அம்பானி  வெளிநாட்டு சப்ளையால் தான் இந்தியாவில் தட்டுபாடு!

-சாவித்திரி கண்ணன்

இந்தியா முழுமையும் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் திணறுகிறார்கள், போக்குவரத்து தொடங்கி உணவகங்கள் மட்டுமின்றி, குடும்பங்களும்  சமையல் கேஸ் இல்லாமல் திண்டாடும் போது, அம்பானியின் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை  வெளிநாடுகளுக்கு  சப்ளை செய்யலாமா?

குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், முகேஷ் அம்பானியின் Mukesh Ambani’s Reliance breaks silence on reports of receiving cargo of Russian oil at Jamnagar refinery கட்டுப்பாட்டில் இயங்கும் உலகின் மிகப்பெரிய நவீன எண்ணெய் சுத்திகரிப்பு  ஆலையாகும்.

தினசரி சுமார் 1.4 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை  ஐரோப்பா உள்ளிட்ட வெளி  நாடுகளுக்கு 9,14,000 பேரல்கள் ஏற்றுமதி செய்கிறது. இங்கு பெட்ரோல், டீசல், எல்பிஜி, நாப்தா, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் இதர உயர்தர எரிபொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.

ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு சமீபத்தில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட வெனிசுலா நாட்டின் கனமான கச்சா எண்ணெய் இறக்குமதியாகிறது. இந்த கனமான கச்சா எண்ணெய்  சுத்திகரிக்கும் திறன் மற்றவர்களிடம் இல்லாத ஒன்றாகும். இந்த நவீன திறன் பெரும்பாலான சுத்திகரிப்பு ஆலையில் இருக்காது. வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் பெரும்பாலும் கனமான மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட வகையைச் சேர்ந்தது. இத்தகைய எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்கு சிறப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. ஆகவே, இந்த வாய்ப்பை அமெரிக்காவிடம் இருந்து மோடியின் சிபாரிசில் பெற்றுள்ள அம்பானி இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய மக்களின் பற்றாக்குறைக்கு முக்கியத்துவம் தராமல் வெளி நாடுகளுக்கு பல லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்வதும், அதை தட்டிக் கேட்கும் துணிச்சலின்றி மத்திய பாஜக அரசு இருப்பதையும் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

அம்பானியின் ஜாம் நகர் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.

பல லட்சம் தேனீர், காபிக் கடைகள் , பல லட்சம் சிறிய ,பெரிய உணவகங்கள் சமையல் கேஸ் பற்றாக்குறையால் திக்கித் திணறி சரிபாதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மற்றவை எப்படியெப்படியோ சமாளிக்கின்றன. பெரு நகரங்களில் ஹோட்டல்களை நம்பி வாழும் பெருந்திரளான உழைக்கும் ஆண்களின் பாடு சொல்லிமாளாது. ஹோட்டல் இண்டஸ்டிரியில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.  நாடு படு மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.  சமையல் கேஸ் தட்டுப்பட்டால் மக்கள் வீதிகளுக்கு வந்து போராடி வருகிறார்கள்..! ஆனால், இவை பற்றி எல்லாம் பிரதமர் மோடியோ, அவரது நண்பர் அம்பானியோ பொருட்படுத்த தயார் இல்லை.


உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் போர் உக்கிரமாக நடந்த போது, ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா  தடை போட்டதால், இந்தியாவிற்கு ரஷ்யா மிகப் பெரிய அளவில் மிக மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் அளித்தது.. அப்படி அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதியை அம்பானி நிறுவனம் பெற்று சுத்திகரிப்பு செய்து ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் கோடிகள் லாபம் ஈட்டியது.

அன்று ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பை பொறுத்த வரை  மிகப் பெரிய பலன் அடைந்தவை ரிலையன்ஸ் நிறுவனமே. இவ்வளவு சவால்களை எதிர்கொண்டு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்யை ஒரு பக்கம் அம்பானியின் சிக்கா துறைமுகம் ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கையாண்டதென்றால், மறுபக்கம். அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதியாவதும் பிறகு ஏற்றுமதியாவதுமாக  போக்குவரத்து சேவைகள் நடைபெறுவதால்  இதில்  மோடியின் ஆத்ம நண்பர் அதானியும் பெரும் பலன் அடைந்தார்.

அதானியின் முந்த்ரா துறைமுகம்.

இதில் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவிகித வரிவிதித்து ஒட்டு மொத்த இந்திய ஏற்றுமதியாளர்களையும் தண்டித்தார்.

இதனால் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை மோடியின் பாஜக அரசு அதிரடியாக நிறுத்தியது. இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் ஒப்பந்தமானது. ஆனால், அந்த ஒப்பந்தப்படி இன்னும் இந்திய அரசு பலன் பெற முடியவில்லை.

இதற்கிடையில் வெனிசுலாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பிறகு அங்குள்ள எண்ணெய் வளங்களை அபகரித்த அமெரிக்கா, அதன் ஒரு பகுதியை  மோடியின் சிபாரிசில் அம்பானிக்கு தாரை வார்த்தது. அத்துடன் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அம்பானிக்கு மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இந்த வகையில் ரஷ்யவிடம் இருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் ஒரு சேர லாபம் பார்த்தவர் திருபாய் அம்பானி தான். அதே சமயம் அம்பானி அடைந்த லாபத்திற்காக இந்திய ஏற்றுமதியாளர்களை தண்டித்து இந்தியாவில் பல இண்டஸ்டிரிஸ்  மூடக் காரணமான அமெரிக்காவோ அம்பானிக்கு மேலும் வாய்ப்புகளை தந்து பயன்படுத்திக் கொள்ள பிரதமர் மோடி உதவி செய்துள்ளார்.

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுகளாக நம்  நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இருந்த நல் உறவையும், மரியாதையையும் சிதைத்துக் கொண்டார் மோடி. தற்போது பற்றாக்குறையால் அமெரிக்காவிடம் கெஞ்சி 30 நாட்களுக்கு மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற அவலம் நடந்தேறியது. ஆனால், பழையபடி மலிவு விலைக்கு கச்சா எண்ணெய் கிடைக்காது. சந்தை மதிப்புப்படி வாங்கிக் கொள்ளலாம் என ரஷ்யா கூறிவிட்டது.

அமெரிக்காவை சந்தோஷப்படுத்துவதற்காக நூற்றாண்டுகளாக ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் இறக்குமதியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தியது, இந்தியா. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் வலிந்து சண்டைக்கு போன போதும், குண்டுவீசி அதன் தலைவர் கொமெனியையும், நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானவர்களையும் கொன்று குவித்த போதும் இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க பயந்து வாய் மூடி மெளனித்துக் கிடந்தார்.

ஈரானின் ஹோர்முஸ் நீரணை வழியாகத் தான் நமக்கான கச்சா எண்ணெய்யில்  சுமார் 40 சதவிகிதம் வந்து கொண்டு இருந்தது. மற்ற நாடுகளுக்கும் சென்றது. இந்த சூழலில்  தன் நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் ஈரான் அனுமதித்தது. இந்தியாவை தன் நட்பு பட்டியலில்  ஈரான் இருந்து எடுத்துவிட்டதை அறிந்த பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கெஞ்சியதால் இந்தியாவின் சில கப்பல்களை மட்டும் ஈரான் அனுமதித்து உள்ளது.

எப்படிப் பார்த்தாலும், இந்தப் போரின் விளைவால் இந்தியா இனி கச்சா எண்ணெய்க்கு கஷ்டப்படும் சூழல் உருவாகிவிட்டது. இந்தச் சூழலில் அம்பானியின் ஜாம் நகரில் உள்ள இரு பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் உற்பத்தியாகும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை இந்திய மக்களின் தேவைக்கு போகத் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று மோடி சொன்னாலே போதும். இந்தியாவின் பிரச்சினை முடிவுக்கு வரும். இல்லையெனில் பற்றாக்குறையின் விளைவால் உள் நாட்டுக் கலவரங்கள் வெடித்து நாட்டில் பதற்றமே ஏற்படும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time