கடும் அதிருப்திகளைக் கடந்து முதல்வராவாரா பினராயி விஜயன்?

-சாவித்திரி கண்ணன்

ஊழல் குற்றச்சாட்டுகள், சபரிமலை தங்கம் திருட்டு, 10 ஆண்டுகளில் பாஜகவை வளர வைத்தது, வன்முறை கலாச்சாரம், மென்மையான இந்துத்துவா, ஒற்றை அதிகார மையமாக இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளையும், ஆட்சி மீதான அதிருப்திகளையும் கடந்து 82 வயது பினராய் விஜயன் மீண்டும் முதல்வாரா?;

ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் கேரளா கடைசி கட்ட அனல் வீசும் தேர்தல் பிரச்சாரங்களால் சூடாகியுள்ளது.

இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் ( மணி), தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய சோசியலிஸ்ட் ஜனதா தளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளது.

“எல்டிஎஃப் இல்லாவிட்டால் வேறு யார்?”என்று களத்தில் இறங்கியுள்ள இடதுசாரிக் கூட்டணி ‘லைப் மிஷன்’ மூலமாக பல்லாயிரம் வீடுகள் கட்டித் தந்தது, கேரளத்தின் முக்கிய நகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாலங்கள், பொருளாதார புழக்கம்  அதிகரித்துள்ளது, அரசு மருத்துவமனைகளின் சேவை, அரசு பள்ளி, கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தி இருப்பது.. ஆகியவற்றை பிரச்சாரத்தில் தூக்கலாக வெளிப்படுத்துகிறது. இடது அணி இலவசங்களை அறிவிக்கவிக்காமல் தன் சாதனைகள் பலவற்றைச் சொல்லி வாக்கு கேட்கிறது.

இலவசங்களின் அறிவிப்புகள்;

பொதுவாக கேரள வாக்காளர்கள்  இலவசங்களை ஆதரிப்பவர்கள் அல்ல. ஆனால், முதன்முறையாக  கேரளாவில் பாஜக இந்த இலவச வாக்குறுதிகள் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்து விட்டது. பெண்களுக்கு மாதம் ரூ 25,00 பெறுமான கூப்பன் தருவார்களாம். அதைக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாலாமாம்! ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்தில் 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாம்..!

இது வரை இலவச அறிவிப்பு இல்லாமல் பல முறை வெற்றி பெற்று கேரளாவில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ், பாஜகவை போலத் தானும் சில இலவசங்களை அறிவித்துள்ளது. பெண்களுக்கு இலவச  பேருந்து பயணம், பெண் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 உதவித் தொகை, இளம் தொழில்முனைவோருக்கு ₹5 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் ஆகியவற்றை காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் ( ஜேக்கப்) கட்சி ஆகியவை உள்ளன.  ராகுல்காந்தியின் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

”கேரளாவில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் மாறி,மாறி ஆட்சிக்கு வருவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்..” என்ற கோஷத்துடன் பாஜக களம் கண்டுள்ளது. பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்தார். பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் தலைவர்கள், ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்பட அனைத்து மூத்த தலைவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  பாஜக (98) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத் தர்மசேனா (22), டி20 பார்டி (19) மற்றும் சுயேட்சைகள் (1) இடம் பெற்றுள்ளது.

பினராய் விஜயன் மீதான குற்றச்சாட்டுகள்;

இந்தத் தேர்தலில் சிபிஎம்மின்  சிபிஎம் மூத்த தலைவர் ஜி.சுதாகரன் சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதோடு, ”வரைமுறையற்ற ஊழலில் பினராய் விஜயன் ஊறித் திளைக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

”இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்ச்சாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் எல்டிஎஃப் ஆட்சியில் அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், அடிக்கடி வினாத்தாள் அவுட்டானது.. ஆகியவை காரணமாக பினராய் விஜயன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி இருக்க வேண்டும். இந்த நிலையில் மீண்டும் அவரையே முன்னிறுத்தி இடதுசாரி அணி தேர்தலை எதிர்கொள்வதை ஒரு சிறிதும் ஏற்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

இவரை போலவே சி.பி.எம் ஆதரவாளராக இருந்த  நீலாம்பூர் எம்எல்ஏ எம்.வி. அன்வர் கடும் அதிருப்தியுற்று காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார். மேலும், பினராய் விஜயன் பாஜகவிற்கு போட்டி அரசியல் செய்வதாகக் கருதி, ஒரு ‘சாப்ட் இந்துத்துவாக’ செயல்படுகிறார். ”இஸ்லாமியர்களுக்கு இடதுசாரிகளோடு முன்பிருந்த தோழமை தற்போது இல்லை” என்ற குற்றச்சாட்டும் அங்குள்ள இஸ்லாமியத் தோழர்களாலேயே சொல்லப்படுகிறது. இவை யாவும் இடதுசாரி அணியின் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரசின் பிரச்சாரம்;

10 ஆண்டுகள் இடது அணியின் ஆட்சி மீதான அதிருப்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் களமாடுகிறது. சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், வேலையின்மை, படித்த இளைஞர்கள் வேலைக்காக கேரளவில் இருந்து வெளியேறுவது.. அரசு நிர்வாகத்தில் கம்யூனிஸ்டுகளின் தலையீடுகள்.. ஆகியன காங்கிரஸ் பிரச்சாரத்தில் வெளிப்படுகிறது.

காங்கிரசைப் பொறுத்த வரை 2025 உள்ளாட்சி தேர்தலில் 6 மாநகராட்சிகளில் 3-ஐ  கைப்பற்றியது. ஒட்டு மொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் 648-ஐ காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வென்றது. இடைத் தேர்தல் வெற்றிகள் ஆகிய ‘கேரளா வெல்லும், யுடிஎஃப் வழிநடத்தும்’ என்ற கோஷத்தை வைக்கிறார்கள்!

பிரனாய் விஜயனின் ஊழல்;

கொச்சியில் உள்ள ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்று கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியது . அந்த அனுமதி தந்ததற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணா ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்திற்கு லஞ்சமாக ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனம் பணம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் குற்றம் சாட்டினார்.  சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனம் ரூ.1.72 கோடி பெற்றதாக வருமான வரி தீர்வு வாரியம்  உறுதிபடுத்தியது. இதுவும்  பினராயி விஜயனுக்கு கெட்ட பெயர் உருவாக்கி விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆட்சியின் சாதனைகளை சொல்லி தீவீரப் பிரச்சாரம் செய்கிறார், பினராயி விஜயன்.

சென்ற முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பேரன்பை பெற்ற  சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா டீச்சருக்கு  தற்போதைய ஆட்சியில் அதே பொறுப்பை தர மறுத்து வீணா ஜார்ஜை நியமித்தார். தற்போது சுகாதாரத் துறை செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதே போல கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் கலந்து பேசாமல் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது சர்ச்சையானது.

ஆட்சியின் வெற்றியோ, நல்ல பெயரோ அது தன்னுடைய வெற்றியாக மாட்டுமே பார்க்கபட வேண்டும் என்ற பினராய் விஜயனின் குறுகிய பார்வையே சைலஜாவின் மாற்றத்திற்கு காரணம் என கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவரை யார் என்ன செய்ய முடியும் கேரள ஆட்சியிலும், கட்சியிலும் ஒற்றை அதிகார மையமாக இருக்கும் பினராய் விஜயன் ஆகில இந்திய கட்சித் தலைமையாலும் கூட தட்டிக் கேட்க முடியாத நிலை உள்ளது. மக்கள் தீர்ப்பு மூலமாக  இதற்கு தீர்வு ஏற்பட்டால் உண்டு.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இடது அணி கணிசமான இடங்களை வெற்றி கொள்ளும். ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு காங்கிரஸ் கூட்டணிக்கே உள்ளது எனச் சொல்கிறது. பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை!

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time