தலைமையின் அலட்சியம்; தடுமாறும் தவெக வேட்பாளர்கள்!

-சாவித்திரி கண்ணன்

களத்தில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இருக்கும் பல சாதகமான அம்சங்கள் த.வெ.க வேட்பாளர்களுக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க, இத்துடன் தலைமையின் ஒத்துழைப்போ, வழிகாட்டலோ.. எதுவுமில்லாமலும், சில உள்ளுர் நிர்வாகிகள் எதிரணியினருக்கு விலை போய் விட்டதாலும்  தவெக வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சொல்லி மாளாது;

தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் அதி வேகம் எடுத்துள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மாபெரும் வரவேற்பு தருகிறார்கள். அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் வண்ணம் வரலாறு காணாத கூட்டத்தை விஜய் பரப்புரையில் பார்க்க முடிகிறது.

ஆனால், எந்த முன் தயாரிப்புகளும், திட்டமிடல்களும், போதிய பணபலமும், ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையில் த.வெக வேட்பாளர்கள் களத்தில் தடுமாறுகிறார்கள்.

திமுக, அதிமுகவினர் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். குறிப்பாக முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் அவரவர் தொகுதிக்குள் அளப்பரிய முன்னேற்பாடுகள் செய்து கொண்டனர். அவர்களின் கட்சித் தலைமையும் அந்தந்த தொகுதிகளுக்கான பூத் ஏஜெண்டுகளை ஓராண்டுக்கு முன்பே அடையாளம் கண்டு அவர்களை தொடர்பில் வைத்து பணத்தை அள்ளித் தந்து கொண்டுள்ளது.

மேலும், திமுக, அதிமுகவில் கட்சித் தலைமையின் சார்பில்  தேர்தலை எதிர்கொள்ள பெரிய அளவு செலவுக்கு பணமும் தரப்படுகிறது. அதனால் அவர்கள் மேள தாளம் முழங்க, கலைக் குழுக்களுடனும், பின் தொடரும் மக்கள் கூட்டத்தோடும் ஜெகத் ஜோதியாக பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுவாக பெரிய கட்சிகளீன் வேட்பாளர் ஒவ்வொரு நாளும் 50 லட்சம் செலவழிக்கிறார்.

ஆனால், தவெக வேட்பாளர்களில் வசதியுள்ள சிலரே இந்த போட்டியை எதிர்கொண்டு ஓரளவு செலவு செய்கிறார்கள். மற்ற பலர் தங்களுக்கான பிரச்சார வாகனத்திற்கு கூட செலவு செய்ய முடியாதவர்களாக உள்ளனர். உடன் வருபவர்களுக்கு சாப்பாடு, டிபன் ,காபி வாங்கித் தருவதற்கே சிரமப்படுகிறார்கள்.

கட்சித் தலைமையிடம் இருந்து எந்த பொருளாதார உதவியும் கிடைக்காததும், குறைந்தபட்ச வழி காட்டலோ, அக்கறை சார்ந்த கண்காணிப்போ இல்லாததால் அவரவர் சொந்த முயற்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

திமுக, அதிமுகவினர் ஒவ்வொரு பாயிண்டிலும் கூடி நின்று வரவேற்பு தரும் பெண்களுக்கு நூறோ, இரு நூறோ தவறாமல் தருகின்றனர். அதை பெண்களும் எதிர்பார்க்கிறார்கள். வேட்பாளர் வரும் போது பூவை தூவுவதற்கும் தவறாமல் பணம் தந்து சந்தோஷப்படுத்துகிறார்கள். ஆனால், தவெக வேட்பாளரால் இப்படி செலவு செய்ய முடியவில்லை. ஆனாலும், பல இடங்களில் யதேச்சையாக பார்க்கும் பெண்களும், மக்களும், ”நாங்க விஜய் கட்சிக்கு தான் ஓட்டுப் போடுவோம். வாழ்த்துக்கள்” என ‘வாலியன்டிரியாக’ வந்து சொல்வதும் நடக்கிறது. சில இடங்களில் வேட்பாளரையே விஜய்யாக நினைத்து மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அதே சமயம் இன்றைக்கு தவெக வேட்பாளர்கள் களத்தில் சந்திக்கும் பிரதான பிரச்சினை அந்தந்தப் பகுதி கட்சியின்  முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுகவிற்கு விலை போய்விட்டது தான். இவர்கள் பிரச்சரத்திற்கு வராமலே ஒதுங்கி நிற்கின்றனர். பூத் கமிட்டி உறுப்பினர்களை வேட்பாளர் கண்ணில் கூடக் காட்டுவதில்லை. ஆனால், அந்த நிர்வாகிகள் எதிரணியுடன் நல்ல இணக்கம் பாராட்டுகின்றனர். இந்த துரோகத்தை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர், புதிய தவெக வேட்பாளர்கள்.

மற்றொரு பக்கமோ, தவெக வேட்பாளர்களே களத்தில் எதிரணியினருக்கு விலை போய் பிரச்சாரம் செய்ய வராமல் போக்கு காட்டி, தொண்டர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறார்கள். இதையெல்லாம் யார் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என்றே தெரியாமல் விக்கித்து நிற்கின்றனர், உள்ளுர் நிர்வாகிகளும், தொண்டர்களும்..!

இதனால், பல தொகுதிகளில் தவெக வேட்பாளர் பெயர் கூட மக்களுக்கு தெரியவில்லை. ‘விஜய்யின் தவெகவுக்கு ஆதரவென்றால், விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என்ற புரிதலோடு உள்ளனர். ‘ஒரே ஒரு முறையாவது தன் தொகுதிக்கு விஜய் வந்து தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வாக்கு கேட்கமாட்டாரா?’ என்ற தவிப்பில் பல வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால், விஜய்யோ சில ஒத்துக் கொண்ட இடங்களுக்கு கூட பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருக்கிறார் என்பது தான் கூடுதல் சோகம்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time