திமுக தலைமையிடம் ஊடுருவிக் கொண்டிருக்கும் பார்ப்பனியம்..!

-சாவித்திரி கண்ணன்

ஒரு உரையாடல், அதில் வெளிப்படும் உண்மைகள் பல! ஆனால், இதில் நாம் என்ன புரிந்து கொள்கிறோம், தெளிவு பெறுகிறோம் என்பது தான் முக்கியம். திமுகவின் பலமாக யார், யார் எல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை ஓரம் கட்டி மூலையில் வைத்து, ஸ்டாலினை தனிமைப்படுத்த பாஜக  செய்யும் சதி திட்டங்களே இவை;

பாஜக என்பது என்பது பார்ப்பனக் கூட்டம். தங்கள் நலனுக்கு எதிரானவர்களாகப் பார்த்து வீழ்த்தவே இந்த ஆடியோ லீக்கேஜ்களை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

இப்படித்தான் அன்று பி.டி.ஆர்.பழனிவேராஜனை காலி செய்தார்கள்! தற்போது ஆ.ராசாவை அழிக்கத் துடிக்கிறது, இந்தப் பார்ப்பன பாஜக. அதற்கு பார்ப்பன பத்திரிகையான தினமலர் சதி திட்டம் தீட்டுகிறது.

பல முட்டல், மோதல்கள், முரண்களோடு உள்கட்சியில் உள் குத்துக்களை பெறாமல் யாரும் அரசியலில் வளர்வதில்லை. நம்பத் தகுந்த தோழமை என நம்பி பேசப்படும் அந்தரங்க உரையாடல்களை எல்லாம் வெளியில் கசியவிட்டு, அரசியல் செய்வது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.

பாஜகவிற்குள் இருக்கும் பகை அரசியலை சொல்ல இது போல ஆயிரம் ஆடியோக்களை ரிலீஸ் செய்யலாம்.

சரி போகட்டும். அம்பலத்திற்கு வந்த ஒன்றை எப்படி அணுக வேண்டும் எனப் புரிந்து கொள்ளாமல் கட்சிக்குள் இருக்கும் ஒரு சில நல்ல திறமைசாலிகளை திமுக இழக்கக் கூடாது.

காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் 2 ஜி விவகாரத்தில் மட்டுமல்ல, எல்லா விவகாரத்திலும் கமிஷன் பெறாமல், கரப்ஷன் இல்லாமல் மிகப் பெரிய திட்டங்கள் அமலாவதில்லை. அன்றைய 2ஜியை காட்டிலும் பல மடங்கு பெரிய ஊழல்களை இன்றைய பாஜக அரசு செய்து கொண்டுள்ளது. இந்த அசிங்கமான, வெறுக்கதக்க நிதர்சனங்களை எப்படி தடுப்பது  என்ற  ஆரோக்கியமான உரையாடலை அனைத்து மட்டத்திலும் நடத்துவோம்.

இப்ப இந்த விவகாரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ராஜா மிக வெளிப்படையாகவே சிஸ்டமேட்டிக்காக 2ஜி ஏலத்தை நடத்தி முடித்துள்ளார். ஆன போதிலும், பாஜக இந்த விவகாரத்தை திமுகவை வீழ்த்த, வீரியமாக்கி ஆதாயம் அடைந்து விட்டது.

அதுவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒத்துக் கொண்ட கமிஷன் தொகையைக் கூட ஆ.ராசா நேரில் பெறவில்லை. அதை ஸ்டாலினே பெற்று கலைஞர் டிவிக்கு தந்துள்ளார் என்பதால், ஸ்டாலினை காட்டிக் கொடுக்க ஆ.ராசாவை தம்பி மீதுள்ள கோபத்தால் அழகிரி தூண்டுகிறார். ஆனால், அதற்கு ஆ.ராசா துளியும் இசையவில்லை. தன் மீது தலைமை அக்கறை காட்டாமல் போய்விட்டதே.. என ஆதங்கப்படும் நிலையிலும் கூட அழகிரி  சொன்னதற்கு உடன்படவில்லை.

தன் சமுதாயத்தினர் தனக்காக கொந்தளிக்கும் நிலையில் அவர்களை ஆற்றுப்படுத்துகிறார். ”ஸ்டாலின் என்னை  ஒன்றும் செய்து விட முடியாது. நான் சாதியைக் கடந்து நிற்கத் துவங்கிட்டேன். சாதி கூட்டத்தை காட்டி, கட்சித் தலைமையிடம் நியாயம் கேட்க மாட்டேன். நீங்க போங்க’’ என்கிறார், தன் சமுதாயத்தாரிடம்…!

இந்த பேச்சில் நாம் கவனிக்க வேண்டிய  முக்கிய  அம்சம் ஒன்றே ஒன்று தான். அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

”தலைவருக்கு பின்னாடி ஸ்டாலின் பிரச்சினைகளை எதிர் கொள்வார். ஏதோ தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டிருக்கிறார். பிராமின்ஸ் இவர போட்டு அடிப்பாங்க. இந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ்.. எல்லாம் விடமாட்டாங்க..” எனப் பேசியுள்ளார்.

இது கட்சியிலேயே இருந்தும் ஸ்டாலினை ஆ.ராசா சரியாக கணிக்கத் தவறியுள்ளார் என்பதற்கு அத்தாட்சியாகும். அவர்  ஆ.ராசா கணித்ததை பொய்ப்பித்து தற்போது மாபெரும் வெற்றியாளராகியுள்ளார், எம்.ஜி.ஆர் பாணியில் ஸ்டாலின்.

இந்தியாவிலே ’பார்ப்பன லாபி’யை சரியாக வைத்துக் கொள்ள முடியாதவன் ஆகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், திறமைசாலியாக இருந்தாலும், ஒரு போதும் வெற்றி பெற முடியாது. அதே சமயம் திறமையோ, அறிவாற்றலோ இல்லையென்றாலும் பார்ப்பனர்களை பகைத்துக் கொள்ளாமல் அவர்கள் தேவைகளை நிறைவேற்றினால், ஒருவரை உச்சத்தில் வைத்து உச்சிமோர்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள்.

1996 -ல் ஸ்டாலின் மேயரான காலகட்டத்தில் இருந்து நான் பார்த்து வருகிறேன். ‘பார்ப்பன லாபி’யை  அவரைப் போல ‘பக்காவாக’ பராமரித்த மற்றொரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் யாருமேயில்லை.

செல்வாக்கான பார்ப்பனர்களிடம் எப்போதும் ஒரு ‘சாப்ட் கார்னரோடு’ உறவைப் பேணுவார். அப்போதே துக்ளக் ஆசிரியர் சோவுடனும், சுப்பிரணியசாமியுடனும் மிக இணக்கமாக பழகினார். நிர்வாக ரீதியாக பார்ப்பனர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்வது, பார்ப்பனர்களின் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றை நான் தொடர்ந்து பார்க்கிறேன். அந்த காலத்திலேயே கலைஞரை கடுமையாக தாக்கி எழுதும் பார்ப்பன ஊடகங்கள் ஸ்டாலின் விவகாரத்தில் சற்று மென்மையான போக்கை கடைபிடித்தனர்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. கருணாநிதியை விட ஸ்டாலின் பெட்டர். அவர் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி சிறப்பாக இருக்கும். என 1990 களில் சுப்பிரமணியசாமி கூறியது அன்று பத்திரிகைகளில் வைரலானது. பிறகு தன் வீட்டு கல்யாணப் பத்திரிகையோடு சுப்பிரமணிசாமி இல்லம் சென்றார் ஸ்டாலின்.

கலைஞருமே கூட பார்ப்பனர்களிடம் மிக நல்ல உறவைக் கொண்டிருந்தார் என்றாலும், அதை அக்கறை எடுத்து தொடர்ந்து பராமரிக்க பெரிதாக சிரத்தை காட்டமாட்டார். அவ்வப்போது தன்னை பெரியார் சீடனாக காட்டிக் கொள்ள ஏதாவது தடாலடியாக பேசி விட்டு, சர்ச்சையில்  சிக்குவார். ஸ்டாலின் தப்பித் தவறியும்  கூட அப்படி பேசமாட்டார்.

2021 ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின் செய்தது எல்லாம் செல்வாக்கான பார்ப்பனர்களை திருப்தி படுத்தி சந்தோஷப்படுத்துவது தான்.

டி.வி.எஸ் வேணு சீனிவாசன் அய்யங்காரிடம் பல நூறு கோடிகள் புரளக் கூடிய நம்ப ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை ஒப்படைத்தார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேசனை வேணு சீனிவாச அய்யங்காரிடம் ஒப்படைத்தது!

தேசிய கல்வி திட்டத்திற்கு மாற்றாக தமிழ் நாட்டு கல்வி திட்டத்திற்காக போடப்பட்ட கமிட்டியில்  பார்ப்பன சமூகத்தை பிரதிபலிக்கும் பேராசிரியர் இராமானுஜம், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரை நியமித்தார். இந்த ஐவரும் தேசிய கல்வி திட்டத்தையே சிறிய அளவு மாற்றி, தமிழ் நாட்டு கல்விதிட்டமாக தருவோம் என நிர்பந்தித்தனர். அதுவே கல்வியாளர் ஜவகர் நேசன் வெளியேறக் காரணமாயிற்று.

பத்திரிக்கைத் துறையில் பார்ப்பனச் சங்கிகளாக வலம் வரும் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை இறப்புக்கு ஓடோடி சென்றார். தினமணி வைத்தியநாதனின் நூல்களை வெளியிட்டு அவரை சந்தோஷப்படுத்தினார். துக்ளக் ரமேஷின் அறுபதாம் கல்யாணத்திற்கு அமைச்சர்கள் சகிதம் வீடு தேடிச் சென்று வாழ்த்தினார். தூர்தர்ஷனின் ஆண்டாள் பிரியதர்ஷிணியை திமுகவின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவராக்கினார். ஹெச்.ராஜா, கேடி.ராகவன் நோயுற்ற போது மருத்துவமனை சென்று பார்த்து நலம் விசாரித்தார். ஆர்.எஸ்.எஸ்காரான மைத்ரேயனை திமுகவில் இணைத்துக் கொண்டார்.  பார்ப்பன பற்றாளர் நடிகர் எஸ்.வி.சேகரோடு மிக நெருக்கமாக இருக்கிறார். தற்போது திமுக கூட்டணியில் ஆர்.எஸ்.எஸ்சின் காரியகர்த்தாவான செல்வகுமார் என்பவரை  சேர்த்துள்ளார்.

ஆ.என். ரவி என்ற தீவிர பார்ப்பன சங்கியான ஆளுநரிடம் கடைசி வரை நல்லுறவைப் பேணி வழியனுப்பி வைத்தார்,ஸ்டாலின்.

மேலும் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, தினமலர்.. என எல்லா பார்ப்பன ஊடகங்களுக்கும் அளவிலா அரசாங்க விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து சந்தோஷப்படுத்தினார். பார்ப்பனர்களிடம் இருந்து வரும் சிபாரிசுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் தந்து நிறைவேற்றி வருகிறார்.

இந்து அறநிலையத் துறையில் பார்ப்பன அர்ச்சகர்கள் காட்டில் வரலாறு காணாத அதிர்ஷ்ட அடை மழை பொழிகிறது. அவ்வளவு சலுகைகள்…! போதாக்குறைக்கு திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் கடைக் கண் பார்வையும் இவர்கள் மீது விழுந்துவிட்டது. சொல்லவா வேண்டும்..? இந்த ஆட்சியில் பார்ப்பன அர்ச்சகர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் பலன்களை பட்டியலிட்டு எழுத தனி அத்தியாயமே வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக 2021 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் கோவில் குட முழுக்குகள் அனைத்தையும் இனி சமஸ்கிருதம், தமிழ் இரண்டிற்கும் சம முக்கியத்துவம் தந்து நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. ஆனால், இது வரை நடந்துள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில் குட முழ்க்குகளில் ஒன்றில் கூட தமிழையும் சேர்த்து நடத்தவில்லை. யாக குண்டத்திலோ, கோவில் கோபுரத்திலோ பார்பனரல்லாத தமிழ் அர்ச்சகர்களை அனுமதித்ததில்லை.

தற்போது வரை மத்திய பாஜக அரசு பற்றி மேடையில் விமர்சித்து பேசினாலும் தனிப்பட்ட முறையில் மிக சுமுகமான, அன்னியோன்னியமான ஒரு உறவைப் பேணுகிறார்.

2ஜி விவகாரம் குறித்து ஆ.ராசா எழுதிய ஆங்கில நூலை ( 2G Saga Unfolds ) அவர் டெல்லியில் முஸ்லீமான முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை வைத்து வெளியிடுகிறார். அதன் தமிழ் நூலான, ’2ஜி அவிழும் உண்மைகள்’  நூலை இனமானப் பேராசிரியர் அன்பழகன், தி.க தலைவர் வீரமணி, கவிஞர் வைரமுத்து, முற்போக்கு பத்திரிகையாளர் என்.ராம், சுப.வீரபாண்டியன் ஆகியோரைக் கொண்டு வெளியிடுகிறார்.

ஆ.ராசா இயல்பிலேயே ஒரு பெரியாரிஸ்ட். அவருக்கு பார்ப்பன லாபி அறவே தெரியாத காரணத்தால் தான் திறமை அறிவாற்றல் இருந்தும் மேலெழுந்து வர முடியாமை மட்டுமல்ல, மேன்மேலும் குறி வைத்து தாக்கப்படுகிறார்.

திராவிடக் கொள்கையாளர்களிடம் இருந்து ஸ்டாலினை தனிமைப்படுத்தி முழுக்கவே அவரை தங்களுக்கானவராக மாற்றத் துடிக்கிறது பார்ப்பனீயம். பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது என்பதை!

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time