எந்தக் கட்சியில் ஒரு காலத்தில் தியாகிகளும், பிறருக்காக வாழும் உத்தமர்களும் அதிகமாக இருந்தார்களோ, அந்த கம்யூனிஸ்ட் கட்சி இன்று எப்படிப்பட்ட அதி மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பதற்கு, தளி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரே சாட்சியாகும்;
தளி என்பது தமிழ்நாட்டின் எல்லையில் கர்நாடகாவை ஒட்டியுள்ள மலைகள் சூழ்ந்த வனப்பகுதியைக் கொண்ட பகுதியாகும். இங்கு தெலுங்கு ,கன்னடம், தமிழ் என மும்மொழி பேசும் மக்களும் கணிசமாக வாழ்கின்றனர். பெரும்பாலும் எளிய விவசாய மக்களே.
இங்கு தான் கடந்த கால் நூற்றாண்டாக கட்டுக்கடங்காத இயற்கை வளச் சுரண்டல்களை நடத்தி பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராகத் திகழ்கிறார் ராமச்சந்திரன். தேன்கனிக் கோட்டை அருகே சந்தானப்பள்ளி, நாகமலையில் இவருக்கு சொந்தமான குவாரிகள் உள்ளன. இவற்றுக்கு சட்டபூர்வ அனுமதி பெற்று இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட அளவை கடந்து அள்ளுவதில் பலே சூரர் இவர். அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பிலும் கை தேர்ந்தவர். தளி ராமச்சந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே கிருஷ்ணகிரி மாவட்டமே கிடுகிடுக்கும் அளவுக்கு குற்றப் பின்னணி உள்ளவர்! இவர் தான் கம்யூனிஸ்ட் வேட்பாளர்!
பொதுவாக குவாரிகள் விவசாயத்தை பாழடிக்கின்றன. காற்றில் பரவும் தூசிகளால் மக்கள் சுவாசக் கோளாறுகளால் திணறுகிறார்கள். குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் வீட்டு சுவர்களில் விரிசல், அவற்றை எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலைகள் பாதிப்படைவது, விபத்துக்கள்…என மக்கள் துன்ப்படுவதால் தான் இவற்றை எதிர்த்து போராடுகின்றனர்.

ஒருவர் செல்வந்தராக இருப்பதே குற்றமல்ல, ஆனால், குற்றச் செயல்களை செய்வதன் மூலம் செல்வந்தராபவர் தன் பாதுகாப்புக்காக அரசியல் அதிகாரத்தை அடைவது தான் பிரச்சினை. அப்படிப்பட்டவருக்கு தொடர்ந்து எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை தந்து கொண்டிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பது தான் ஆகப் பெரிய அவலமாகும்.
அதுவும் நடு நடுங்க வைக்கும் கர்ண கொடூர கொலைகளைச் செய்து புகழ் பெற்றவர் ராமச்சந்திரன்.
# பெரியார் திராவிடக் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி
# இந்தியக் கம்யூனிஸ்ட்( எம்.எல்) மாவட்டச் செயலாளர் பாஸ்கர்
# பஸ் பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகர்….
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்…! இவ்வாறான இவர் சம்பந்தப்பட்ட பல கொலைகள், அவை நடைபெற்ற விதம் பல திகில் சினிமாக்களை மிஞ்சியதாகவும், பல அத்தியாயங்கள் தொடராகவும் எழுத தக்கவையாகும். இதற்கு மேல் இவை குறித்து எழுதவே மனம் சங்கடப்படுகிறது.
எப்படிப்பட்ட வழக்கிலும் பல லட்சங்கள் செலவழித்து ஆதாரங்கள் இல்லை, சாட்சிகள் பல்டி, நிருபிக்க முடியவில்லை என.. என சிறையில் தள்ளப்பட்டாலும் வெளியே வந்து விடுவார். இவரால் குத்திக்குத்துக்கு உள்ளாகி உய்ருக்கு போராடிய ஒருவரிடம் மருத்துவமனையில் மரண வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட் ஒருவர் நீதிமன்றத்தில் வந்து சாட்சியம் சொல்லவே அச்சப்பட்ட செய்தி சமீபத்தில் வைரலானது. இவர் மட்டுமல்ல, இவர் சகோதரர் வரதராஜன், மாமனார் லகுவையா உள்ளிட்ட 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் வெளியே வந்து விட்டனர்.

மூன்றுக்கு மேற்பட்ட கொலை வழக்குகள், 15க்கு மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், ஏழை விவசாயிகளை மிரட்டி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பிடுங்கியது, மலைகளை எல்லாம் மொட்டையடித்து ஊரையே பள்ளத்தாக்காக மாற்றி நீராதாரங்களை எல்லாம் அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளோடு கைகோர்த்து ஜெகத் ஜோதியாக வலம் வருவதற்கு ராமச்சந்திரனுக்கு தேவை ஒரு அரசியல் பாதுகாப்பு. அதற்கு வாய்ப்பளிக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்தக் கட்சிக்குள்ளேயே அவருக்கு வாய்ப்பு தருவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பிறகு அவருடைய பண பலமும், தலைவர்களை கவனித்த வகையிலும் எல்லோரும் அவருக்கு கட்டுண்டு போயினர். ஊடகத் துறையிலும் தன் புகழ்பாடக் கூடிய நிறைய ஆதரவாளர்களை வைத்துள்ளார், ராமச்சந்திரன்.
இவரது கொலைகள் தொடர்பாக உண்மையறியும் குழு அனுப்பி ஆய்வு செய்து அம்பலப்படுத்தி உள்ளனர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு, பேராசிரியர் அ.மார்க்ஸ் முதலானோர். தோழர் வேடியப்பன் அவர்களும் தளி ராமச்சந்திரனின் அட்ராசிட்டி பற்றி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில் பகாசூர பணக்காரராக இருக்கும் ராமச்சந்திரன் தன் மீது மக்கள் அதிருப்தி வராமல் இருப்பதற்காக தொகுதி மக்களின் வீட்டு கல்யாணம், கருமாதிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து மொய் எழுதுவதன் மூலம் தன் செல்வாக்கை பேணி வருகிறார். அதே சமயம் தொகுதியில் பள்ளி, கல்லூரிகள் வேண்டும். காவிரி பாயும் பூமியில் விவசாயத்திற்காக ஒரு சிறிய தடுப்பணை வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
சென்ற தேர்தலின் போது மூத்த தலைவர் சி.மகேந்திரன் தளிக்கே சென்று ஒரு மாதம் தங்கி ராமச்சந்திரனுக்கு தேர்தல் வேலை செய்தார். இதோ இப்போதைய மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அவர்கள் ராமச்சந்திரனின் பாதுகாப்பு கவசமாகவே திகழ்கிறார். மிகச் சமீபத்தில் கூட இவர் ஒரு கொலையில் சம்பந்தப்பட்ட செய்தி வைரலானது. ஆக, கொலை செய்யும் அவரது பிறவி குணம் எத்தனை முறை எம்.எல்.ஏ ஆனாலும் மாறாது என்பதே நிதர்சனமாகவுள்ளது.
இப்படிப்பட்ட நபரிடம் இருந்து விலகி நிற்காமல், இவரை அண்டி பிழைக்கும் நிலையில் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதே.. . என்பது தான் தமிழ்நாட்டில் உண்மையான இடதுசாரித் தோழர்களின் ஆற்றமாட்டா வருத்தமும், ஆதங்கமுமாகும்.
இன்றைய ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட்களின் மற்றொரு கோர முகமாகும், இது. இப்படிப்பட்ட நபர்களுக்கு தோல்வியை மக்கள் பரிசளிக்கும் போது தான் இங்கு ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்துள்ளது என்ற நம்பிக்கை பிறக்கும்.
சாவித்திரி கண்ணன்






















கர்ண கொடூரம் என்பது பிழையான சொல்லாட்சி. கர்ணம் என்றால் காது. காதால் கேட்பதற்கு மோசமாக இருப்பதைத்தான் கர்ண கொடூரம் – கர்ண கடூரம் என்றெல்லாம் சொல்வதுண்டு. கர்ண கடூரமான பாட்டு அல்லது பேச்சு எனலாம். கர்ண கொடூரமான கொலை என்று எதுவுமில்லை. – தியாகு