உழவர்களின் உரிமை குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும்!

கட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கான அரசியலையே முன்னெடுக்கின்றனர். உழவர்களின் தேவை என்ன? பிரச்சினைகள் என்ன? தீர்வு என்ன? என்பதை அறிந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். உழவர்களுக்கான அரசியல் அதிகாரம் அவர்களின் எண்ணிக்கைகு ஏற்ப சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம்  பெற வேண்டும்;

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பொருளியல் கொள்கை என்பது அம்பானி, ஆதானி போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான உலகமய தாராளமய தனியார்மய பொருளியல் கொள்கையே.

உழவர் உரிமை இயக்கம் முன்வைப்பது உழவர்களுக்கான உழைக்கும் மக்களுக்கான விவசாயப் பொருளியல் கொள்கை!

எட்டு வழிச்சாலை, மேல்மா சிப்காட், பரந்தூர் விமான நிலையம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி என்று கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளின் நிலங்களை மக்கள் விரோதமாக கையகப்படுத்துவது, உலகமயம், தனியார் மயம், தாராளமயப் பொருளியல் கொள்கை தான்.

கார்ப்பரேட் வளர்ச்சிக்  கொள்ளையை கைவிட்டு, மக்கள் நலனுக்கான, விவசாய நலனுக்கான கொள்கை என்று முன் வந்தால் இவை அனைத்திற்கும் உழவர் உரிமை இயக்கத்தால் மாற்று முன் வைக்க முடியும்.

ஆனால், விவசாய நிலங்களை எல்லாம் அழித்து விட்டு, விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மாற்றுத் திட்டத்தை அரசியல் காட்சிகள் முன்வைக்க தயாரா? உதாரணமாக மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசிக்கு மாற்றாக சூரியசக்தி, கடலலை, காற்று என இன்னும் பலவற்றின் மூலம் எரிசக்தியை தயாரிக்க முடியும். ஆனால், இவர்கள் செய்யமாட்டார்கள் ஏனென்றால் விவசாயம் அழிவதைப் பற்றி இவர்களுக்கு துளியும் கவலை இல்லை.

தமிழக அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சிக்கும் விவசாய உற்பத்தி குறித்து எந்தவித கொள்கையோ எந்தவித திட்டமோ கிடையாது என்பதுதான் ஆணித்தரமான உண்மை. மன்மோகள் அவர்களும் விவசாயத்தில் லாபம் இல்லை. எனவே விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியதும், மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் ஒட்டு மொத்த விவசாயிகளையும் படிப்படியாக விவசாயத்தில் இருந்து அப்புறப்படுத்தி கார்ப்பரேட்களுக்கு நிலத்தை கைமாற்றி முதலாளித்துவ பண்ணைகளை அமைக்க முயற்சித்தனர். டெல்லியில் நடந்த விவசாயிகளின் கடுமையான போராட்டதின் மூலமாக தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்(ஒத்தி வைத்துள்ளனர்). விவசாயிகள் விழிப்புணர்வு பெற்று பெரிய அளவில் கூட்டு பண்ணைகள் அமைக்க தவறினால் வருங்காலத்தில் நிச்சயமாக முதலாளித்துவ பண்ணைகளை அமைப்பார்கள் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

உழவர் உரிமை இயக்கம் ஒன்றை உறுதியாக சொல்கிறது, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களின் பரப்பளவு படிப்படியாக குறைந்து மிகவும் குறுகிவிட்டது இனி ஒரு பிடி மண்ணை கூட எந்த திட்டங்களுக்கும் கொடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது. இதுதான் விவசாய பொருளாதார கொள்கையின்  ஆணிவேர். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் விவசாய நிலங்கள் இருந்தால் தான் அதில் விவசாயத்தை எப்படி பெருக்குவது அது சார்ந்த தொழில்களை எப்படி பெருக்குவது என்ற திட்டங்களை தீட்ட முடியும். எனவே விவசாய நிலங்கள் அழிவதற்கு தமிழக மக்களும் உழவர் உரிமை இயக்கம் அனுமதிக்காது தமிழக மக்களும் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க மாட்டார்கள்.

வேலைவாய்ப்பு பெருக்குவதுஉள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதுஜிடிபி உயர்த்துவது

இதற்காக மற்ற அரசியல் கட்சிகள் அதானி, அம்பானி மற்றும் உலகம் முதலாளிகளின் கால்களில் விழுந்து அவர்களுக்கு தேவையான சலுகைகள் எல்லாம் வழங்குகிறோம் கடன்களையும் வழங்குகிறோம் தேவைப்பட்டால் வாராகடன் என்று பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறோம். விவசாய நிலங்களை ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் ஆண்டு குத்தகை என்று வழங்குகிறோம். அவர்கள் அமைக்கும் சிறப்பு பொருளாதார மண்டங்களில் நமது நாட்டின் எந்த சட்டமும் பின்பற்ற வேண்டியதில்லை, மாறாக அவர்கள் வைப்பதே சட்டம் என்ற அடிப்படையில் தொழிலாளிகளையும் சுரண்டிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறி அதானி அம்பானி உலக முதலாளிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

பெருமுதலாளிகள் போடும் மூலதனத்தின் அளவுக்கு ஏற்ப நாங்கள் அதை சாதித்து விட்டோம் இதை சாதித்து விட்டோம் என்று பெருமை பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் அதானிகளும் அம்பானிகளும் உலகப்பெரு முதலாளிகளும் நமது கனிம வளங்களை – இயற்கை வளங்களை – நீர் ஆதாரத்தை உறிஞ்சி உழவர்களின் மக்களின் உழைப்பை குறைந்த கூலி கொடுத்து கொள்ளையடிப்பது தான் மிச்சம். வேலைவாய்ப்பு பெரிதாக ஒன்றும் பெருகவில்லை. உள்நாட்டு உற்பத்தியும் ஜீடிபியும் கூட பெரிய வளர்ச்சி அடையவில்லை.

உழவர் உரிமை இயக்கம் சவாலாக சொல்கிறது!

எங்களால் வேலைவாய்ப்பை மிக அதிக அளவில் உருவாக்க முடியும்! உள்நாட்டு உற்பத்தியை மிக அதிகமாக அதிகரிக்க முடியும், ஜிடிபி மிக உயர்ந்த கட்டத்துக்கு எங்களால் உயர்த்த முடியும். அதற்கு நாங்கள் முன்வைக்கும் திட்டம்தான் விவசாய பொருளாதார கொள்கை. நாங்கள் சிறுகுறு நடுத்தர விவசாயிகளை முதலாளிகளாக ஆக்கும் திட்டத்தை முன்வைக்கின்றோம். விவசாயத்தை லாபம்கொழிக்கும் தொழிலாக மாற்றும் திட்டத்தை முன்வைக்கின்றோம்! விவசாயக் கூலிகளை விவசாய தொழிலாளிகளாக மாற்றி அவர்கள் பெருமளவில் சம்பாதிப்பதற்கான திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம்! விவசாயம் சார்ந்து தொழிற்சாலைகளை பெருமளவில் உருவாக்கும் திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம். கிராமப்புற தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம்! கிராமப்புற இளையோர்களுக்கு வேலை வாய்ப்பை 100% வழங்கும் திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம்!

இதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் உழைப்பை சூறையாடும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை ஒழிப்பதற்கான திட்டத்தை நாங்கள் முன் வைக்கின்றோம், உழவர்களின் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கிறோம். உழவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மக்களுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிக்கும் பெரும் வணிக கும்பலுக்கு முடிவு கட்டுவதற்கு நாங்கள் திட்டத்தை முன் வைக்கின்றோம்

நகர்ப்புறங்களில் சிறுகுறு நடுத்தர தொழில்களை பெருக்குவதற்கு எத்தனையோ இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கார்ப்பரேட் முதலாளிக்கு வழங்கும் சலுகைகளை கடன் உதவிகளை அளித்தால் அவர்கள் பெரும் முதலாளிகளாக மாறுவதோடு அல்லாமல் வேலை வாய்ப்பையும் பெரிய அளவில் அளிப்பார்கள். நகர்ப்புறங்களில் வாழும் இளையோர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம்.

எங்கள் விவசாய பொருளாதார கொள்கை

சிறு…குறு..நடுத்தர மற்றும் பெரு விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் நில உரிமைக்கு ஏற்ப பங்கு என்ற அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை அமைக்கும் திட்டத்தை முன்வைக்கிறது. இந்த கூட்டுப் பண்ணை 500, 1000, 5000 ஏக்கர் நிலங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டும். கூட்டுப் பண்ணை விவசாயம் அனைத்தும் நவீன அறிவியலையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் வகையில் இயற்கை வேளாண்மையை சார்ந்து அமைய வேண்டும். கூட்டுப் பண்ணைணைக்கு தேவையான இடு பொருட்களை அதற்கு தேவையான உழவு கருவிகளை செய்வதற்கான தொழிற்சாலைகளை அமைத்திட வேண்டும். மேலும் கூட்டு பண்ணையில் விளையும் விவசாய பொருட்களை பாதுகாப்பதற்கான கிடங்குகள், மதிப்பு கூட்டி வழங்குவதற்கான தொழிற்சாலைகளை கூட்டு பண்ணைகளை ஒட்டி நிறுவ வேண்டும். இதற்கு விவசாயிகள் மற்றும் கிராமத்தில் தொழில் முனைவதில் ஆர்வமுள்ள இளைஞர்களை வைத்து அவர்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தையும் வழங்கி கடன்களை வழங்கி தொழில்களை அமைக்க அரசு உதவ வேண்டும்.

கூட்டுப் பண்ணையில் விளையும் விளை பொருட்களுக்கு தமிழக அளவில் விவசாய கவுன்சில் அமைத்து அதற்கான விலையை நிர்ணயிக்க வேண்டும். முதலாளிகள் எப்படி தங்கள் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்கிறார்களோ அதேபோல விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை வழங்க வேண்டும்.

உழவர்களுக்கும் நுகர்வோருக்கும்(மக்களுக்கும்) இடையில் இருக்கும் பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதால் உழவர்களுக்கும் லாபம் கிடைப்பதில்லை மக்களுக்கும் குறைந்த விலையில் விவசாய பொருட்கள் கிடைப்பதில்லை எனவே உழவர்கள் நேரடியாக மக்களிடம் சந்தை படுத்தும் வகையில் கூட்டு பண்ணையை ஒட்டியே சந்தை படுத்துவதற்கான திட்டமிடலோடு கூட்டுப் பண்ணையின் முதலாளிகளின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும். இந்த மார்க்கெட்டிங் குழு நேரடியாக தமிழக அளவில் இந்திய அளவிலும் ஏன் தேவைப்பட்டால் உலக அளவிலும் சந்தைப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுக்கும்.

கூட்டுப் பண்ணை, கூட்டு பண்ணை சார்ந்த தொழில்கள்,  சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் எங்களால் வேலை வழங்க முடியும் விவசாயத்தை பெரும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்ற முடியும்.

விவசாயம் ஒரு தொழிற்சாலையை போல் திட்டமிட்டு செயல்படுவதால் வேலைவாய்ப்பு பெருகும், இதில் வேலை செய்யும் விவசாயிகள் நிரந்தர தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள், அவர்களுக்கு நியாயமான மாத சம்பளம் மற்றும் இஎஸ்ஐ, பிஎப் மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் முறையாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். விவசாயக் கூலிகள் நவீன விவசாய தொழிலாளிகளாக மாற்றப்படுவார்கள்.

விவசாய உற்பத்தி மிகப்பெரிய அளவில் வளர்வதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியை மிகப்பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். இதன் மூலம் ஜிடிபி எங்களால் மிகப்பெரிய அளவில் உயர்த்தி காட்ட முடியும்.  இங்கு ஸ்டாலின் முதல் மோடி வரை உலகத்தில் உள்ள மூலதனத்தை ஈர்க்க உலகம் முழுக்க சென்று முதலாளிகளின் கால்களில் விழுந்து மூலதனத்தை இங்கே இறக்குமதி செய்கிறோம் என்று பெருமை பீற்றிக் கொள்கிறார்கள்.

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற கவிஞர் மருதகாசி அவர்களின் வரிகளை உண்மையாக்கும் கொள்கையே எங்களின் விவசாய பொருளியல் கொள்கை. எனவே, உள்நாட்டிலேயே தொழில் முனைவோரை உருவாக்கி விவசாயத்தை பெரும் லாபம்மிக்க தொழிலாக மாற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை உள்நாட்டு உற்பத்தியை நம்மால் பெருமளவில் வளர்த்தெடுக்க முடியும் என்பதில் உழவர் உரிமை இயக்கம் மிகத்தெளிவாக இருக்கின்றது.

இன்று உள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்த நாட்டின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி பற்றி எந்த கவலையும் இல்லை அவர்களுக்கு அதானி அம்பானிகள் இடமும் உலக முதலாளிகளிடமும் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு சேவை செய்வது தான் இவர்களின் நோக்கம். இவர்கள் உண்மையிலேயே விவசாயத்தை வளர்த்தெடுக்க வேண்டும், இந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்க வேண்டும், இந்த நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவித்து தொழில் முனைவோர்களை பெருமளவில் உருவாக்க வேண்டும் என்று அக்கறை இருந்தால், எங்களுடைய விவசாய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்ளட்டும் அதை நடைமுறைப்படுத்தட்டும்.

இதை சவாலாக சொல்கிறோம். இவர்களின் உலகமய தனியார்மய தாராளமய கொள்கை பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த நாட்டை விற்று அரசின் பொது சொத்துகளை எல்லாம், நாட்டின் இயற்கை வளங்களை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்கு வழிவகை செய்வது தான் இவர்களின் நோக்கம். இவர்களால் விவசாயத்தையும் வளர்த்தெடுக்க முடியாது, நாட்டின் தொழில் துறையும் வளர்த்தெடுக்க முடியாது. வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியாது ஜிடிபி யும் உயர்த்த முடியாது.

நீர் நிலைகள்:

 

விளைநிலங்கள் அழிக்கப்பட்டது போலவே நீர் நிலைகளும் தொடர்ந்து அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது! நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடுமையான சட்டத்தின் மூலமாக அகற்றுவது, நீர் நிலைகளை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுப்பதற்கான கடுமையான சட்டங்கள் இயற்றுவது புதிய நீர்நிலைகள் மற்றும் சிறிய செக்டேம்ஸ், குளங்கள், குட்டைகளை தமிழகம் தழுவிய அளவில் உருவாக்குவதற்கான திட்டங்களை ஆய்வாளர்களை வைத்து உருவாக்குவது அதற்கு தேவையான நிதியை ஒதுக்குவது மேலும் பெரும் மழை வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் வீணாகும் மழை நீரை முறையாக சேமிப்பதற்கு சேமித்த நீரை பல்வேறு ஏரிகள் குளங்களில் நிரப்புவதற்கான சாலைகள் இணைப்பு போல் நீர் வழித்தடங்களை இணைப்பதற்கான திட்டங்களை வகுப்பது, அதை செயல்படுத்துவது என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த செயல்பாடு மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை வளர்ப்பதற்கு அவசியமான ஒன்றாகும். மற்றும் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கும் தேவையான ஒன்றாகும்.

கல்வி, மருத்துவம்:

மிகப் பெரும்பாலான விவசாயப் பிள்ளைகள் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கும் திடீரென்று ஏற்படும் உடல் நலக்குறைவிற்காக மருத்துவம் பார்ப்பதற்கும் தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை ஏன் தங்கள் நிலங்களையும் சொத்துக்களையுமே இழந்து வருகின்றனர். எண்பதுகளில் வாழ்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும் அன்று ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள்… அரசு மருத்துவமனைகளுக்கு இடையில் ஏதோ ஒன்று இரண்டு தனியார் பள்ளிகளும் தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே இருக்கும். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு இடையில் சில நூறு அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளே இருக்கின்றன.

பெரும் அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்லூரிகளையும் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டி உள்ளதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும் இதோடு மட்டுமல்லாமல் பல தனியார் முதலாளிகள் கல்வியும் மருத்துவத்தையும் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை கல்வி அளிப்பவர்களாக (கல்வி தந்தை) மக்களை காப்பவர்களாக புனித வேடமிட்டு நம்மை ஏமாற்றுகின்றனர் .ஆனால் உண்மை நிலை என்ன கல்வி மருத்துவத்தை வியாபாரமாக்கி உழவர்களின், உழைக்கும் மக்களின் உழைப்பையும் சொத்துக்களையும் சூறையாடுகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம் இதற்காகத் தான் உழவர்களும் உழைக்கும் மக்களும் ஓடாய் தேய்ந்து உழைக்கின்றனர்.

அத்தகைய அடிப்படை தேவையையே வியாபார பொருளாக்கி கொள்ளையடிக்கும் இத்தகைய அரக்கர்களை நாம் என்னவென்று சொல்வது? பெரும்பாலான அரசியல்வாதிகளே கல்வி மருத்துவத்தை வியாபாரம் ஆக்கி கொள்ளையடிக்கும் பொழுது இவர்கள் எப்படி கல்வி மருத்துவத்தை நூறு சதவிகிதம் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கொள்கை திட்டத்தை வகுப்பார்கள்? இவர்கள் கல்வி மருத்துவம் தனியார்மயத்தை ஒழித்து 100% அரசே நடத்த வேண்டும் என்ற கொள்கையை ஒரு நாளும் வகுக்க மாட்டார்கள். அதற்கான திட்டத்தையும் கொண்டுவர மாட்டார்கள் என்பது தான்  உண்மை.

கல்வி, மருத்துவம் போன்றவை வியாபாரமயமாக்கப்பட்டு அதனால் தங்களுடைய உழைப்பையும், சொத்துக்களையும் இழந்து வரும் விவசாயிகளாகிய உழைக்கும் மக்களாகிய நமக்குத் தான் அதன் வலி புரியும் நாம் என்று சட்டமன்றத்தில் அமர்கின்றோமோ, நமது குரல் என்று சட்டமன்றத்தில் ஒலிக்கின்றதோ அன்று தான் கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கலை வணிக மயமாக்களை முற்றாக ஒழித்து 100% அரசே ஏற்று நடத்தும் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே உழவர்களும் உழைக்கும் மக்களும் கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரமாக்கி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளையும் அதற்கு துணைநிற்கும் உலகமய தனியார்மய தாராளமய பொருளியல் கொள்கையும் எதிர்த்து உறுதிமிக்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.  சட்டமன்றத்தில் உழவர்களின் பிரதிநிதித்துவம் ஒன்றே கல்வி மருத்துவம் வணிகமயமாக்களை முற்றாக ஒழிக்கும். உழவர் உரிமை இயக்கம் ஒன்றை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றது உழவர்களின் உழைப்பை சொத்துக்களை சூறையாடும் கல்வி மருத்துவர் வணிகமயமாக்களை முற்றாக ஒழிக்கும் வரை உழவர்களை அணி திரட்டி போராடும் உழவர்களை சட்டமன்ற பிரதிநிதிகளாக தேர்வு பெற செய்து சட்டமன்றத்திலும் இதற்கான சட்டவரைவை கொண்டு வருவதற்கு தொடர்ந்து போராடும்.

அருள் ஆறுமுகம்

உழவர் உரிமை இயக்கம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time