இந்தியாவை ஆட்சி செய்வது அம்பானியா? அதானியா? மோடியா?

சாவித்திரி கண்ணன்

விவசாயிகள் போராட்டம்

இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..!

ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்க…அப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..?

ஒன்னும் பெரிசா நடந்திடலை..!

விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்!

’’அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்!

விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன?

”எனக்கு ஒன்னுன்னா அரசாங்கம் துணையிருக்கு’’ என்ற ஒரு நம்பிக்கை தான் அரசாங்கத்திற்கும், விவசாயிக்குமான உறவுப்பாலமாகும்!

அடுத்ததாக தாங்கள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்வதை, எவனும் அடித்து,பறித்து அடிமாட்டு விலைக்கு அபகரிச்சுட்டுப் போகாமல், நியாயமான விலைக்கு விற்க உதவணும்!

இம்புட்டுதாங்க விவசாய சமூகம் ஒரு அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது…!

இதைத்தான் இந்த பாஜக அரசு முற்றிலுமாக தகர்த்திருச்சு…, இந்த மூன்று வேளாண் சட்டங்கள் மூலமாக!

மேலும். நம்மைப் போன்ற பொதுமக்கள் அதாவது, உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் நுகர்வோர்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?

எங்களுக்கு நியாயமான விலைக்கு கிடைக்கணும். அதுவும் தங்கு தடையின்றி, பற்றாகுறையின்றி கிடைக்கணும். அத்துடன் எதுவும் அநியாய விலைக்கு போய்விடக் கூடாது!

இவ்வளவு தான்..இதுக்கு மேல மற்றவையெல்லாம் இவை சார்ந்த அம்சங்களே!

ஆனா, இந்த நம்பிக்கைகளைத் தான் இந்த அரசு செய்ய மறுத்திருக்கு!

எப்படி என்றால்,

  1. தோ பாரு, இந்த குறைந்த பட்ச விலையாவது வேணும்னு கேட்கிற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே..!
  2. அரசாங்கம் உங்க பொருட்களையெல்லாம் தொடர்ந்து கொள்முதல் செய்யணும் என்றோ, விலை மற்றும் விற்பனையை கண்காணித்து ஒழுங்குபடுத்தணும்னோ சொல்லாதே!
  3. இனி, விவசாய சந்தையில் மத்திய அரசுக்கும் வேலை இல்ல, மாநில அரசுக்கும் வேலை இல்லை.
  4. அரசாங்கத்தால விவசாயப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்கமுடியல, அநியாயத்துக்கு வீணாகுது..அதனால சேமிப்பு கிடங்குகளுக்கு இனிமே அதானி தான் பொறுப்பு!
  5. விவசாய உற்பத்தி பொருள்களை கொள்முதல் செய்வதற்கும், விற்பதற்கும் அம்பானி தான் பொறுப்பு!
  6. மேற்படியான ஒப்பந்தத்தை அதானியிடமும்,அம்பானியிடமும் போட்டுவிட்டோம். அதை நம்பி அவர்களும் பல லட்சம் கோடிகளுக்கு மேல் முதலீடும் செய்துவிட்டார்கள்!
  7. இந்த காரணத்திற்காகத் தான் நாங்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேசக் கூட அனுமதிக்காமல் அதிரடியாக – இன்னும் சொல்வதென்றால் அராஜகமாக – மூன்று சட்டங்களையும் கொண்டு வந்தோம்.

8. இனிமே, விற்பது தொடர்பாக நீங்க அம்பானி அல்லது அவர் மாதிரியானவங்களோட     ‘ஒப்பந்தசாகுபடி’ போட்டுகிடுங்க. அவங்க என்ன கேட்கிறாங்களோ.அதை அவங்க சொல்கிற   கண்டிஷன்களுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி செய்து கொடுங்க. இதுலு எதுனா பிரச்சினை வந்தால் நீ     கோர்ட்டுக்கெல்லாம் போகக் கூடாது. போகவும் முடியாது! அம்புட்டு தான்!

இந்த எட்டு அம்சங்கள் தான் விவசாயிகளை ஏகத்திற்கும் கோபப்படுத்தியிருக்கு என்பதைவிட விரக்தியின் விளிம்பிற்கே தள்ளிவிட்டது..!

உண்மையில் இந்த ஆட்டத்தின் தொடக்கம் 2000 வது ஆண்டிலேயே – வாய்பாய் – காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது! இதன்படி இனி அரிசி,கோதுமை ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய உணவு கார்ப்பரேசன் எனப்படும் FCI யிடமிருந்து,அதானியிடம் கொடுக்க ஒப்பந்தமானது! அதைத் தொடர்ந்து பல்லாயிரம் கோடிகளில் மிக பிரம்மாண்டமான உணவு சேமிப்பு கிடங்களை இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் அதானிகுழுமம் நிறுவியுள்ளது! இவற்றில் ஒராண்டுக்கு 8.75 லட்சம் டன்கள் உணவு தானியங்களை சேமித்து வைக்க முடியும்.இது தவிர மேலும் நான்கு லட்சம் டன்கள் உணவு தானியங்களை சேமிக்கும் கிடங்குகளும் தயாராகிவருகின்றன! 2022 க்குள் 21.5 லட்சம் டன்கள் கொண்ட சேமிப்புகிடங்களை (sailo storage) அதானி குழுமம் நிறுவிவிடும்! ஆகவே, பாவம், விவசாயிகள் இந்த விவரமெல்லாம் தெரியாமல் போராடிவருகிறார்கள்

பஞ்சாபின் மொகா, ஹரியாணாவின் கைதல், தமிழ்நாட்டில் சென்னை, கோவை இவை தவிர மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்குவங்கம் ஆகியவற்றில் தலா ஒன்று! இவை ஓவ்வொன்றுமே பல ஆயிரம் கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது! இவை உருளைவடிவம் கொண்ட அதி நவீன சேமிப்புக் கிடங்கு! இங்கே எலிகள் புகமுடியாது! மழை தண்ணீர் நுழைய முடியாது. உண்மையிலேயே படுபாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை!

நமது இந்திய உணவு கார்ப்பரேசன் வசம் இருக்கும் உணவு சேமிப்பு கிடங்குகளின் தரமும்,பாதுகாப்பும் படு கேவலமாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.அது போல மாநில அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகளின் லட்சணத்தையும் அதனால் ஏற்படும் பேரிழப்புகளையும் நாம் அறிவோம்!

இந்திய அரசின் கட்டுமான சேமிப்பு கிடங்குகளும் (382.27 லட்சம் டன்கள் கொள்ளவு) மாநில அரசுகளின் (238.17 லட்சம் டன்கள்) பாதுகாப்பானதாக இல்லை! திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளின்  (367.1 லட்சம் டன்கள்) குடோன்களும் பாதுகாப்பானதாக இல்லை! இதனால் மொத்த சேமிப்பில் சுமார் 20%  வீணாகின்றன!

இவற்றை தடுத்து, பாதுகாப்பான குடோன்களை நவீன முறையில் நிறுவ வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை இங்கு வெகுகாலமாக எந்த ஆட்சியாளர்களுமே பொருட்படுத்தவில்லை!

சீனாவில் 1999 லேயே நவீன பாதுகாப்பான குடோவுன்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்டுவிட்டன!

ஆஸ்திரேலியாவில் ஒரு ஆண்டுக்கு வீணாகும் உணவு பொருட்கள் 0.75% தான்! அதாவது ஒரு சதவிகிதம் கூட இல்லை!

ஆனால் நமது நாட்டில் வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகின்றன!

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 600க்கு மேற்பட்ட காய்கறி மற்றும் பழ அங்காடிகளை திறந்து நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன்கள் பழங்களையும் 300 மெட்ரிக் டன்கள் காய்கறிகளையும் கொள்முதல் செய்கிறது. அதே போல 80 பிரமாண்ட சந்தைகளையும் நிறுவியுள்ளது. மேலும் 500 கடைகளை திறக்கவுள்ளது!

இத்துடன் அரிசி,கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்களை விற்பனை செய்ய 7,000 ஊர்களில் கடை திறந்துள்ளது. மேலும் திறக்கவுள்ளது. எனவே, இனி, நீங்கள் உற்பத்தி செய்வதை அவரிடமே மொத்தமாக தந்துவிடலாம்! இது ஒப்பந்த சாகுபடி முறையா? அல்லது விவசாயிகளை ஒழித்து ’சாகும்படி’ செய்யும் முறையா என்று கேட்கக்கூடாது!

ஆக, இவை அனைத்துமே இந்த மூன்று வேளாண்சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் பின்னணியை விளக்கவே சற்று சுருக்கமாக கூறியுள்ளேன்!

ஆக, நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் அரசுகளுக்கு நம் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் திரானி இல்லை என்பதை அவை ஒப்புக் கொண்டதோடு, அவற்றை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியாகத் தான் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன! இனி படிப்படியாக பொது விநியோகத் திட்டமும் விலக்கி கொள்ளப்படும்! இங்கே விவசாயிகளின் பாதுகாவலனாக செயல்பட்டிருக்க வேண்டிய மத்திய அரசு விவசாயிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான இடைத்தரகராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டதோடு, அந்த இடைத் தரகிலும் கார்ப்பரேட் நலன்களை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே செயல்பட்டுவிட்டது! இவை தான் விவசாயிகளின் கோபத்திற்கான காரணங்களாகும்!

சாவித்திரிகண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time