பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபடுகிறதா காங்கிரஸ்?

-சாவித்திரி கண்ணன்

சென்னை மாநகரின் ஆறில் ஒரு பங்கே உள்ள புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகையே 16,91,000 தான்! வாக்காளர்கள் எண்ணிக்கை 7,88,000 தான். இதில் ஆட்சியைப் பிடிக்கத் தான் எத்தனை விதமான அதிகார ஆட்டங்கள்! உள் குத்து ஆட்டங்கள் ஓங்கி ஒலிக்கும் காங்கிரஸ்- திமுக கூட்டணிக் குழப்பங்களால் என்ன நடக்கும்..?

நான்கைந்து  சாலைகள் கொண்ட பகுதி ஒரு சட்டமன்றத் தொகுதி. இது பிரெஞ்சுக்காரர்களால் ஆளப்பட்ட நிலப்பகுதி. அதனால் அதன் தனித் தன்மையைப் பேண அதை ஒரு யூனியன் பிரதேசமாக அங்கீகரித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக இருப்பதால், அங்கு தேசிய அரசியல் சற்று வலுவாக உள்ளது.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் திமுக, அதிமுக ஆகியவை அங்கு காங்கிரஸ்  பாஜகவிற்கு அடுத்த நிலையில் தான் உள்ளன.

இது போன்ற இடங்களில் காங்கிரசின் டெல்லித் தலைமை ஆடிய ஏதேச்சதிகார ஆட்டத்தால் தான் அந்த கட்சியில் இருந்து பிரிந்து தனித்து கட்சி கண்டார்,எளிய மனிதரான என்.ஆர்.ரங்கசாமி. அது என்.ஆர்.காங்கிரஸ் என புதுச்சேரியின் வலிமையான மாநில கட்சியாகிவிட்டது.

இதன் பிறகாவது காங்கிரஸ் கட்சி படிப்பினை பெற்றதா? என்றால் கிடையாது. இன்றைய பாஜகவில் கிட்டத்தட்டபாதிப்பேர் காங்கிரசில் இருந்து போனவர்கள்!

தமிழ்நாட்டு அரசியலுக்கு அடித்தளமாக புதுச்சேரியை  கைப்பற்ற வேண்டும் என துடித்த பாஜகவிற்கு தானே ஆட்களை அனுப்பி வைத்தது, காங்கிரஸ் – காங்கிரசில் யாரும் விரும்பாத நாராயணசாமியை அதிரடியாக முதலமைச்சர் ஆக்கியதால்! எம்.எல்.ஏக்களின் விருப்படி முதல்வர் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை அனுமதித்து இருந்தால் காங்கிரஸ் பலமான கட்சியாகவே இருந்திருக்கும்.

தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்கமுடியாத வாக்கு வங்கி (2.4%) கொண்ட பாஜக,  போன தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸூடன் கூட்டணி கண்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றததோடு சபா நாயகர், துணை முதல்வர், இரு அமைச்சர்களை பெற்று கூட்டணியில் கோலோச்சியது.

போன தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் வலுவாக வளர்ந்திருக்கும் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க காங்கிரஸ் கடுகளவும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், ஒரு வலுவான எதிர்கட்சி அரசியலை காங்கிரஸ் புதுச்சேரியில் செய்ய வாய்ப்பிருந்தும் செய்யவில்லை. இந்த நிலையில் போன முறை நின்ற தொகுதிகளை காட்டிலும் அதிகமாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் நிற்கிறது காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட்டையும், விசிகவையும் கழற்றிவிட்டது. இதனால் விசிகவிற்கு மட்டும் தன்னுடைய 14 தொகுதியில் இருந்து இருந்து ஒன்றை தந்தது திமுக.

காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சு வார்த்தை

வாய்ப்பில்லாத இந்திய கம்யூனிஸ்ட் தனித்து இரு தொகுதிகளில் களம் காண்கிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்தச் சூழலில் இருக்கும் குறைந்தபட்ச இணக்கத்தையும் குலைக்கும் வகையில் காங்கிரசில் இருந்து  ஐந்து பேர் திமுக போட்டியிடும் தொகுதியில் களம் இறங்கியுள்ளனர். இந்த ஐந்து தொகுதிகளும் ஏறத்தாழ இப்போதே பாஜக- என்.ஆர்.காங்கிரசுக்கு தாரை வார்த்ததாகத் தான் அர்த்தமாகும்.

காங்கிரஸ் தலைமையால் தன் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. பீகாரிலும் இதே போலத் தான் மகாபந்தன் கூட்டணிக்கு எதிராக காங்கிரசில் சிலரே தனித்து களம் கண்டு பாஜகவை வெற்றிபெற வைத்து, புண்ணியம் தேடிக் கொண்டனர். காங்கிரஸ் தன் முதலமைச்சர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.  வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பளிக்குமானால் இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரசும் காணாமல் போய்விடும்.

இந்தக் குளறுபடிகளால் கோபம் அடைந்த விசிகவும் தனக்கு ஒரு தொகுதி போதாது என மூன்று தொகுதிகளில் களம் காண்கிறது.

அதே சமயம் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜன நாயக கட்சி ஆகிய கட்சிகள் சேர்ந்த எதிரணி முறையே இதில், என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2, லட்சிய ஜனநாயக கட்சி 2… என்பதாக கட்டுப்பாட்டுடன் களம் காண்கிறது.

சின்னஞ் சிறிய புதுச்சேரியில் ஐந்து நாட்கள் மயிர் பிளக்கும் விவாதங்கள் நடத்தி தொகுதி பங்கீட்டை  கட்டக் கடைசி நேரத்தில் உறுதிபடுத்திய காங்கிரஸ், தானும் தோற்று, தன் கூட்டாளிகளையும் சேர்த்து தோற்கடிக்கும் கைங்கரியத்தை செய்வதை ’பிரண்ட்லி போட்டி’ என நியாயப்படுத்துவது நகைப்புக்கு உரியதாகும்.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time