அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானை தூது அனுப்பி தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு பின்னணியில் இத்தனை காரணங்களா? ”தற்போது லெபனானில் குண்டு போடும் இஸ்ரேலை அடக்கி வைத்த பிறகு பேசலாம் வா” என ஈரான் சொன்னது எதனால்? அமைதி தொடருமா? அமெரிக்கா திருந்துமா?
“இன்று இரவுடன் ஒரு நாகரீகமே அழிந்து விடும், அது ஒருபோதும் இனி மேல் மீண்டு வராது” என கெடுவிதித்த டொனால்டு டிரம்ப், ஏப்ரல் 7 , இந்திய நேரப்படி புதன் காலை 5 மணிக்கு ஈரானின் பத்து அம்ச திட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி , இறுதி முடிவை எட்ட இரு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டார்.
அநாகரீகமான முறையில் ஒரு நாகரீகத்தையே அழித்து விடுவேன் என கோமாளித்தனமாக பேசிய டிரம்ப் இப்பொழுது போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டது உலகில் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேரழிவை எதிர் நோக்கி கலங்கியிருந்த மக்கள், டிரம்ப்பின் இந்த மன மாற்றத்திற்கான காரணங்களை அலச தொடங்கியுள்ளனர்;
போர் துவங்கி- ஈரானின் மீது குண்டு வீசி அந்நாட்டின் உயர் தலைவர்களை கொன்றொழித்த நாள் பிப்ரவரி-28 முதல் – பத்து நாட்களுக்குள்ளாகவே, தான் பற்ற வைத்த போரின் போக்கை உணர்ந்து கொண்ட டிரம்ப் இந்த போரிலிருந்து ‘விடுபட’ வழிகளை தேட ஆரம்பித்தார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது சுமார் 7,000 இலக்குகளில் குண்டுவீசி அந்நாட்டை சின்னாபின்னமாக நொறுக்கிய பிறகும், உறுதியுடன் திருப்பியடித்த ஈரான் மூன்று நிலைகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியது எனலாம்.
# மேற்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகளான – அமெரிக்க கூட்டாளிகளான – யு ஏ இ, சௌதி அரேபியா, கத்தார், பஃஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை, மதிப்புமிக்க ராடார் சாதனங்களை தாக்கி அழித்தது.
# ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரை அந்த பிராந்தியத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் போராக மாற்றி அமைத்தது.

# உலக எண்ணெய் வணிகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணையை தனது கட்டுக்குள் கொண்டுவந்து அகில உலகத்தின் வணிகத்தையே முடக்கியது .
இதை முறியடிக்க அமெரிக்கா தனது படைபலத்தையும் மிரட்டல்களையும் அதிகரித்த போதும் அதன் விளைவுகள் குறைந்த வண்ணமே இருந்தன.
இந்த சூழலில் போரிலிருந்து வெளியேறி, இழப்புகளை குறைத்து கொள்ள அதே வேளையில் “மீசையில் மண் ஒட்டாமல்” சண்டையிலிருந்து விடுபட அமெரிக்கா துடித்தது. இந்தப் போரின் சூத்திரதாரியான நெத்தன்யாகு போரை விரிவுபடுத்த எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் கச்சிதமாக செய்த வேளையில் , ஏப்ரல் 5 ,6 தேதிகளில், அமெரிக்க சிறப்பு படைகள் ஈரானில் சிக்கியுள்ள அமெரிக்க படை வீரரை காப்பாற்றும் சாக்கில் ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி ஆலைக்கருகில் தரையிறங்கி அங்கு வைத்துள்ள யுரேனியத்தை திருடிக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.
ஈரான் பதிலடி கொடுத்து ஆறு விமானங்களை சுட்டு வீழ்த்தி, அந்த பகல் கொள்ளையை முறியடித்தது. “யுரேனியத்தை கைபற்றியது அமெரிக்கா, போரை இத்துடன் நிறுத்துகிறோம்” என மார் தட்டலாம் , என மனப்பால் குடித்த டிரம்பிற்கு அந்த முயற்சி தோல்வியடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இஞ்சி தின்ற குரங்காக மாறிய டிரம்ப் , அந்த வெறுப்பின் வெளிப்பாடாகவே, “ இன்று இரவுடன் ஒரு நாகரீகத்திற்கே முடிவு கட்டுவேன் , மின் நிலையங்களை தகர்ப்பேன், பாலங்களை உடைத்து நொறுக்குவேன், மொத்த நாட்டையும் சுடுகாடாக்குவேன்’’ எனக் கூச்சலிட்டார்.
நாகரீக உலகில் எந்த அரசியல் தலைவரும் உச்சரிக்கத் துணியாத கெட்ட வார்த்தைகளை வெளிப்படுத்திய டிரம்ப் மனித குலத்தையே அழிக்க துணிந்த அரக்கன் என்று, பலரும் கொதித்து எழுந்தனர். கிறித்துவ சமயத்தலைவரான போப் லியோ
(XIV ) , ஐ. நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ், ஐ நா மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வதேச சட்ட வல்லுனர்கள் , ஆகியோர் இந்த அநாகரீகத்தை கண்டித்து அறிக்கை விட்டனர். ரஷ்ய மற்றும் சீனத் தலைவர்கள் டிரம்பின் வெறிப் பேச்சை கண்டித்தனர்.
அமெரிக்க மக்களவை உறுப்பினரும் ஈரானிய வம்சாவளியை சார்ந்த செல்வி. யாஸ்மின் அன்சாரி , மற்றும் மெலோனி கிராஸ்ஃபோட் ஆகியோர் இதை கண்டித்து , டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க சட்ட திருத்தம் 25ஐ கையிலெடுத்துள்ளனர். அமெரிக்க மக்களையே
குறிப்பாக டிரம்ப் ஆதரவாளர்களையே இந்த வெறித்தனமான பேச்சு பிளவு படுத்தியுள்ளது.போருக்கான ஆதரவை வெகுவாக குறைத்தது. டிரம்பின் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து விலகி நின்றன.
மாறாக, அமெரிக்க அரசின் இந்த போர்வெறித் தாக்குதலும் , டிரம்ப்பின் ஆணவப் பேச்சும் ஈரானிய மக்களை ஈரானிய (இஸ்லாமிய குடியரசு ) அரசின் கீழ் ஒன்று திரள வைத்துள்ளது.
இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரான் மீது பகை பாராட்டி, போரைத் துவக்கியது அமெரிக்கா என்பதை உலக மக்கள் அறிந்திருந்தாலும் அமெரிக்க மக்களுக்கும் இந்த உண்மையை புரியவைக்கும் விதமாக தேற்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரை அமெரிக்க போர்க் கூடாரத்தில் (situation room meeting) இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கியதை அம்பலப்படுத்தியுள்ளது.

சரிந்துவரும் தனது செல்வாக்கை தடுத்து நிறுத்த உரிய வெற்றியை போர்க்களம் தராத பொழுது கொஞ்சநஞ்ச மான மரியாதையுடன் தப்பித்து கொள்ள போர் நிறுத்த பேச்சை டிரம்ப் கையிலெடுத்துள்ளார்.
அதுவும் இஸ்ஃபஹான் தோல்விக்கு பின்னர் ஈரான் முன்வைத்துள்ள 10 அம்ச திட்டத்தின் அடிப்படையில் பேசுவதற்காக இரண்டு வாரங்களுக்கு போரை நிறுத்த டிரம்ப் முன்வந்துள்ளார் . இதற்கும் கூட விசுவாசமுள்ள அடிமையான நரேந்திர மோடியை டிரம்ப் மதிக்கவில்லை!
பாக்கித்தான் படைத்தலைவர் அசீம் முனீர் தான் டிரம்பின் முயற்சிகளை ஈரானிடம் எடுத்துக்கூற சரியான ஆளாக கருதப்பட்டார். ஏனெனில் அவர் இரு தரப்பின் நம்பிக்கைக்கும் பாத்திரமான தலைவராக உள்ளார். வீணாப்போன விஸ்வ குருவை உலகில் எந்த தலைவரும் நம்பவில்லை. ஒருவேளை நெத்தன்யாகு நம்புகிறாரோ என்னவோ?
ஆணவப்போக்கை விரிவுபடுத்தி, அதிரடி தாக்குதல்களை அதிகரித்து கொண்டே போன டிரம்ப் திடீரென்று போர் நிறுத்தத்திற்கு சம்மதித்து உள்ளதால், இந்த போர் நிறுத்தம் உயிர் பிழைக்குமா? தொடருமா?, அமைதியை நிலை நாட்டுமா?, எண்ணெய் வணிகத்தை சீர்படுத்துமா?

எனப் பல கேள்விகள் எழுவது இயற்கை. எப்படியென்றாலும் இந்த போர் நிறுத்தம் உலகில் குறிப்பாக மேற்காசியாவில் யார் கை ஓங்கியுள்ளது ( Shift in power ) என்பதை கோடிட்டு காட்டுகிறது.
இது – இந்த மாற்றம் – இடைக்காலமானது அல்ல, இது களத்தில் ஏற்பட்டுள்ள நிரந்தரமான மாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
நாற்பது நாட்களாக அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் (உலகிலேயே மிக வலிமையுள்ள இரு ராணுவங்கள் ) தாக்குதல்களை தாக்கு பிடித்து தனது வலுவான “பிடியை” ஈரான் உலகிற்கு உணர்த்திய தருணம் இது.
யுரேனியத்தை பாதுகாத்து தனது அணுசக்தி பாதையை அதன் சுதந்திரத்தை கட்டிகாத்த ஈரான் நாடு, ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்படுத்துவதன் மூலம் உலக வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட ஈரான் நாடு,
பல இழப்புகளையும், தாக்குதல்களையும், தடைகளையும் கடந்து புதிய ராணுவ தொழில் நுட்பத்தால், ( missile and drone technologies and the conduct of asymmetric war) அதை பேணிக் காக்கும் திறத்தால் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக உலகிற்கு தெரிகிறது.
வளைகுடா நாடுகளின் இருப்பிற்கு பாதுகாப்பு கொடுத்து, டாலரின் மூலம் எண்ணெய் வர்த்தகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த அமெரிக்கா, தனது லோக்கல் ரவுடியான இஸ்ரேலின் வளமைக்கும் “ பாதுகாப்பு அரணாக” இதுவரை செயல்பட்டது. இந்த நிலை இப்பொழுது தலைகீழாக புரட்டி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு வாக்குறுதிகளுக்கு இனிமேல் வளைகுடா நாடுகளில் “மவுசு” கிடையாது. எந்த ஒருநாடு தனது செய்கையால் பிற நாடுகளின் நடத்தையை கட்டுப்படுத்த முடியவில்லையோ அந்த நாட்டை பிற நாடுகள் “வல்லரசாக” ஏற்றுக்கொள்வதில்லை. மேற்காசியாவில் அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான்.
இத்தகைய இழப்பு அமெரிக்க அரசியலில் தனது எதிர்கால கனவுகளை உடனடியாக சிதைக்காவிட்டாலும், அதன் அடிநாதத்தை கரைக்க தொடங்கியதை உணர்ந்த டிரம்ப், இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். எப்பொழுது போரின் விளைவு போரைத் துவங்கியவருக்கு சாதகமாக அமையவில்லையோ, அப்போதே அது போரைத் துவக்கியவரின் செல்வாக்கை சிதைத்ததாகவே அர்த்தமாகும்.
இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேலின் நெத்தன்யாகு முதலில் வரவேற்றாலும் , லெபனானிற்கு இந்த போர் நிறுத்தம் பொருந்தாது என குறுக்குசால் ஓட்டியுள்ளது மட்டுமின்றி, இதுவரை இல்லாத அளவிற்கு பெய்ரூத் நகரின் மீது தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்கள் 100 பேரை கொன்றுள்ளார்.
மேற்காசியாவின் பிரச்சினைகளின் மூல காரணமே ஜியோனிச இஸ்ரேல் அரசும், அதன் தலைவர்களும் தான் என உலகம் அறிந்த பின்னும் அத்தகைய பயங்கரவாத அரசை (terrorist state) நீடிக்க அனுமதிப்பது குறித்து இனி மேல் டிரம்புமே கூட மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது. பாலத்தீன பிரச்சினையே மேற்காசிய பதட்டத்தின் ஊற்றுக்கண் என்பதை யாரால் இனி மறுக்கவியலும்.
அந்த பாலத்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செயவதை, அவர்களது உரிமைகளை பறித்து விரட்டியடிப்பதை எதிர்க்கும் ஒரே மேற்காசிய நாடு ஈரான் தான். எனவே தான், ஈரானின் மீது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இத்தனை வன்மம் உள்ளது.
இந்த போரில் ரஷ்யாவும் சீனாவும் நேரடியாக களமிறங்காவிடினும், தங்களது ஆதரவை ஈரானுக்கு வெளிப்படுத்தியது மட்டுமின்றி, ஏவுகணை உற்பத்தி, அதற்கு தேவையான எரிபொருள் வினியோகம், ராணுவ த்தொழில்நுடப உதவி, தளவாடங்கள் உதவி, பெய்டூ சாட்டிலைட் மூலம் எதிரிகளின் நடமாட்டங்களை (அமெரிக்கா – இஸ்ரேல்) கண்காணித்தல் போன்ற முக்கியமான தளங்களில் ஈரான் நாட்டிற்கு உதவிகளை அளித்துள்ளனர்.

ஐ நா சபையில் அமெரிக்கா தூண்டுதலால் கொண்டுவரப்பட்ட பஃஹ்ரைன் முன்பொழிந்த தீர்மானத்தை- ஹோர்மூஸ் நீரிணையை தாக்கி ஈரான் பிடியிலிருந்து அதை விடுவிக்கும் தீர்மானத்தை- இரண்டு முறை இரு நாடுகளும் முறியடித்தன. இப்பொழுது பாக்கித்தான் மூலம் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு சீனம் கொடுக்கும் உத்தரவாத்த்தின் அடிப்படையிலேயே ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளது.
மாறியுள்ள உலகச்சூழலில் ஓரங்கட்டப்பட்ட இந்திய அரசு, பாகிஸ்தான் அடைந்துள்ள முக்கியத்துவத்தை சகித்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தானை ‘புரோக்கர் அரசு’ ஏளனம் பேசியது. ஈராஊ முக்கல் முனகலின் ஊடே இந்த போர் நிறுத்தத்தை -இஸ்லாமாபாத்தில் தொடங்கவிருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதாகவும் வேண்டாவெறுப்பாக கூறியுள்ளது.
பல ஆயிரங்காலத்து பயிரான இந்திய ஈரான் நட்புறவை, நாகரீகங்களின் தொடர்ச்சியை சீரழித்து, இஸ்லாமிய வெறுப்பு, அகண்ட பாரதம் என்ற குறுகிய நோக்கங்களுக்காக இந்தியா மற்றும் ஈரானுக்கிடையேயான பாரம்பரிய உறவை காவு கொடுத்த மோடி அரசு, நெத்தன்யாகுவின் அகண்ட இஸ்ரேல் (Greater Israel Project) பாதைக்கு இந்தியாவை துதிபாட வைத்ததன் மூலம் இந்திய மக்களை முச்சந்தியில் இழுத்து விட்டுள்ளார் . நொடிக்கு நூறுமுறை அயல் நாட்டுறவுகளில் சித்தாந்தம் தேவையில்லை.
இந்திய நாட்டின் சுயநலன்தான் ( transactional) முக்கியம் என க்கூவி வரும் மேதாவிகள் மோடியின் இஸ்ரேல் அரவணைப்பை, ஈரான் எதிர்ப்பை எதைக் கொண்டு நியாயப்படுத்துவார்கள்?
உலகில் இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்த மேதாவிகளை ஒதுக்கிவிட்டு நடக்கத்தொடங்கி உள்ளது. அரசியல் மேதாவிகளும் ‘ஸ்டிரேட்டஜிக் கம்யூனிட்டி’ என அழைக்க கூடிய வல்லுனர்களும் , இந்திய வெளியுறவுத் துறையும் இனிமேலாவது விழித்துக் கொள்வார்களா?
கடைசியாக வந்துள்ள தகவல்களின்படி, போர் நிறுத்த்தை சீர்குலைக்க இஸ்ரேலின் நெத்தன்யாகு லெபனான் தலைநகர் பெய்ரூத் மாநகரை தாக்கி 10 நிமிடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகளை வீசி , தனது கொடூர முகத்தை காட்டியிருப்பதை கண்டித்து உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளும் மக்களும் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சரான அராக்சியும் லெபனானில் குண்டுவீச்சை நிறுத்தாவிடில் போர் நிறுத்தமும், பேச்சு வார்த்தையும் கிடையாது, ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சார்பில் இஸ்லாமாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கியது அல்ல, எனக் கூறினாலும், நெத்தன்யாகுவை பின்வாங்க வைக்க வெள்ளை மாளிகை உறுதி பூண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே தனது ஆதரவாளர்கள் மத்தியில் சரிவை சந்திக்கும் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லையென்றால், இருக்கும் மிச்ச சொச்ச மான மரியாதையும் கப்பலேறிவிடும் என்ற அச்சத்தில் உள்ளார். இஸ்ரேல் லாபியோ, டிரம்ப்பின் மரியாதையும், பதவியும் எக்கேடாவது கெட்டடும், போரை நாங்கள் தொடருவோம் என்று அதற்காக பல வழிகளை தேடுகின்றனர்.
ஈரானின் உறுதியான முடிவால் டிரம்ப் இஸ்ரேலை கட்டுக்குள் வைக்க முயல்வார் எனத் தெரிகிறது. அதில் டிரம்ப் தோல்வியடைந்தால் பேச்சு வார்த்தைகளும் போர் நிறுத்தமும் காணாமல் போய்விடும் . நட்டப்பட போவது ஈரான் மட்டும் அல்ல, என்பது உறுதி.
ச. அருணாசலம்


























பாகிஸ்தான் இஸ்ரேல் ஈரான் போரை ஏன் நிறுத்தியது தெரியுமா? தலயே (மோடியே) சும்மா இருக்கும் போது வால் ஆடியது இதற்குத்தானா…???
கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இஸ்ரேல், அமெரிக்க- ஈரான் போர் 15 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மிக அரும்பாடுபட்டு பாகிஸ்தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு அதிக சிரத்தை எடுத்து கொண்டது.
பாகிஸ்தான் ஏதோ உலக அமைதிக்காகப் போராடுற சமாதானப் புறா மாதிரி வேஷம் போடுறது ராஜதந்திரம் கிடையாது, அது அவனுங்களோட பிழைப்பு.
கையில ஒத்த ரூபாய் காசு இல்லாம, அடுத்த வேளை சோத்துக்கே IMF வாசல்ல தட்டு ஏந்தி பிச்சை எடுக்குற ஒரு பிச்சைக்கார நாட்டுக்கு, ஹார்மூஸ் ஜலசந்தி மட்டும் மூடப்பட்டா என்னாகும்…. அவ்வளவுதான்… பெட்ரோல் கிடைக்காது, நாடு இருண்டு போயி திவாலாகிடும்.. ஏற்கனவே பாகிஸ்தானில் எரிவாயு பற்றாக்குறையால் லாக்டவுன் போட்டாச்சு.
மத்தப்படி ஈரானின் 10 அம்சக் கோரிக்கையையோ, ட்ரம்ப்பின் 15 அம்ச டிமாண்டுகளையோ தீர்மானிக்கும் அதிகாரம் பாகிஸ்தான்காரனுக்கு ஒரு சதவீதம் கூடக் கிடையாது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா…. 2025மு ஆண்டு செப்டம்பர்ல சவூதி அரேபியாவோட ஒரு மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Strategic Mutual Defense Agreement) பாகிஸ்தான் கையெழுத்திட்டது.
அதன்படி சவூதி மீது தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் ராணுவம் பாதுகாக்க வர வேண்டும் என்பது இவர்களின் உடன்படிக்கை. ஆனால் இந்த போர்ல சவூதி மேல ஈரான் அட்டாக் பண்ணும்போது ஓடிப் போய் ஒளிஞ்சதுதான் இந்த பாகிஸ்தானோட வீர வரலாறு.
சவூதி அரேபியாகிட்ட காச வாங்கித் தின்னுட்டு அல்வா கொடுத்த இந்த பச்சோந்தித்தனத்தை இன்னைக்கு சவூதியும், துபாயும் புரிஞ்சுக்கிட்டாங்க. அதான் இப்போ, ‘வாங்குன கடனைத் திருப்பிக் கொடுடா’ன்னு பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்குது சவுதியும் ஐக்கிய அரபு அமீரகமும்.
சுமார் 5 பில்லியன் டாலர் டெபாசிட் தொகையைத் திரும்பக் கொடு அல்லது உடனடியாக வட்டியைக் கட்டுன்னு நெருக்கடி கொடுப்பதால், பாகிஸ்தான் அரசு திக்குமுக்காடிப் போய் நிக்குது. இதுதான் அந்த நாட்டோட உண்மையான நிலைமை.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு அப்படி அல்ல; யாருக்கும் மத்தியஸ்தம் செய்வது எங்கள் வேலை அல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாட்டை தவறா சித்தரிச்சி, நம்ம நாட்டை அசிங்கப்படுத்தி ரசிக்க கூட்டம் எப்பவும் தயாரா இருக்கும்.
அந்த கூட்டம் தான் இப்போ என்னவோ உலக அரசியல கரைச்சி ஊறுகாய தொட்டு குடிச்சா மாதிரி மோடி அரசுக்கு கிளாஸ் எடுத்துகிட்டு இருக்குது. நமக்கு எதிரி வெளிய இல்லை. இங்கயே தான் இருக்கானுங்க.
இது ரோட்டுல சண்ட போடுற ரெண்டு சண்டைய தீர்த்து வைக்கிற வேல கிடையாது.
எங்க தொட்டா என்ன ஆகும், பின்விளைவு, காரண காரியங்களை அலசித்தான் முடிவெடுக்க முடியும். ஏன்னா சண்டைல ஒடைஞ்ச மண்டைகள விட சமரசம் பண்ணப்போய் ஒடைஞ்ச மண்டைகள் தான் அதிகம்.
இன்னைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், ராணுவ பலம் கொண்ட நாடாகவும் வளர்ந்து நிற்கும் இந்தியாவின் தலைவன் எப்போதும் எல்லாத் தெருச்சண்டையிலும் இறங்கித் தீர்ப்பு சொல்லிட்டுலாம் இருக்க மாட்டான்.
மோடி அரசுக்குத் தெரியும் யாரை எங்க வைக்கணும்னு. ஏன்னா டிரம்ப் மாதிரி ஒரு கிறுக்கன் கிட்ட சமாதானம் பேசப் போய், நாளைக்கே அந்தாளு போர்ல எங்களுக்கு சப்போர்ட் பண்ணி ஆ*யுதம் கொடுத்த இந்தியாவுக்கு நன்றினு ஒரு ட்வீட் போட்டா… மொத்த இஸ்லாமிய நாடும் நமக்கு எதிரா திரும்பும்.
அதனாலதான், இந்தியா இப்போ ரொம்ப நிதானமா காய நகர்த்த வேண்டிய கட்டாயத்துல இருக்கு.
ஒரு பக்கம் நட்பு, இன்னொரு பக்கம் நாட்டு மக்களின் நலன், இன்னொரு பக்கம் ராஜதந்திர உறவு. இப்படி மூன்றையும் பேலன்ஸ் பண்றது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.
நமக்கு தேவை எரிபொருள். எவன் சண்டை போட்டாலும் நமக்கு எரிவாயு சப்ளை ஆகிக் கொண்டு தான் உள்ளது
சவுதி, UAE போன்ற நாடுகளோட பேசி, இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வராம தடுத்து பாத்துக்கிட்டு நம்ம தேவைக்கு போக பக்கத்து நாடுகளுக்கு வேற நாம தான் கொடுக்குறோம்.
இந்தியாவுக்குத் தெரியும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரியும், பிரதமர் மோடிக்கு தெரியும். டிரம்ப் மாதிரி ஒரு ஆளு அதிகாரத்துல இருக்கும்போது, அவசரம் காட்டாம சரியான நேரத்தில் காய் நகர்த்துவதே புத்திசாலித்தனம்னு.
உலகில் எல்லா நாடுகளும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால லாக்டவுன் அறிவிச்சிட்டு இருக்காங்க. விலையை ஏத்திட்டாங்க.
இந்தியால எந்த தட்டுப்பாடும் இல்ல; எல்லா பெட்ரோல் பங்க்லயும் கூட்டம் இல்லாம ஈ ஓட்டிட்டு இருக்காங்க.
இப்படி ஒரு வசதியை கொடுத்து வருகிற பிரதமர் மோடி அவர்களை கையெடுத்து கும்பிடணும்.
Stop to writing comments against INDIA and Modi. A journalist should be Neutrality.