கடும் போட்டியில் களத்தை சூடாக்கும் கேரளத் தேர்தல்!

கேரளாவில் ஏப்ரல் 9 தேர்தல் நடக்கவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ”மூன்றாவது முறையும் நாங்களே ஜெயிப்போம்” என்கிறது கம்யூனிஸ்ட் கூட்டணி. ”அராஜக ஆட்சி அகற்றப்படும்” என்கிறது காங்கிரஸ். மூன்றாவது சக்தியாக அங்கு தற்போது முகிழ்த்துள்ள ‘பாஜக கணிசமான வாக்குகளை கைப்பற்றும்’ எனச் சொல்லப்படுகிறது;

“ஆதவனை அடிமையாக்கியே செங்கொடி ஜோதி வீசி பறக்குது பாரீர்” என்ற பாவலர் வரதராஜனின் பாட்டு கேரளத் தேர்தலில் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடது சாரி கூட்டணி கேரளாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. தேர்தல் மூலமாக முதல் கம்யூனிஸ்ட் அரசாக இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்  அரசு 1957 ல் கேரளத்தில் அமைந்து, இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தங்களை முதன் முதலில் அமல் படுத்தியது.

முதன் முதலில் ஒன்றிய அரசால் கலைக்கப்பட்ட அரசும் நம்பூதிரிபாட் அரசே. ஆனால், அந்த இடதுசாரி இ.எம். எஸ் அரசின் திட்டங்களும் , கொள்கைகளும், செயல்பாடுகளும் இந்திய அரசியலில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியது.

அவருக்கு பின்னர்,

சி.அச்சுத மேன்ன் தலைமையில் 1970 –  1977

இ.கே. நாயனார் தலைமையில் 1980-1981, 1987-1991, 1996-2001

வி எஸ் அச்சுதானந்தன் தலைமையில் 2006-2011 லும்

இடதுசாரி அரசுகள் கேரளத்தை ஆட்சி செய்தன.

தற்போதைய முதல்வர் பினராயி விஜயன்  2016 – 2021  மற்றும் 2021 – 2026  என பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு அரசு கேரளத்தில் நீடிப்பது இதுவே முதல் முறையாகும். மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை நோக்கி இடது சாரி கூட்டணி நகர்கிறது. கேரளாவின் முன்னேற்றத்திற்கும், கேரள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் இதுவரை இடதுசாரி அரசு என்ன பணிகளை ஆற்றியது என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள விஜயன் அரசு முயற்சிக்கிறது.

குடும்ப ஸ்திரீ திட்டம், விவசாய விளை பொருட்களுக்கான நியாய விலை, பொது விநியோக திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க இபாஸ்  திட்டம்,  அய்யன் காளி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம், கேரள தொழில் வளர்ச்சிக்கும், கட்டுமான விரிவாக்கத்திற்கும் கேரள உள கட்டமைப்பு நிதி வாரியம் KIIFB , வறுமை ஒழிப்பு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை கேரளத்தின் இடதுசாரி அரசு கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுத்து நடைமுறைப் படுத்தி வந்துள்ளது.

ஆனாலும், குறைகளுக்கும், அரசியல் புகார்களுக்கும், கேரளத்தில் பஞ்சமில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்து, எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான முன்னணி கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றனர். கேரளத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் மாறி, மாறி அரசியல்களத்திலும், ஆட்சி அமைப்பதிலும் செயலாற்றி வரும் வேளையில் தற்பொழுது மூன்றாவது சக்தியாக பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கி தனது இருப்பிற்கு அடித்தளமிடுகிறது.

இம்முயற்சிக்கு மோடி அரசின் கைங்கரியங்கள் பெருமளவிற்கு உதவுகின்றன. மக்கள் நலன், சமூக மேம்பாடு என்பதை சுற்றி வந்த கேரள அரசியலை , சமயஞ்சார்ந்து, பதட்ட உணர்வுகளையும், அச்சம் கலந்த வெறியையும் வெளிப்படுத்தும் களமாக மாற்றுவதற்கு சங்கப் பரிவாரங்கள் நீண்ட காலமாக முயல்கின்றன. பத்தாண்டுகால மோடியின் அடாவடி ஆட்சிமுறை இதற்கு பல வழிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இத்தகைய சூழலில் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலின் போக்கு எவ்விதம் அமையும் என்று பலரும் தங்களது அனுமானங்களை கூறியுள்ளனர்.

ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 2025 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக கூறுகின்றனர்.

ஆனால், ஆளும் இடது சாரிகள், இதனை மறுத்து பினராயி விஜயன் அரசு கடந்த பத்து ஆண்டுகளில் முன்னெடுத்த வளர்ச்சி திட்டங்கள், கேரள மாநில நலன்களுக்காக மத்திய அரசுடன் பல்வேறு தளங்களில் போராடிய சம்பவங்களை எடுத்துரைத்து மீண்டும் இடதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்கக் கோருகின்றனர். இரண்டு அணிகளுமே கேரளத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், என பா ஜ க வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.

140 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கேரள மாநிலத்தில் தற்போதைய போட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூ கட்சி, கேரளா காங்கிரஸ் , ஜனதா தள், இந்திய தேசீய லீக் கட்சி ஆகியவற்றை அடக்கிய இடதுசாரி முன்னணி (LDF) ஒருபுறமும்,

மறுபுறம் காங்கிரஸ் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோசலிச கட்சி, உதிரி கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) களத்தில் உள்ளன.

உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அமோகமாக வென்றாலும், அதே நிலை சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்குமா?

காங்கிரஸ் கூட்டணி பெரிதும் நம்பியுள்ள ஆட்சிஎதிர்ப்பு மக்கள் மனநிலை (anti incumbency factor) எந்த அளவிற்கு காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

மூன்று பகுதிகளும் மூன்று சமூகங்களும்!

மலபார் என்றழைக்ககூடிய வட கேரள பகுதிகளான – கண்ணூர்,காசர்கோடு, வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வலுவாக உள்ளது. இடது சாரிகளுக்கும் இப்பகுதிகளில் கணிசமான ஆதரவு உள்ளது.

மத்திய கேரளப் பகுதியான – பாலக்காடு, திரிசூர்,எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் இந்துக்களும் குறிப்பாக நாயர் சமூகத்தினரும் நகர்ப்புறத்தில் கிறித்துவ மக்களும் நிரம்பி வழியும் இப்பகுதிகளின் அரசியல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அப்பால் பாரதீய ஜனதா கட்சிக்கும் அடித்தளம் கொடுக்கின்ற பகுதியாக உள்ளது.

தென் கேரளம் என அறியப்படும் திருவிதாங்கூர் பகுதியில் கோட்டயம், ஆலப்புழா, கொல்லம், மற்றும் திருவனந்தபுரம்,பட்டனம்திட்டா மாவட்டங்கள் அடங்கும்.

இங்கு இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் சம பலத்தில் உள்ளன. பெரும்பான்மையான இந்து மக்கள் வசிக்கும் இப்பகுதி என்றுமே வகுப்புவாத அரசியலை சீண்டியதில்லை. நகர் புறங்களிலுள்ள மேல்தட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு தீனி போடும் வண்ணமாக களமிறங்கிய பாஜக இன்று இரு அணிகளின் ஆதிக்கத்தினால் சலிப்படைந்த மக்களின் வடிகாலாக வலம் வருகிறது.

கேரள மக்கள் தொகையில் 28% உள்ள முஸ்லீம்கள் வட கேரளப் பகுதியில் (மலபார்) பகுதியிலும், கேரள மக்கள் தொகையில் 20 % விழுக்காடு உள்ள கிறித்துவர்கள் பெரும்பாலும் மத்திய கேரளப் பகுதிகளிலும் மற்றும் கேரள மக்கள் தொகையில் 50% விழுக்காடு உள்ள இந்து சமூகத்தில் ஈழவ சமுதாயத்தினர் 28% விழுக்காடும், நாயர் (உயர்சாதி) சமூகத்தினர் 12%  தெற்கு கேரளத்திலும் உள்ளனர். இவர்கள் கேரளம் முழுவதும் – மூன்று பகுதிகளிலும்- பரவலாக உள்ளனர். ஈழவ சமூகத்தினரே இடதுசாரி – கம்யூனிஸ்ட் கட்சிகளின் – அடிநாதமாக திகழ்கின்றனர்.

நாயர் பரிபாலன சமூகத்திலும்( NSS), ஶ்ரீ நாறாயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) அமைப்பிலும் ஊடுருவி பாஜக இந்துக்களை ஓரணியில் திரட்ட முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதல் போக்கை

நாராயண தர்ம யோகத்தின் தலைவராக உள்ள வெள்ளப்பள்ளி நடேசன் கடைப்பிடிப்பதும், அதனை ஆளும் பினராயி விஜயன் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும், முஸ்லீம் வாக்குகளை பிரிக்க நடக்கும் முயற்சிகளே என்று காங்கிரசும், முஸ்லீம் லீக் கட்சியும் கூறுகின்றன.

மூன்று பிரதான பகுதிகளில் வாழும் மூன்று சமூகத்தினரும் கேரள அரசியலில் என்றுமே முழுதாக ஒரு சேரப் பயணித்ததில்லை. ஒரு சமூகத்தின் வாக்குகள் அனைத்தும் ஒரு அரசியல் கட்சிக்கே என்றும் இது வரை சென்றதில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இந்து மற்றும் கிறித்துவ சமூகத்தினரிடமிருந்தும் , இடதுசாரிகள் அடிப்படையில் கேரளம் முழுவதும் பரந்து வாழும் ஈழவ சமூக மக்களிடமிருந்தும் பெறுகின்றனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கேரளவாழ் முஸ்லீம் மக்களிடமிருந்து ஊக்கத்தை பெறுகிறது எனலாம்.

பா ஜ க உயர் சாதி இந்துக்களிடமிருந்தும் குறிப்பாக நாயர் சமூகத்திடமிருந்தும், நகர்ப்புற மேல் தட்டினரிடமிருந்தும் ஆதரவை பெறுகின்றது. இஸ்லாமிய எதிர்ப்பு நிலைகளினால் கிறித்துவ பாதிரிமார்களில் ஒருசிலரை ஈர்ப்பதில் பாஜ க வெற்றி பெற்றிருந்தாலும், கிறித்துவர்களிடையே சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கை இன்னும் பெறவில்லை.

பத்தாண்டுகால ஆட்சியின் சாதனைகளை வளர்ச்சி திட்டங்களை இடதுசாரிகள் தங்களது கேடயமாக ஏந்தி வருகின்ற வேளையில் காங்கிரஸ் கூட்டணி பத்தாண்டு ஆட்சிக்கெதிரான மனநிலையை தங்களின் ஆயுதமாக ஏந்தி களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு (ஏப்ரல் 9)இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில் 55 தொகுதிகளில் தங்களது வெற்றி உறுதி என இடதுசாரிகள் கூறுகின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 16 அல்லது 20 தொகுதிகளின் வெற்றிக்காக தங்களது முயற்சிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினரோ, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவின் செல்வாக்கினால் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்றனர்.

உண்மையில் கள நிலவரம் கடும் போட்டி நிலவுவதை உணர்த்துகிறது. எந்த கூட்டணிக்கு ஆதரவாகவும் ஆதரவு அலையை களத்தில் காண முடியவில்லை. கடந்த 2021 தேர்தலில் மலப்புரத்தில் இடது சாரிகள் பெற்ற மாபெரும் வெற்றியே அக் கூட்டணி கணக்கை 99 ஆக உயர்த்தியது. அதே வெற்றியை – முஸ்லீம் மக்களின் வாக்கு சிதறுவது இப்பொழுதும் நடக்காது என்று காங்கிரஸ் கூட்டணி கூறினாலும், இடது சாரிகளை அங்கு வீழ்த்துமளவிற்கு காங்கிரஸ் கூட்டணி அங்கு வெற்றி பெறுமா? என்பது கேள்விக் குறியே.

அதைப் போன்றே மத்திய கேரளத்தில் பாஜகவின் வரவால் இந்துக்களின் வாக்குகள் சிதறுமா?

கிறித்துவர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு குவியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தப்பகுதியிலுள்ள பாலக்காடு, திரிசூர் ஆகியவற்றில் உயர்ந்து வரும் பாஜ கவின் செல்வாக்கு வெற்றியை அக்கட்சிக்கு கொடுக்காவிட்டாலும் பிறருடைய வெற்றியை அவர்கள் தட்டி பறிப்பர் என்பது உண்மையானாலும் , அது யாருக்கு -இடதுசாரிகளுக்கா அல்லது காங்கிரசிற்கா – சாதகமாக அமையும் என்பது புதிராகவே உள்ளது.

இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடையே கடும் போட்டி இங்கு நிலவுவதால் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

தெற்கு கேரளம் அல்லது திருவிதாங்கூர் பிரதேசம் என்றறியப்படும் கோட்டயம், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம் பட்டணம் திட்டா பகுதிகளில் போட்டி சமநிலையில் உள்ளன. கோட்டயத்தில் காங்கிரசும், ஆலப்புழா மற்றும் கொல்லத்தில் இடதுசாரிகளும் முன்னணியில் இருந்தாலும், திருவனந்தபுரம் பற்றும் பட்டணம்திட்டா பகுதிகளில் பாஜ க வின் வளர்ச்சியால் களநிலவரம் தடுமாறுகிறது.

எனவே, பதினைந்து தொகுதிகளின் வெற்றி தோல்வி அம் மாநிலத்தில் எந்த கூட்டணி வெற்றிக் கனியை பறிக்கும் என்பதை கட்டியங் கூறுவதாக கருதப்படுகின்றன.

அவை, முஸ்லீம் மக்கள் நிறைந்துள்ள கோழிக்கோடு வடக்கு, குட்டியாடி, பெரும்பாவூர் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் இளைஞர்களும் ,நலத் திட்டங்களினால் பயனடைந்தாரும் காங்கிரஸ் முஸலீம் லீக் கூட்டணிக்கு வாக்களிப்பார்களா? அல்லது 2021 போன்றே இடதுசாரிகளுக்கு வாக்களிப்பார்களா? என்பது புதிராக உள்ளது.

கிறித்துவர்கள் நிறைந்த இரிஞ்சாலக்குடா, கோட்டயம், இடுக்கி தொகுதிகளில் இடதுசாரிகள் தங்களது திட்டங்களால் அதிக வாக்குகளை பெறுவார்களா? அல்லது காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா? என்பது தெரியவில்லை.

அதைப் போன்றே ஈழவ மக்கள் மாறுவதற்கான வாய்ப்புள்ள தொகுதிகளாக தளிப்பிரம்பா, செங்கனூர்,கொல்லம் தொகுதிகள் 2021ஐ போன்றே மீண்டும் இடது சாரிகளுக்கு கை கொடுக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நெமோம், திரிசூர், பாலக்காடு ஆகிய தொகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதால் நாயர் சமூகத்தினரின் செல்வாக்கினால் பாஜக வெற்றி பெறுமா? அல்லது பிற கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் சீர்குலைவு பணியை நடத்துமா? என்பதை கவனிக்க வேண்டும்.

இவ்வாறான ஆடூர் , கலமசேரி உள்ளடக்கிய பதினைந்து தொகுதிகளின் (15) போக்குகள் கேரள மாநிலத்தின் தேர்தலின் ஒட்டு மொத்த போக்கையே தீர்மானிக்கும் சக்தி கொண்டவைகளாகத் தெரிகின்றன.

முஸ்லீம் மக்களின் வாக்குகள் சிதறுமா? , எந்த அளவிற்கு சிதறும்? மத்திய கேரளத்தில் கிறித்துவர்களின் வாக்கு சிதறல் யாருக்கு உதவும் என்பது பாஜ கவின் வரவால் கூட்டணிகளிடையே தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்பகுதியில் ஈழவ மக்களின் இடதுசாரி சார்பு தொடருமா? அல்லது நாயர் சமூகம் மற்றும் வெள்ளப் பள்ளி நடேசனின் முயற்சியால் அது சீர் குலையுமா? என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்றுள்ள நிலையில், இடதுசாரிகளின் கணிப்பில் இடதுசாரிகள் 2021 போன்று 99 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டாலும், 75 முதல் 80 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொள்வோம் என எண்ணுகின்றனர்.

மாறாக, காங்கிரஸ் கூட்டணியினரோ 100 தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.

எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அது குறுகிய வித்தியாசமே கொண்ட வெற்றியாகவே அமையும் என்று தெரிகிறது. பாஜக விற்கு சீர்குலைவாளர் என்ற பட்டப் பெயரும் இத் தேர்தல் மூலம் கிட்டலாம்.

 ச.அருணாச்சலம்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time