சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) 2026 அறிக்கை, உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது இந்தியாவில் அரசின் சட்டங்களாலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களாலும், மதச் சுதந்திரம் மோசமடைவதால் குறிப்பிட்ட சிலர் அமெரிக்காவிற்கு நுழைய தடை கோரியுள்ளது;
இந்திய அரசாங்கம் சிறுபான்மையினரைக் குறிவைத்து கொள்கைகளை இயற்றியும், தன்னிச்சையான வன்முறைகளை ஊக்குவித்தும், சிறுபான்மையினரை தாக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியதோடு, இந்தியாவைக் ‘Country of Particular Concern – CPC என அறிவிக்க பரிந்துரைத்துள்ளது;
2026 அறிக்கையின் முக்கியக் அம்சங்கள் :
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் மதச் சுதந்திரம் ஆபத்தை நோக்கி செல்வதாக நாம் கூறி வந்தோம். அதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டும் தொடர்ச்சியான மற்றும் சிஸ்டமேட்டிக்காக கொடூரமான மத மீறல்களை அறிய நேருகையில் இந்தியாவை ஒரு கவலைக்குரிய நாடாக கவனப்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) பரிந்துரைக்கிறது..
தன்னிச்சையான வன்முறைகள்:
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை, குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதை அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் கண்டு கொள்ளாமல் விட்டதாகவும், சில சமயங்களில் ஊக்குவித்ததாகவும் ஆணையம் குற்றம் சாட்டியது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் கிறிஸ்த்துவ பாதிரியார்கள் தேவாலயங்களில் தாக்கப்படுவதையும், தேவாலயங்களே தாக்கி தீக்கிரையாக்கபடுவதையும், கிறிஸ்த்துவ மக்கள் துன்புறுத்தப்படுவதையும், அதே போல இஸ்லாமிய மக்கள் இந்துத்துவ வெறி கும்பலால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளை காலவரிசைப்படுத்தி USCIRF ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 2025-இல், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர இந்து வெறி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) கோரி வந்தது. இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மிகப் பெரும் வன்முறை வெடித்து நடந்த கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜூன் 2025-இல், ஒடிசாவில் இந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்தவ குடும்பங்களை இந்துத்துவா வெறி கும்பல் பயங்கரமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிட்டு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இந்த சம்பவத்தில் எட்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற இந்துத்துவ வெறி அமைப்பினர் இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்.

மே 2025-இல், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய எல்லைக்கு வந்த 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்கியா அகதிகளை இந்திய அதிகாரிகள் தடுத்த்தோடு, அவர்களை சர்வதேச கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி நிர்பந்தப்ப்படுத்தினர்”
ஜூலை 2025-இல், அசாமில் இந்திய குடிமக்களாக வாழ்ந்து வந்த வங்காள மொழி இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கோனோரை இந்திய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்கு கடத்தினர்.
குறிவைக்கப்பட்ட சட்டங்கள்:
மதமாற்றத் தடுப்புச் சட்டங்கள், பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) வக்பு வாரியச் சட்டங்கள் தொடர்பான கவலைகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டம், உத்தரகாண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதிகாரச் சட்டம் (யூஎஸ்ஏஎம்ஈ) ஆகியவை சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் அத்துமீறி தலையிடுவதாக உள்ளது. குறிப்பாக இந்திய அரசின் வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதார்களைச் சேர்க்க நிர்பந்திக்கிறது.
உத்திரகண்ட் அரசோ தனது புதிய சட்டத்தின் மூலம், மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகளின் கல்வி நிறுவனங்களையும், மதத் தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஆட்டுவிக்கின்றனர்.
பல மாநிலங்கள், கடுமையான சிறைத் தண்டனைகளை உள்ளடக்கிய மதமாற்றத் தடுப்புச் சட்டங்களை கொண்டுவந்துள்ளன. மேலும், இந்திய அதிகாரிகள் குடிமக்கள் மற்றும் மத அகதிகளைப் பரவலாகத் தடுத்து வைப்பதற்கும் சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கும் வழிவகுத்ததோடு, மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தன்னிச்சையான தாக்குதல்களையும் தடுக்கத் தவறியதோடு நடவடிக்கை எடுக்கவும் மறுத்தனர். இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் தாக்கப்படுவதிலும், அவர்களின் மத சுதந்திரத்தை பறிப்பதிலும் ஆளும் பாஜக அரசின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா ஆகியவற்றுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

USCIRF ஆணையத்தின் பரிந்துரைகள்;
எதிர் காலத்தில் இந்தியாவின் மதச் சுதந்திரம் காப்பாற்றப்படுவதற்கு இந்தியா உடனான இரு தரப்பு வர்த்தகக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையையும் இணைக்க வேண்டும் என்றும் USCIRF ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டார்களும், மதச் சிறுபான்மையினரும் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாலும், அச்சுறுத்தப்படுவதாலும் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத சிறுபான்மையினர் மீதான உரிமை மீறல்களுக்காக இந்திய அரசைக் கட்டுப்படுத்த வழி வகை செய்யும் 2024ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு கொண்டு வந்த மசோதாவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன் பரிந்துரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, “இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறெல்லாம் பாதிக்கபடுகிறது என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறையும், அமெரிக்காவின் சர்வதேச மத உரிமைகளுக்கான ஆணையமும் நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் தர வேண்டும்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதால் வெட்கி தலைகுனிய வேண்டிய பாஜக அரசோ, மாறாக இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துள்ளது. இது உள்நோக்கமுள்ளது என்றும் ஒருதலைபட்சமானது என்றும் தெரிவித்துள்ளது.
சாவித்திரி கண்ணன்























முக்கியமான கட்டுரை