போரால் மக்கள் அனுபவிக்கும் வலிகளைப் பேசுகிறது!

-வசந்த் பாரதி

நீளிரா என்றால் நீண்ட இரவு என்று பொருள். இப்படம் இந்திய அமைதிப் படைக்கும், புலிகளுக்கும் இடையே அரங்கேறிய மோதலை அலசுகிறது! போர்ச் சூழலில் சிக்கி கொள்ளும் தமிழ் மக்கள் இந்திய ராணுவத்தையும், போராளிகளையும் எப்படி சமாளித்தார்கள் என்பதை உயிர்ப்புடன் எடுத்திருக்கிறார்கள். போர்ச் சூழலில் சிக்கி தடுமாறும் காதலையும் பேசுகிறது;

தமிழ் ஈழப் போராட்ட போர்க் காலங்களில் இலங்கை தமிழ் மக்கள் எதிர் கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ நீளிரா’. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர்  சோமிதரன் எழுதி இயக்கியது. இந்த திரைப்படம் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை கதையாக்கி உள்ளது..!

போரால் எப்படி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எளிய மக்கள் இதில் என்னவிதமான இன்னல்களை அனுபவிக்கிறார்கள்? உயிரைப் பிடித்துக் கொண்டு அதில் இருந்து மீளத் துடிக்கிறார்கள் என்பதை உயிரோட்டமாகச் சொல்கிறது.

1987-ஆம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், தமிழ் போராளிக் குழுக்களிடமிருந்து (முக்கியமாக LTTE) ஆயுதங்களைப் பெற்று அமைதியை நிலைநாட்டவும் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் இன மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. காலபோக்கில்  பொதுவாக ராணுவம் என்ன அத்துமீறலாகள் செய்யுமோ அதனை இந்தியா ராணுவம் செய்ய சிங்கள மற்றும் புலிகளுக்கு இடையேயான போரானது இந்திய ராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையேயான போராக உருமாற்றம் பெற்றது.

இலங்கையின் வடபகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரூபா கொடுவாயூரின் வீட்டில் திருமணம் முடிவாகிறது. திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப் படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.

ஒரு பக்கம் வெளியே  போராளிகள், மறுபக்கம் வீட்டுக்குள் இந்திய ராணுவப்படை என போர்ச் சுழலில் சிக்கிக் கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன ஆனாது? என்பதை விறுவிறுப்பு குறையாமல் அந்த சூழலில் அந்த குடும்பத்தினர் எதிர்கொண்ட உளவியல் ரீதியான போராட்டதை 90 நிமிட கதையில் கூறி இருக்கிறார் இயக்குனர்.

போராட்டம் என்றால் ரத்தம் சிந்த வேண்டும் என்பதில்லை ஒரு காதலால் கூட அந்த போராட்ட உணர்வை நீர்த்து செய்து விட முடியும் என்று கூறுகிறது இந்த படம். தன் முன்னாள் காதலன் தேவன்  போராளியாக மாறிவிட அவன் நினைவில் மன நிலை பாதிப்பில் வாழும் அந்த வீட்டு மணப்பெண்ணின் சகோதரி தன்னுடைய மருத்துவ மாணவன் காதலன் இன்னும் உயிரோடு தான் காஸ்ட்ரோ என்கின்ற பெயரில் போராளியாய் இருக்கிறான் அதுவும் தங்கள் வீட்டை நோக்கி துப்பாக்கி ஏந்தி இருக்கிறான் என்பது அவனின் வயர்லெஸ் குரல் மூலம் தெரியவர அவள் தெளிவடைகிறாள். அவன் வந்த நோக்கத்தை நிறைவேற்றாது காதலியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு  திரும்புகிறான். பொழுதும் விடிகிறது. பீதி இருள் சூழ்ந்த அந்த பதட்டமடைந்த வீட்டுக்கும் ஒரு அமைதி  விடியல் ஏற்படுகிறது.

இந்த படம் இன்னொரு விசயத்தையும் கூறாமல் கூறுகிறது. ஆயுதம் ஏந்துகிற அனைவருமே ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்துவதில்லை. அந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் செய்கிற தவறான புரிதல்  ஒட்டுமொத்த குழுவின் நற்பெயரை சீரழித்து விடுகிறது என்பதைக் காணமுடிகிறது.

அந்த வீட்டுக்குள் நுழைந்திருக்கும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கை இதனை மெய்ப்பிக்கிறது. அவரின் கட்டுபாட்டை மீறி அந்த குழுவின் படை வீரர் முத்தப்பா அந்த வீட்டாரை தாக்குகிறார் . பொறுமையை கடைபிடிக்கும் அதிகாரியை பார்த்து நான் உன்னை பற்றி  ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன் என்கிறார். ஆயுதம் ஏந்துகிற அனைவருக்கும் இருக்கிற ஒரே பீதி, எங்கே நம் எதிரி அவன் முந்திக்கொண்டு நம்மை கொன்று விடுவானோ என்பது தான் அது . அதற்காகவே அவர்கள் உணர்ச்சிவயபட்டு முந்திக் கொண்டு சுட ஆரம்பித்து விடுகிறார்கள். அது சில வேலை எதிராளி தயாராய் இல்லாது இருக்கும் போதும் நிகழ்ந்து விடுவதுண்டு.

இந்திய அமைதிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா மற்றும் போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு,  கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள்.

ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் ஈழ பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, ஒரு சில வசனங்கள் மூலமாக அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அத்துமீறிய செயல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீது இருக்கும் பயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இரவில் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களையும், அவர்களது இக்கட்டான சூழல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பதற்றத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்தி அவர்களிடத்திலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன்.

கே இசையில் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும், ஈழ மக்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் உயிரூட்டும் விதமாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த கதைக்குள் இருக்கும் உலக அரசியலையும், ஈழ மக்களின் வலியையும் படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.

இந்த திரைபடத்தை எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கிறார். யுத்தமும், இரத்தமும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், அம்மக்கள் அனுபவித்த வலியை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்து, படம் முழுவதும் ஒருவித படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த வலிகளை காட்சிப்படுத்திய திரைப்படங்களுக்கு மத்தியில் முதல் முறையாக அமைதிப்படை என்ற பெயரில் அங்கு அட்டூழியம் செய்த இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், வசனங்கள் மூலம் அவர்கள் சமாதானம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சண்டையிட்டதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

போராளிகளின் காதல் மற்றும் அவர்களின் கனவுகள், ஈழ மக்களின் பூர்வீகம், அவர்களின் உரிமைகள் பரிப்பு, அவர்கள் ஆயுதம் ஏந்தியதன் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம், என ஈழ போராட்டத்தின் முழு வடிவத்தையும் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் மிக தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் சோமிதரன், எதையும் பிரச்சாரமாக பேசி காட்சிகளின் நீளத்தை நீட்டிக்காமல், அனைத்தையும் சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பேசியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஈழத் தமிழரான இயக்குநர் சோமிதரன் அந்த மண்ணில் தான் ஒரு குழந்தையாக வாழ்ந்த போது கண்ட போர்க்கால அனுபவங்களையும் மற்றும் நினைவுகளையும் மையமாகக் கொண்டு இத்திரைப்பட கதையை உருவாக்கியுள்ளார்.  இவர் பிபிசி பத்திரிகையாளராகவும் மற்றும் ஆவணப்பட இயக்குநராகவும் பணியாற்றியவர்.ஈழ மக்களின் கலாச்சார நுணுக்கங்களை படத்தில் கனக்கச்சிதமாக கையாண்டுள்ளார். திரைக்கதையை மிகவும் நம்பகத் தன்மை உடையதாக்கியுள்ளார்.

இலங்கை தமிழர்  பிரச்சனையாய் அவரவர் உள்வாங்கிக் கொண்டதற்கு ஏற்றவாறு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதத்தில் அணுகி பதிவு செய்து வருகின்றனர்.”Demons in Paradise” ஆவண திரைப்படம் இடது சாரி சிந்தனையில்  நோயல்நடேசன் என்பவர் இயக்கிய படம் புலிகள் மீதான விமர்சனத்தை முன் வைக்கிறது. ஒரு சில முன்னால் போராளிகளின் அனுபவம் மற்றும் அவர்களின் இன்றைய மனநிலை பற்றி அலசுகிறது.

சில சகபோராளிகளை ஒரே நேரத்தில் 200 பேர்களை சுட்டு கொன்றோம் . எதற்காக அப்படி செய்தோம் என்று இப்போது நான் யோசித்து பார்க்கிறேன் என்று மனவருத்ததுடன் ஒரு போராளி அந்த ஆவண படத்தில் பதிவு செய்துள்ளார். இந்த முன்னாள் போராளி தம்மைத் தாமே சுய விமர்சனம் செய்து கொள்கிறார் செய்த பாவத்திற்கு பாவ மன்னிப்பு கோருகிற விதத்தில் பதிவிட்டுள்ளார்.   . அவரவர்களுக்கு அவரவர் நியாயங்கள். எல்லாம் கைநழுவிப் போன பின் வருந்தி  ஒரு பயனும் இல்லை

எது எப்படியோ, இன்றைக்கு இலங்கை தமிழர் என்பவர்கள் எங்கே இருக்கிறார்கள் அந்த சமூகம் என்னவானது என்கின்ற கேள்வி நம்முள் எழுகிறது. எவ்வளவோ சகோதர பழிவாங்கல்கள் எவ்வளவோ மரணங்கள் எவ்வளவோ அரசு எந்திரம் நிகழ்த்திய கொலைகள் இவ்வளவும் எதை சாதித்தது. இலங்கை தமிழர் பிரச்சனைகக்கு என்ன தீர்வை நல்கியது என்று கேள்வி கேட்க தோன்றுகிறது. இதனை கடந்து இன்னொன்றும் இங்கே முன் வைக்க வேண்டி இருக்கிறது    இலங்கை தமிழர் பிரச்சனையை அணுகிய விதத்தில் எங்கே எப்படி தவறு நிகழ்ந்திருக்கிறது என்று தமிழர்களாகிய நாம் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியும் இருக்கிறது.

திரை விமர்சனம்; வசந்த் பாரதி

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time