எந்தக் கட்சியையும் கண்ணை கூடிக் கொண்டு முழுமையாக நம்பி ஆதரிக்கும் நிலையில் இன்றைய தேர்தல் இல்லை. ஆயினும், ஒரு சில அளவுகோலுக்கு கொஞ்சமேனும் பொருந்தக் கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அறத்தின் வழி காட்டல் அல்லது நிலைபாடு என்ன என்பதைப் பார்ப்போம்;
நிகழ உள்ள சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது? என்ற கேள்வியை அறம் வாசகர்கள் பலர் மீண்டும், மீண்டும் கேட்ட வண்ணம் உள்ளனர்.
நம்ம மக்களிடம் இயல்பான ஒரு அரசியல் விழிப்புணர்வு இருந்திருந்தால் இந்த கேள்விக்கு மற்றவர்களின் பதிலை எதிர்பார்க்க மாட்டார்கள். நல்ல தலைவர்களுக்கான ஆர்வமோ, தேடலோ, தலைவர்களை கொள்கை சார்ந்து விமர்சனப் பார்வையுடன் பின் தொடரும் போக்கோ மக்களிடம் இல்லை. மந்தை மனநிலையில் கட்சியை ஆதரிக்கும் போக்கே அதிகமாக உள்ளது.
அதனால் தான் எவ்வளவு சுயநலம் சார்ந்து தன்னிச்சையாக தலைவர்கள் தவறாக செயல்பட்டாலும் கூட, அந்த கொடுமைகளை சகித்துக் கொண்டு நாம் மீண்டும், மீண்டும் மாறி, மாறி ஓட்டுப் போடுகிறோம்.
இத்தகைய சூழலில் நடைமுறை சார்ந்த ஒரு தற்காலிக தீர்வாகவே நாம் அறத்தின் பார்வையைக் கூறுகிறோம்.
இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மதவாத பாசிச பாஜகவை அடியோடு வீழ்த்த வேண்டும் என்பது முதல் இலக்கு. ஆகவே, பாஜகவை அனைத்து இடங்களிலும் முற்றிலும் தோற்கடிக்க வேண்டும். தமிழிசை, எல்.முருகன், வானதி, நயினார் நாகேந்திரன் ஆகிய அதிகாரப் பசியாளர்களைக் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும்.
அடுத்ததாக பாஜகவை கேள்வியின்றி ஆதரிக்கும் அனைத்து சிறிய கட்சிகளையும் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.
அன்புமணியின் பாமக,
டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க,
ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்
மற்றும் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள்
ஆகியவற்றோடு மட்டுமின்றி, அதிரடியாக கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்குள் நுழைந்த மதவாத, சாதிய சந்தர்ப்பவாத சக்திகளான
பிரேமலதாவின் தேமுதிக,
ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் செல்வகுமாரின் தமிழர் தேசம்,
பாஜகவின் தீவிர ஆதரவாளரான ஒ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
ஆகியோரை தமிழக மக்கள் தேர்தலில் கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும்.
இன்றைய தமிழகத்தின் மூன்று பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, த.வெக ஆகிய மூன்று கட்சிகளுமே நம் பார்வையில் கிட்டதட்ட ஒரே ரகம் தான்.
இவர்களில் யாருமே பாஜகவை எதிர்ப்பதில் ஆத்ம சுத்தியோடும், அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அல்ல.
இன்று பாஜகவுடன் அதிமுகவானது நிர்பந்தத்தால் கூட்டணி கண்டுள்ளது. இது நமக்கு ஏற்புடையது அல்ல. ஆனால், நிர்பந்தமில்லாமல் அதிகார வெறிக்காக ஏற்கனவே திமுக கூட்டணி கண்டுள்ளது. தற்போதைய ஐந்தாண்டு ஆட்சியிலும் பாஜகவின் மக்கள் விரோத சட்ட திட்டங்களை நிறைவேற்றியது. வருங்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி காண வாய்ப்புள்ள கட்சியாகவே நாம் திமுகவை அவதானிக்கிறோம். விஜய்யின் த.வெ.க தெளிவான கொள்கை பின்புலத்தில் இல்லாத காரணத்தால் வருங்காலத்தில் பாஜகவுடன் கைகோர்க்காது என உத்திரவாதம் தரமுடியாத கட்சியாகும்.
ஆக, திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்றில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பதை அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களைக் கொண்டு மக்கள் முடிவு எடுக்கட்டும். கட்சி லேபிளுக்காக கண்மூடித்தனமாக வாக்களிக்காமல், வேட்பாளர்களின் யோக்கியதையை மதிப்பீடு செய்து வாக்களிப்பதே சிறந்தது.
இதில் பொதுச் சொத்தை சூறையாடுவதில் அதி தீவிரம் காட்டிய இன்றைய திமுக அமைச்சர்கள் சிலருக்கும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
நமக்கு சில வருத்தங்கள், ஏமாற்றங்கள் இருந்தாலும் பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், விசி.க.. ஆகியவற்றுக்கு ஓட்டு போடலாம். இவர்கள் மதவெறி எதிர்ப்பு, உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் குரலை ஒலிப்பதற்கேனும் தேவை. இதில் சி.பி.ஐ கட்சியின் தளி தொகுதி வேட்பாளர் குவாரி ஓனர் கொலைக் குற்றவாளி ராமச்சந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டியவர்.
நாம் ஒரு கட்சியை நேசிக்கிறோம் என்பதற்காக அந்தக் கட்சியின் மிக மோசமான வேட்பாளரை சகித்துக் கொண்டு ஆதரிக்கக் கூடாது. ஒருவர் மக்கள் மீது அக்கறையற்று மிக சுய நலமாக உள்ளார் என்றாலும், கட்சித் தலைமையால் மீண்டும் நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மக்களிடம் தான் உள்ளது. மக்கள் தொண்டாற்றும் எண்ணமுள்ள வேட்பாளர் என நன்கு அறிய வந்தால் அவரை ஆதரிப்பதில் கட்சியைக் கடந்து மக்கள் முடிவெடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் தமிழர் நலன், இயற்கை நலம் சார்ந்த கொள்கைகள் சிறப்பாக உள்ளன. இந்த கட்சி மீது நமக்கு சில காத்திரமான விமர்சனங்கள் உள்ளன. ஆன போதிலும், இந்தக் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்ட 10 பேராவது சட்டமன்றத்தில் இடம் பெறுவது நல்லதே. விகிதாச்சார முறையிலான தேர்தல் நடைமுறைக்கு வருமானால், இந்தக் கட்சியின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வாய்ப்புள்ளது.

விஜய்யின் த.வெ.க சார்பில் நிறைய இளைஞர்கள் களம் காண்கின்றனர். இவர்களில் பலர் சரியில்லை என்றாலும், வெகு சிலர் மக்கள் இயக்கங்களில் இருந்து தேர்தலில் வாய்ப்பு பெற்றுள்ளனர். உதாரணமான திருவண்ணாமலையின் த.வெ.க வேட்பாளர் அருள் ஆறுமுகம் அமெரிக்காவில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றிய போது அதைத் துறந்து ஒரு விவசாயப் போராளியாக எட்டு வழிச்சாலை போராட்டத்திற்கு வந்தவர். உழவர் உரிமை இயக்கத் தலைவராக மேல்மா விவசாயிகள் போரட்டத்தை முன் எடுத்த கள வீரர். இவ்விதம் தகுதியான இளைஞர்கள் வெகு சிலரேனும் சட்டமன்றத்திற்குள் நுழைவது அவசியம்.
வலதுசாரி சக்திகள் வலுப் பெற்று வரும் நிலையில் சிறுபான்மை மக்களை நாம் கைவிடக் கூடாது. ஆகவே, அந்தப் பிரிவினரின் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
பெருவாரியான தமிழக மக்கள் அவரவர் மனோ தர்மப்படி சுதந்திரமாக வாக்களிக்கட்டும். ஜனநாயகம், பன்மைத்துவம், தமிழ்நாடு, தமிழ்மக்களின் நலம், இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம், தமிழ் மண்ணின் கலாச்சார பாரம்பரியத்தை பேணும் ஆர்வம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர், அறம் இணைய இதழ்























வேட்பாளரின் சமூக பின்னணி, அர்ப்பணிப்பு, சமூக அக்கறை , நேர்மை, துணிவு, ஒழுக்கம் ஆளுமை இவற்றை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும் தேர்தல் புறக்கணிப்பு சோம்பேறி+கோழைகளின் பதுங்கல் தான்
Was waiting for this opinion of yours
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த கட்டுரை அவசியமானது. திமுக,அதிமுக,,தவெக என வரிசைப்படுத்தி சொல்லும்போது 15 வருடமாக தனித்து நிற்கும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை அம்போ என்று விட்டு விட்டீர்கள். அவர் மீதும் நமக்கு பல குழப்பங்கள் இருந்தாலும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவரைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் தி-னா வரும் இடத்தில் திருடர்கள் என்று போட வேண்டும். குறிப்பாக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத அல்லது குறைந்தபட்சம் வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் ஒருவரை கூட கூற முடியாது.,