முடியாட்சியில் பிணைத்து தங்களின் படைகளை நிறுத்தி ஆதிக்கம் செலுத்தவே அமெரிக்கா விரும்புகிறது.

அதற்காக ஆட்சி கவிழ்ப்பிலும் ஆக்கிரமிப்புகளிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. 1948 முதல் இன்றுவரை மேற்காசியாவில் தாக்குதல்களை நடத்தி அமைதியை குலைத்து அந்த பகுதி முழுமையுமே சுடுகாடாக்கியது, இஸ்ரேலும் அமெரிக்காவுமே தவிர, ஈரான் அல்ல.

இந்தியா இந்த சிக்கலான சூழலில், மேற்காசியாவில்அமைதியான சூழல் நிலவ இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து பின் வாங்குவதும், பாலத்தீனர்களுக்கு அரசுரிமை வழங்குவதும் அவசியம் என்று காலங்காலமாக கூறிவந்துள்ளது. ஈரான் நாடு ஒருபோதும் பிற நாடுகளின் மீது படையெடுத்ததில்லை, ஆக்கிரமிப்பு செய்ததில்லை. 1979 முதல் அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர் கொண்டு நிற்கும் ஈரானை நிர்மூலமாக்குவதேதனது லட்சியமாக கொண்டுள்ள நெதன்யாகு இன்று அமெரிக்காவை சந்திக்கு இழுத்து வந்து சண்டையிட வைத்துள்ளான். இந்த நெதன்யாகுவுக்கு மோடியும் துணை போவது அவமானமில்லையா?

பல்லாண்டுகளாக இந்தியா இஸ்ரேல் நாட்டை சற்று தள்ளியே வைத்திருந்தாலும், நரசிம்ம ராவ் காலந்தொட்டு, சுய லாபத்திற்காக இஸ்ரேல் நாட்டுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தி கொண்டது. விவசாய உற்பத்தி மற்றும் வறட்சி பகுதி நீர்ப்பாசன உத்திகளுக்காகவும் , இதர தொழில்நுடபங்களுக்காகவும் இஸ்ரேல் நாட்டுடன் உறவை இந்தியா 1992 க்குப்பிறகு மேம்படுத்தியது.

ஆனால், பாலத்தீனர்களின் அரசுரிமைக்கான போராட்டங்களுக்கு ஆதரவும் அளித்து ஒரு சம நிலையை எட்ட இந்தியா முயற்சித்தது. ஆனால், 2015 க்கு பின்னர், மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு 2017ல் இஸ்ரேலுக்கு சென்ற பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. அதுவரை பாலத்தீன பிரச்சினையில் இந்தியா அளித்துவந்த ஆதரவை சத்தமின்றி கைவிட்டது.

# மோடி அரசு. டிரம்ப்பின் உத்தரவிற்கு பணிந்து 2017-ல் ஈரானுடன் உள்ள மிகச்சிறந்த வர்த்தக உறவுகளை சிதைத்து கொண்டது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது.

# ரூபாய் மூலம் (டாலரை தவிர்த்து) நடக்கும் இருநாட்டு வணிகத்தை குறைத்தது.

# ஈரானில் உள்ள சப்ஃஹார் துறைமுகத்தில் இந்தியா செய்த முதலீடுகளை காவு கொடுத்து IMEC – இந்தியா மத்திய கிழக்கு பொருளாதார கட்டமைப்பிற்கு – இஸ்ரேலுடன் சேர்ந்து வணிகக் கட்டமைப்பை அமைக்க முயன்றது. இதன் மூலம் இந்தியாவின் நீண்ட நாள் கனவான எரிசக்தி துறையில் தன்னிறைவு என்ற கொள்கையை மோடி அரசு காவு கொடுத்தது.

இவையெல்லாம் அமெரிக்க அரசின் நிர்ப்ந்தத்தால் மோடி அரசு செய்கிறது என சிலர் கூறுகின்றனர். உண்மையில் மோடியின் குருட்டுதனமான இஸ்லாமிய வெறுப்பினால் மோடியே விரும்பி எடுத்த முயற்சிகளே இவை ஆகும் .

 2021ல் ஏற்படுத்தப்பட்ட 2 யூ2 (I2U2)

# இந்தியா இஸ்ரேல் , யு ஏ இ மற்றும் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பை மேற்காசியாவின் குவாட் கூட்டமைப்பாக முன்னிறுத்தி, செயல்பட்டதில் மோடிக்கு பெரும் பங்கு உண்டு. எனவே அவை நிர்பந்தத்தின் விளைவல்ல, இந்திய மக்களின் பொதுவான நிலைபாட்டை மறுதலித்து ஒருதலைபட்சமாக இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனும், யூதவெறியில் ஊறிய ஜியோனிச இஸ்ரேலுடனும் கை கோர்க்க மோடி விரும்பியதன் விளைவாகும் .

இந்த துரோகத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை மோடி குறைத்ததும் நடந்தேறியது. அமெரிக்காவின் நிர்பந்தத்தால் இது நடந்தது என மோடி கும்பல் நாடகமாடினாலும் ரஷ்யா இந்த துரோகத்தை மறக்கப் போவதில்லை. துரோகத்தின் அடுத்த கட்டமாக ஈரானிற்கு 2016-ல் சென்று காமெனியுடன் படம் எடுத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பல நூற்றாண்டுகளை கடந்த உறவு, பாரம்பரிய கலாச்சார உறவு என்று வாய்ச் சவடால் விட்ட மோடி, இன்று அந்த தலைவரை கொன்றதற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பதும், உலகெங்கிலுமுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எந்த வித அஞ்சலியிலும் கலந்து கொள்ள கூடாது என்று உத்திரவிட்டதும் ஈரான் மறக்க போவதுமில்லை.

இந்த போர் இத்துடன் முடியப் போவதில்லை, அமெரிக்க வல்லரசின் கண்களும் காதுகளுமான படைத் தளங்களும் , உளவு சாதனங்களும் வளைகுடாவில் நொறுக்கப்பட்ட நிலையில் , இந்த படையெடுப்பிற்கு அமெரிக்காவிற்கு உதவும் பிக் டெக் கம்பெனிகளான மைக்ரோசாஃப்ட், கூகிள், என்விடியா, ஐபி எம், பாலன்டியர், ஆரக்கிள் ஆகியவற்றை ஈரான் அடுத்த இலக்குகளாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிலும் இஸ்ரேலிலும் இருந்து கொண்டு இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை வழங்குவதை முறியடிக்க ஈரான் முடிவெடுத்துள்ளது. மேற்காசியாவின் அதிகார கட்டமைப்பை மாற்றாமல், இந்த போர் ஓயப் போவதில்லை. உலகம் ஒற்றை ஆதிக்கத்தை உதறி விட்டு நடக்கும் முயற்சியாக இது அமையப் போகிறது.

இந்திய நாட்டு மக்களின் எண்ண அலைகளை கருத்தில் கொள்ளாமல், இந்தியர்களின் நலன்களை கணக்கில் எடுக்காமல் தனது மத வெறுப்பு பார்வையை இந்திய அரசின் பார்வையாக மோடி அரசு மாற்றி உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த சிக்கல் பிரிக்ஸ் கூட்டமைப்பின் வருங்கால செயல்பாட்டில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உலக நாடுகளின் மத்தியில் , உலகத் தலைவர்களின் மத்தியில் – இஸ்ரேலின் நெதன்யாகுவைத் தவிர- அனைத்து தலைவர்களின் மத்தியிலும் நம்பகத்தன்மை இழந்து நிற்கிறார் மோடி.

இந்தியாவை அதன் கலாச்சார பெருமைகளை காற்றில் பறக்கவிட்டு, காலனி ஆட்சியிலிருந்த விடுதலை அடைந்த இந்தியா தனக்கென வகுத்த நேர்மை சார்ந்த அணி சேராக் கொள்கை மற்றும் நாடுகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் கொள்கை நிலைபாட்டை தொலைத்து இன்று அமெரிக்க வல்லரசின் தொங்கு சதையாக இந்தியாவை மாற்றியதில் மோடி பெருமை கொள்கிறார். இதில் இந்திய மக்களுக்கு உடன்பாடுண்டா?

ச. அருணாசலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time