ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே அரசியல் கட்சிகள் என்றால், அந்தக் கட்சிகளுக்குள் ஏன் ஜனநாயகம் சாத்தியமாவதில்லை? எல்லா கட்சிகளுக்குள்ளும் தலைவர்கள் சர்வாதிகாரியாக செயல்பட முடிவது எப்படி? கூட்டுத் தலைமை, கலந்துரையாடல் ஏன் சாத்தியப்படுவதில்லை? ஜனநாயகம் பெயரளவிலும், சர்வாதிகாரமே நடைமுறையாகவும் இயங்கும் கட்சிகள் ஓரு அலசல்;
நம்ம நாட்டை ஜனநாயக நாடென்று சொல்கிறார்கள்!
அந்த ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றவே அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உண்மையில் இங்கு நடைமுறையில் ஜனநாயகம் இருக்கிறதா? குறிப்பாக ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக தங்களை சொல்லிக் கொள்ளும் கட்சிகளில் ஜனநாயகம் இருக்கிறதா..?
எல்லா அரசியல் கட்சிகளிலும் தலைவர்கள் ஒற்றை அதிகார மையமாகவே திகழ்கிறார்கள். கட்சி என்பது கூட்டுச் செயல்பாடுகளால் தான் சாத்தியமாகும் என்றாலுமே கூட, தலைவர்கள் எப்போதும் தன்னிச்சையாகவே முடிவெடுக்கிறார்கள். தலைவர் எடுக்கும் முடிவை செயல்படுத்துவதைத் தவிர, வேறு எந்த வாய்ப்பும் அந்த கட்சித் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கிடையாது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களிடம் அந்தக் கட்சியினருக்கு இருக்கும் கேட்க முடியாத கேள்விகள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தேன்;
திமுக தலைவர் ஸ்டாலினிடம்;
# ஏன் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு நம் கட்சியில் அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள். ஏற்கனவே இங்கு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் சுமார் 20 பேர் உச்ச செல்வாக்கில் கட்சியில் வளைய வருகிற நிலையில், புதிதாக ஒ.பி.எஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்..என மிகச் சமீபத்தில் வந்தவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளீர்களே.. எங்கள் முக்கியத்துவத்தை ஏன் குறைக்கிறீர்கள்.
# பெரியார், அண்ணா வழியில் சமூக நீதி பேசி வந்த நம் கூட்டணிக்குள் பாஜகவின் பக்கா ஆதரவாளரான ஒ.பி.எஸ், பிரேமலதாவின் தேமுதிக, ஆர்.எஸ்.எஸ்சின் செல்வகுமார் ஆகியோருக்கு ஏன் சீட்டு கொடுத்தோம்.
# பல வருடங்களாக உழைப்பிற்கு பின்பு தான் இந்த கட்சியில் நீங்கள் தலைமைத்துவம் பெற்றீர்கள். ஆனால், 40 வயதில் கட்சிக்கு வந்து, நான்கே ஆண்டுகளில் எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர், அடுத்ட முதல்வர்.. என ஜெட் வேக வாய்ப்பை தங்கள் மகன் உதயநிதிக்கு ஏன் தந்தீர்கள்?
# நமது ஆட்சியில் அமைச்சர்களோ, முதல்வரோ முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகள் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறப்பது ஏன்?
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம்;
நமது கட்சி விவகாரத்தில் பாஜகவின் டெல்லித் தலைமை அடிக்கடி மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள்?
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அழுத்தமாகச் சொல்லி வந்த தாங்கள் அமித்ஷா அழுத்தம் தந்தவுடன் மீண்டும் கூட்டணி கண்டது ஏன்?
பிரபல லாட்டிரி வியாபாரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸை ஏன் கட்சியில் சேர்த்தீர்கள். சேர்ந்த உடன் எம்.எல்.ஏ சீட் தருவது ஏன்?
ஏதிர்கட்சித் தலைவரான நீங்கள் திமுக ஆட்சியின் பல அநீதிகளை, அக்கிரமங்களை அம்பலப்படுத்தி உக்கிரமான அரசியல் செய்வதற்கு மாறாக சில நேரங்களில் ஊமையானது ஏன்?
திமுக அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் நிற்கும் இடங்களை வெற்றி பெற முடியாதவர்களாகக் பார்த்து தந்ததது ஏன்?
த.வெ.க தலைவர் விஜய்யிடம்:
நீங்கள் தான் த.வெ.கவை வழி நடத்துகிறீர்களா? அல்லது உங்களையும், கட்சியையும் சேர்த்தே வழி நடத்துவது உங்களை சுற்றிலுமுள்ள அந்தச் சிலரா..?
கட்சி நிர்வாகத்தையே கையாள முடியாத நீங்கள் நாட்டு நிர்வாகத்தை எப்படி செய்வீர்கள்?
கரூர் 41 பேர் உயிர்பலி தொடர்பாக உங்க மனசாட்சியைத் தொட்டு சுயபரிசோதனை செய்தீர்களா? உங்கள் தவறுகள் என்னவென்று பகிரங்கப்படுத்தி வருந்துவீர்களா?
நாட்டுக்கு தலைமை தாங்க விரும்பும் நீங்கள் மக்களோடு மக்களாக பழகாமல் இன்னும் திரை நட்சத்திரமாகவே வலம் வருவது ஏன்?
நேரில் சந்தித்து பேசி தேர்வு செய்யாமல், நீங்கள் அறிவித்துள்ள பல வேட்பாளர்கள் களத்தில் விசுவாசம் காட்டுவார்களா? விலை போவார்களா?
ஸ்டாலினை எதிர்த்து உங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவரின் யோக்கியதை உங்களுக்கு தெரியுமா?
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம்
நமது கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக பொறுப்பெடுத்து ஏன் கட்சியை வழி நடத்த மறுக்கிறீர்கள்?
கட்சியின் மாநிலத் தலைவர்களை அந்தந்த மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்காமல் டெல்லி நியமிப்பது ஏன்?
நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடனா? த.வெ.கவுடனா? யாருடன் கூட்டணி என்பதில் நீண்ட நெடிய இழுபறி நிலை ஏன்?
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் சொந்தக் கட்சியான காங்கிரசை விடவும் திமுகவிடம் விசுவாசம் காட்டும் சூழலை இப்படியே அனுமதிப்பீர்களா?
பாஜக தலைவர் மோடியிடம்:
உண்மையிலேயே நீங்கள் தான் நாட்டின் பிரதமரா? அல்லது பிரதமர் அலுவலகத்தை நிர்வகிக்கும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அதிகாரிகளா?
ஒரு பிரதமர் சொந்த நாட்டு நிர்வாகத்தை கவனிக்காமல் சதா சர்வ காலமும் வெளி நாடுகளில் சுற்றித் திரிவது ஏன்?
சொந்த நாட்டு மக்களை விடவும் அதானி, அம்பானி மீது உங்களுக்கு அளவிலா அக்கறை ஏன்?
திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல்களை இங்கு பாஜக உருவாக்குவது ஏன்? அதற்குத் தோதாகத் தான் அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து விடுவித்தீர்கள் எனச் சொல்லப்படுவது உண்மையா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம்:
திமுக தவறுகளை தட்டிக் கேட்டீர்கள். ஆனால், உங்கள் கட்சியில் ரவுடிகளையும், பொருளாதாரக் குற்றவாளிகளையும் சேர்த்துக் கொண்டு பாதுகாப்புத் தந்தீர்கள். திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தியதின் வழியாக பொருளாதார ஆதாயம் அடைந்தீர்களே நியாயமா? உங்களிடம் இருந்து கட்சித் தலைமை பதவி பறிக்கப்பட்டதற்கு திமுகவையே மீண்டும் ஆட்சியில் அமர்த்த நினைக்கும் டெல்லி பாஜக தலைமையின் முடிவு தான் காரணம் எனத் தெரிந்தும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம்;
உன்னத லட்சியங்கள்,கொள்கைகள், தமிழர் நலன் அனைத்தையும் பேசுகிறீர்கள். கட்சி ஒற்றை அதிகார மையமாகவே தொடர்ந்தால் வளர்ச்சி எப்படி சாத்தியப்படும்?
தற்போது கட்சியில் இருப்பவர்களை விடவும் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் சுமார் மூன்று மடங்கிருக்கும். இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்தெடுக்கும் பெருந்தன்மை மற்றும் சகிப்புத் தன்மை இல்லாமல் கட்சி வளர்ச்சி சாத்தியமா?
தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு, கெளரவக் கொலை ஆகியவற்றை தடுக்கவும் , எதிர்க்கவும் நமது நாம் தமிழர் கட்சி ஏன் களம் காண்பதில்லை…?
குறைந்தபட்ச ஒத்திசைவுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி வேல் முருகன், சுப.உதயகுமார்.. ஆகிய முன்னோடிகளை இணைத்துக் கொண்டு தேர்தல் கூட்டணி கண்டு, ஒரு சிலரேனும் சட்டமன்றத்திற்குள் மக்கள் குரலை ஒலிப்பதற்கு என்ன தடை?
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்;
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய ரீதியாக பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றில் விசிக ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அடக்கி வாசிக்கிறது. தலித் மக்கள் தனிமைப்படுகிறார்கள். உதாரணம்; வேங்கை வயல். வெறும் அறிக்கை மற்றும் ஒரு அடையாளப் போராட்டத்துடன் இந்த மக்களை விசிக கைவிட்டுவிடுவது நியாயமா?
மதுவால் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர். ஆனால், மதுவில் இருந்து அந்த மக்களை மீட்கவும், மது விலக்கை அமல்படுத்தவும் தொடர் முயற்சியை விசிக தீவிரப்படுத்தாதது ஏன்?
விசிக நிர்வாகிகள் பலர் மீது கட்டைப் பஞ்சாயத்து புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அம் மாதிரியானவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
சென்னை உயர் நீதிமன்றம் அருகே உங்கள் கார் உரசியதற்கு கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் ஒருவரை காட்டுத்தனமாக உங்கள் கண் எதிரிலேயே விசிகவினர் தாக்கியதை நியாயப்படுத்தினீர்கள். இத்தகு வன்முறை கலாச்சாரம் ஏற்புடையதா?
ஆளுர் ஷா நவாஷ், எஸ்.எஸ்.பாலாஜி போன்று சிறப்பாக செயல்பட்டவர்களை மறு வாய்ப்பின்றி தனிமைப்படுத்துவது ஏன்?
ஆக, தன் செயல்பாடுகள், முடிவுகள் தெற்குமே தலைவர்கள் கட்சித் தொண்டர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என நினைப்பது, வெளிப்படைத் தன்மை இன்மை.. ஆகியவற்றை இலக்கணமாக கொண்டவர்களாகவே தலைவர்கள் உள்ளனர். தன் தலைவர் எதைச் செய்தாலும் அதை பொதுவெளியில் ஆதரித்துப் பேசி முட்டுக் கொடுப்பவர்களாக கட்சித் தொண்டர்களை வளர்த்தெடுக்கிறார்கள்.
எல்லா கட்சிக்குள்ளும் அதிகாரப் பகிர்வு என்பது அடியோடு மறுக்கப்படுகிறது. சர்வாதிகாரத் தலைமை, சகல விதத்திலும் அடி பணிந்து நடக்க வேண்டிய நிலையில் தொண்டர்கள்! இதுவே பல முக்கிய கட்சிகளில் நிகழ்கால நிலைமையாக உள்ளது.
பொதுவாக நமது நாட்டில் கட்சித் தலைவரின் முடிவையோ விருப்பத்தையோ அறிவார்ந்த வகையிலான கேள்விக்கு உட்படுத்த முடியாது. அதில் உள்ள அநியாயம் இருப்பதாக தோன்றினாலும் தலைவரின் கட்டளையை மீற முடியாது. அப்படி மீறினால் தலைவரின் நெருக்கமான வட்டாரத்தில் வலம் வர முடியாது. கட்சியில் முக்கியத்துவம் குறைந்துவிடும். தலைவர் மீதான கேள்விக்கு அப்பாற்ப்பட்ட விசுவாசமே ஒருவரின் அரசியல் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்ற சூழல்களே நிலவுகிறது.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply