அசாமில் ஆட்சியமைக்கப் போவது யார்?

-ச.அருணாசலம்

பத்தாண்டுகளாக அசாமை அமைதி இழக்க வைத்துள்ள பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க அதிரி, புதிரி வேலைகளை செய்கிறது. காங்கிரஸ் பெருந் தலைகளை பாஜகவிற்குள் இழுப்பது, பெண்களின் வங்கிக் கணக்கில் அபரிமிதமான பணத்தை டெபாசிட் செய்வது என அதகள ஆட்டம் ஆடினாலும் காங்கிரஸ் கடுமையான போட்டியை தருகிறது;

அசாம் மாநில சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 9 -ல் நடைபெற உள்ளது. 126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி பீடத்தில் இருக்கிறது. முதலில் சர்பானந்தா சோனாவால் முதல்வராகவும் , பிறகு, 2021 முதல் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஹிமந்தா சர்மாவிற்கு  முதல்வர் பதவியை வழங்கி இந்தியாவின் வட கிழக்கில் தங்களது ஆதிக்கத்தை மோடியும், ஷாவும் நிலைநாட்டினர்.

அசாம் முதல்வரே , மணிப்பூர்,நாகலாந்து, மிசோரம், அருணாச்சல் பிரதேசம் என்று வட கிழ்க்கு பகுதி அதிகார முழுமைக்கும் அடிப்படை அஸ்திவாரம் என மோடி கும்பல் எண்ணுகிறது.

ஏற்கனவே சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் சி பி ஐ வலையில் சிக்கிய ஹிமந்தா, பாஜகவிற்கு தாவி ‘அரும்பணி புரிந்ததால் ‘ அவர் மீதிருந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஆனால், ஒரிஜினல் சங்கிகளைவிட மித மிஞ்சிய வகுப்புவாத வெறியை கக்கும் ஹிமந்தா சர்மா, மீண்டும் வெற்றி பெறுவதற்காக வகுப்பு கலவரங்களை தூண்டவும், மத வெறுப்பை தூண்டவும் தயங்காதவராக வலம் வருகிறார்.

இஸ்லாமியர்களை “ மியா முஸ்லீம் “ என தரக் குறைவாக (வங்க தேசத்திலிருந்து வந்தேறியவர்கள் என்ற பொருளில் ) விமர்சித்து வருவதும், அவர்களை துப்பாக்கியால் சுடுவது போல் நடித்து காணோளி வெளியிட்டும் இந்துக்களை வகுப்பு வெறியால் ஒன்று திரட்ட முழு மூச்சுடன் செயல்படுகிறார், ஹிமந்தா சர்மா. இவரது வெறுப்பு பேச்சை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் கதவுகள் கூட தட்டப்பட்டன!

என்னதான் “ டபுள் இஞ்சின் சர்க்கார்” என மோடியும், பாஐக வும் கூவினாலும், ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நிர்வாகத் திறமின்மையால் அசாம் புழுங்கி கொண்டுள்ளது. ஊழல் பேர் வழியான ஹிமந்தா மீது தற்பொழுது நில அபகரிப்பு புகார்களும், அவர் மனைவிக்கு

அரசு நிலத்தை ஒதுக்கியதும் மான்யம் அளித்ததும் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. இதை மழுங்கடிக்க , காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் மீது, ’பாகிஸ்தான் ஏஜெண்ட்’ என வீண்பழி சுமத்தி வருகிறார் .

இப்பொழுது நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது ராய்ஜோர் தள், அசாம் ஜாதிய பரிஷத் , சி பி ஐ, சி பி எம், மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சிகளுடன் – இணைந்து களத்தில் இறங்கியுள்ளது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொள்கைப் பிடிப்பில் மார்க்சியவாதியாகவும், விவசாயிகளை ஒருங்கிணைப்பவரும், ஊழலுக்கெதிரான போராளியுமான அகில் கோகோய் தலைமையிலான கட்சியுடன் (ராய்ஜோர் தள்) காங்கிரஸ் இம்முறை கை கோர்த்துள்ளது. காங்கிரசின் கவுரவ் கோகோய், குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்ப்பு போராட்ட நாயகனான அகில் கோகோய் மற்றும் அசாம் மக்களின் தனித் தன்மைக்காக போராடும் அசாம் ஜாதிய பரிஷத் கட்சித் தலைவர் லுரின் ஜோ கோகோய் என மூன்று கோகோய்கள் ஓரணியில் களமிறங்கி உள்ளனர்.

அதிரடி காட்டும் மூன்று கோகோய்கள்!

கடந்த தேர்தலில் அகில் கோகோய் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை முட்டுக் கட்டைகள் போட்டு அதை முறியடித்து , பல சூழ்ச்சிகள் செய்து பாஜ க எதிர்ப்பு வாக்குகளை (anti BJP votes) ஒன்று சேராமல் சிதறடித்த ஹிமந்தா சர்மா , அந்த வெற்றியின் ருசி அறிந்து இந்த முறையும் பிளவு ஏற்படுத்த பல உத்திகளை கையாண்டார் . ஆனால் அது பலிக்கவில்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைகளை ஹிமந்தா சர்மா இழுத்து வெற்றி கண்டுள்ளார். முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போராவை பாஜக விற்கு இழுத்தும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான பர்தோலாயை பாஜ கவிற்கு இழுத்தும் தன்னால் காங்கிரசை பலவீனப்படுத்த முடியும் என பாஜக மேலிடத்திற்கு ஹிமந்தா உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா கட்சி அசாமிற்கு புது வரவாக இருந்தாலும் , அசாம் கண பரிஷத் கட்சியுடன் கூட்டணி வைத்து கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அசாம் கண பரிஷத் மற்றும் அசாம் தீவிரவாத இயக்கமான உல்ஃபா மற்றும் போடோ லேண்ட் கட்சிகளான UPPL (ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்) ஆகியவற்றுடன் கை கோர்த்து களத்தில் இறங்கி உள்ளது. அசாமின் தனித் தன்மையை காப்பாற்றவும் , புலம் பெயரும் வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் எழுந்த மாநில எழுச்சியை இந்து முசல்மான் மோதலாக சித்தரித்து, திசை திருப்பி போராட்டத்தின் நோக்கங்களையே திரித்து வகுப்புவாத அரசியலை பாஜ க முன்னெடுத்து வருகிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.

பணபலமும் – பல கோடி ரூபாய் “ நன்கொடை” பெறும் பண பலமும் , தேர்தல் ஆணையம், சி பி ஐ, இ டி என படை பலமும் பொருந்திய பா ஜ க இந்த தேர்தலை சந்திக்கும் முறையே அலாதியானதாகும்.

மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தால், அவற்றை இலவசங்கள் என்றும் , வளர்ச்சியை குறைக்கும் வீண் செலவுகள் என்று வசைபாடி வந்த பா ஜ க, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தேர்தல்களுக்கு பிறகு இலவசங்களை வாரி வழங்கி வாக்காளர்களை ஈர்க்க மும்முரம் காட்டுகிறது.

வகுப்புவாத செயல்களினாலும், முழக்கங்களினாலும் மதப் பிளவை உறுதி செய்து வாக்குகளை அறுவடை செய்யும் பா ஜ க அத்துடன் அசாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 9,000 கொடுக்க வும் அதன் மூலம் ஏழை மக்களை கவரவும் முன் வந்துள்ளது. “ஒருனோடோய் “ என்று அழைக்கப்படும் இத்திட்டம்நலிந்த மகளிர் உதவித் திட்டமாக முதலில் 2020-ல் மாதம் 1,260 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல குளறுபடிகளும், ஊழல் புகார்களும் இருந்தாலும், தேர்தலை மனதில் கொண்டு ஹிமந்தா சர்மா இந்த நேரடி பயனாளிகள் திட்டத்தை அருனோடோய் அல்லது ஒருனோடோய் 3.0 என பயன் தொகையை 9,000 என கூட்டி அறிவித்து உள்ளார் ஹிமந்தா சர்மா.

ஏறத்தாழ 40 லட்சம் குடும்பங்களுக்கு இந்த தொகை மார்ச் 10 ந்தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என மார்ச் 8 அன்று அவர் முழக்கமிட்ட வகையில் வழங்கப்பட்டுவிட்டது.

ஏறத்தாழ 37% இஸ்லாமியர் வாழும் அசாம் மாநிலத்தில் , அவர்களை வங்கதேசத்தின் வந்தேறிகள் என சிறுமை படுத்தி , அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள சட்ட சபை தொகுதிகளை “தொகுதி மறுசீரமைப்பு “ என்ற பெயரில் உடைத்து , பிற தொகுதிகளுடன் ஒட்டியும், வெட்டியும் தனித் தன்மையை மழுங்டித்துள்ளது பா ஜ க அரசு.

அசாம் தேயிலை தோட்டங்களிலும், பண்ணைகளிலும் (லோயர் அசாம் மற்றும் பராக் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள ) உழைக்கும் ஏழை இஸ்லாமியர்களை விரட்டி அடிக்கவும் அப்புறப்படுத்தவும் பாஜ க , ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அரசு பல நாடகங்களை, துரோகங்களை அரங்கேற்றியது. கடந்த முறை அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (All India United Democratic Front) என்ற கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்த போது காங்கிரசாரை பாகிஸ்தானின் ஏஜெண்டு என அழைத்த பாஜக இந்த முறை அசாமிலிருந்து மாநிலங்களவைக்கு மூன்றாவது வேட்பாளரை தேர்ந்து எடுக்க AIUDF ன் 3 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவை வேண்டி விரும்பி பெற்ற சந்தர்ப்பவாதத்தை அசாம் மாநில மக்கள் மறக்கவில்லை.

காலங்காலமாக அசாம் மாநிலத்திற்கு ஒன்றுபட்ட வங்காளத்திலிருந்து பிழைப்பு தேடி சென்ற வங்காள மக்களால் தங்களது தனித்தன்மை இழந்துவிட்டது என்று, அசாமிய மொழியும் கலாச்சாரமும் சிதைக்கப்படுகிறது என்ற

முழக்கங்களை முன்வைத்து எழுந்த அசாம் மாணவர் கிளர்ச்சி வெடித்தது., அதைத் தொடர்ந்து அசாம் உடன்படிக்கையும் ஏற்பட்டது.

அசாமில் வங்கமொழி பேசும் மக்களை இனங்கண்டு அறிய அவர்களுக்கு குடியுரிமை வழங்க கட் ஆஃப் தேதியாக மார்ச் 25, 1971 ஐ மத்திய அரசு நிர்ணயித்தது. அசாம் கிளர்ச்சியில் ஈடுபட்ட அசாம் கண பரிஷத் கட்சியும், அசாம் மாணவர் முன்னணியும் இந்த போராட்டங்களை

அசாமிய மொழியை பாதுகாக்கவும், அம் மக்களது தனித் தன்மையையும் கலாச்சார தனித்துவத்தையும் பேணி வளர்க்கவே முன்னெடுத்தார்கள். இப்போராட்டங்களால் அசாம் கன பரிஷத் கட்சி அசாமில் ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் பிரபஃல்ல குமார் மகந்தா 1985 முதல் 1990 வரையிலும் பின்னர் 1996 முதல் 2001 வரை பாஜகவின் ஆதரவுடன் அசாமின் முதல்வராக வலம் வந்தார் .

ஆனால் ஆமை புகுந்த வீடு போல அசாம் கண பரிஷத் கட்சியில் ஆர் எஸ் எஸ் நுழைந்து அதனை உடைத்து , அந்த போராட்டங்களை மொழி கலாச்சார பின்னணியில் இருந்து விலக்கி அன்னியர்களை – வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்களை– இந்து– முஸ்லீம் என மத ரீதியாக பிளவு படுத்தி போராட்டத்தின் போக்கையே திசை திருப்பினர். அத்தோடு சனியன் தொலையவில்லை, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அசாம் கன பரிஷத் ஆளுங்கட்சியாக இருந்த காலம் போய் இன்று

பாஜகவிடம் ஐந்து அல்லது பத்து சீட்டுக்களுக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டது பாஜக என்றால், அது உண்மை. 

பாஜக தலைவர்களுடன் பிரபல்ல குமார் மகந்தா

அசாம் கன பரிஷத்தை உடைத்து பாஜக ஆடிய சித்து விளையாட்டு தான் நேற்று சிவசேனாவை உடைத்து விழுங்கவும் , இன்று அஇஅதிமுக வை விழுங்கி ஏப்பம் விடவும் பா ஜ க விற்கு பலம் கொடுக்கிறது .

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அசாம் மாநிலத்தின் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் நடந்தேறிய காசு கொடுத்தால் வேலை (cash for jobs) என்ற ஊழலில் அசாம் மாநிலமே நாறியது. ஹிமந்தா அரசு சட்டப்பேரவையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரும் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது பாஜகவின் இரட்டை நிலையை – ஹிமந்தா சர்மாவின் முகத் திரையை – தோலுரித்து காட்டுவதால் இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

அசாம் இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக (i con) கருதப்படும் ஜூபைன் கர்க் என்ற இசைக் கலைஞன் சிங்கப்பூரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அசாமையே துயரத்தில் ஆழ்த்திய இந்த மர்ம மரணத்தின் முடிச்சுகளை அவிழ்த்து, இறந்து போன ஜூபைனுக்கு நீதி வழங்குவேன் என எக்காளமிட்ட முதல்வர் ஹிமந்தா இன்று அதைபற்றி வாயை திறக்காத நிலையில் அரசியல் களத்தில் மதிப்பிழந்து நிற்கிறார் .

இசைக் கலைஞர் ஜூபைன் கர்க்

இத்தனை வில்லங்களுக்கும் நடுவில் ஆட்சியை , வகுப்புவாத கோஷங்களாலும், மத வெறுப்பு பிரச்சாரத்தாலும், எதிர்கட்சிகளை பிளவு படுத்துவதாலும் தக்க வைத்து கொள்ளலாம் என ஹிமந்தா சர்மா கணக்கு போட்டு வருகிறார். மோடி – ஷாவின் தேர்தல் சுற்றுபயணங்களும் நலத்திட்ட அறிவிப்புகளும் நம்மை கரை சேர்க்கும் என்று பாஜகவினர் எண்ணுகின்றனர்.

உலகெங்கும் விஸவ குருவின் மகிமை என்ன என்பது வெட்ட வெளிச்சமான பின்பு , மோடியின் பிரச்சாரத்தால் வாக்குகள் குவியும் என்ற எண்ணத்திலும் மண் விழுந்து விட்டது.

சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் நாட்டை தாக்கி தலைவர்களை கொன்ற கொடுஞ்செயலும் அதை கண்டிக்காத மோடி அரசின் கையாலாகாத்தனமும் பலரின் கண்களை திறந்துள்ளன என்பது மிகையல்ல.

தங்களின் தனித் தன்மையை பேணிக்கா க்க விரும்பும் அசாம் மக்கள் எதற்கும் உதவாத மாநில உரிமைகளை உணர்வுகளை அடகு வைக்கும் “ டபுள் இஞ்சின் சர்க்காருக்கு” தங்கள் ஆதரவு கரத்தை நீட்டுவார்களா அல்லது அவற்றிற்கு “டா..டா “ காட்டுவார்களா? என்பதை ஏபரல் 9-ல் முடிவு செய்வர்.

ச.அருணாசலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time