வீழ்த்தத் துடிக்கும் பாஜக! வீரியமாகப் போராடும் மம்தா!

கம்யூனிஸ்டுகள் கோலோச்சிய மேற்கு வங்கத்தில் நான்காவது முறையாக தொடர் வெற்றியை சாத்தியப்படுத்த மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் தீயாய் களம் கண்டுள்ளது. மம்தாவை வீழ்த்த காவிப் படை சகல அதிகார துஷ்பிரயோகங்கள், தந்திரோபாயங்கள் செய்கிறது. என்ன தான் நடக்கிறது மேற்கு வங்கத்தில்..? ஒரு அலசல்;

இந்திய மாநிலங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த  மேற்கு வங்கத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இங்கு வெற்றிக் கனியை பறிப்பவர்கள் இந்தியாவின் கிழக்கில் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டின் அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாகவே மாறுகிறார்கள் என்பது உண்மையே.

35 ஆண்டு காலம் இடது சாரிகள் கோலோச்சிய இந்த மாநிலத்தின் அரசியல் நகர்வுகள், கொள்கை முன்னெடுப்புகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கை மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியின் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை நீக்கி சம தர்மத்தை நிலைநாட்டும் இடதுசாரிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வங்க மக்கள், “மாற்றம்” (பரிவர்த்தன்) என்ற பெயரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை 2011ல் ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். மம்தா தனது ஆட்சியை 2016 லும் பிறகு 2021லும், தக்க வைத்துக் கொண்டு இப்பொழுது நான்காவது முறையாக அரியணை காண களத்தில் நிற்கிறார்.

மம்தா பானர்ஜியும் அவரது திரிணாமுல் காங்கிரசும் மேற்கு வங்கத்தில் உறுதியளித்தபடி மாற்றத்தை ஏற்படுத்தினரா?

என்ன வகையான மாற்றத்தை கொண்டு வந்தனர்?

இந்த மாற்றம் மேற்கு வங்க மக்களின் வாழ்வில் என்ன வகையான பாதிப்புகளை ( முன்னேற்றமும்,பின்னடைவும்) ஏற்படுத்தின?

மேற்குவங்க அரசியல் வரலாறு;

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று வெற்றிகரமாக நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் – பெரும்பாலும் முஸ்லீம் குத்தகை விவசாயிகள்- ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி ஆட்சியினரின் ஆதரவுத் தளமாக திகழ்ந்தனர்.

வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறமும் , புதிய தொழில்கள் வளராத மந்தமும் மேற்குவங்க பொருளாதாரத்தை முடக்கியது. போர்க் குணமிக்க தொழிலாளர் சங்கமும் உழைப்பாளர்களின் உரிமைகளை ஆதரிக்கும் அரசும் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்து, கிராம பொருளாதாரத்தை சீர்படுத்தினாலும் 1991 க்குப்பிறகு ஏற்பட்ட தாராளமய சூழலில் புதிய தொழில்களை -அதன் முனைவர்களை – ஈர்க்க இயலவில்லை. சித்தாந்த பிடிப்புகளை விலக்கிவிட்டு மாநிலத்து பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலம் தொழில் மயமாக்கப்படுவது அவசியம் என்பதை தாமதமாக உணர்ந்த இடதுசாரி அரசு , புதிய தொழில் முனைவோரை- பெரு முதலாளிகளை மேற்கு வங்கத்தில் தொழிற்கூடங்களை நிறுவ வலிந்து அழைத்து, சலுகைகளையும் அறிவித்தது.

வளர்ச்சியும், அரசியல் வெற்றியும் எப்போதும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. அதுவும் கழுத்தை அறுக்கும் அதிகாரப் போட்டியான தேர்தல் அரசியல் இடதுசாரிகளுக்கு புதிய, புதிய சவால்களை தோற்றுவித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி சிங்கூர் மற்றும் நந்தி கிராமத்தில் விவசாய நிலங்களை மே.வங்க அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து அனைத்து கட்சியினரும் மே. வங்க அரசுக்கெதிராக ஓரணியில் திரண்டனர். இதில் மம்தாவின் பங்களிப்பு தீவிரமாக இருந்தது.

சிங்கூர் போராட்டத்தில் மம்தா பானர்ஜி

தொழில் மயமாக்குவது பற்றியோ புதிய தொழிற் கூடங்கள் மே வங்கத்திற்கு வராமல் விலகி ஓடும் சூழல் பற்றியோ எதிர்கட்சிகள் கவலை படவில்லை! அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆட்சி அதிகாரம் தான், இடதுசாரிகளை வீட்டுக்கு அனுப்புவது தான்.

2016 -க்குப் பின்னர் மாற்றம் (பரிவர்த்தன்) என்பது வெறும் அரசியல் கோஷமே ஒழிய வேறெதுவும் இல்லை என்பதை,மக்கள் புரிந்து கொண்டனர்.

அதிகாரத் தலைமையிடமான கொல்கத்தா தொடங்கி, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து வரை திரிணாமுல் கட்சியினரின் ஆதிக்கமும் , கட்ட பஞ்சாயத்தும் பேயாட்டம் போடுகிறது. முன்பு இவ்வதிகார படிநிலை இடதுசாரிகளிடம் இருந்தது. இப்பொழுதோ, திரிணாமுல் காங்கிரசாரிடம் அது குவிந்துள்ளது.

அத்தோடு ஊழலும் ஊதாரித்தனமும், கொள்ளையை பங்கு போடுவதில்  சாதுரியமும், எதிர்ப்போரை அடித்து நொறுக்குவதும் மென்மேலும் வளர்ந்து பெருகின.

மாற்றத்திற்கு பதிலாக கொள்ளையிலும், ஊழலிலும், அதிகாரக் கொடுமையிலும் “ முன்னேற்றம்” நடந்தேறி வருவதை கண்டு திகைத்து உள்ளனர் மேற்கு வங்க மக்கள்.

2011, பிறகு 2016 லும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரணியில் நின்றவர்கள் 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த இடது சாரிகளும், 1976ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியினரும் தான்!

ஆனால், தற்போது  மம்தாவின் ஆட்சியை பதவியிறக்க காங்கிரசைவிட, கம்யூனிஸ்டு கட்சியினரை விட காவிப் படையினர் தான் சரியானவர்கள் என்றும், அவர்களிடம் தான் அதிகார பலமும்,பண பலமும், அகங்காரமும் உள்ளதென நம்பும் மக்களில் ஒரு பகுதியினர் பாஜகவை தூக்கி பிடிக்கின்றனர்.

ஆம், மாற்றத்தை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த திரிணாமுல் கட்சியை வீழ்த்த சங்கப் பரிவாரங்கள் கையிலெடுத்திருப்பதும் மாற்றம் வேண்டும் என்ற கோஷமே ஆகும்.

திரிணாமுல் தலைவர்களை மிரட்டியும் உருட்டியும், காவி கட்சிக்கு இழுத்தும், மத்திய மாநில அதிகார மோதல்களை ஏற்படுத்தியும், நீதிமன்றங்களில் வழக்குகள் பல தொடுத்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை பயன்படுத்தியும், ஆளுனரை ஏவியும், கொடுக்க வேண்டிய நிதியை மேற்கு வங்க அரசிற்கு கொடுக்காமலும் ஆளும் திரிணாமுல் அரசை பலவீனப்படுத்த , தேர்தலில் தோல்வியடையச் செய்ய, பாஜக தலைகீழாக நின்றது.

அவர்கள் செய்யாத அதிகார அத்துமீறலோ, அட்டகாசமோ, பொய் பிரச்சாரமோ எதுவும் இல்லை. இவை போதாது என்று இஸ்லாமிய வெறுப்பையும் விதைத்து பிளவு அரசியலை வளர்த்தனர் பாஜவினர். இவ்வளவு அநியாயங்களுக்குப் பிறகும், அதிகார முறை கேட்டிற்கு பிறகும் திரிணாமுல் கட்சி மேற்கு வங்கத் தேர்தலில் (2021) அமோக வெற்றி பெற்றது.

திரிணாமுல் கட்சியினரின் வெற்றி, பாஜகவின் வெறுப்பு அரசியலை, அறமற்ற அடாவடி அரசியலை, மக்களை பிரித்தாளும் வகுப்புவாத அரசியலை முறியடித்தாலும், திரிணாமுல் கட்சியின் ஆட்சியின் மீதுள்ள மக்களின் வெறுப்பு, ஆட்சியின் அவங்கோலங்களை , அதிகார முறைகேடுகளை, ஊழலை, கட்சியினரின் அளவற்ற வன்முறையை எதிர்த்த மக்களின் மனநிலை மாறாமல் அப்படியே உள்ளது.

இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் இக் குறைகளை சுட்டிகாட்டியே அரசியல் செய்கின்றனர்.

மாற்றம் வேண்டும் என ஆட்சிக்கு வந்த மம்தா தொழில் வளர்ச்சியில் வெற்றி பெறாவிட்டாலும், மேற்கு வங்கத்தில் பரந்துபட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள்- நேரடியாக பணமும் உதவிகளும் மக்களுக்கு வழங்கும் திட்டங்கள் – பலவற்றை நடைமுறை படுத்தி உள்ளார்.

லகஷ்மிர் பண்டார் (மகளிருக்கான மாதாந்திர பண உதவி திட்டம்),

வேலையற்றோருக்கான யுவஶ்ரீ பிரகல்பா திட்டம்,

உணவுப்பாதுகாப்பிற்காக கட்யா சதி திட்டம்,

நல்வாழ்விற்கான காப்பீடு திட்டங்கள்.. என பல திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடையும் வண்ணம் திட்டங்களை செயல்படுத்துகிறார் . இதனால், தொழிற் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் ஓரளவே சாத்தியப்பட்டன. ஏராளமான – லட்சக்கணக்கான இளைஞர்கள்- வேலை வாய்ப்பு தேடி பிற மாநிலங்களை நாடும் சூழல் அசாதாரணமாக உள்ளது.

இத்துடன் கூடவே திரிணாமுல் கட்சியினரின் கட் அண்ட் கரப்ஷன் சிண்டிகேட் தலை விரித்தாடுகிறது. நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் அருகி வரும் அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும் முறைகேடுகள் ( டீச்சர் ரெக்ரூட்மெண்ட் ஸ்காம்) என திரிணாமுல் ஆட்சி முறையை களங்கப்படுத்துகின்றன.

மத்தியில் ஆளும்உத்தமர்களானமோடிஷா கும்பலோ , அசாதாரண சூழலை ஏற்படுத்தி அசாதாரண வெறுப்புணர்வை விதைப்பதன் மூலம் இந்து – முஸ்லீம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்துக்களை ஒன்றிணைத்தால், முஸ்லீம்களின் வாக்குகளை திரிணாமுல் கட்சியினர் , இடதுசாரிகள் மற்றும் காங்கிரசார் பிரித்துக் கொள்வர். நாம் (பாஜ க) இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளலாம் என மனப்பால் குடித்தனர். ஆனால், ஆட்சியை பிடிக்க அது போதவில்லை!

எனவே, இப்பொழுது பாஜ க கையிலெடுத்திருப்பது SIR என்ற (சிறப்பு தீவிர தேர்தல் அட்டவணை திருத்தம்) ஆயுதம்தான். மின்னணு இயந்திர மோசடி, வாக்காளர் பட்டியலில் மோசடி, வாக்கு விழுக்காட்டை அறிவிப்பதில்,கணிப்பதில் வெளியிடுவதில் மோசடி என பல பம்மாத்துகளை அரங்கேற்றிய மோடி அரசு 2025 முதல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற ஆயத்த்தை கையிலெடுத்துள்ளது. பல லட்சம் ஏழை எளியமற்றும் இஸ்லாமிய வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதும், முறைகேடான முறையில் புது வாக்காளர்களை குறிப்பிட்ட தொகுதிகளில் இணைப்பதுமே இத்திருத்தத்தின் பணியாகும்.

அதை தொடர்ந்து இந்த ஆயுதம் மேற்கு வங்கத்தில் புதிய பரிமாணங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளதுஇம்மாநிலத்தில் 91 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இது வாக்காளர் அட்டவணையில் ஏறத்தாழ 12% விழுக்காடாகும். இந்த 91 லட்சம் வாக்காளர் நீக்கம் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும், மாநில எல்லையை ஒட்டியுள்ள தொகுதிகளிலுமே நடந்துள்ளது.

இது போதாது என்று கூடுதலாக 60 லட்சம் வாக்காளர்களை தர்க்க ரீதியான முரண்களை (logical discrepancies)கொண்டவர்கள் என்ற சந்தேகத்தை தேர்தல் ஆணையம் கிளப்பி அவர்களை தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டிய (adjudication) பட்டியலில் இணைத்துள்ளது.

ஐந்து மாவட்டங்கள் -முர்ஷிதாபாத் -11.01 லட்சம், மால்டா -8.28 லட்சம், வடக்கு 24 பர்கானாவில் 5.91 லட்சம், தெற்கு பர்கானா மாவட்டத்தில் 5.22லடசம் , உத்தர தின்ஜாபூர் மாவட்டத்தில் 4.80 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

இவர்களின் தலைவிதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்ததால் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உ.நீதிமன்றம் இந்தப்பணியில் கீழமர்வு நீதிபதிகளை அமர்த்தியது. எவ்வித இயற்கை நீதியையும் கருத்தில் கொள்ளாத இந்த விபரீத நடைமுறையால் (60 லட்சத்தில்) 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர், இவர்களது தலைவிதியை , மேல் முறையீட்டு தீர்ப்பாயம் முடிவு செய்யும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. இந்த தீர்ப்பாயம் கொல்கொத்தாவில் மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, அது எப்பொழுது தீர்ப்பளிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

தீர்ப்பாயத்தின் செயல்முறைகளை நாம் கட்டுப்படுத்தக் கூடாது என கூறும் உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பு வரும்வரை அவர்களுக்கு வாக்குரிமையை யாரும் மறுக்க முடியாது என்ற அடிப்படை இயற்கை நீதி கோட்பாட்டை மறந்து தீர்ப்பளித்துள்ளது.

இது சட்டத்தின் ஆட்சிக்கு அடிக்கப்படும் சாவுமணி. ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தியர் ஒருவரின் வாக்குரிமை என்பது, தேர்தல் ஆணையத்தாலோ, அரசியல் கட்சியாலோ, பிரதமராலோ, நீதிமன்றத்தாலோ வழங்கப்படும் உரிமையல்ல. அது இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கிய உரிமை. ஒருவரை இந்தியரல்ல என்று தீர்மானிக்காதவரை அவரின் வாக்குரிமையை, பறிப்பதோ, ஒத்திவைப்பதோ, மறுப்பதோ அரசியல் சாசனத்திற்கே முரணான செயல், ஜனநாயகத்தை யே கேலிக்கூத்தாக்கும் செயல்.

இத்தகைய கீழ்த்தரமான செயலை உச்சநீதிமன்றம் அனுமதிப்பது வெட்கக்கேடாகும்.

நாம சூத்திரா எனப்படும் மத்துவா மக்கள்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் என்பது ஒருபுறமிருக்க , கடந்த காலங்களில் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் மூலம் குடியுரிமைகள் வழங்குவோம் என அமீத் ஷா உறுதி அளித்த மத்துவா மக்கள் அதிகம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமசூத்திரா என அழைக்கப்படும் மத்துவா மக்கள் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள். வங்க தேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்து குடியேறியவர்களாவர்.

மொத்தத்தில் 90 லட்சம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 63% விழுக்காட்டினர் இந்துக்கள் என்றும், 34% விழுக்காட்டினர் முஸ்லீம்கள் என்றும் தெரிய வருகிறது. மாநில மக்கள் தொகையில் 27% விழுக்காடு உள்ள முஸ்லீம் மக்களில் நீக்கப்பட்டோரின் விகிதம் 34% ஆக உயர்ந்திருப்பது கவனிக்க தக்கது.

7 கோடியே அறுபத்தாறு லட்சமாக (7.66) இருந்த மேற்கு வங்க வாக்காளர் எண்ணிக்கை இப்பொழுது ஆறு கோடியே எழுபத்தைந்து லட்சமாக (6.75) குறைக்கப்பட்டுள்ளது .

ஜனநாயகத்தில் மக்கள் தான் தங்களை யார்ஆளவேண்டும் என தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் மோடியின் இந்தியாவில் யார் வாக்காளர்கள் என்பதையே ஆட்சியாளர்கள் (மோடி & co) தான் தீர்மானிக்கிறார்கள் என்பது வேதனை மட்டுமல்ல,வெட்ககேடு ஆகும்.

தடம் மாறிய தேர்தல் முடிவுகள் நியாயமான முடிவுகளா? ஜனநாயக முடிவுகளா? மக்களின் விருப்பத் தேர்வா? என பல கேள்விகளுக்கு விடை இல்லை.

ஆளும் திரிணாமுல் கட்சியினர் ஒன்றும் மனிதப் புனிதர்களல்ல, அவர்களது ஆட்சிமுறையும் குறைகள் இல்லாத ஒன்றல்ல. ஆனால், அவர்கள் ஆட்சியில் நீடிக்க வேண்டுமா? , இல்லையா? என்பதை தீர்மானிக்க சுதந்திரமான, நியாயமான தேர்தலும், அதற்கான களமும் தேவை. ஆனால் அவை இன்று மேற்கு வங்கத்தில் இல்லை.

ச.அருணாசலம்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time