ஏதோ மன்னராட்சி போல மக்களுக்கு பொங்கல் பரிசாம்!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கையோடு, இப்படி ஒரு அறிவிப்பு; அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டு, ”பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்! இது அரசாங்க செலவில் செய்யப்படும் ஓட்டுபொறுக்கி அரசியல்!
அதுவும் அரசாங்க ஊழியர்களைக் கொண்டு, கட்சிக்கு ஆதாயம் சேர்க்கும் விதமாக வீடு வீடாகச் சென்று டோக்கன் தரப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படுமாம்!
தமிழக அரசின் கடன் சுமை இந்த ஆண்டு பிப்ரவரிப்படி 4,56,660 கோடியாகும்.
அது தற்போது ஐந்து லட்சத்தை கடந்திருக்கும்!
இந்தக் கடனுக்கு வட்டிகட்டமுடியாமல் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து வருகிறது!
எதெற்கெடுத்தாலும் கடன்…, உலக வங்கியிடம் கடன்…, உலக நாடுகளிடம் கடன்…., என்று வாங்கி,
அதை ஊழலுக்கு கொஞ்சம்,
ஊதாரித்தனமாக எடுத்து வீசி ஓட்டு அரசியலுக்கு கொஞ்சம்
எனச் செலவிடுவது அயோக்கியத்தனமில்லையா?
இந்தப் பணத்தை ஏதாவது வரி போட்டு மீண்டும் மக்களிடம் தானே பிடுங்கப்படும்!
தமிழகத்தைவிட பின்தங்கிய வட இந்தியாவின் பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட இது போல பண்டிகைக்கு ரொக்கப்பணம் தரப்படுவதில்லை!
கொரானாவில் பலர் வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்தபோது கூட வராத இரக்கம் தேர்தல் நெருங்கும் போது பொத்துக் கொண்டு வருகிறதே…?
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுநர்கள் குழு செப்டம்பர் மாதம் சமர்பித்த அறிக்கையில் தமிழகத்தில் 2020-21ல் பொருளாதார வளர்ச்சியில், சரிவு ஏற்படலாம் என கணித்திருந்தது. வருமானம் குறைந்து, செலவு அதிகரிப்பதால், அரசின் கடன் சுமை அதிகரிக்கும். வருவாய் பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்றதோடு, சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் செலவிட பரிந்துரைத்திருந்தது. இதை செய்ததா தமிழக அரசு?
நகர்புறங்களில் வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளதால் நகர்புற இளைஞர்கள் பயனடையும் வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கவும் பரிந்துரை செய்தது ரங்கராஜன் குழு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது.கொரானாவோ இன்னும் பல கூடுதல் வேலை இழப்புகளை உருவாக்கியுள்ளது. ஆகவே, உழைப்பதற்கு திரானியுள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் திட்டம் குறித்து சிந்திக்கவும், செயல்படவும் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, ஊதாரித்தனமாக பொங்கலைக் காரணம் சொல்லி ரூ 2,500 அள்ளிவிடுகிறது!
புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்டுப் போராடுவது எடப்பாடி காதில் விழவில்லை! தமிழக அரசின் மருத்துவர்களின் பல வருட ஊதிய உயர்வு கோரிக்கை காதில் விழவில்லை! அரசு பொறியாளர்களிடம் ஊதியக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது! போக்குவரத்து தொழிலாளர்கள் அடிமாட்டுச் சம்பளத்தில் அல்லல்படுவது கண்ணுக்கு தெரியவில்லை! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பென்சன், தருவதற்கே இங்கே உரிய நிதியின்றி ததுங்கினதத்தம் போடுது அரசு! உழைப்பவர்கள் வயிற்றில் அடித்து ,அரசாங்க நிதியை ஓசியில் அள்ளிவிடும் துணிச்சல் எப்படி வந்தது இவர்களுக்கு? யார் பணத்தை எடுத்து யார் கொடுப்பது…?
Also read
எங்களுக்கு பொங்கல் இனாம் வேண்டும் என்று மக்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை! அப்படியே கேட்கப்பட்டாலும் அதை வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக பார்த்து தந்திருக்கலாம். ஆனால், ஓட்டுப்பொறுக்கித் தனத்தால் அனைவருக்கும் – அதாவது இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரேசன் அட்டைக்காரர்களுக்கும் தரப்படுகிறது. சென்ற வருடம் ஆயிரம் ரூபாய் இனாமை காரில் வந்து கியூவில் நின்று வாங்கி சென்றவர்களையும் நான் கண்டேன்! வலுக்கட்டாயமாக அனைத்து தமிழர்களையும் பிச்சைகாரர்களாக ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டால் விமோசனம் ஏது?
மக்கள் அனைவரையும் பிச்சைக்காரர்கள் ஆக்கும் பச்சை ஓட்டுப் பொறுக்கி, பிழைப்புவாத அரசியலுக்கு என்று தான் விடிவோ…?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply