இயற்கை வழி நல வாழ்வு; 2
உடல் நலம் என்பது ஒருவருக்குள் இருந்து வெளிப்படுவதாகும். அதனை வெளியில் உள்ள தொழில் நுட்பத்தின் வழியே உள்ளே கொண்டு வர முடியாது. நோயுடன் வாழ்வதற்கான பயிற்சியைத் தான் நவீன தொழில் நுட்பம் நமக்கு கற்றுத் தருகிறது. சுகமாக வாழ்வதற்கு நமக்குள் இருக்கும் அறிவை கண்டடைவது எப்படி?:
மனிதச் சமூகம் அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்குமான இடைவெளியை நன்கறிய வேண்டும். அறிவு என்பது கால் மூட்டில் ஏற்பட்டிருக்கும் வலியை இயற்கை இயங்கும் போக்கைக் கொண்டு அங்குள்ள சிக்கலை களைந்து, மூட்டு வலியை நிரந்தரமாக தீர்ப்பதாகும்.
தொழில்நுட்பம் என்பது மூட்டு வலி இருக்கும் போது முட்டி உறைகளை அணியச் சொல்வது,
கையில் குச்சியை கொடுத்து நடக்கச் சொல்வது,
வாக்கர் (Walker) கொடுத்து இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நடக்கச் சொல்வது,
சக்கர நாற்காலி வழங்குவது,
இன்னும் ஒருபடி மேலே சென்று உங்களுக்கு யாருடைய உதவியுமே வேண்டாம், உங்களுடைய சக்கர நாற்காலியில் மின் மோட்டாரை பொருத்தியிருக்கிறோம், உங்கள் கைவிரலை அசைத்தால் முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் நீங்களே சுகமாக செல்லலாம்!
– இவ்வாறெல்லாம் சொல்வது தொழில் நுட்பம்.
வாழ்க்கையை சுகமாக வாழ்வதற்கு அறிவு தான் அவசியமே தவிர, தொழில் நுட்பம் அல்ல.
சுகமாக இருக்கும் ஒருவரால் சென்னையில் இருந்து திருச்சிக்குக் கூட நடந்தோ, மிதி வண்டியிலோ, இருசக்கர வாகனத்திலோ, மேலும் கீழும் இடமும் வலமுமாக பந்தாடும் பேருந்திலோ, நூறு பேர் அமரக் கூடிய முன்பதிவில்லா தொடர்வண்டி பெட்டியில் முன்னூறு பேர் ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் கொண்டும், மிதித்து பிதுங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கூட – சுகமாக இருக்கும் ஒருவருக்கு அந்தப் பயணம் கூட இனிமையாகத் தெரியும்.
இடுப்பு வலியோ, வயற்று வலியோ, கழுத்து வலியோ, தலைவலியோ அல்லது மூலமோ, இது போன்று ஏதாவது ஒன்று இருந்தால் கூட – சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பயணமானது மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களிலோ, அல்லது தனி விமானத்தில் பயணித்தால் கூட, அந்த பயணம் துன்பத்தையே கொடுக்கும். பயணமே மேற்கொள்ளாமல் வீட்டில் உயர்தர சோபாக்களிலோ கட்டில் மெத்தையிலோ இருப்பது கூட துன்பமாகவே இருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் உடல் நலம் என்பது ஒருவருக்குள் இருந்து வெளிப்படுவதாகும். அதனை வெளியே இருந்து உள்ளே கொண்டு வர முடியாது.
நலமாக இருக்கும் ஒருவர் தன்னுடைய பயணத்தை மேலும் சுகமாக்கிக் கொள்ளலாமே தவிர, நோயுற்றிருக்கும் ஒருவர் நோய் நீங்கி முழுமையாக சுகம் அடைவது தான் அவருக்கு முழுமையான தேவை. மாறாக, அவருடைய நோயைத் தீர்க்காமல் நோயுடனே தொழில் நுட்ப உதவியைக் கொண்டு எப்படி வாழ்வது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது; அதற்கான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. நோயுடன் வாழ்வதற்கே பெரும் பொருள் செலவு செய்து ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம் சுகமுடன் வாழும் அறிவை பெற வேண்டுமே தவிர, தொழில்நுட்ப உதவியைக் கொண்டு நோயை எப்படி பராமரிப்பது என்ற எண்ணத்திலிருந்து நாம் விலகி வரவேண்டும்.
கருத்தரித்தல் என்பது ஒரு நலமான உடலில் நடக்கும் சுகமான நிகழ்வு. அது அந்த குடும்பத்தாருக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியது. கருத்தரித்தல் என்பது இயற்கையின் இயங்குதலில் நடக்கும் ஒரு நலமான அவசியமான நிகழ்வு. இது உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து சுகமாக நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு!

எந்த ஒரு உயிரினத்திற்கும் கருத்தரித்தல் என்பது பெரும் சுகம் தரக்கூடிய ஒன்றே.. அச் சுகத்தை ஒவ்வொரு இணைக்கும் ஒவ்வொரு முறையும் இயற்கை வழங்குகிறது. கருத்தரிப்பதில் சுகத்திற்கு மாறாக துன்பத்தை இயற்கை வழங்கி இருக்குமேயானால், உயிரினங்களின் பெருக்கம் தடைப்பட்டு இப்புவி வெறும் மண் திட்டுகளாகவே இருந்திருக்கும். ஆனால் உயிரினங்களின் பெருக்கத்தை விரும்புவதால் கருத்தரிப்பதில் பெரும் சுகத்தை இயற்கை பொதிந்து வைத்துள்ளது.
இயற்கையின் அமைவில் கருவுற்றதில் இருந்து பெண் பொலிவாக மாற்றம் அடைகிறார்! அதாவது, முன்பிருந்த நோய்களில் இருந்தும், பலவீனத்தில் இருந்தும் இயற்கை அந்த தாய்க்கு விடுதலை அளிக்கிறது. அதன் அடையாளமாகத் தான் அத்தகைய அழகையும், அத்தனை பொலிவையும் நாம் அப்பெண்ணிடம் காண முடிகிறது. அதாவது, அப்பொலிவு என்பது பெண்ணின் பல பருவங்களில் கருவுறுதலின் போது மட்டுமே நிகழக் கூடியது.
ஒவ்வொரு கருவிற்கும், அதன் வளர்ச்சிக்கும் இயற்கை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. கருவை கொடுத்த ஆணுக்கோ, கருவை தன் வயிற்றில் சுகமாக அனுபவிக்கும் பெண்ணுக்கோ, அதன் குடும்பத்தினருக்கோ அந்தக் கருவின் வளர்ச்சிக் குறித்த எந்த அறிவும் இயற்கையாக வழங்கப்படவில்லை; மாறாக, அதன் சுகத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பிரசவித்தல் என்பதும் இயற்கை வழியில் சுகமானதாக அமைக்கப்பட்டுள்ளது.
கருத்தரித்தல் போன்று பிரசவித்தலும் சுகமானதாக இருந்ததன் காரணமாகவே, நம் முன்னோர் 15, 16 பிள்ளைகளை அத்தனை சுகமாக பெற்றுக் கொண்டனர். பிள்ளை பெற்றனர் என்றால், அத்தோடு முடிந்து போகும் செயல் அல்ல. அந்த பிள்ளை வளர்ந்து அப் பிள்ளைக்கு பிள்ளைகள் பிறந்து அந்தப் பிள்ளைகளையும் பராமரிக்க அந்த தாயின் உடம்பில் வலு இருந்தது.

உலகில் பறவையினங்கள், விலங்கினங்கள்.. போன்ற எந்த உயிரினங்களும் குழந்தைப் பேற்றை எந்தப் பதற்றமும் இன்றி இயல்பாக காண்கின்றன.
இன்றைக்கு பிரசவம் என்பதை நவீன தொழில் நுட்ப உலகம் பதற்றம் கொண்டதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. சுகப் பிரசவமே சாத்தியமில்லை என்ற அளவுக்கு வயிற்றை கிழித்து பிரசவம் செய்து பெண்ணின் உடலை சிதைக்கிறது. இவை எல்லாம் தொழில் நுட்ப வளர்ச்சி நம்மிடம் உள்ள உடல் சார்ந்த இயற்கையான அறிவைப் பறித்ததற்கான அத்தாட்சியாகும்.
இது குறித்து அடுத்த தொடரில் விரிவாகப் பேசுகிறேன்.
லெ. ஏங்கெல்ஸ் ராஜா
அக்குபங்சர் மற்றும் இயற்கை வழி நல வாழ்வு மருத்துவர்























Leave a Reply