2026 தேர்தலில் பிரதான பெரிய அரசியல் கட்சிகள் பேசத் தவறிய – மக்கள் நலன் சார்ந்த – முக்கிய விடயங்களை நாம் தமிழர், தவெக, பாமக ஆகியவை தங்கள் தேர்தல் அறிக்கையில் கவனப்படுத்தி உள்ளன. ”ஆகா, மிகச் சிறப்பாக உள்ளனவே…” என்று தோன்றக் கூடிய – கண்ணில் பட்ட – சிலவற்றை கவனப்படுத்துகிறேன்;
தமிழக மக்களின் பிரதான தேவைகள் என்ன? பிரச்சினைகள் என்ன? என்பதில் அக்கறை இல்லாமல் பல இலவச அறிவிப்புகள், பணக் கொடைகள் ஆகியவற்றை திமுக, அதிமுக, தவெக, பாஜக, காங்கிரஸ் போன்றவை அறிவிக்கையில் நாம் தமிழர்,பாமக ஆகிய மூன்று கட்சிகள் சில விடயங்களில் கவனம் பெறுகின்றன;
நாம் தமிழர் தேர்தல் அறிக்கை ;
தேர்தல் அறிக்கைகளிலேயே மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது; அவற்றில் முக்கியமானவை;
தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் நிர்வாக செயல்பாடுகளுக்காக 5 தலைநகரங்கள் அமைக்கப்படும், அவை சென்னை, திருச்சி, கோவை, குமரி, மதுரை ஆகியன.
மாநில உயர்நீதிமன்றத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவரே தலைமை நீதிபதியாக இருக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.
குடிநீர் என்பது விற்பனைக்கு அல்ல, நீர் என்பது உலக உயிர்களின் உயிர் தேவை, அதன் விற்பனையை தடை செய்கிறது.
நமது நீர் வளத்தினை சேமித்து பாதுகாக்கும் பொருட்டு புதிய நீர் கொள்கை, மழை நீர் மறை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும்.
ஏரிகள், குளங்கள், ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் கலக்கும் கழிவுநீர் முற்றிலும் தடுக்கப்படும்.
மரபு நெல் பயிரிடுவோர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து சலுகைகளையும் வழங்கி மானியங்களும் வழங்கப்படும்.
ஐந்தாண்டு காலத்திற்குள் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அனைத்தையும் முற்றிலும் தடை செய்யப்படும், அதற்கு மாற்றாக இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை உருவாக்கி வேளாண் குடிகளுக்கு வழங்குவோம்.
ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானம் இல்லை, வருமானம், வெகுமானம் கொண்ட அரசு பணியாக்கப்படும்.
ஜெர்சி போன்ற வெளிநாட்டு பசு வகைகளை முற்றிலும் தடை செய்துவிட்டு, உள்நாட்டு பசு வகைகளை திட்டமிட்டு பெருக்குவோம்.
பொருளாதார வளமிக்க கழுதை வளர்ப்பு ஊக்கு விக்கப்படும்.
நாம் தமிழர் ஆட்சியில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். இனி தமிழ்நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
உடல்நலம் என்பது பணம் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல , ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை, அது நாம் தமிழர் அரசின் கடமை.
விவசாயம் சார்ந்த தற்சார்பு பொருளாதாரம் கொண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
ஊழல் குற்றச்சாட்டுகள், நெறிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களின் பெயர் வெளியே தெரியாதபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் சரி பாதி வேலை வாய்ப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும்.பெண்களுக்கு தனித்தொகுதிகள் உருவாக்கப்படும்.
மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
தமிழ் நீதிமன்ற மொழியாக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை;
பரந்துபட்ட பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானவை;
விகிதாச்சார பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப்படும்.
திருக்குறள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே திருக்குறள் படிப்பது பரிசுகள் தந்து ஊக்குவிக்கபடும்.
வீடு தேடி ரேசன் பொருட்கள் தரப்படும்.
ஆதி திராவிடர், பழங்குடிகளுக்காக ஒதுக்கபடும் நிதிகள் முழுமையாக அவர்களுக்கே பயன்படுத்தப்படும். வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்பட மாட்டாது.
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவோம்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
அசிரியர் பணியில் சம வேலைக்கு சம ஊதியம் உறுதிபடுத்தப்படும். ஐந்து வருடம் பணியாற்றிய ஆசிரியர் நிரந்தரமாக்கப்பட்டு நல்ல ஊதியம் தரப்படும்.
அரசு துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைந்து நிறைவேற்றப்படும்.
ஐந்து வருடம் தற்காலிக பணியாற்றியவர்கள் அனைவரும் நிரந்தரமாக்கபடுவார்கள்.
கூவம், அடையாறு நதிகள் மீட்பு இயக்கம் உருவாக்கப்படும்.
மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், சாலை ஓரங்களில் சுமார் 1.5 லட்சம் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும். ஒவ்வொரு கி.மீட்டரிலும் பொதுக் கழிப்பிடம் கண்டிப்பாக இருக்கும்.
சேவை உரிமை சட்டம் அமல்படுத்தப்படும்.
அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் டி கிரேட் அரசு ஊழியரர்களாக்கப்பட்டு ரூ18,000 சம்பளம் வழங்கப்படும்.
கமிஷன் பெறாத ‘தமிழ் டாக்சி செயலி’ அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ் நாட்டின் 15 லட்சம் துரித பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, சமூக அந்தஸ்த்து ஆகியவை உறுதிபடுத்தப்படும்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தவிர்க்கப்படும்.
நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நேர்மையான நிர்வாகம், லோக் ஆயுக்தாவை வலுப்படுத்துதல்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல்
பதவி உயர்வு, பணியிட மாறுதலில் வெளிப்படைத் தன்மை
பொதுத் துறை நிறுவனங்களை மீட்போம்.
பாமகவின் தேர்தல் அறிக்கை:
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமையில் ரூ.25-க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்.
ரூ.10-க்கு ‘மக்கள் சாப்பாட்டு’ திட்டம் தொடங்கப்படும்.
மேற்படியான மூன்று கட்சிகளின் நல்ல அம்சங்கள் கொண்டவற்றை ஆட்சியில் அமர உள்ள எந்தக் கட்சி அமல்படுத்தினாலும், மக்கள் மனதார நன்றி செலுத்துவார்கள்.
சாவித்திரி கண்ணன்





















ஆளும் திமுக கட்சியும், நாட்டை ஆண்ட அதிமுக கட்சியும் மக்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு சலுகையிலும் இலவசமாகவும் தருவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இருவரும் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் இருந்து கொடுப்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை. அப்படி என்றால் அவர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களிடமிருந்து வாங்கியே மக்களுக்கு தருவார்கள். தாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு கண்டிப்பாக வர மாட்டோம் என்ற தைரியத்தில் தவெக பல சலுகைகளை அள்ளி வீசி இருக்கிறது தனது தேர்தல் அறிக்கையில். கட்டுரையில் சொன்னது போல் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் கூறி இருக்கிறது சில மாற்றங்களுடன். ஒரு நாம் தமிழர் ஆவது இந்த தேர்தலில் சீமானின் கூவலுக்கு ஏற்ப வெற்றி பெற்றால் சரி.