பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது, ஏன்?

- பிரின்ஸ் கஜேந்திர பாபு 

பொதுப் புள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறியதாவது:

” நம் நாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் இருந்து உலக அரங்கில் நம் நாட்டுக்குக் கிடைத்து வந்த பெருமையை பாஜக அரசு இழக்கச் செய்துவிட்டது.

நாம் கொண்டிருந்த பஞ்ச சீலக்  கொள்கையை  ஐநா மன்றமே ஏற்றுக்கொண்டது. சோவியத் ஒன்றியம் ஒரு பக்கமும் அமெரிக்கா இன்னொரு பக்கமும் உலக நாடுகளை பிரித்து வைத்திருந்த சமயத்தில், நாம் எந்தப் பக்கமும் சாயாமல்  77 நாடுகள் கொண்ட அணிசேரா நாடுகள்  உருவாக  முக்கியப் பங்கு வகித்தோம். இந்த எண்ணிக்கை பின்னர் 105 ஆனது.  அணிசேரா நாடுகளுக்கு  தலைமை தாங்கி வழிநடத்திய பெருமையும் இந்தியாவுக்கு உண்டு.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று இஸ்ரேலை நம் நாடு கண்டித்தது. நிறவெறிக்கு எதிராக போரிட்ட தென்னாப்பிரிக்க மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினோம். இந்தியா போன்ற நாடுகளில் முயற்சியால் தென்னாப்பிரிக்காவில்  இன பாகுபாடு விலகியது.

அப்படிப்பட்ட கம்பீரமான வெளியுறவு கொள்கையை பாஜக அரசு இன்றைக்கு கைவிட்டு, இந்தியா வகித்து வந்த இடத்தை பாகிஸ்தான் பெறுவதற்கு காரணமாக இருக்கிறது.

உலகில் வல்லரசுகள் செய்யும்  அட்டூழியத்தை தட்டிக் கேட்க திராணியில்லாமல், மௌனமாக இருந்து அதை ஒரு ராஜதந்திரமாக சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் தன் அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை மோத விட திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து தோற்றுப் போனது.

அக்கட்சி இப்போது வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், தைப்பூச விழாவை அரசு விழாவாக நடத்துவோம் என்று கூறியுள்ளது. சண்முக கவசம், சஷ்டி கவசம், வள்ளலாரின் திருவருட்பா என்று தமக்கு பிடித்த பாடல்கள் வாயிலாக முருகனை வழிபட்டுக் கொண்டிருக்கும் பக்தர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்கு பாஜக செய்யும் சூழ்ச்சி தான் இது.

இன்றைக்கு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் பாஜக- ஆர் எஸ் எஸ் அமைப்பினர் நாளை பெரும்பான்மையினர் மத்தியிலேயே பிளவுகளை ஏற்படுத்த முற்படுவர். 2002- இல் குஜராத்தில் பாஜக நடத்திய வன்முறையை 2026 ல் தமிழ்நாட்டில் நடத்திட தொடர்ந்து சூழ்ச்சி வலை பின்னி வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு கொள்ள வேண்டும். எனவே அவர்களை மட்டுமின்றி அவர்களோடு துணை நிற்கும் கூட்டணி கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.

பாஜகவின் உண்மை முகத்தை அறிந்ததால் ” தான் மோடியா லேடி”யா என்று முழங்கினார், ஜெயலலிதா. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து இருப்பது ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது மட்டுமல்ல அவருக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.எனவே, அதிமுக தொண்டர்கள் பாஜகவை ஆதரிக்கக் கூடாது.

பாஜக அரசு தாக்கல் செய்துள்ள விக்சித் பாரத் சிக்சா அதிஷ்தான் மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்கள் உட்பட மாநில அரசின் கல்லூரிகள் அனைத்தும் பாஜக அரசின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்.

கல்வி முழுமையும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற பாஜக- ஆர்எஸ்எஸ் நோக்கத்தை புரிந்துகொண்டு முளையிலேயே அவர்கள் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

தற்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் மகளிர்  இட ஒதுக்கீட்டு மசோதா நடைபெறவிருக்கும் மூன்று மாநிலங்களில் உள்ள பெண்களின் வாக்குகளை பெறுவதற்காகதான், பெண்கள் நலனில் உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை கிடையாது என்பதை அவர்களுடைய கடந்த கால வரலாறு சொல்லும்.

இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இப்போதே முக்கிய பிரச்சனைகளில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது.

800 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அவையில் எப்படிப்பட்ட செயல்பாடு இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம் நாட்டின் ஜனநாயகமும் இந்திய அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படுவதற்கு பாஜக வும் அவர்களுடன் துணை நிற்கும் கட்சிகளும் முழுமையாக வீழ்த்தப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இவர்களை தோற்கடிக்கும் வல்லமை கொண்ட  திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு, பொதுப்பள்ளிக் கான மாநில மேடை சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவருடன் கல்வியாளர் முனைவர் இரத்தின சபாபதி (தலைவர், பொதுப் பள்ளிகான மாநில மேடை) மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் (தலைவர், தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம், அருமைநாதன் (தலைவர், தமிழ்நாடு மாணவர்- பெற்றோர் நலச் சங்கம்) மற்றும் ஜாகிர் உசேன் உடன் இருந்தனர்.

தொகுப்பு – ம.வி.ராஜதுரை

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time