கார்ப்பரேட்களால் நிகழ்த்தப்படும் அரசியல் மாற்றங்களை அலசுகிறது!

-வசந்த் பாரதி

மலையாளத்தில் அதிகமான அரசியல் படங்கள் வெளிவருகின்றன. புகழ் பெற்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டிய தொடக்க காலம் பிறகு, அரசியல் சதிராட்டங்களை அப்பட்டமாகத் தோலுரித்து காட்டுவதாக மாறியது. இதில்  ‘பிரதிச்சாயா’ பேசும் அதிகாரப் போட்டி அரசியல் பிரமிக்கதக்கது;

“பிரதிச்சாயா” திரைப்படம் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிக் காட்டுகிறது. அரசியல் கட்சிகள் இன்று கொள்கைகளால் அல்ல, தங்களால் கட்டமைக்கப்படும் பொதுப் பிம்பத்தை வைத்தே போட்டியிடுகின்றன. அந்தப் பிம்பத்தை உருவாக்குவதில் சினிமா ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது.

மலையாள சினிமாவின் அரசியல் மரபில், “பிரதிச்சாயா” ஒரு புதிய கோணத்தை படம் போட்டு காண்பித்திருக்கிறது. இடதுசாரி அரசியல் விமர்சனங்களிலிருந்து விலகி, காங்கிரஸின் பிம்பத்தை மறு சீரமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் நிலைப்பாடு பற்றி அலசும்  இந்தப் படம் கார்ப்பரேட் அரசியலானது குடும்பத்திற்குள்ளும் கோலோச்சுவதை பேசுகிறது.

மலையாள படவுலகில் அரசியல் படங்களின் ஆதிக்கம்;

இந்திய தேசத்தின் ஏனைய மாநிலங்களை விட கேரளாவிற்கு தனி சிறப்பு உண்டு. அந்த மாநிலத்து அரசியல் சூழலே வேறு. எப்போதுமே ஒற்றை கட்சி ஆட்சி என்பது அந்த மாநிலம் அறியாத ஒன்று. கம்யூனிஸ்ட் ஆட்சியோ காங்கிரஸ் ஆட்சியோ அங்கு பெரும்பாலும் கூட்டணி கட்சிகளே ஆட்சி நடத்தி வருவதை காணலாம். அதனால் அந்த கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுதல் ஒரு கூட்டணியில் இருந்த கட்சி அடுத்த தேர்தலில் வேறு கட்சிக்கு ஆதரவு தருவது என்பதான அரசியல் சதுரங்க விளையாட்டு அங்கு சகஜம். அதனால் தான் வேறு எந்த மொழிகளிலும் வெளிவராத அளவில் அரசியல் பேசும் திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன

காங்கிரஸ் அரசியலையும் கம்யூனிஸ்ட் அரசியலையும் மையமாக வைத்தே படங்கள் எடுக்கப்படுகின்றன.

நேரடியான கட்சி அரசியலைப் பேசும் படங்கள். 1970 இல் வெளிவந்த நிங்ஙள் என்னெகம்யூனிஸ்டாக்கி தோப்பில்பாஸி  இய்க்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அன்றைய முக்கிய நாயகன், நாயகியான  பிரேம் நசீரும், ஷீலாவும் நடித்தனர். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1984 இல் வெளியான ‘முகாமுகம் ‘  பாஸியின் பிரபலமான நாடகத்தின் திரை வடிவமாகும். அதே இடதுசாரி இயக்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த படம் அடூரின் முகாமுகம்‘. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நேர்ந்த பிளவின் காரணமாக எப்படி அந்தக் கோட்பாடே செயலற்றதாக மாறியது என்பதைச் சொன்னது. சமூக அரசியல் சினிமா என்று இவற்றைச் சொல்லலாம்.

ஐ.வி.சசி இயக்கத்தில்  மம்முட்டி நடிப்பில் வெளியான ஈநாடு  ( 1982 ) முதலான படங்கள் ‘மொத்த சிஸ்டமே சரியில்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமகால அரசியலை காரசாரமாஆ அலசியவை.

இதன் இன்னொரு பக்கமாக அரசியலை கேலிப் பொருளாக்கிய  வரவேல்பு ( 1989 ) போன்ற படங்கள்….! இது  எர்ணாகுளம் மாவட்டம் வைப்பினில்  அரசு சாராயத்தைக் குடித்த பலர் உயிரிழந்ததை விவரித்தது. அது காங்கிரஸ் அரசு நடைபெற்ற காலம். எனவே கம்யூனிஸ்ட் ஆதரவாளரான திரைக்கதை ஆசிரியரான டி. தாமோதரன் காட்சிகளில் கருணாகரன் மீது கடுமையான  விமர்சனம் செய்தார் . அதை பரபரப்பான படமாக ஐ.வி சசி மாற்றினார்.

நடிகர் சீனிவாசன் எழுதி சத்தியன் அந்திக்காடு இயக்கிய படம் ‘வரவேல்பு’. வளைகுடா நாடுகளில் வேலை செய்து ஈட்டிய பணத்தை வைத்துப் பிறந்த மண்ணில் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஒருவனுக்கு அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்கவாதிகளாலும் நேரும் கசப்பான அனுபவங்களைக் கேலித் தொனியில் சித்தரித்தது.

அடூரின் முகாமுகம், லெனின்ராஜேந்திரனின்  மீனமாசத்திலேசூர்யன்‘,  டி.வி.சந்திரனின் ஓர்மகள் உண்டாயிரிக்கணம்‘, ஜான் ஆப்ரஹாமின் அம்ம அறியான்‘, பிரிய நந்தனின் நெய்த்துகாரன் போன்ற படங்கள் இடதுசாரி இயக்கத்தை அனுதாபத்துடன் சித்தரித்தவை.

இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் வாழ்க்கையை பேசிய நெய்துகாரன்.

நெய்த்துகாரன் படம் மறைமுகமாக தோழர் இ.எம்.எஸ்ஸின் வாழ்க்கையைப் பேசியது. ஏழைகளின் தோழரான ஏ,கே.கோபாலனின் வாழ்க்கையும் வரலாற்றுப் படமாக வெளி வந்தது.  முதல் அமைச்சரவையில் பதவி வகித்த ஒரே பெண் அமைச்சரான கே.ஆர்.கௌரியம்மாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இரண்டு படங்கள் வெளி வந்தன. லால் சலாம் ( 1990 இயக்கம் வேணுநாகவள்ளி)  என்ற படம் கௌரி அம்மாவுக்கும் அவரது கணவரான  டி.வி. தாமசுக்குமான உறவையும் கட்சிப் பிளவால் நேர்ந்த முறிவையும் காரசாரமான மசாலாவுடன் சொன்னது. 1994 இல் கௌரி அம்மா மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டு இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து ‘சீஃப் மினிஸ்டர் கே. ஆர். கௌதமி ‘ என்ற படம் வெளியானது.

காங்கிரஸின் மூத்த தலைவர் கே.கருணாகரனின் புகழைப் பேசும் படமாக லீடர்‘  வெளிவந்தது. கௌதமிக்கு நேர்ந்த தோல்வியே லீடருக்கும் நேர்ந்தது.

இடதுசாரி ஆதரவும் எதிர்ப்புமான படங்களே அதிகம். காங்கிரஸ்   ஆதரவுப்  படங்கள் அநேகமாக இல்லை என்கின்ற குறையை போக்க .. ஒரு இந்தியன் ப்ரணய கதை‘யும், வெள்ளி மூங்கவும். காங்கிரஸ் அணியிலிருக்கும் பிரதான பிராந்தியக் கட்சியான கேரள காங்கிரஸ்  பற்றி அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான படங்கள் வெளி வந்திருக்கின்றன.

திலீப் நடித்து வெளிவந்த ‘லயன்’ என்ற படம் கேரள காங்கிரஸ் – பி. பிரிவின்  தலைவர் ஆர்.பால கிருஷ்ண பிள்ளைக்கும்  மகன் கணேஷ் குமாருக்கும் இடையிலான அதிகாரக் கயிறு இழுக்கும் போட்டியை சொன்னது. கேரள காங்கிரஸின் தாய்ப் பிரிவான மணி அணி கோட்டயம் மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட எல்லாப் படங்களிலும் இடம் பெற்றது.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான படங்களில் அரசியல் வாதிகள் இலட்சியவாதிகள் என்ற இடத்திலிருந்து நீக்கப்பட்டு மாஃபியா கும்பலின் ஏஜன்ட்களாக  கேங்க்ஸ்டர்களின் மறைமுகத் தலைவர்களாகவும் மாறினார்கள். அவர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்களாகச் சித்தரிக்கப்பட்டது தற்செயலானதல்ல. நடுநிலையாளர்கள் என்ற கோணத்தில் சில இயக்குநர்கள் உருவாக்கிய படங்கள் இடதுசாரி அமைப்பை நையாண்டி செய்தன. சத்யன் அந்திக்காடின் சந்தேசம் (திரைக் கதை : சீனிவாசன் ), லால் ஜோசின் அரபிக் கத‘ , அருண்குமார் அரவிந்தின் ரைட் லெஃப்ட் ரைட் , போன்றவை இவற்றுக்கு உதாரணங்கள்.

சந்தேசம் திரைப்படம்

இவை தவிர தேசபக்தியை முன்வைத்த படங்களையும் அரசியல் படங்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஐ.வி சசியின் 1921 மலபார் போராட்டத்தை மையமாகக் கொண்ட கற்பனையிலிருந்து உருவானது.. ப்ரியதர்சனின் ‘ காலாபானி‘  ( 1996 ; தமிழில் சிறைச் சாலை ) தேசபக்தியை மட்டுமல்ல; இந்துவாக இருப்பதன் மேன்மையையும் சொல்லுகிறது.

மலையாள அரசியல் திரைப்படங்களில் பெரும்பாலும் இடது சாரி அரசியல் சார்ந்த விமர்சனங்களே மேலோங்கி இருக்கும் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த லூசிபர் (2019) ஒரு மாநில முதல்வர் இறந்து விட வாரிசு அரசியலை பற்றி பேசியது   அதன் இரண்டாம் பாகமாய் வெளிவந்த  எம்புறான் (2025) கேரள அரசியலில் காவிகள் ஊடுருவல் பற்றி அலசியது . இந்த இரண்டு படத்திலும் நாயகன் மோகன்லால் தான்.

கிட்டதட்ட இந்த படங்களில் கையாண்ட அரசியல் சாகசங்கள் மற்றும்  ஹீரோயிச சகாசங்களை தழுவி நிவின் பாலி நடித்த ‘பிரதிச்சாயா’ (பிம்பம் ) திரைப்படம் வெளி வந்து கேரளாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் கூட கார்பரேட்டுகளுக்கு எதிரான கட்சி தான் என்று ஒரு புதிய அரசியல் பேசி இருக்கிறது.

அரசியலில் பிம்பம் தான் பிரதானம் என்கின்ற உத்தியை இதில் கையாண்டுள்ளனர்.  ஆட்சியில் இருக்கும் முதல்வர் ( பால சந்தர மேனன் ) மீது பாலியல் குற்ற சாற்று சுமத்தப்பட்டு, அதன் மூலம் அவரை ராஜினாமா செய்ய வைக்க திட்டமிடுகிறார் கட்சி தலைவர் ஹரிஸ்ரீ அசோகன். தான் செய்யாத அந்த குற்றத்தை எண்ணி வெதும்பி அவமானத்தால் அன்றைய இரவே மரணமடைகிறார் முதல்வர். அவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவர் எம்.பியாக அரசியல் களத்தில் இருக்க, இளையவர் நிவின்போலி அரசியலில் இருந்து விலகி நிற்கிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே இடது சாரி மாணவர் அமைப்பில் பங்கெடுத்து மாநிலத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகளை காதலித்து கைப்பிடித்து தந்தையோடே கூட்டுக் குடும்பமாய் வசித்து வருபவர்.

முதலமைச்சர் மகன் என்கின்ற செல்வாக்கை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டி அமலாக்கத்துறை விசாரிக்கிறது அவர் அந்த பணம் முழுவதையும் அடித்தள பாதிக்கபட்ட மக்கள் நல்வாழ்விற்கு நன்கொடையாக கொடுத்த விவரம் தெரிய வருகிறது. அவர் நிரபராதி என்று முடிவாகிறது.

முதல்வரின் மூத்த மகனும் கட்சி தலைவரும் முதல்வர் நாற்காலிக்கு முயற்சி செய்ய ஐடி துறையில் பாண்டித்யம் பெற்ற நிவின் பாலி அரங்கேற்றிய சில நாடகங்களால் அவருக்கே மக்கள் மத்தியில் ஆதரவு  இருக்கிறது என்று கட்சி உணர்ந்து அவரே முதல்வராகிறார். அவரின் முதல் பணி தன் தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பது. அந்த தேடுதலில் அவரின் சொந்த அண்ணன் சிக்குகிறார். அவரை ஒரு கருவியாய் பயன்படுத்தி அவரை ஒரு பொம்மையாய் ஆட்சியில் உட்கார வைக்க முயன்ற  சர்வதேச கார்பரேட் முதலாளி சகாபுதின் என்பது தெரியவருகிறது. ஒன் நேஷன் ஒன் இன்ஃபர்மேஷன் என்கின்ற வீடு தோறும் இலவச இன்டர்நெட் திட்டத்தை கேரளாவில் அறிமுகப்படுத்த விரும்பிய இந்த மாபியா கும்பல் தான் முதல்வர் மரணத்திற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

நிவின்போலி முதல்வரானதும் மறுபடியும் அந்த கும்பல் இவரை அணுகி தங்களது திட்டத்தை கூற, ஆரம்பத்தில் அதற்கு சம்மதிக்கின்ற நிவின்போலி பிறகு பொது மேடையில் பத்திரிக்கையாளர் மத்தியில் இந்த மாபியா கும்பலின் முகத்திரையை கிழித்து உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துவதாக கதை கூறுகிறது. இடதுசாரிகள் மட்டுமல்ல நாங்களும் கூட சர்வதேச கார்பரேட்டுகளுக்கு எதிரானவர்கள் தான் என்று  முஷ்டியாய் உயர்த்தி கோஷம் போட்டுள்ளனர் காங்கிரஸ் ஆதரவு திரைப்பட குழுவினர்.

முதல்வர் மரணம் அதனை தொடர்ந்து வாரிசுகள் ஆட்சிக்கு வருதல் என்பனவை எல்லாம் லூசிபார் மற்றும் எம்புறான் கதையை நமக்கு நினைவுப்படுத்துகிறது. அந்த படங்கள் இடதுசாரி அரசியலை பேசியது இந்த படம் காங்கிரஸ் அரசியலை பேசுகிறது.

இது ஒரு சினிமா நரேட்டிவ் மட்டுமே.  நிஜ அரசியலில் Indian National Congress கட்சியின் பாதை மிகவும் சிக்கலானது. சோஷலிச கொள்கைகளில் தொடங்கி, 1990களுக்குப் பின் பொருளாதார திறந்துகொள்கைக்கு மாறிய அந்தக் கட்சி, ஒரே நேரத்தில் நலத்திட்டங்களையும், சந்தை சீர்திருத்தங்களையும் இணைத்து செயல்படுத்தியது

அதே சமயம், இது ஒரு கேள்வியையும் எழுப்புகிறது: இது உண்மையான அரசியல் மாற்றமா, அல்லது சினிமா உருவாக்கும் ஒரு புதிய கற்பனை உலகமா?

இந்தக் கேள்விக்கான பதில் பார்வையாளர்களின் அரசியல் புரிதலிலும், விமர்சன சிந்தனையிலும் தான் இருக்கிறது.

கட்டுரையாளர்; வசந்த் பாரதி

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time