இயற்கை வழி நலவாழ்வு -1
மருத்துவம் என்பது வாடிப்போன பயிர்களை மலரச் செய்வதைப் போன்றது. உயிருடல்கள் துன்பத்தில் வாடும் போது, துன்பம் நீக்கி அவற்றை இன்பம் பெறச் செய்யவதே மருத்துவம். நோய் என்பது தற்காலிக இடையூறு தானேத் தவிர, வாழ்நாள் சிக்கலல்ல!
ஒருவர் நோயுற்ற காலத்தில் மருந்து சாப்பிடுவது ஏற்புடையது, ஆனால் “மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்குத் தான்” என்பது மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்த சமூகங்களின் நிலைப்பாடு.
மருந்துகளோ, மருத்துவமோ உயிருடல்களுக்கு இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமே தவிர, புதிய சிக்கல்களை உருவாக்கிவிடக் கூடாது. மருத்துவங்கள் உயிருடல்களின் எந்த சிக்கல்களையும் தீர்க்கவல்லதாக இருக்க வேண்டுமே தவிர, அதனை உயிருடல்களுக்குள்ளேயே வைத்து பாதுகாப்பதாக இருக்கக் கூடாது.
ஓரிரு நாட்கள் ஒருவர் மருந்து உட்கொள்ளுகிறார் என்றால், அவர் அந்நாட்களில் துன்பத்தில் இருகிறார் என்று பொருள் அல்லவா! அதே போல் ஒருவர் வாழ்நாள் முழுமைக்கும் மருந்து சாப்பிடுகிறார் என்றால், அவர் வாழ்நாள் முழுமையிலும் துன்பத்தில் இருக்கிறார் என்று தானே பொருள்?

இயற்கை அறிஞர் கோ.நம்மாழ்வார் சொல்லுவார், ”ஒருவர் வீட்டுக்கு நாம் செல்லும் போது, அவரது அலமாரியிலோ, மேசையிலோ மருந்துகள் அடுக்கப்பட்டு இருந்தால், அந்த வீட்டில் ஒரு நோயாளி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளுகிறோம். அதே நேரத்தில் அந்த மருந்துகளைக் கொண்டு அவர் தன்னுடைய நோய்களைத் தான் பராமரிக்கிறாரே தவிர, உயிருடலை அல்லவே! ஆனால் அவர் தன்னுடைய ஆரோக்கியத்தையும், உயிருடலையும் பாதுகாப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளார்”.
உதாரணமாக, ஒருவர், ”நான் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்” என்கிறார்!
புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒன்றையும் நீண்ட காலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.
காலம் போகப் போக கட்டுப்பாடு வலுவிழந்து விடும்.
ஒரு மாத்திரையில் கட்டுப்பாட்டுக்கு வந்த சிக்கல், இரண்டு மூன்று என்று நீண்டுக் கொண்டே போவதைக் கொண்டு எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஒன்றைக் கட்டுப்பாட்டில் எடுக்க முடியுமென்றால் அதனை நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் தானே! அதனை குணப்படுத்திடவும் முடியும் என்பதைச் சொல்கிறேன்.
ஆனால், ஏன் மருந்துகளை மனிதர்கள் வாழ்நாளெல்லாம் உட்கொள்ளுகிறார்கள்? என்பது தான் இதுவரை பெரிதும் கேட்கப்படாத கேள்வியாக உள்ளது.
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் – என்கிறார் திருவள்ளுவர்.
அவ்வாறு நோயை நாம் நாடியிருந்தால், நோயைத் தீர்க்கும் வழி பிறந்திருக்கும் தானே…! திருவள்ளுவர் சொன்னதில் உண்மை இருக்கிறதா? அல்லது அவர் தன்னுடைய இலக்கிய நயத்தை வெளிப்படுத்தி இருக்கிறாரா? என்பதை நாம் அலசிப் பார்க்க வேண்டும்.
இயற்கையில் தீர்வு முதலாகவும், அதனைத் தொடர்ந்து சிக்கல் உருவாவதாகவும் விளங்கிக் கொள்ளலாம். அல்லது கால இடைவெளி வாதங்களைத் தவிர்க்க இரண்டும் ஒரு சேர உருவாவதாகக் கொள்ளலாம்.
இயற்கையை அறிந்தவன் அறிவாளி, அந்த அறிவைக் கற்றறிபவர் அறிவியலாளர். உலகில் அறிவாளிகளை விட அறிவியலாளர்கள் அதிகம் பேர். தேவையெல்லாம் அறிவாளிகளேத் தவிர, அறிவியலாளர்கள் அல்ல.
இந்தக் கட்டுரைத் தொடர் வழியாக நாமும் நம் தலைமுறையினரும் அறிவாளிகளாக முன்னேற்றம் பெறவுள்ளோம். “இயற்கை வழி நல வாழ்வுக்கான” தேடலில் இயற்கை நம்மை உள் நுழைக்கும் போது நான் சிலரை நினைவு கூற விரும்புகிறேன்.
முதலாமவர் டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் இரண்டாமவர் அவரது சகோதரர் டாக்டர் சித்திக் ஜமால்!

இவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள், மூன்றாமவர் இயற்கை மருத்துவர் வெள்ளிமலை இவர் கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர், நான்காமவர் டாக்டர் கோ.நம்மாழ்வார்
இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர்கள் இந்த மண்ணில் செய்த மாற்றங்கள் ஏராளம். ஏனெனில், இவர்கள் அறிவாளிகள். இக் கட்டுரையின் ஊடாக அவற்றை நீங்களும் அறியச் செய்கிறேன்.

டாக்டர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட ஆங்கில மருத்துவம் பயின்ற டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவரது சகோதரர் டாக்டர் சித்திக் ஜமால் ஆகிய இருவரும் ஆங்கில மருத்துவத்தைக் கைவிட்டு ஓமியோபதி மருத்துவம் செய்த சில காலத்திலேயே அதனையும் கைவிட்டுவிட்டு, அக்குபஞ்சர் மருத்துவத்தை கையில் எடுத்தார்கள்.
அதனை செய்யும் போது இலட்சக்கணக்கான மனிதர்கள் நோயில் இருந்து வாழ்நாளுக்கு விடுபட்டு சுகவாழ்வை வாழ்ந்தார்கள்! வாழ்ந்து வருகிறார்கள்….! அம் முறையில் இருக்கும் மேன்மையை அறிந்தவர்கள் அதனைப் பற்றிக் கொண்டேறினார்கள்.
தொட்டால் நலம்!
அதன் விளைவாக பல புள்ளிகளில் அக்குபஞ்சர் ஊசியை செலுத்தும் முறையைக் கடந்து, ஒரு ஊசி செலுத்தினாலே போதுமென்ற எல்லையையும் கடந்து, அக்குபஞ்சர் புள்ளியில் தொட்டால் குணமடையலாம் என்ற மிக எளிமையான பொருட்களின் உதவியில்லா, பொருட்களை நம்பியிராத முறையை கையாண்டதோடு மட்டுமல்லாமல், அம்முறையை பல்லாயிரம் பேருக்கு கற்றும் கொடுத்து அவர்களையும் அக்குபஞ்சர் மருத்துவர்களாக ஆக்கினார்கள்.
தங்கள் வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளுக்கு மேலாக நினைத்தாலே சுகம் என்ற உன்னத நிலையை அவர்களுக்கு இயற்கை வழங்கியது.
கீழ்காணும் குறள் அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
மனத்துக் கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
அறன் வலியுறுத்தலில் இந்தக் குறள் வருகிறது. இயற்கை மருத்துவர் வெள்ளிமலை அவர்கள் திருக்குறள் முனிசாமி போன்றோருக்கு இயற்கை நல வழிகாட்டியாக இருந்தார். நம்மாழ்வார் இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் காட்ட உந்துதலாக இருந்தார். இயற்கை அறிஞர் டாக்டர் கோ.நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கையின் இயங்கு முறைகளை அறிந்ததன் வழியாகவும் இயற்கை மருத்துவர் வெள்ளிமலை, இராமகிருட்டிணன் ஆகியோரது நட்பின் வழியாகவும் இயற்கை மருத்துவத்திற்கு உள்ளானார்.
இறுதி காலங்களில் மருத்துவச் சகோதரர்களின் பால் ஈர்க்கப்பட்டு அக்குபஞ்சர் பயின்றார். அவரது இறுதி கால உரைகளில் அதிகமாக நலவாழ்வு குறித்தும், நிலையாமை குறித்தும் பேசியிருப்பதைக் காண முடியும். நான் நம்மாழ்வாரோடு அவரது இறுதி நாள் வரை பயணித்து இயற்கை வழி நலவாழ்வுக்கான வழிகாட்டியாக இயங்கி வருகிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவச் சகோதரர்களின் வழியில் அக்குபஞ்சர் முறையப் பொருட்களின் உதவியின்றி செய்து வருகிறேன். என்னுடைய பார்வையில் இருந்து இயற்கை வழி நலவாழ்வுக்கு இங்கே உதவ முயலுகிறேன்.
ஏங்கெல்ஸ் ராஜா
அக்குபங்சர் மற்றும் இயற்கை வழி நல வாழ்வு மருத்துவர்























அருமையாக உள்ளது .. தொடருங்கள்
நம்மாழ்வார் குறித்து முழுமையாக ஆடுத்து வரும் கட்டுரைகளில் சொல்லுங்க
very good, interesting article. keep it up
அறம் இணைதளத்தில் ஏங்கல்ஸ் ராஜாவின் கட்டுரை அருமை. முன்பெல்லாம் வீட்டிற்கு குறைந்த பட்சம் ஒரு மருத்துவராவது குறிப்பாக தாய்மார்கள் இருந்தார்கள். இப்போது குறைந்துவிட்டார்கள்.
பிறந்த குழந்தைக்கு ஏதேனும் ஒன்று என்றால் அவரேப் பார்த்துக் கொள்வார். இப்போது தெருவிற்கு ஒரு மருத்துவமனை தவந்து விட்டது. அவர்கள் நோயை சீர் செய்வதற்கு பதிலாக பெரிதாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது விட அதிக அளவில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகது.
I have thrown away all my medicines and living happily without a single medicine for the past 15 years. Prior to this the allopathy branded me as diabetic. All this and the clarity in my life was due to Mr. Angels Raja and his true commitment.
தோழர் ஏங்கல்ஸ் ராஜா அவர்களின்
கட்டுரை மிகவும் சிறப்பானது.
ஒவ்வொரு மனிதனின் உடலுக்குள்ளும் ஒரு மருத்துவர் குடியிருக்கிறார என்பார்கள்.
ஆங்கில மருத்துவம் என்பது எப்படி ஆங்கில மொழி போல. ஆங்கிலம் என்பது ஒரு மொழியை தவிர ஆங்கிலம் என்பது அறிவல்ல .
ஆனால் சமூகத்தில் ஆங்கிலம் பேசுவேன் அறிவாளி என்றும் அவனவன் தாய் மொழியில் பேசுபவனை ஏளனமாக பார்க்கும் நிலை தான் இன்று உள்ளது.அதே வேளையில் உலக தொடர்புக்கு ஆங்கிலம் அவசியம்.
அய்யா வெள்ளிமலை எங்கள் ஊர்காரர்.
எனக்கு மிகவும் நெருக்கமானவர்.அவர் முதலில் வினோபா அவர்களின் தனி உதவியாளராக பணிபுரிந்தவர்.
இவரிடம் கிருபானந்த வாரியார் அவர்கள் பல முறை வந்து இயற்கை உணவு பற்றி ஆலோசனை பெற்றதை நான் நேரிலே பார்த்துள்ளேன்.
அய்யா நம்மாழ்வார் அவர்கள் அய்யா வெள்ளிமலை அவர்களை என் குருநாதர் என்று தான் கூறுவார்.
இது போன்ற கட்டுரைகள் தொடர்ந்து வந்தால் தான் ஆங்கில மருத்துவ மோகம் குறையும்.கட்டுரை வெளியிட்ட அறம் இதழுக்கு நன்றி