தொல்லியல் கூறும் வரலாற்று பெருமிதங்கள்!

-பேராசிரியர் ஆ. கருணாகரன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின்  தொல்லியல் துறை பேராசிரியர் ஆ. கருணாகரன் தொல்லியல் ஆய்வின் அவசியம், அவற்றால் நாம் பெறும் நன்மைகள் போன்றவற்றை சொல்வதோடு, வரலாற்றை முன் நகர்த்தி செல்ல தொல்லியல் எவ்வாறு பயன்படுகிறது என விளக்குகிறார்;

பேரா. ஆ. கருணாகரன்.பிற்கால சோழப் பேரரசுகளின் தலைநகரங்கள்  (பழையாறை [அதாவது, தாராசுரம்], தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ) பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தனது ஆய்வின் அடிப்படையில் The Capital cities of imperial cholas என்ற நூலை எழுதியுள்ளார்.

தொல்லியல் ஆய்வுகளினால், மக்களுக்கு என்ன பயன்

ஆதி மனிதனுடைய பழக்க வழக்கம், உணவு முறைகள், உடை, அணிகலன், குடும்ப அமைப்பு, கலாச்சாரம் போன்றவைகளை தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியமுடியும்.

மிளகு, இஞ்சி, பூண்டு, பட்டை, இலவங்கம் போன்றவைகளை நாம் பல்லாண்டுகளாக  உணவிற்கு பயன்படுத்தி வருகிறோம் என்பது பெருமைக்குரியதாகும்.  இவைகளை சில நூற்றாண்டுகளாக ஏற்றுமதி செய்து, ஆசியாவில் முன்னோடி நாடாக இருந்திருக்கிறோம். ரோமாபுரி அரசுக்கும், நமக்கும் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. அங்கிருந்து குதிரை, மணிகளை இறக்குமதி செய்துள்ளோம். துணி, நறுமணப் பொருட்களை (spices) ஏற்றுமதி செய்துள்ளோம். சாயத்தொட்டி, உறை கிணறு, படிகை ஓடு (tiles) போன்றவை பாண்டிச்சேரி, அரிக்கமேடு – ல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்தன.

தொல்லியல் துறை பேராசிரியர். ஆ. கருணாகரன்

துருக்கி நாட்டின் கான்ஸ்டான்டினோபிள் நகரத்தின் (அதாவது இஸ்தான்புல்)  வழியாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும்  இடையே வாணிகம் நடைபெற்று வந்தது. இந்த வழியை 15 ம் நூற்றாண்டில் அந்நாட்டு அரசு தடை செய்தது. எனவே தான் புதிய கடல்பாதை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம், ஐரோப்பிய நாடுகளுக்கு எழுந்தது. அப்படி தான் கேரளாவில் உள்ள கள்ளிக் கோட்டை கண்டு பிடிக்கப்பட்டது. கடற் பயணம் மேற்கொண்ட மெக்கெல்லன், தொடர்ந்து பயணித்து புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து உலகம் உருண்டை என்பதை நடைமுறையில் நிரூபித்தான். போர்ச்சுகீசிய மாலுமி அமெரிக்கோ வெஸ்பூசி (Amerigo Vespucci)  கடற்பயணத்தில் இறங்கிய இடம்தான், அமெரிக்கா. கடந்த கால வரலாறுகளை கண்டுபிடிக்க, சரிபார்க்க தொல்லியல் ஆய்வுகள் பயன்படுகின்றன.

பல்லாவரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு தொல்லியல் வரலாறு ஏதும் இருக்கிறதா

10,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டம் பழைய கற்காலமாகும். அப்போதே, மனிதன் பல்லாவரத்தில் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருந்ததாக  ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்ற ஆய்வாளர் 1863  ம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

மனிதன் வேட்டைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், கருவிகள், இருப்பிடம் போன்றவைகளின் அடிப்படையில் பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரிக்கிறார்கள். பழைய கற்காலத்தில் மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி இருக்கிறான்.புதிய கற்காலத்தில் வழவழப்பான கற்களை பயன்படுத்தினான்.

பல்லாவரம் தர்கா, கீழ்கட்டளை போன்றவை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருவள்ளூர், பூண்டி அருகே, அதிராம்பாக்கம் பகுதியில், பழங்கால மனிதன் பயன்படுத்திய கைக்கோடாரி (hand axe) இருந்ததாக, அலெக்சாண்டர் ரீ (Alexander Rea)  என்ற ஆய்வாளர் சொன்னார்.

தூத்துக்குடி அருகில் தேரி (Teri)  என்ற  இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம்  மனிதன் தகடுகள், மெல்லிய கத்திகளை (Blade) பயன்படுத்தி இருக்கிறான் என்று தெரிய வருகிறது. தகடுகள் விலங்குகளின் உரோமங்களை மழிக்கப் பயன்பட்டிருக்கின்றன. அம்புகளில் சிறுகற்களைச் (micro lithic) இணைத்து  எய்திருக்கிறான்; அவை விலங்குகளின் உடலை கிழித்துச் சென்றிருக்கும்.

சோழர்களைப் பற்றி நீங்கள் செய்த ஆய்வு The Capital cities of imperial cholas என்ற பெயரில் நூலாக (2022)  வந்துள்ளது. அது பற்றி…?.

நம்மிடம் சிறந்த  நிர்வாகக் கட்டமைப்பு (System of Governance)  இருந்திருக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிகிறது. கலாச்சாரம், கல்வி, ஓவியம், கட்டடக் கலையில் நாம் சிறந்து இருக்கிறோம். கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை போகும் வழியில் பழையாறையில் இருந்த சோழன் மாளிகை, அரண்மனையாக இருந்திருக்கிறது. அங்கு ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன், குந்தவை போன்றவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த மாளிகையைச் சுற்றி மூன்று சதுர கி.மீ. அளவுக்கு இராணுவ குடியிருப்பு (Military Cantonment) இருந்திருக்கிறது. பம்பை படையூர் (காலாட்படை வீரர்கள் உள்ள ஊர்), ஆரியர் படையூர் (இசையொலி வீரர்கள் இருக்கும்  ஊர்), மணல் குன்று (மணற் குன்றில் இருந்து தாக்குபவர்கள்), புதுபடை (படைக்கு புதிதாக நியமனம் செய்யபட்டவர்கள் – பயிற்சிக்கு உரியவர்கள்), உடையாளூர் ( இராணுவ உடை தயாரிப்பு) என்ற ஊர்கள் இருந்திருக்கின்றன.

அதன் பிறகு தலைநகரம் தஞ்சாவூருக்கு போகிறது. அங்கு படைகளுக்கு பயிற்சி அளிக்க இடம் போதவில்லை, விவசாயம் நடக்கும் வயல்களுக்கு பாதிப்பு வரக்கூடாது, கடற்படைக்கு இடம் தேவை என்பதற்காக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகரமாக மாற்றுகிறான். அங்கு கோவிலை கட்டுகிறான்.  பிறகு அங்கிருந்து மீண்டும் பழையாறைக்கு அருகில் ராஜராஜேசுவரம்  என்று அழைக்கப்பட்ட (தற்போதைய பெயர்  தாராசுரம்) ஊருக்கு தலைநகரம் வருகிறது. இரண்டாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் ஒரு லட்சம் சிற்பங்கள் உள்ளன.

தஞ்சை பெரிய கோவில் பற்றி..?.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் முதலில் கர்ப்பகிரஹத்தை வைத்துவிட்டு பிறகு கோவில் வேலைகளை செய்திருக்கிறார்கள். வாயிற் படிகளை விடவும் லிங்கம் பெரியது. 216 அடி உயரத்தில் கோவிலை கட்டியிருக்கிறார்கள். 80 டன் எடையுள்ள – விமானத்தை-  ஏற்றி இருக்கிறார்கள். கற்கள் ஒன்றோடு ஒன்று (locking system) இணைக்கப்பட்டுள்ளன. இப்போதும்   உபயோகத்தில் உள்ள கோவிலாக இருக்கிறது. 1987 ல், யுனெஸ்கோ,  உலக பாரம்பரிய தளம் (world heritage site) என்று இதனை அறிவித்துள்ளது.

 தொல்லியல் ஆய்வுகளுக்கு  அடிப்படையாக எவற்றை கருதுவீர்கள்?

 

செப்பேடுகள், கல்வெட்டுகள், போன்றவைகள் ஆய்வுகளுக்கு முக்கியமானவையாக கருதப்படும். ஓவியம், பானை ஓடுகள், ஆயுதங்கள், நாணயம் போன்றவைகளும் ஆதாரமாகக் கொள்ளப்படும். பழைய சிலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பும்போது, தொல்லியல் துறையின் தடையில்லா சான்று தேவை. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கென சட்டம் உள்ளது. மாயவரம் அருகே, திரு இந்தலூரில் 99 செப்புத் தகடுகள் கிடைத்தன. அவை மூலமாக, சோழ வம்சத்தை நிறுவிய விஜயாலய சோழன் பல்லவரின கீழ் குறுநில மன்னனாக இருந்தான் என சொல்லமுடிகிறது. சோழர்கள், முத்தரையர் வம்சத்தின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தார்கள் என்று அதுவரை கருதி இருந்தார்கள். பழங்கால நினைவுச் சின்னங்கள் (relic), எச்சங்கள் (reminds) பல உண்மைகளைத் தெரியப்படுத்தும்.

வேகவதி, பாலாறு, செய்யாறு என்ற மூன்று நதிகள் இணையும் திருமுக்கூடலில், சுந்தர சோழன் ஆதுல சாலை இருந்திருக்கிறது. அங்கு15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்திருக்கிறது. உள்நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய உணவு ரேஷன் அளவு, மருத்துவர்களின் சம்பளம்  போன்ற விவரங்கள் அங்குள்ள கல்வெட்டில் இருக்கின்றன.  அங்கு வேதக் கல்லூரியும் அதாவது மருத்துக் கல்லூரியும் இருந்திருக்கிறது. உத்திரமேரூர் கல்வெட்டு, ‘குடஓலை முறை’ பற்றி பேசுகிறது. வேட்பாளர் தகுதி, வாக்காளர் தகுதி, தண்டனை பெற்றவர்களை பதிவியில் இருந்து நீக்குவது போன்றவை பற்றி பேசுகிறது. சதுர்வேதி மங்கலம் என்று பார்ப்பனர்களுக்கு வரி இல்லாமல் நிலங்களை கொடுத்து குடியேற வைத்திருக்கிறான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

தொல்லியல் படிப்பு எங்கு படிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில்  இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பு உள்ளது. ஆர்வத்தின் காரணமாக மருத்துவம், பொறியியல் படித்தவர்கள் கூட இதில் சேர்வது உண்டு. கீழடியில் ஆய்வு செய்த அமர்நாத், நான் பணிபுரியும் துறையில் படித்தவர்தான்.நமக்கு முந்தைய வரலாறு தெரிந்தால்தான், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவரும். தற்போது செங்கல்பட்டு, செட்டிமேடு பகுதியில், தொல்லியல்  மாணவர்கள் ஆய்வுசெய்து வருகிறார்கள்.

1958  ல் புராதனச் சின்னங்களை பாதுகாக்க, இந்திய தொல்லியல் துறை சட்டம் வந்தது. ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இதில் பொறுப்பு உள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தற்கான எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக அரசு நிறுவியுள்ளது. கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களின் நெத்தியில் கட்டப்படும் பொன்னால் செய்யப்பட்ட நெத்திப்பட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை பானையில், பாதுகாத்து வைத்துள்ளனர். மதுராந்தகம் பகுதியில் உள்ள சானூரில் இயற்கை பேரிடர், காலரா போன்றவைகளினால் கொத்தாக இறந்தவர்களை குழுவாக அடக்கம் செய்தது  கண்டறிப்பட்டுள்ளது. இவையெல்லாம் நமது சமூகம் எப்படி முன்னேறியுள்ள ஒரு சமூகமாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லுகிறது. எனவே இவைகளைப் பார்வையிட வெளிநாட்டினர் வருகின்றனர்.  நமது நாட்டிற்கு அந்நியச் செலாவணி கணிசமாக கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய தங்குமிடம், போக்குவரத்து, வழிகாட்டிகள் போன்ற வசதிகளை போதுமான அளவில் செய்ய வேண்டும்.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time