ஊழல் முறைகேடு, இயற்கை அழிப்பில் சாதனை படைத்தவர்!

-சாவித்திரி கண்ணன்

அரை நூற்றாண்டுக்கு மேல் அதிகார மையத்தில் சகல கட்சிகளோடும் நெருக்கம். சொத்து குவிப்பு, ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்.. ஆகியவற்றில் கொடி கட்டிப் பறந்தாலும், சிறை செல்லாமல் தப்பிப்பதில் கில்லாடி. இன்னும் அதிகார வேட்கை ஓயாதவராக 13 வது முறையாக போட்டியிகிறார்;

1996-2001  ஆட் சியில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக துரை​முரு​கன் இருந்த போது வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.3.92 கோடி சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​ முரு​கன், அவரது மனைவி சாந்​த கு​மாரி, மகன் கதிர் ஆனந்த் எம்​.பி. மரு​மகள் சங்​கீ​தா, அமைச்​சரின் சகோ​தா​ரர் துரை சிங்​காரம் ஆகியோ​ருக்கு எதி​ராக அதி​முக ஆட்சிகாலத்​தில் லஞ்ச ஒழிப்​புத்​துறை  துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தி கடந்த 2002-ம் ஆண்டு  வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2007 -ல் வேலூர் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி துரைமுருகன் உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.

மீண்டும் அதிமுக ஆட்சி ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்றவுடன் 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையில் ஜெயலலிதா பதவி இழந்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்து நோயுற்று இறந்தார். துரைமுருகன் வழக்கில் முன்னேற்றமில்லை. அதன் பிறகு ஒ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் முன்னேற்றம் இல்லை.

இவ்வாறு பல்லாண்டு தாமதத்திற்கு பிறகு இந்த வழக்கை திமுக ஆட்சியும் ஆறப்போட்டது.

ஆனால், ஏப்ரல் 23, 2025: அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், 2007-ல் வேலூர் நீதிமன்றம் வழங்கிய விடுவிப்பு உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் நேற்று (ஏப்ரல் 1, 2026) உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம். துரை முரு​கன் சார்​பில் தாக்​கல் செய்த மேல் ​முறை​யீடு மனுவை, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.நாகரத்​னா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசா​ரித்​தது.

மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன்வைத்த வாதத்தை ஏற்ற உச்ச நீதி​மன்​றம், சொத்​துக் குவிப்பு வழக்கு மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துவிட்டது.

வெறும் 3.94  கோடியை வருமானத்திற்கும் கூடுதலாக சொத்தாக வைத்திருந்தார் என துரைமுருகன் மீது கடந்த  கால் நூற்றாண்டாக வழக்கு நடந்தும்  அவரை தண்டிக்க வழியில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த சொத்து மதிப்பை ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டார், துரைமுருகன்.

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு நீர்வளத்துறையும், குவாரிகளுக்கான பொறுப்பும் அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த  ஆட்சியில் வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழுவீச்சில் அரங்கேறின!  நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை சூறையாடுவதால் மழை, வெள்ள காலங்களில்  பாதிப்பு அதிகமானது. அதன் பிறகு சென்ற ஆட்சியைக் காட்டிலும் கூடுதல் குவாரிகள் செயல்படவும், அளவுக்கதிகமாக மணல் அள்ளவும்  உத்திரவிட்டார், அமைச்சர்! இவை தவிர, அனுமதியில்லாமல் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் கடத்தல் ஜரூராக நடப்பதையும் ஊக்குவித்து தன் உதவியாளர் உமாபதி மூலம் கமிஷனும் பெற்றார்.

அமலாக்கத்துறை சோதனையில் தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் ரூ.4.700 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும்,

ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்கான வருமானம் ரூ.1900 தான்! ஆனால், ரூ.20 ஆயிரம் வரை லாபம் தனியாருக்கு செல்கிறது என்பதும்,

மணல் அள்ள தமிழக அரசு அனுமதித்ததோ 490 ஏக்கர். ஆனால் அள்ளப்பட்டு வருவதோ 2,500 ஏக்கர்களில் என்பதும்,

நீர்வளத் துறை ரெக்கார்ட்படி நான்கு லட்சத்து ஐயாயிரம் யூனிட் தான் மணல் அள்ளப்பட்டதாக உள்ளது. ஆனால், உண்மையில் 27 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் அளவுக்கு மணல் அள்ளப்பட்டு உள்ளது…என்ற கொடுமையும் தெரிய வந்த பிறகும் துரைமுருகன் மீது நடவடிக்கை இல்லை.

தமிழகத்தில் மணல் கடத்தலில் மும்மூர்த்திகளாகத் திகழும் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்திய அமலாக்கத் துறை மணல் கடத்தலுக்கு துணை போன அமைச்சர் துரை முருகன் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆகியோர் தொடர்பான உண்மைத் தகவல்களை இது வரை சொல்லவில்லை

மலையளவு கொள்ளையடித்து, மடுவளவு அரசு வருமானத்தை காட்டும் துரைமுருகனை மத்திய பாஜக ஏன் விட்டுவைத்துள்ளது?

அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் கொடூரமாக இயற்கை வளக் கொள்ளை நடத்தி ஆற்று வளத்தையே பொழிவிழக்கச் செய்துவிட்டார், துரைமுருகன். இத்தனைக்கு பிறகும் இவரை தண்டிக்க முடியவில்லை.

இந்த நாட்டில் நீதிபரிபாலனத்தில் செல்வாக்கானவர் செலுத்தும் ஆதிக்கத்திற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

துரைமுருகன் என்ற ஊழல் திமிங்கலம் யாருக்கும் மாட்டவில்லை. காரணம், மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி யார் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அதிகார மையத்திற்கு நெருக்கமாகிவிடுவார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது  துரைமுருகன் தன் மருமகள் பெயரில் ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கி நெடுஞ்சாலைத் துறையின் பல கோடி மதிப்புள்ள வேலைகளை பெற்றுச் செய்து லாபம் ஈட்டியது.. பொதுவாக ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ஐந்து வருட கால அனுபவம் இருந்தால் மட்டுமே  அரசாங்கத்தின் முக்கிய ஆர்டர்கள் கிடைக்கும்! ஆனால், நிறுவனம் தொடங்கிய உடனே அதிமுக அரசு ஆர்டரை அள்ளி வழங்கியது.

இதே போல இன்றைய மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் துரைமுருகன். கடந்த ஐந்தாண்டுகளாக மணல் மாபியாக்கள், குவாரி மாபியாக்களுடன் கூட்டணி வைத்து இவர் அடித்த பகாசூரக் கொள்ளைகள் மலைக்க வைப்பன…! டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிரடியாக களத்தில் இறங்கி அனைத்து ஆவணங்களையும் அள்ளிச் சென்றது.

அடுத்த நாளே கூலாக விமானத்தில் டெல்லி சென்று மத்திய அதிகார மையங்களை சந்தித்துப் பேசி எல்லாவற்றையும் சுமூகமாக முடித்து விட்டார். டெல்லியின் வேட்டை நாய்களுக்கு பசி அதிகம். அதிகம் பிஸ்கட்டுகளை வீசி எறிய வேண்டியதாயிற்று என்று நட்பு வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசிய துரைமுருகன், திமுக அமைச்சர்களிலேயே அதிக சீனியரானவர் என்பதால், மற்ற அமைச்சர்களை போல தலைமை குடும்பத்திற்கு கப்பம் கட்ட மாட்டாராம்.

அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அப்போலோவில் அட்மிட் ஆகும் துரைமுருகனை இந்த முறை கண்டிப்பாக கழட்டிவிட்டே ஆக வேண்டும் என தலைமை எவ்வளவோ முயன்றது. அனைத்தையும் முறியடித்து இவர் எப்படி சீட் பெற்றார் என சொந்தக் கட்சியினரே வியக்கின்றனர்.

துரைமுருகன் குடும்பம் இன்றைய நிலவரப்படி  சில ஆயிரம் கோடிகளில் சொத்து கொண்டது. பொறியியல் கல்லூரி, ஏகப்பட்ட நில புலன்கள் , சென்னையிலும், சொந்த ஊரிலும் வாங்கி குவித்துள்ளவற்றை  பலரும் அறிவர். ஆனால், வெளி நாட்டு முதலீடுகள் ரகசியமானது.

இது மட்டுமின்றி நிலவுடமையாளர், பல இடங்களில் கட்டிடங்களாகவும், நிலங்களாகவும் வாங்கி குவித்துள்ளவர்,ஷேர் மார்க்கெட்டுகளில் பல கோடி முதலிடு செய்துள்ளவர்,ஏற்றுமதி,இறக்குமதி என்ற வகையிலான லார்ஜிஸ்டிக் பிசினஸ் செய்பவர்…கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்துள்ளவர்…!

தகாத வழிமுறைகளில் அளவுக்கு மீறி சேர்த்த செல்வக் குவிப்பு துரைமுருகனை விபூதி சாமியாரை தேடிச் சென்று விழுந்து கும்பிடும் சங்கியாக மாற்றியுள்ளது.

12 முறை தேர்தலில் நின்று 10 முறை எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு பெற்று வாழ் வாங்கு வாழ்ந்துவிட்ட  85 வயதிலும் அதிகார ஆசை அடங்க மறுக்கிறது. சொந்த மாவட்டத்தில் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கவோ, வழிவிடவோ மறுக்கும் துரைமுருகன் கட்சித் தலைமைக்கு ஜால்ரா போட்டே எல்லா காரியத்தையும் சாதித்துக் கொள்வார்.

இவருக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் காட்பாடி தொகுதி மக்கள் 13 வது முறையாக தேர்தலில் இவருக்கு தோல்வியை பரிசளித்து ஓய்வு கொடுப்பது அவரது உடல் நலனுக்கும் நல்லது. தொகுதிக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time