தொகுதி மறுவரையறையாம்! மகளிர் மசோதாவாம்! அவரவர் நோக்கத்திற்கு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்! அந்த உள் நோக்கத்தை உடைத்து பார்த்தால், இவர்கள் உள்ளீடற்ற உலுத்துப் போன பிற்போக்குவாதிகள் என்பதைத் தான் இவர்களின் கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்கு சொல்கிறது;
ஏன் இந்த திடீர் அவசரம்..? 2023 லேயே மகளிர் மசோதா நிறைவேறிவிட்டது. ஆனால், அதை நிறைவேற்ற மறுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு முடித்த பிறகு அமல்படுத்துவோம் என்ற ஆறப் போட்டார்கள். இந்த மூன்று வருஷமாக அந்த இரண்டையும் நிறைவேற்றுவதில் எந்த முனைப்பையும் காட்டவில்லை. தற்போது ஐந்து முக்கிய மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடக்கும் நிலையில் அதிரடியாக பெண்கள் மீது பாஜகவுக்கு அக்கறை பீறிட்டுக் கொண்டு வருகிறது..!
மகளிர் இட ஒத்துக்கீடு மசோதா அரை நூற்றாண்டுக்கும் மேலாக விவாதிக்கப்படுகிறது. கால் நூற்றாண்டாக இது சபையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தள்ளிப் போடப்பட்டது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆரம்ப காலத்தில் அதிகமாக எதிர்த்த கட்சி பாஜக தான். பெண்கள் ஈடுபடும் அளவுக்கு அரசியல் இங்கு ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று ஜனசங்கம் காலத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் பாஜகவினர்.
பொதுவாக எல்லா கட்சிகளில் இருக்கும் ஆண்களுமே இந்த மசோதாவை அந்தரங்க சுத்தியோடு ஆதரிப்பவர்கள் அல்ல. ஏனென்றால், இதை 50 வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டத்தில் அனைத்து கட்சிக்கும் பங்குள்ளது.

இல்லையில்லை. இதில் இடதுசாரிகளை எப்படி சேர்ப்பீர்கள்? அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு குரல் கொடுக்கிறார்களே என்பீர்கள்?
ஆம், ஒத்துக் கொள்கிறேன். 50 வருடங்களாக மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரித்து வருகிறார்கள், இடதுசாரிகள். அவர்களுக்கு இதில் ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்திருப்பின் அவர்கள் தங்கள் கட்சிக்குள் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி வாய்ப்புகளை வழங்கி இருப்பார்கள். குறைந்தபட்சம் ஓரளவேனும் கூடுதல் பெண்களுக்கு வாய்ப்பு தந்திருப்பார்கள்! தரவில்லையே. சரி கட்சி பொறுப்பிலாவது மூன்றில் ஒரு பங்கு உண்டா? 33.3சதவிகிதம் இல்லாவிட்டாலும் 20 சதவிகிதம் உண்டா? கிடையவே கிடையாது.
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, மம்தா தலைமையிலான திரிணாமுள், ஆம் ஆத்மி, தெலுகு தேசம்..என எந்தக் கட்சியும் பெண்களுக்கு கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை.
இதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. யதார்த்தம் இப்படி உள்ளது என்று புரிந்து கொள்ளவே சொல்கிறேன்.
பெண்கள் ஈடுபடும் அளவுக்கு அரசியல் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மையே. அதை ஆரோக்கியமாக மாற்றி விட்டு பெண்களை அரசியலை நோக்கி ஈர்ப்பது என்ற முடிவுக்கு வந்தால், அது ஒரு போதும் சாத்தியப்படாது. பெண்கள் அரசியலுக்கு வருவதால் அது ஆரோக்கியப்பட்டுவிடலாம் என்று நம்புவதா? என்றால், நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், இன்று இதை நாம் விவாதிக்கவே முடியாது.
காரணம், பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். அட எப்படி இருந்தாலும் களத்தில் எதிர்கொள்ளத் தயார் என்று வீரியம் கொண்ட தலைமுறை உருவாகிவிட்டது. பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காகவ்து இன்று மகளிர் மசோதா என்ற ஆயுதம் பாஜகவிற்கு தேவைப்படுகிறது.

அதனால் தான் பிரதமர் மோடி சபையில் உருகி, உருகி பேசினார்;
நாம் ஏற்கனவே இதை தாமதப்படுத்திவிட்டோம். காரணங்கள் எதுவாக இருந்தாலும், யார் பொறுப்பாக இருந்தாலும், இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் இதை தாமதப்படுத்தினால், இட ஒதுக்கீட்டின் இழப்பை, நாட்டின் பெண் சக்தி ஒருபோதும் மன்னிக் காது…என்று டயலாக் பேசினார்.
ஆனால், தொகுதி மறுவரையரை மசோதாவோடு இதையும் இணைத்து பேசுவதேன்?
இதற்கு ஒரே ஒரு சிம்பிள் காரணம் தான். ஆண்கள் பாதிக்கபடாதவாறு அவர்களின் தொகுதி எண்ணிக்கையை உத்திரவாதப்படுத்திவிட்டு பெண்களுக்கு தருவதை தந்துவிடலாம் என்ற தந்திரம் தான். அதாவது, ஒரு பொது நோக்கத்திற்காக எந்த ஒரு சிறு இழப்பையும் ஏற்கத் தயார் இல்லாத மன நிலை!
ஆனால், இந்த தேசம் இன்னும் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தாங்காது.
இப்ப இருக்கிற எம். பிக்களின் எண்ணிக்கையான 544 என்பதே மிக அதிகம் தான்…! இதை 850 ஆக உயர்த்தினால், அது சபை என்ற இலக்கணத்தையே சிதைத்து சந்தையாகிவிடும்.
சந்தை என்றால் சர்ச்சைக்கும், கூச்சல், குழப்பத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போதைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும்.
எம்பிக்களின் எண்ணிக்கை கூடுவதால் மக்களுக்கு நன்மை எதுவுமில்லை.

544 எம்பிக்களை கொண்ட சபையில் எல்லா எம் பிளுக்கும் பேச நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பேசுவதால் பிரச்சனைக்கு தீர்வும் கிடைத்தபாடில்லை.
பாதி எம்பிக்கள் சபைக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் விவாதங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) மாதச் சம்பளம் ₹1,24,000
சம்பளம் தவிர, பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினசரிப்படியாக ₹2,500.
தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ₹5 கோடி வரை வழங்கப்படுகிறது. ( இது பெரும்பாலும் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக பல்வேறு ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.
மிகப் பெரிய பங்களா தரப்படுகிறது. இது சுமார் 1.50 லட்சம் வாடகை பெருமானமுள்ளது. இலவச தொலைபேசி, இலவச விமான பயணங்கள், இலவச ரயில் பயணங்கள்…!
இது தவிர பெட்ரோல் அலவன்ஸ் உண்டு.
இப்படி வரிசைபடுத்தி கணக்கிட்டால் ஒரு எம். பிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ 10 லட்சம் அரசாங்கம் செலவழிக்கிறது.
இது தவிர வாழ்நாள் முழுவதும் ரூ 31,000 பென்சன்.
இவை அனைத்தும் மக்கள் வரிப்பணமே.
இந்தக் கூடுதல் சுமையை மக்கள் ஏன் ஏற்க வேண்டும். அரசுத் துறைகள் அனைத்திலும் வேலை வாய்ப்புகளை பொருளாதாரப் பற்றாக்குறை கருதி ஆட்குறைப்பு செய்யும் அரசு எம்.பிக்களின் எண்ணிக்கையை மட்டும் ஏன் அதிகரிக்க வேண்டும்…?
அரசியல் தொகுதி மறு வரையறை மசோதாவை பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
இதற்கான வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் பதிவாகி உள்ளது.
நல்ல வேளையாக மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் தான் மசோதா நிறைவேறும். ஆகவே தற்போதைக்கு நாம் தப்பித்தோம். இதை நிறைவேற்ற பாஜகவிற்கு இன்னும் 109 எம்.பிக்கள் தேவைப்படுவதால் நாம் நிம்மதி பெருமூச்சுவிடலாம்.
ஆனால், உண்மையில் தொகுதி மறுவரையால் நாம் பயந்தபடி எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் வராது.
தற்போது தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி.க்கள்
தொகுதி மறுவரையறைக்கு பிறகு 59 எம்.பிக்கள்!
நமது பிரதிநிதித்துவம் 7.18% லிருந்து 7.23% ஆகிறது.
தற்போது கர்நாடகாவுக்கு 28 இடங்கள்
தொகுதி மறுவரையறைக்கு பிறகு 42 இடங்கள்.
கர்நாடகாவின் பிரதிநிதித்துவம் 5.15% த்திலிருந்து 5.14% ஆகிறது.
தற்போது ஆந்திராவுக்கு 25 இடங்கள்
தொகுதி மறுவரையறைக்கு பிறகு 38 ஆகிறது.
அதன் பிரதிநிதித்துவம் 4.60 சதவீதத்திலிருந்து 4.65 சதவீதமாகிறது.
தற்போது கேரளாவிற்கு 20 இடங்கள்
தொகுதி மறுவரையறைக்கு பிறகு 30 இடங்கள்.
தற்போது தெலங்கானாவில் 17 இடங்கள்.
தொகுதி மறுவறைக்கு பிறகு 26 ஆகிறது.
உத்திர பிரதேசத்திற்கு 80 இடங்கள்.
தொகுதி மறுவரையறைக்கு பிறகு 120 இடங்கள்.
அதாவது சராசரியாக 50 சதவிகிதம் உயர்கிறது.
இந்த அளவுக்கு எம்.பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது நியாயமில்லை. குறைக்கவும் வேண்டாம், கூட்டவும் வேண்டாம்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் இயங்குவோம்.எம்பிக்களின் செயல்பாட்டுத் திறன் உயராமல், அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து என்ன பயன்?
உங்கள் நோக்கம் உண்மையென்றால், தொகுதி மறுவரையறை செய்யாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்றுங்கள்…!
சாவித்திரி கண்ணன்





















புது கரன்சி கட்டில் அழுக்கு நோட்டு ஆயில் நோட்டுகளை நைசாக சொருக பார்த்தது என்டிஏ அரசு .பாஜக எம்பிக்களே காலை வாரிவிட்டனர் காங்கிரஸ் , ஏசிரூமை விட்டு தெருவில் இறங்கி, மக்கள் பிரச்னைகளுக்காக போராடினால் 2029 ல் துளிர் விடலாம்
தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை போதுமானது. அரசியல் கட்சிகள் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய முன் வருவதோடு!
நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்க!
கொள்கையே இல்லாத அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை தடுக்க!
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை காலத்தின் கட்டாயம்!
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர!…
ஒன்றிய அரசுக்கு!
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
கோரிக்கை!
______________________________________
அன்பார்ந்த வாக்காளர்களே! பொதுமக்களே! சிந்திப்பீர்!
கடந்த 2014 ம் ஆண்டு நடந்து முடிந்த 16 – வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். இதில் 4 கோடியே 5 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIDMK) 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை (44.3 சதம்) பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
34 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் (DMK) 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்று (23.6 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி (NCP)17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்று (4.3 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
14 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (DMDK) 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்று (5.1 சதம்) ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
7 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி (BJP) 22 லட்சத்து 22 ஆயிரத்து 90 வாக்குகளை (5.5 சதம்) பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
8 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி (PMK) 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்று (4.4 சதம்) ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
7 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK) 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்று (3.5 சதம்)ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
9 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி (CPIM)2 லட்சத்து 20 ஆயிரத்து 614 வாக்குகள் (0.5 சதம்)
பெற்றும், 8 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 2 லட்சத்து 19 ஆயிரத்து 866 வாக்குகள் (0.5 சதம்) பெற்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு 6 லட்சத்து 6 ஆயிரத்து 110 வாக்குகள் (1.5 சதம்) பெற்றும்,
புதிய தமிழகம் கட்சி(NTK)1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 62 ஆயிரத்து 812 வாக்கு (0.6 சதம்) பெற்றும், மனித நேய மக்கள் கட்சி (MMK) 1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 36 ஆயிரத்து 679 வாக்குகள் (0.6 சதம்) பெற்றும், 1 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 2 லட்சத்து 3 ஆயிரத்து 175 வாக்குகள் (0.5 சதம்) பெற்றும், 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) 1 லட்சத்து 55 ஆயிரத்து 964 வாக்குகள் (0.4 சதம்) பெற்றும் தோல்வியை தழுவியுள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சி(AAP), இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI) உட்பட 626 சுயேச்சைகளுக்கு 8 லட்சத்து 66 ஆயிரத்து 550 வாக்குகளும் கிடைத்துள்ளன.
23.6 சதவீதம் வாக்குகள் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம்(DMK), 5.1 சதவீதம் வாக்குகள் பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(DMDK), 4.3 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி,(NCP) 3.5 சதவீதம் வாக்குகள் பெற்ற(MDMK) ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை எனில், இந்தக் கட்சிகளுக்கு வாக்களித்த 1 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரத்து 900 – ம் வாக்காளர்களின் வாக்குகள் மதிப்பிழந்து செல்லாத வாக்குகள் கணக்கில் சேருகின்றன.
இது என்ன தேர்தல் ஜனநாயகம் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்லவா? ….
வாக்காளர்கள் கட்சிகளுக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமெனில், தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் கடந்த 2014 – ம் ஆண்டு நடந்து முடிந்த 16 – வது நாடாளுமன்ற தேர்தலில் 4 கோடியே 5 ஆயிரம் வாக்குகள் கட்சிகளுக்கு பதிவாகியுள்ளது.
பதிவான மொத்த வாக்குகளையும், மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விகிதாச்சாரப்படி கட்சிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், பதிவான மொத்த வாக்குகளை (40000005÷39 = 10,25,769) ஆல் வகுத்து வரும் ஈவு வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய 10 லட்சத்து 25 ஆயிரத்து 769 வாக்குகளை பெற வேண்டும்.
அண்ணா திமுக (AIDMK) 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றுள்ளதால் அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 5,45,095 வாக்குகள் மீதமுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்(DMK) 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்தக் கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 3,43,929 வாக்குகள் மீதமுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(DMDK) 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 27,854 வாக்குகள் மீதமுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி(BJP) 22 லட்சத்து 22 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 1,70,552 வாக்குகள் மீதமுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி(PMK) 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அதுபோக 7,79,043 வாக்குகள் மீதமுள்ளது.
காங்கிரஸ் கட்சி (NCP)17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 7,25,354 வாக்குகள் மீதமுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(MDMK) 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகள் பெற்றுள்ளதால், அந்த கட்சி பெற்றுள்ள வாக்குகள் விகிதப்படி 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். அது போக 3,91,766 வாக்குகள் மீதமுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகள் விகிதப்படி அதிமுக(AIADMK )17 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், திமுக(DMK) 9 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தேமுதிக(DMDK) 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ,பாரதிய ஜனதா கட்சி(BJP)2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாட்டாளி மக்கள் கட்சி(PMK)1 நாடாளுமன்ற உறுப்பினரையும், காங்கிரஸ் கட்சி(NCP)1 நாடாளுமன்ற உறுப்பினரையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்(MDMK) 1 நாடாளுமன்ற உறுப்பினரையும் ஆக மொத்தம் 33 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
மீதமுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்ற கேள்வி எழுமானால்?….
கட்சிகள் பெற்றுள்ள மீதமுள்ள வாக்குகளின் வரிசை அடிப்படையில் அந்தந்த கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
உதாரணமாக மீதமுள்ள வாக்குகள் வரிசைப்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு(PMK)7,79,043 – ம், காங்கிரஸ் கட்சிக்கு (NCP) 7,25,354 – ம், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு(VCK) 6,06,110 – ம், அஇஅதிமுக வுக்கு (AIADMK) 5,45,095 – ம்,(MDMK) வுக்கு 3,91,766 – ம், புதிய தமிழகம் கட்சிக்கு (NTK) 2,62,812 – ம் வாக்குகள் வரிசைப்படி இருப்பதால், அந்தக் கட்சிகள் தலா 1 நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
அல்லது தமிழ்நாடு முழுவதும் கட்சிகள் பெற்றுள்ள வரிசைப் படியான மீதமுள்ள வாக்குகளை காட்டிலும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றிருந்தால், அந்த சுயேச்சை வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கலாம்.
அதற்கும் கீழாக வாக்குகள் பெற்ற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யும் தகுதியை இழந்தவர்களாக அறிவிக்கலாம்.
இது போன்று
விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, கட்சிகள் பெறும் வாக்குகளின் விகித அடிப்படையில் நாடு முழுவதும் மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுமாயின் …….
1. இந்தியா முழுவதும் மாநிலங்கள் தோறும், ஒரே மாதிரியான வாக்களிக்கும் கணினி இயந்திரங்களில் அல்லது வாக்குச்சீட்டுகளில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களையும், சுயேட்சை வேட்பாளர்களின் பெயர்களையும் அதற்கு நேராக சின்னங்களையும் அகர வரிசையில் பொருத்தி வாக்குச்சாவடிகள் தோறும் வாக்களிக்கச் செய்யலாம்.
2. தற்போதுள்ள தேர்தல் முறையைப் போன்று நாடாளுமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து கோடிக்கணக்கில் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.
3. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று சாதி,மதம், இனம், மொழி, பிராந்தியம் போன்ற உணர்வுகளை வாக்காளர்கள் மத்தியில் தூண்டிவிட்டு வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறை தடுக்கப்படும்.
4. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று தனி மனிதர்களை துதி பாடுவதோ, தனிமனித விமர்சனங்களோ இல்லாமல் அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளின் கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. தற்போதுள்ள தேர்தல் முறையை போன்று கொள்கையற்ற கூட்டணிகள் உருவாவது தடுக்கப்படும். அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
6. ஒரு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறு செய்தாலோ, கட்சி மாறினாலோ அவரது பதவியை பறிக்கலாம்.
7. ஒரு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, இறந்து போனாலோ இடைத் தேர்தல்கள் நடத்த வேண்டிய தேவை இருக்காது. அந்தக் கட்சியை சேர்ந்த வேறு ஒரு தகுதி வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை அந்த கட்சிகள் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
8. தற்போதுள்ள தேர்தல் போன்று வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதற்கு அவசியம் இல்லாமல் போகும்.
9. வாக்களித்த வாக்காளர்களுக்கு கட்சிகள் பொறுப்பேற்பதும், கட்சிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பதும் படிப்படியாக கட்டாயமாகிவிடும்.
10. நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்து மக்களிடம் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள ஆக்கப்பூர்வமான போட்டிகள் உருவாகும்.
11. கோடீஸ்வரர்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் என்ற நிலை மாறி மக்களுக்கு சேவை செய்யும் மனோபாவம் கொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யலாம்.
12. நேர்மையான கொள்கை பிடிப்புள்ள ஊழலற்ற அரசியல் கட்சிகளை படிப்படியாக உருவாக்க முடியும்.
13. தற்போதுள்ள தேர்தல் முறையில் வெற்றி பெறும்,
வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை காட்டிலும், தோல்வியுறும் வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்குகளே அதிகம். அந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகள் கணக்கில் சேருவதை தடுக்கலாம்.
14. வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பளிக்கும் நிலை உருவாக்க முடியும்.
15. அரசியலில் ரவுடிகளும், சமூக விரோதிகளும், கோடீஸ்வரர்களும்
நுழைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை சீர்குலைப்பது தடுக்கப்பட்டு, நேர்மையான சிந்தனையாளர்கள் அரசியலில் சேவை செய்ய வாய்ப்பு ஏற்படும். அரசியல் வியாபாரமோ குதிரை பேரமோ அல்ல. அது சேவை என்பது படிப்படியாக நிலைநாட்ட முடியும்.
16. தேர்தல் செலவுகளை அரசு ஏற்று நடத்த முடியும்.
17. தற்போதுள்ள தேர்தல் முறையால், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவுகளுக்கு, முதலாளிகளிடமும் பணக்காரர்களிடமும் கோடிக்கணக்கில் பணமும்,தேர்தல் பத்திரங்களும் பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் ஆட்சி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்வதும் சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும். அதனையும் மீறி ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள், மக்களிடம் படிப்படியாக தனது செல்வாக்கினை இழந்து தேர்தலில் தோற்கடிக்கப்படும்.
தற்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து,கட்சிகள் பெறும் வாக்குகள் விகித அடிப்படையில், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டு வந்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்திட ……
நேர்மையான,கொள்
கை பிடிப்புள்ள, ஊழலற்ற அரசியல் கட்சிகளை உருவாக்கிட ….
தற்போதுள்ள ஜனநாயக மற்ற தேர்தல் முறையை அகற்றிட….
ஜனநாயக முறையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நிலை நாட்டிட ….
மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு பலம் பெற்றிட …..
வலிமை மிக்க இந்தியாவில் வளமான மாநிலங்களை உருவாக்கிட ….
ஒன்றிய அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
வெளியீடு.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
UNITED COMMUNIST PARTY OF INDIA
(UCPI)
பதிவு: எஸ்.சுந்தரம்
மொபைல் எண்:9443619565