நாடாளுமன்றத்தில் அதிகார ஆட்டம்; அமித்ஷாவும், ஓம் பிர்லாவும்!

சஞ்சய் கே. ஜா 

சபாநாயகரின் சமநிலையற்ற அணுகுமுறைகளால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மை  ஆட்டம் கண்டுள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகளை தடுப்பவராக, ஆட்சியாளர்களை விமர்சிப்போரை புல்டோசரைப் போல தகர்ப்பவராக ஆட்சியாளர்களுக்கு  ஓம் பிர்லா செய்யும் ஒப்பற்ற சேவைகள் குறித்த ஒரு அலசல்;

மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே! ஏனெனில் நரேந்திர மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகளை விட எண்ணிக்கையில் அதிக வலிமை கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு அரசியல் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வெளிப்படையான பாரபட்சமான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்ட பிர்லாவுக்கு இந்த வெற்றி அதிக நியாயத்தை அளித்ததா? ஆளும் கூட்டணியிடமிருந்து அவர் பெற்ற மகத்தான பாராட்டுக்குப் பிறகு நடுநிலை சபாநாயகராக அவரது அந்தஸ்து உயர்ந்துள்ளதா?

சபாநாயகர் பொறுப்பு என்பது பாரபட்சமற்ற  வகையில் ஜனநாயகத்தின் விழுமியங்களை பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும், சட்டத்தை இயற்றுவதற்கும் மட்டுமே நாடாளுமன்றம் செயல்படவில்லை.  இவற்றை நாடாளுமன்றம் இல்லாமலும் கூட செய்ய இயலும். ஆனால், அடிப்படையில் நாடாளுமன்றம் என்பது அதிகார அகந்தையில் மூழ்கியிருக்கும் அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டதாகும்.  நாடாளுமன்றத்தின் முதன்மை நோக்கம்  தன்னுடைய செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தை பதிலளிக்கக் கூடியதாகவும், பொறுப்புணர்வுடனும் ஆக்குவதாகும்.

சபாநாயகரின் பங்கு இந்தப் பொறுப்பை சரிவர நிர்வகிப்பதிலிருந்து வெளிப்படுகிறது. உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, மற்ற எம்.பி.க்களாக இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களால் சபாநாயகரைப் பாராட்டப்படுவதற்கு எந்த மதிப்பும் இல்லை. அரசாங்கத்தின் வெறித்தனமான  தற்பாதுகாப்பு, சபாநாயகர் தங்கள் நலன்களுக்கு சேவை செய்கிறாரா..? என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களே ஏற்றுக் கொள்வதில்  மட்டுமே ஒரு சபாநாயகரின் நடுநிலைமை வலுப்படுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அமர்வது அதிகாரம் மிக்கவர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல, அதிகாரம் இல்லாதவர்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே. அதிகாரம் இல்லாத குடிமக்கள் எதிர்க்கட்சியின் மூலம் பேசுகின்றனர். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மட்டுமே பாரபட்சமற்ற நடுவரை விரும்புகிறார்கள்; மிகவும் அதிகாரம் மிக்கவர்கள் கீழ்ப்படிதலுள்ள ஒத்துழைப்பாளரைக் கோருகிறார்கள்.  அரசியல் எதிரிகளின் உரிமைகளை நசுக்குவது மட்டுமல்லாமல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாக்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதை மறுக்கும் அளவுக்குச் செல்லும் ஒரு கூட்டாளியாக இருக்கிறார், சபாநாயகர்!

ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பவராக இல்லாமல்,  எதிர்க்கட்சியினரை ஆட்சியாளர்களின் மகிழ்ச்சியை அழிப்பவர்களாக பார்க்கதக்க வகையில் செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் மகிழ்ச்சியடைவதும், எதிர்க்கட்சியினர் அதிருப்தி அடைவதும் நடுவரின் நடுநிலைமை குறைந்து வருவதைக் காட்டுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையில் சில முக்கியமான விஷயங்களைக் கூறினார்: சபாநாயகர் நாடாளுமன்ற கண்ணியத்தை அடையாளப்படுத்துகிறார், அவரது முடிவுதான் கடைசி வார்த்தை! அது. ஆய்வு அல்லது விமர்சனத்திற்கு உட்பட்டது அல்ல.

துரதிர்ஷ்டவசமாக, ஜனநாயகம் 2014 இல் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு தனிநபர் நாட்டின் நிறுவனங்களை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகளுக்கு எதிராக பி.ஆர். அம்பேத்கர் அவர்களே தேசத்தை எச்சரித்தார். சபாநாயகரின் தவறான முடிவுகளை எதிர்த்துப் போராடக்கூடாது என்றால்,  ஆட்சியாளர்களுக்கும்,  அதிகாரத்திற்கும் மரியாதையுடன் தலைவணங்கும் ஒரு ஜனநாயக விரோதக் கோட்பாட்டை முறையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடும்.

தலைமைத் தேர்தல் ஆணையர், இந்திய தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஆகியோர் தங்கள் துறைகளில் நெருக்கடியை சந்தித்தால் ஜனநாயகம் அதன் குறைந்தபட்ச சட்டபூர்வ தன்மையைக் கூட இழக்கும். அதன் நம்பகத்தன்மை சரியும் என்பதே உண்மை. ஆனால், நியாயமான தீர்வு எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்துவது அல்ல. நம்பகமான  பதில்களை வழங்குவதும், முக்கியமான அரசியலமைப்பு  நிறுவனங்களின் சுயாட்சியை மீட்டெடுப்பதும் ஆகும்.

பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில், நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் பிரச்சினையை நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும். விதிகளை மீறும் ஒரு உறுப்பினரைத் தடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்லும் அமித்ஷாவால், ஒரு உறுப்பினரின் உரிமைகளைப் பாதுகாப்பது சபாநாயகரின் கடமை என்று ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

அரசியல் மோதல் என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல; அது பொது நன்மையைப் பற்றியது. சபாநாயகரின் முடிவுகளை கேள்விக்குட்படுத்த முடியாது என்ற அமித்ஷா பரப்பிய போலி கோட்பாடு, ஜனநாயகத்தை முடக்குவதற்கான ஒரு ஆபத்தான சூழ்ச்சியாகும்.

பிரதமரை விமர்சிக்கும் எதையும் நீக்குவதற்கான சபாநாயகரின் முடிவைப் பற்றி நாட்டின் நலம் விரும்பிகள் எவரும் கேள்வி கேட்பார்களே.  நாட்டின் நலன்களில் பிரதமர் சமரசம் செய்து கொண்டதாக எதிர்க்கட்சி நினைத்தால், அதற்கான விளக்கத்தை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.  இவற்றை எல்லாம் சபாநாயகர் திரைச்சீலைகளை  இறக்கிவிட்டு தடுக்க முடியாது. அரசின் மீதான விமர்சனங்களை தகர்க்கும் அரசாங்கத்தின் புல்டோசரே சபாநாயகர் என்று உள்துறை அமைச்சர்  அமித்ஷா  நம்பினால், அவர் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.

நாடாளுமன்றத்திற்குள் கண் சிமிட்டும், கட்டிப்பிடித்து பறக்கும் முத்தம் அனுப்பும் எதிர்க்கட்சித் தலைவரை அரசாங்கம் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு ஷா வெட்கப்படுகிறாராம்….! குற்றவாளியான ராகுல் காந்தி, மக்களவையில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆண் சக ஊழியரைப் பார்த்து கண் சிமிட்டினார், ‘அரசியல் எதிர்ப்பு என்பது தனிப்பட்ட பகைமையைக் குறிக்காது’ என்ற குறியீட்டு செய்தியை வழங்க பிரதமரை கட்டிப் பிடித்தார்! மேலும், அவர் வெளிநடப்பு செய்யும் போது கூட்டாக அவரை கேலி செய்த பாஜக எம்பிக்களை நோக்கி பறக்கும் முத்தத்தை செலுத்தினார். ஷாவின் வேதனையான புலம்பல், அரசாங்கத்தை தனது அணுகுமுறை மற்றும் செயல்திறனால் திருப்திப்படுத்த மறுத்த இளம் தலைவருக்கு ஒரு கணம் அவமானத்தை ஏற்படுத்தியது.

வாவ், ‘காற்றில் பறக்கும் முத்தம்’  என்ன ஒரு குற்றம்! நூற்றுக்கணக்கான கோடிகளை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கொலை, கலவரங்களை உருவாக்குதல் மற்றும் போலி என்கவுண்டர்கள் போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைந்திருக்கும் நாடாளுமன்றத்திற்குள் அவர்களே கூட ஒருபோதும் கண் சிமிட்டியதில்லை. இந்த எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் தலைவர் எப்படிப்பட்ட ஆபத்தானவர் என்கிறாரோ..?

கண் சிமிட்டுவது போதாதென்று, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூருக்குப் பறந்தார். வெளிநாட்டிலிருந்து எப்படிப் பேச முடியும்? மிகவும் கருணையுள்ள மற்றும் மிகவும் அக்கறையுள்ள அரசாங்கத்தால் கூட, வெளிநாட்டு மண்ணிலிருந்து ஆளும் கட்சியை  விமர்சிக்க அவருக்கு ஒரு வீடியோ மாநாட்டை ஏற்பாடு செய்திருக்க முடியாதா என்ன?  இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் சந்தித்து வரும் நெருக்கடியின் சரியான தன்மையை ஷா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நாட்டிற்கு விளக்கும் லட்சணம் இது தானா?

வெகுஜனங்களின் நம்பகத்தன்மையில் ஒரு வியக்கத்தக்க நம்பிக்கையை டெமாகோக்கள் வளர்க்கிறார்கள். பிரச்சாரத்தின் சக்தி அரசியல் பகுத்தறிவை மீறி, அவர்களை மிதக்க வைக்கும் அளவுக்கு பெரிய மக்கள்தொகையின் விமர்சனத் திறன்களை மழுங்கடிக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். “விதேஷ் சே சதன் மெய்ன் கைசே போலோஜ் [வெளிநாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்]”, ஷா யோசித்தார், பேச்சு சுதந்திரம் குறித்த உண்மையான கவலையை மாற்ற ஒரு போலி கேள்வியை உருவாக்கினார். அது பகுத்தறிவின் மீதான ஒரு பொதுவான பாசிசத் தாக்குதல் போல இருந்தது. யதார்த்தமான சொற்பொழிவைத் திரித்து, சர்ரியல் கற்பனைகளைத் தூண்டியது.

விதேஷ் சே கைசே போலஞ்ச்…? ஆஹா! என்ன ஒரு கவலை. ‘எதிர்க்கட்சித் தலைவர் தனது வேலையைப் பற்றி தீவிரமாக இல்லை’ என்பதை நாட்டுக்குக் கூற இது ஒரு தந்திரமான தந்திரம். அவரது சக பாஜக உறுப்பினர்கள் இந்தக் குறும்புத்தனத்தைப் பார்த்து சிரித்தனர்; ஊடகங்கள் அதை மகிழ்ச்சியுடன் பூசி, உண்மையை நியாயமற்ற தன்மையின் புகைத் திரைக்குப் பின்னால் தள்ளின.  என்னவோ நமது நாடாளுமன்றம் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி நடத்தப்படுகிறது என்ற ‘க்ளிஷேவை’ மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் ஷா  நடக்கும் கேலிக்கூத்துக்களுக்கு ஒரு சட்டபூர்வமான சாயலைக் கொடுத்தார்.

ஒவ்வொரு அமர்விலும் காங்கிரசுக்கு பல மணிநேரம் ஒதுக்கப்பட்டதை ஷா நினைவு கூர்ந்தார், ஆனால் ராகுல் சட்டங்கள் குறித்த எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. கொஞ்சம் சுருங்கச் சொன்னால் ஷாவின் வாதத்தின் உண்மையான நோக்கம் வெளிப்படுகிறது. ராகுல் பேச சுதந்திரமாக இருக்கிறார். ஆனால் அவர் என்ன பேச முடியும்? என்பது கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். உள்ளடக்கத்தை ஜீரணிக்க முடிந்தால் மட்டுமே அரசாங்கமும் சபாநாயகரும் தாராளமாக இருப்பார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒரு  கார்ப்பரேட் நிறுவன நிறுவனத்துடனான பிரதமரின் தொடர்பு பற்றிப் பேசினால், சபாநாயகரின் கோடரி அவரது வார்த்தைகளில் விழும்.  சபாநாயகரின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு  முரணான தலையீடு ஒரு “புனிதக் கடமை” என்று போற்றப்படுவது தான் சோகம். பிரதமர் மற்றும் சபாநாயகரின்  செயல்பாடுகள் ஆராயப்பட்டால், எதிர்க்கட்சித் தலைவரின் நடத்தை ஆராயப்படும் என்று ஷா வலியுறுத்தினார். ”பிரதமரின் பொறுப்புகளை எதிர்க் கட்சித் தலைவரின் வேலையுடன் ஒப்பிட முடியாது” என்று கர்வமுள்ள உள்துறை அமைச்சருக்கு யார் சொல்வார்கள்?

ஆட்சியாளரின் நடத்தையால் வரலாறு அறியப்படுகிறது; அடால்ஃப் ஹிட்லர் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உலகம் அறியும். இரண்டாம் உலகப் போருக்கு வின்ஸ்டன் சர்ச்சில் படைகளை வழிநடத்தியபோது, இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்குத் தெரியும்? இந்திய ஊடகங்களுக்குப் புரியவில்லை,  நாட்டுக்கும், மக்களுக்கும்  பொறுப்பான பதில் கூறல்  ஆட்சியாளர்களுக்கானதேயன்றி, எதிர்கட்சித் தலைவருக்கல்ல என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிந்திருக்க வேண்டும்.

”நாடாளுமன்றத்திற்கு புறம்பானது என்ன? பாராளுமன்றம் என்பது யாரும் எதையும் பேசக்கூடிய ஒரு விழா அல்ல” என்று அமித்ஷா கூறினார். நியாயம் தான், இதில் சர்ச்சைக்கு இடமில்லை;  ஆம், உண்மையில் பாராளுமன்றம் என்பது வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கிற்கான இடமல்ல. எந்த ரிங் மாஸ்டரின் சவுக்காலும் இங்கே சிங்கத்தை ஆட வைக்க முடியாது. சமரசம் மற்றும் கீழ்ப்படிதல் எதிர்க்கட்சித் தலைவரின் “புனிதக் கடமை” அல்ல. இங்கே நடப்பது ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்கான உண்மையான போராட்டம்.

ஆம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான போராட்டம். இது எப்போதும் வசதியான ‘மேளா’ கலாச்சாரத்தைத் தாண்டிச் செல்லும். ராகுல் ஒரு பயிற்சி பெற்ற சர்க்கஸ் சிங்கத்தைப் போல ரிங் மாஸ்டருக்கு பணிந்து நடந்து கொண்டால், அரசாங்கத்திற்கு நிச்சயமாக எந்தப் பிரச்சினையும் இருக்காது.

ஐயோ! இந்த ராகுல் மீது தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரம், எண்ணற்ற சட்ட வழக்குகள் போட்டும்  பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய போதிலும், அவர் அரசின் செய்தியை உள் வாங்கவில்லையே…! முத்தலாக், அரசியல் பிரிவு 370, ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அல்லது விக்ஸித் பாரத் நிகழ்ச்சி நிரலில் பிரதமரை அவர் விமர்சித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஏன் ரஃபேல் ஊழல்களை தோண்ட வேண்டும்,  நாட்டின் நலன்கள் சமரசம் செய்யப்படுவதைப் பற்றி பேச வேண்டும்?

இந்தியாவின் எல்லையில்  சீனாவின் ஆக்கிரமிப்பு அல்லது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில்  இந்தியா சரணடைந்தது பற்றி ஏன் குறிப்பிட வேண்டும்? பின்னர் எப்ஸ்டீன் சாக்கடையை கிளறுவானேன்..?  ராகுலை திருத்த முடியாது!  சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த எப்ஸ்டீனின் பொல்லாத உலகத்திற்குள் ஏன் ஆழமாகச் செல்ல வேண்டும், ராகுல். சரியா, மிஸ்டர் அமித்ஷாஉள்துறை அமைச்சரே?

இப்படிச் செய்யும் எவரையும் சபாநாயகர் சரியாகத் தடுப்பார். ஒரு அமைச்சரின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்  இருந்ததை அம்பலப்படுத்தினால் என்ன செய்வது? ஒரு மதிப்பிழந்த தொழிலதிபர் ( அம்பானி) பாலியல் குற்றவாளியிடம் (எப்ஸ்டீன்) பிரதமரின் சந்திப்புகளை சரி செய்யுமாறு கெஞ்சினால் என்ன செய்வது? அந்த விஷயங்களை மறைத்து வைக்க தோதாக நீங்கள் ஒரு நல்ல பையனைப் போல நடந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் ஒரு நிஷிகாந்த் துபேயை கட்டவிழ்த்துவிடுவோம். அவர் உங்களது நான்கு தலைமுறைகள் மீது சேற்றை வாரி இறைத்து, உங்கள் முழு குடும்பத்தின் முகத்தையும் இருட்டடிப்பார். அப்போது சபாநாயகர் தலையிட மாட்டார், ஏனெனில், எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே பேசவிடாமல் தடுப்பது மட்டுமே அவரது “புனிதக் கடமை”.

சஞ்சய் கே. ஜா 

அரசியல் விமர்சகர்.

நன்றி; தி வயர்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time