அச்சத்தில் இருந்து விடுதலை கேட்டு தேர்தல் புறக்கணிப்பு!

-அஜிதகேச கம்பளன்

”சாதி ஆதிக்கத் தாக்கத்தால் அதி மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் மீள முடியாத அச்சத்தில் உறைந்திருக்கிறோம். எங்களுக்கு உதவவோ, ஆதரவாக நிற்கவோ எந்தக் கட்சியுமில்லை…” என்ற கோபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தினர் இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். என்ன நடந்தது?;

967 வாக்குகள் உள்ள இந்த கிராமத்தின் எளிய தலித் மற்றும் விளிம்பு நிலை சாதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். காரணம், கடந்த மார்ச்-2 ஆம் தேதி எந்த முன் விரோதமும் அற்ற நிலையில் அதிரடியாக அந்த கிராமத்திற்குள் நுழைந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட இளைஞர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிச் சாய்த்த நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். ஆறேழு பேர் படுகாயமுற்றனர். மற்ற சிலர் ஓரளவு காயங்களுடன் தப்பினர்.

நாங்கள் என்ன தவறு செய்தோம். யாருடைய வம்பிற்கும் போனதில்லை. நாக்கள் உண்டு. எங்கள் பிள்ளைகளின் படிப்பு,வேலை உண்டு என்று தானே வாழ்கிறோம்…எங்களை அடிக்கடி தாக்கி நிரந்தர அச்சத்தில் ஆழ்த்த செயல்படுவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால்.., நாங்கள் ஓட்டுப் போட்டு ஆகப் போவது என்ன? என்பதே இந்த மக்களின் குமுறலாக உள்ளது.

இந்த மக்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு காரணமாக இன்றைய தினம் இந்த ஊருக்கான வாக்குச் சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்த போது இது போன்ற வெளியில் தெரிய வராத பல சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் நடப்பதாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மூன்றாண்டுகளுக்கு முன்னாள் வகுப்பில் நன்றாக படிக்கும் சக மாணவனான சின்னதுரை என்ற சிறுவனை பொறாமை காரணமாக ஆதிக்க சாதி மாணவர்கள் வீடுதேடிச் சென்று வெட்டியது.. போன்ற சில சம்பவங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் படிப்பு, வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றால் முன்பு போல ஆதிக்க சாதியினரிடம் பணிந்து கைகட்டி பேசுவதில்லை. செருப்பு போட்டு நடக்கின்றனர். பைக்கில் பயணிக்கின்றனர். சற்று வசதியாக வாழ்கின்றனர்..என்ற காழ்ப்புணர்ச்சியால் சில பழைய பெரிசுகள் இளைஞர்களை தூண்டிவிட்டு இது போன்ற சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலம் தங்கள் மீதான இந்த எளிய மக்களின் அச்சத்தை மீட்டெடுக்க துடிக்கின்றனர்..’ என்று சொல்லப்படுகிறது.

இறந்து போன ஒருவர் பெயர் ஜான், வயது 47. அவரது மனைவி பெயர் கண்ணகி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். இவர் எந்த வம்புக்கும் போனவரில்லை. உடல் ஊனமுற்றவர். சம்பவத்தன்று தன் உடல் ஊனத்தால் அவரால் தப்பித்து ஓட முடியாத நிலையில் அவர் தலையை வெட்டி சிதைத்து சம்பவ இடத்திலேயே துவம்சம் செய்துவிட்டனர். மற்றவர் ஒடிசாவில் இருந்து வந்து அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் ஒரு அப்பாவி தொழிலாளி.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட9 பேர் கொண்ட கும்பலில் உச்சிமாகாளி, சுபாஷ், கண்ணன், அந்தோணி மைக்கேல், ராஜா, வசந்தகுமார், உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள காவல்துறை மேலும் இருவரை கைது செய்துள்ள நிலையில், அந்த இருவரின் பெயர் விபரங்களை காவல்துறை தற்போது வரை மறைத்து வைத்துள்ளது. ( சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் இருவர் மாணவன் சின்னதுரையை வெட்டியவர்கள்)

இந்த சம்பவத்தில் பின்ணணியில் இருந்து இந்த இளைஞர்களை தூண்டிவிட்ட ஆதிக்க சாதி முக்கியஸ்தர்களை காவல்துறை நெருங்கவே இல்லை என்பது மக்களின் பிரதான கோபமாக உள்ளது. மிக ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களுக்கு சாதிவெறியை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தையே பாழ்படுத்துகிறார்கள் ஒரு சில சாதி ஆதிக்கவாதிகள். உண்மையில் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சிலர் இங்கு டீக்கடைக்கு வந்து எங்களோடு பேசி டீ சாப்பிட்டுப் போவார்கள். எந்தப் பகையுமில்லை. இந்த சம்பவத்தால் பகை ஏற்பட்டுவிடக் கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறோம்…என்கிறார்கள்!

மேலும், கொலை செய்யப்பட்ட அப்பாவி இருவரின் குடும்பத்திற்கு எந்த நிதி உதவியும் அரசு தரவில்லை. முதல்வர் கண்டண அறிக்கை கூட தரவில்லை. ஆளும் கட்சியின் கூட்டணி கட்சித் தலைவர்களும் கண்டண அறிக்கை தரவில்லை. திருமாவளவன், செல்வ பெருந்தகை ஆகியோர்  வந்து பார்த்து ஆறுதல் கூறிச் சென்றனர். விஜய் மட்டுமே அரசை எதிர்த்து துணிவாக கண்டணம் தெரிவித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் வந்து உதவினர். இந்த சம்பவம் பெரிதாக வெளியில் தெரிந்துவிடாமல் இருக்கவே அரசு தரப்பில் முயற்சித்தனர்.

காரணம், இந்த வட்டாரத்தில் தேர்தல் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் நிலையில் உள்ள அந்த ஆதிக்க சாதியின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்ற சுயநலம் தான்.

”நாங்களும் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி நீதி கேட்டு ஓய்ந்து விட்டோம். முதலமைச்சர் தரப்பில் இருந்து ஒரு ஆறுதல் மொழி கூட வரவில்லை. நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களே. எங்களுக்கும் சுதந்திரமாக அச்சமின்றி வாழ உரிமையுள்ளது என்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களும் ஏற்படுத்தவில்லை. இங்கே போட்டியிடும் கட்சிகளும் ஏற்படுத்தவில்லை. ஆகவே, தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்பதே பெரும்பத்து மக்களின் குரலாக உள்ளது.

நாங்குநேரி தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  ஆர். இசக்கிமுத்துவும், தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ச.செல்வம், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்குச் சாவடி அமைத்து அனைத்து ஊழியர்களும் காத்திருந்தும் வெகு நேரம் யாரும் வராத நிலையில் இந்தச் சூழலை தகர்க்க,  காவல்துறையினர் முயற்சியில் பக்கத்து ஊரில் இருந்து இரண்டு பேரை நிர்பந்தித்து, வலுக்கட்டாயமாக அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து  ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாகத் திருப்திபட்டுக் கொண்டது அதிகார வர்க்கம்.

சாதிகளுக்கு இடையில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்கும் செயல் திட்டத்தை அரசங்க தரப்பில் திட்டமிட வேண்டும். சமூக நீதி என்று வெறுமனே பேசுவதில் பயனில்லை. அதை சாத்தியப்படுத்த செயல் திட்டம் வேண்டும். பிரச்சினைகள் வரும் போது அரசியல் லாப, நஷ்டக் கணக்கு பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்க வேண்டும். சமூக மாற்றத்திற்கு  முற்போக்கு எண்ணம் கொண்டவர்களையும், காந்திய இயக்கத்தவர்களையும் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அஜிதகேச கம்பளன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time