அடிமை அரசியலின் அலங்கோலங்கள்…!

சாவித்திரி கண்ணன்

ஒரு கட்சி, இரு தலைவர்கள்!

அதிமுக என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கட்சி தான்!

ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு அது ஒரு கட்சியல்ல!

ஒரே பெயரிலான இரு வேறு இயக்கம்!

இது தான் யதார்த்தம்!

இரு தலைவர்களில் ஒருவர் தோற்றவர், தான் ஏமாற்றப்பட்டதாக சதா சர்வ காலமும் வருந்தி தன் வலிமையை காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு கட்சிக்குள் கூட்டாளிகள் குறைந்து கொண்டே வருகின்றனர்! அவரோடு தொடர்பில் இருப்பவர்கள் மெல்ல,மெல்ல, எதிர்முகாம் சென்று விடுகின்றனர்! அதனால்,அவர் கட்சிக்கு வெளியில் தனக்கான ஒரு ஆதரவு சக்தியை வலுப்படுத்தி, தன்னுடைய முழு விசுவாசத்தையும் அங்கு நிலைப்படுத்திக் கொண்டார்! அத்துடன் தன் விசுவாசிகளை குடும்பத்திற்குள்ளும், சாதிக்குள்ளும் மட்டுமே தேடத் தொடங்கிவிட்டார்!

மற்றவர் சந்தர்ப்ப சூழலில் சசிகலா காலில் விழுந்து தலைவரானவர் என்றாலும், சாமார்த்தியத்தால், அதை தக்கவைத்துக் கொண்டார்! அரச நிர்வாகத்திற்கு முழுக்க அதிகார வர்க்கத்தை சார்ந்து இயங்குகிறார்! கட்சிக்குள் தன் ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்தி வருவதோடு, எதிர்கட்சி முகாம்களிலும் சிலரை வளைத்துப் போட்டு வைத்துள்ளார். இவருக்கும் பலமான சாதி பின்னணி உண்டு.அதிகாரபலத்தல் அவர்களை குளிர்வித்து அவர்களை தன் விசுவாசிகளாக்கிக் கொண்டார்! தன் போட்டியாளரை முற்றிலும் அதிகாரமற்றவராக அரசு நிர்வாகத்தில் பக்கத்திலேயே வைத்துள்ளார்!

இருவரும் தனித் தனி ஆதரவாளர் வட்டத்தை வைத்துக் கொண்டு பணத்தை அள்ளி இறைத்து தனித்தனியே பிரச்சாரம் செய்கின்றனர்! இருவருமே ஒருங்கிணைப்பாளர்கள் என்ற அடையாளத்தை பெற்றிருந்தாலும் இருவருக்குள்ளுமே சுத்தமாக ஒருங்கிணைப்பு இல்லை என்பது தான் கள நிலவரம்!

இத்தனை நாள் அதிமுக ஆட்சியில் இருந்தற்கும், ஒற்றுமையாக ஆட்சியை கொண்டு செலுத்துவதற்கும் பாஜக தான் காரணம்! அதே பாஜக தான் தற்போது ஒன்றுபட்ட கட்சியை தேவைப்படும் போது இரண்டுபடுத்தி பார்ப்பதற்கான சூழல்களையும் உருவாக்கி வைத்துள்ளது!

ஆட்சியை தக்க வைப்பதற்கும், தங்கள் மீதான ஊழல்குற்றசாட்டுகள் மற்றும் முறைகேடுகளை, சொத்து குவிப்புகளை பொருட்படுத்தாமல் இருப்பதற்கும் பாஜகவின் தயவு கண்டிப்பாக தேவைப்படுகிறது என்பதில் இருவருக்குமே மாற்று கருத்து இல்லை என்றாலும், கட்சியையும் காப்பாற்றிக் கொண்டு, பாஜகவையும் அனுசரிக்க வேண்டும் என்பது எடப்பாடியின் அணுகுமுறையாக உள்ளது. ஆனால், கட்சியையே பாஜகவின் விருப்பபத்திற்கு உகந்த முறையில் கட்டமைக்க வேண்டும் என்பது பன்னீரின் அணுகுமுறையாக உள்ளது!

அதாவது, இது ஒரு திராவிடக் கட்சி என்ற அடையாளம் இருக்கும் வரையில் தான் தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து ஈடுகொடுக்க முடியும் என்பது எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அணுகுமுறையாகும்! அதனால் தான் சமீபத்தில் நடந்த கிருஸ்த்துவ விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, ’’ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின்படி நாங்கள் நடப்போம். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கைதான் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அந்தக் கொள்கையின்படியே கட்சி நடக்கும். அதன்படியே அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது . எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்படத் தேவையில்லை. அவா்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருக்கும் எனவும் உறுதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கிறிஸ்தவா்கள் புனித யாத்திரைக்கான உதவித் தொகையை உயா்த்தி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயா்த்தப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்த அறிபிப்பிற்குப் பிறகு இருவரும் கட்சி தலைமையகம் வந்தபோது, சிறுபான்மையினர் விழாவில் எடப்பாடி பேசியதற்கு ஓ.பி.எஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படி கொள்கை தொடர்பானவற்றை பேசுவதற்கு முன்பு தன்னை கலந்து பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே, அதிமுக கடைபிடித்துவரும் கொள்கையைத் தான் நான் பேசியிருக்கிறேன். புதிதாக எதையும் பேசவில்லை என்று எடப்பாடி விளக்கம் தந்ததில் ஓ.பி.எஸ் திருப்தி அடையவில்லை போலத் தெரிகிறது!

இதையடுத்து, ’’தன்னை கலக்காமல் ரஜினி கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கவாய்ப்புள்ளது என ஓபிஎஸ் எப்படி பேசலாம்’’ என எடப்பாடி கேட்க விவாதம் சூடாகிவிட்டது!

’’வழிகாட்டுக் குழுவை நீங்கள் செயல் இழக்க செய்துவிட்டீர்கள்’’ என குற்றம் சுமத்தியுள்ளார், ஓ.பி.எஸ். ’’வழிகாட்டுக் குழு என்ன ? செயல்குழுவையே கூட்டுகிறேன், பொதுக்குழுவையே கூட்டுவோம்.அங்கு இதையெல்லாம் பேசுங்கள் நானும் பேசுகிறேன்..’’ என எடப்பாடி பேசியுள்ளார்!

இந்த சம்பவத்தை இங்கே ஏன் எடுத்துக் கூறி நினைவுபடுத்துகிறேன் என்றால், ஓ.பி.எஸ்சின் மன நிலையை புரிந்து கொள்வதற்குத் தான்! ஒ.பி.எஸ்சை பொறுத்தவரை அவரது அரசியலை ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆவதற்கு முன்னால் இருந்த ஓ.பி.எஸ்! அதற்கு பின்னால் பாஜகவால் வழி நடத்தப்பட்டு வரும் ஓ.பி.எஸ் என இரு வேறாகப் பிரிக்கலாம்!

ஜெயலலிதா படுத்தபடுக்கை யானவுடனே பாஜக இலவுகாத்த கிளியாக ஓபிஎஸ்சை கையில் எடுத்துக் கொண்டது! இது தனக்கான முட்டுகட்டை என்பதை அப்போதே சசிகலா புரிந்து கொண்டதால் தான், அவர் அப்போதிருந்தே ஓபிஎஸ்சை ஒரங்கட்டி, எடப்பாடியை முன்னெடுக்கும் அரசியலை மேற்கொண்டார்! உடனே குருமூர்த்தியும்,வெங்கையா நாயுடுவும் தந்த வழிகாட்டுதல்படி ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்தார்,ஓ.பி.எஸ்!  கட்சிக்குள் தனி அணி கண்டார். பிறகு தனக்காக பெருகி வந்த மக்கள் ஆதரவையும் பொருட்படுத்தாமல், பாஜக கட்டளைப்படி கட்சிக்குள் மீண்டும் வந்து ஆட்சியில் பங்கெடுத்தார்!

அவரை பாஜகவும் கைவிடாமல் 11 எம்.எல்.ஏக்கள் தகுதி இழக்காமல் காப்பாற்றிவிட்டது! பாஜக அறிவுரைபடியே மகனை எம்.பியாக்கினார். அந்த மகன் தற்போது அதிகாரபூர்வமாக அதிமுக என்றாலும், பாஜகவின் அறிவிக்கப்படாத எம்.பியாகவே சகலவிதத்திலும் செயல்படுகிறார்! அடுத்ததாக இன்னொரு மகனை எம்.எல்.ஏ ஆக்க திட்டமிட்டு வருகிறார்! தேனீர் கடை நடத்திய ஒரு எளிய குடுமபத்தில் இருந்து வந்த பன்னீர் இன்று ஒரு மாபெரும் கோடீஸ்வரர். பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி! தன் சொந்த தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றித் தர மனமில்லாத அளவுக்கு பண வலிமையால் தேர்தல் வெற்றியை ஈட்டிவிடலாம் என நம்புகிறவர்!

ஜெயலலிதா காலத்தில் விசுவாசத்திற்கு ஒரு நடைமுறை விளக்கமாக பார்க்கப்பட்டவர் தான் பன்னீர் செல்வம். ஆனால், தற்போது சொந்த கட்சியையே பாஜக காலடியில் வைத்து தன் குடும்பத்தின் எதிர்காலத்தை மட்டும் சிந்திக்க கூடியவராக மாறிவிட்டார்.

பாஜக 40 தொகுதிகள் கேட்பதை ஓபிஎஸ் நியாயம் தானே என கருதுகிறார். ஆனால், பாஜகவின் கூட்டணியே அதிமுகவிற்கு பலவீனமானது என நினைக்கும் போது அவர்களுக்கு 20 அல்லது 25 கொடுத்து சமாளிக்கலாம் என்பது கட்சியில் உள்ள பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. மேலும், ’’அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் அறிவிக்கும்’’ என பாஜக சொல்லியது கட்சிக்குள் கடுமையான மன உளைச்சலை உருவாக்கியிருக்கும் நிலையில், அதை பன்னீர் மட்டும் தனக்கு சாதகமாக பார்க்கிறார்! இன்றைய நிலவரப்படி பன்னீர் பாஜகவிற்காக அதிமுகவிற்குள் வேலை பார்க்குமொரு விசுவாசமான வினோத அடிமையாவார்! திராவிட இயக்கத்தில் ஒன்றையாவது விழுங்கி ஜீரணிக்க வேண்டும் என்ற பாஜகவின் அதிகாரப் பசிக்கு கிடைத்த இரையாகிப் போனார் பன்னீர்செல்வம்!

எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை அவரும் பாஜகவிற்கு சகலவிதத்திலும் அடிபணிந்தே அனைத்து விவகாரங்களிலும் செயல்படுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. குடியுரிமை திருத்த மசோதா தொடங்கி விவசாய மசோதா வரை எவ்வளவு மக்கள் விரோத சட்டம் போட்டாலும் ஆதரித்து தான் வருகிறார். அதே சமயம் சிறுபான்மையினர் ஓட்டுவங்கிக்காக சில வார்த்தை ஜாலங்கள், சலுகைகளை அள்ளிவிட்டு அதிமுகவின் வழக்கமான வாக்கு வங்கியை தக்கவைக்க நினைக்கிறார். அதைக் கூட பாஜக விரும்பவில்லை என்பது மிகக் கசப்பான துன்பவியல் நெருக்கடி மட்டுமல்ல, வலுக்கட்டாயமாக அதிமுகவை சிறுபான்மை யினரிடமிருந்து விலகச் செய்யும் அதிகார அழுத்தமாகவே கருத வேண்டியுள்ளது. இதை எதிர் கொண்டு அதிமுகவை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என பார்ப்போம்! இதை அதிமுக செய்யத் தவறும் பட்சத்தில் அமுமுக தினகரன் கையில் எடுத்து களமாட வாய்ப்புள்ளதாகே தெரிகிறது!

எப்படியோ, அதிமுகவை இரண்டாக பிளக்கும் கோடாரியை உள்ளுக்குள்ளே பட்டை தீட்டி பதம்பார்த்துக் கொண்டிருக்கும் பாஜகவின் ராஜதந்திரத்தை நினைத்தால் உள்ளபடியே சிலிர்க்கிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time