மூன்று கட்சிகளில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்..?

எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளியாகிவிட்டன!

எந்தெந்தக் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்?

யார்,யார் எந்தெந்தத் தொகுதியில் நிற்கிறார்கள்?

எல்லாம் தெரியவந்துவிட்டது.

திமுகவின் தேர்தல் அறிக்கை, அதிமுகவின் தேர்தல் அறிக்கை, த.வெ.கவின் தேர்தல் அறிக்கைகள் அனைத்துமே இலவச அறிவிப்புகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

நல்லாட்சி, நல்ல, நேர்மையான நிர்வாகம் ஆகியன குறித்த தெளிவான  அணுகுமுறைகள் மூன்று கட்சிகளின் தேர்தல் அறிவிப்பிலும் இல்லை.

திமுகவிலும், அதிமுகவிலும் ஊழலில் ஊறித் திளைத்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் தேர்தலில் நிற்கிறார்கள்! 84 வயதிலும் துரைமுருகன் அவர்களுக்கு அதிகார ஆசை விடவில்லை.

திமுக, அதிமுகவில் ஒரு சில நேர்மையான வேட்பாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். திமுகவில் ஒரு சில நல்ல முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற வருத்தங்கள் பரவலாக வெளிப்படுகின்றது. அதிலும் நல்ல கொள்கை பற்றாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன!

இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடியதா என்ன திமுக தலைமை?

ஓட்டுவங்கியில்லாத தேமுதிகவுக்கு ஏன் ராஜ்ஜிய சபா சீட்டும் 10 தொகுதிகளும் தரப்பட்டன..? என்பதற்கு ஒரு சரியான பதிலோ, சமாதானமோ.. அந்தக் கட்சியை உயிர் மூச்சாகக் கொண்டு உழைக்கும் கொள்கைப் பற்றாளர்களுக்கு கிடைக்கவில்லை.

அடுத்ததாக கடைசி நேரத்தில் வந்த சேர்ந்த பாஜகவின் பாதந்தாங்களான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம்.. ஆகியோருக்கு  உண்மையான திமுககாரனுக்கு தந்திருக்க வேண்டிய தொகுதி தாரை வார்க்கப்பட்டன? ஏன்? எதற்கு? என்பதற்கும் பதில் இல்லை.

எல்லாவற்றுக்கும்  மேலாக ஊரறிந்த பக்கா  ஆர்.எஸ்.எஸ் காரியகர்த்தாவான செல்வகுமார்  என்பவருக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. இவர் தீவிர மோடி பக்தர் என தன்னை பிரகடனம் செய்து கொண்டவர். சென்ற மாதம் வரை பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். முத்தரையர் என்ற சாதி சங்கத்தின் தலைவர். வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த தன் சாதிக்காரரை பாதுகாக்க மனசாட்சியின்றி, தலித் இளைஞர்களையே குற்றவாளியாக்கி பரப்புரை செய்தவர். ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தின் தலைவர் ஒட்டு மொத்த தமிழகத்தை பிரதிபலிக்கும் சொல் கொண்ட தமிழர் தேசம் என்ற கட்சிக்கு எப்படித் தலைவராக முடியும்?  இது தமிழ் தேசியக் கொள்கைக்கே அவமானமில்லையா?

மேலும் இந்த நபர் மீது திருட்டு, வழிப்பறி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமூக நீதியை வலியுறுத்தும் திமுக கூட்டணியில் சாதி ஆதிக்கத்தை கட்டிக் காக்கும், மதவாத அரசியலுக்கு அடித்தளமாக செயல்பட்டு வரும் செல்வகுமாரின் இணைப்பை இடதுசாரி கட்சித் தலைவர்களோ, விசிக தலைவர்களோ, காங்கிரசாரோ, தட்டிக் கேட்காமல் மெளனம் சாதிப்பதை எப்படி புரிந்து கொள்வது?  திமுகவை ஒரு சமூக நீதி இயக்கம் என வலுவாக நம்புவோரின் தவிப்பை என்னென்பது? இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்  குறைந்தபட்சம் ஒரு விளக்கம் சொல்லியாவது தன் கட்சிக் காரர்களையும், கூட்டணிக்கட்சியினரின் புலம்பலுக்கும் ஆறுதல் தந்திருக்கலாம். அதுவுமில்லை.

பேசிப் பேசி வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கட்சியில் இன்று எதற்குமே பேசவோ விளக்கம் சொல்லவோ அவசியமில்லை என நினைக்கும் தலைவர் – முற்றிலும் கொள்கைக்கு விரோதமாக – அனாயாசமாக செயல்படும் ஆச்சரியத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இதையெல்லாவற்றையும் விட திமுகவே மீண்டும் அரியணை ஏறும் வண்ணம் அதிமுக கூட்டணியில் தன்னுடைய தொகுதிகளைக் குறைத்துக் கொண்டதோடல்லாமல் தோற்கும் தொகுதிகளாக கேட்டுப் பெற்றுள்ளது பாஜக. முன்னதாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் தொடங்கி மாவட்ட ஆட்சியர்கள் வரை எதிர்கட்சிகள் கொடுத்த புகார் எதையும் சட்டை செய்யவில்லை  பாஜகவின் தேர்தல் ஆணையம்.

திமுகவின் முக்கியஸ்தர்கள் நிற்கும் தொகுதிகளில் எல்லாம்  கூட்டணிக் கட்சிகளுக்கும் தன் கட்சியில் உள்ள டம்மி வேட்பாளர்களுக்கும் தந்துள்ள அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. இதே பாணியையே ஸ்டாலினும் பல தொகுதிகளில் கையாண்டு அதிமுக தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெற்றி பெற வழி வகுத்து தந்துள்ளார். இவை எல்லாமே திமுக, அதிமுக,பாஜக..என எல்லா கட்சிகளுமே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு செயல்படுகிறார்களோ என்ற ஐயத்தையே ஏற்படுத்தி உள்ளது.

மறுபக்கம் ஸ்டாலினை கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லும் த.வெ.க தலைவர் விஜய்யோ  திமுக தலைவர் ஸ்டாலின் நிற்கும் கொளத்தூர் தொகுதியில் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த வி.எம்.பாபு என்ற நபருக்கு தந்துள்ளார். இவர் அதிமுகவிலும் இருந்தவர். அமைச்சர் சேகர் பாபுவின் சீடராக அறியப்பட்டவர். சராசரி  அரசியல்வாதிக்கும் குறைவான பண்புகளைக் கொண்டவர். கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பவர் எனச் சொல்கிறார்கள்.

அதிமுகவில் அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். இவர் வருமான வரித்துறை இவரது வீட்டை சோதனையிட வந்த போது அவசர, அவசரமாக  500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை காவிரி ஆற்றில் வீசி எறிந்த செய்தி அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகும். மற்றொரு அதிமுக  அமைச்சர் செங்கோட்டையன் ஊழல் செய்து கைதானவர். இது போன்றவர்களை வைத்துக் கொண்டு நேர்மையான ஆட்சியை தரப் போகிறேன் என விஜய் சொன்னால் எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்.

அதே சமயம் திருவண்ணாமலை தொகுதிக்கு விவசாயப் போராளியும், அமெரிக்காவில் மென் பொருள் தொழில் நுட்பத்தில் பணியாற்றி மக்கள் தொண்டுக்காக வேலையை விட்டவருமான அருள் ஆறுமுகம் போன்ற இளைஞர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் வெகு தீவிரமாக செயல்பட்ட முக்கிய நிர்வாகியான செல்வம் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு நல்ல வியூகமே என்றாலும் பணபலத்தில் செல்வம் உதயநிதியை சமாளிப்பது கடினம்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கு நல்லாட்சிக்கு உத்திரவாதம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆபத்தான அரசியல் சக்தி பாஜகவிடம் இருந்து விலகி நிற்பார்கள் என்று நம்ப வழியில்லை. ஆகவே, அவரவரர் மனநிலை சார்ந்து ஒரு சமாதானத்தை சொல்லி, ’’அவருக்கு இவரு பெட்டருங்க’’  என்று சொல்லிக் கொண்டு ஓட்டுப் போடும் கடமையை செவ்வனே  செய்யட்டும்.

”யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?”

என்ற கேள்வி எழும் போதெல்லாம் இங்குள்ள பெரும்பாலான பெரிய மனிதர்கள் மக்களுக்கு சொல்வது;

”இருப்பதிலேயே குறைந்த தீமை உள்ளவனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். ஆகவே, இவருக்கு போடுங்கள், அவருக்கு போடுங்கள்..” எனத் தேர்தலுக்கு தேர்தல் ஒருவரை அடையாளப்படுத்துகிறார்கள்.

’இருப்பதிலேயே தீமை குறைவு’ என்பது தேர்தல் நேரத்து நியாயமாக அல்லது சமாதானமாகவே.. தொடர்வதற்கு யார் காரணம்?

”ஏன் சரியான தலைவர்கள் நமக்கு கிடைப்பதில்லை..?”

சரியான தலைவர்களை தேடும் தேடலே பெரும்பாலான மக்களிடம் இல்லை. மக்களுக்காக – எளியோருக்காக – போராடுவோரை ஆதரிக்கும் பண்பும் நம்மிடையே இல்லை. அதனால், நல்ல போராளிகள் மக்கள் ஆதரவின்றி ஓய்ந்து ஓரமாக கரை சேர்ந்துவிடுகின்றனர்.

மக்கள் எவ்விதமோ..அதற்கு தக்கவே தலைவர்களும் அவர்களுக்கு அமைவார்கள்!

ஒரு நல்ல கட்சி எது என்பது குறித்தும் ஒரு நல்ல தலைவர் யார் என்பது குறித்தும் எந்தவிதத் தேடலோ, அக்கறையோ இல்லாமல் – நாட்டில் தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் மீது எந்தப் பார்வையும் இல்லாமல் – தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் குறித்து அக்கறைபடும் மக்களுக்கு நல்லாட்சி கிடைத்து விடுமா?

என்னுடைய விருப்பம் என்னெவென்றால், அரசியலில் ஆரோக்கியமான சூழல் ஏற்படுவதற்கே அனுகூலமற்ற மன நிலையைக் கொண்டிருக்கும் இந்த தமிழ் நாட்டு மக்கள் இன்னும் நன்றாக அனுபவப்பட்டு, அல்லல்படும் நிலை வந்தால் தான் விழித்துக் கொள்வார்கள்.

ஆகவே, பாஜக என்ற பாசிச சக்தியை தடுக்க திமுகவுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர, வேறு வழியில்லை.. என்று நம்புபவர்கள் திமுகவையே மீண்டும் தேர்ந்தெடுக்கட்டும். அடுத்த ஆட்சியின்  போது திமுக தன் பாஜக உறவை திரையிட்டு மறைக்காமல் பகிரங்கப்படுத்தும் என்பதற்கான நகர்வுகளை இப்போதே உணர்கிறேன்.

பாசாங்கு அரசியல் முடிவுக்கு வந்தால் சரி தான்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time