உண்மை வழியில் வாழ்ந்த ஒப்பற்ற மனிதர் அப்துல் ஜப்பார்!

-யுக பாரதி

இன்னும் அவரது மறைவு நம்பமுடியாத செய்தியாகவும், மீள முடியாத துக்கமாகவும் என்னை ஆக்கிரமித்துள்ளது..!

அப்துல் ஜப்பார் அய்யாவை அவரது மகன் ஆசிப் மீரானின் வழியேதான் நான் அறிந்தேன்.

கிரிக்கெட் வர்ணனையாளர் என்னும் அடைமொழியைத் தாண்டிய அவருடைய இலக்கியப் பங்களிப்பை ‘காற்று வெளியினிலே’ நூலின் வழியே நான் அறிய நேர்ந்தது! சுயசரிதம் போல் அமைந்த அந்நூலில், அவருடைய இளவயது ஆர்வங்களும் ஆசைகளும் வெளிப்பட்டுள்ளன. இலங்கை வானொலியில் நாடக நடிகராக வாழ்வைத் தொடங்கிய அப்துல் ஜப்பார், அதன்பின் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறார். ஊடக மொழிக்கு கவர்ச்சியையும், வசீகரத்தையும் உருவாக்கிய பெருந்தகைகளில் அவர் குறிப்ப்டதக்கவர். அச்சர சுத்தமாக கம்பீரமாக வார்த்தைகளைப் பிரயோகித்து, அவர் நடத்திக்காட்டிய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் முத்திரை பதித்தவை. காற்று வெளியிடை நூல்நெடுக அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஒரு காலத்திய இலக்கிய ஆவணம்போல் எனக்குப்பட்டது.

அய்யா அப்துல் ஜப்பாரின் பெருமைகள் ஒன்றிரண்டு அல்ல. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் தன்னைத் தேய்த்து தகத்காயமாக பிரகாசித்திருக்கிறார். “மேடைப் பேச்சு என்பது யாருக்கு வந்த விதியோ என்று அலங்காரமாக ஆர்ப்பாட்டமாக நம் திறமையை மட்டும் வெளிகாட்டும் விஷயம் அல்ல. அது, வெறும் ஊருக்கு உபதேசமல்ல. அதில் நமக்கு ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. நாம் சொல்வது நமது செயலிலும் பிரதிபலிக்க வேண்டும். இந்த நினைவில் ஆழமான பாதிப்பு என் ஆன்மிகத் தேடலுக்கு ஆரம்பம் குறித்தது” என்று காற்று வெளியினிலே நூலில் அய்யா எழுதியிருப்பார்.

சட்டென்று ஊடக வெளிச்சம்  ஒருவர்மீது விழுந்துவிடாது. தகுதியும் திறமையும் ஒழுக்கமும் ஒருங்கே அமையாமல் இத்தனை வெற்றிகளை அவர் சாதித்திருக்கவும் வாய்ப்பில்லை. எப்பொழுதும் தொலைக்காட்சி விவாதங்களில் அவர் இடம்பெற்றால் அந்நிகழ்ச்சியை, வைத்த கண் வாங்காமல் பார்க்கும் நேயர்களில் ஒருவனாக நான் இருந்திருக்கிறேன். எதைச் சொன்னாலும், கூடுதலான அக்கறையும் ஆதாரமும் இல்லாமல் அவர் பேசுவதில்லை. எண்ணத்தைப் பரிசுத்தமாக வைத்திருப்பவர்களின் தோலும் தோற்றமும் சுருங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக அவர் இருந்தார். வயது ஒரு பொருட்டே அல்ல. வாழ்வில் நெறியை அல்லது வாழ்வின் நெறியைக் கடைபிடிப்பவர்கள் எந்த வயதிலும் இளமையுடன்தான் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக எண்பது வயதிலும் ஒரு தேனீயைப்போல உலக நிகழ்வுகளை உற்றுநோக்கி தன் தேடலைத் தொடர்ந்து வந்தார்!

அக்காலத்தில் வானொலி நிலையங்கள் மக்களுக்கு செய்துவந்த கலை இலக்கியப் பணிகளின் வரலாறுகளை அவர் நன்கறிந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உடன் பணியாற்றிய திறமையாளர்களை மனம் திறந்து பாராட்டுகிறவராக இருந்துள்ளார். பொதுவாக திறமையாளர்கள் தனக்கு நிகராக இன்னொருவரை சுட்ட அல்லது புகழத் தயங்குவார்கள். ஆனால், அய்யா அப்துல் ஜப்பாரோ தனக்கு முன்னாலும், பின்னாலும் இருந்த திறமையாளர்களை போற்றிப் புளகாங்கிதம் அடைபவர்.

தனக்குப் பாடம்சொல்லிக் கொடுத்த யார் ஒருவரையும் அவர் மறக்கவில்லை. சின்னச்சின்னசம்பவங்களைக் கூட விட்டுவிடாமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவர். எதையுமே தெளிவாகவும் திட்பமாகவும் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார்.  தன்னுடன் இணைந்து நடித்த பெண்களில் ஒருசிலர், தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தபோதும், எட்டவேண்டிய இலக்கிற்காக எல்லாவற்றையும் தள்ளி வைத்திருக்கிறார்.   திட்டமிட்ட செயல்களை முடிக்கும்வரை வேறு காரியத்தில் கவனம் செலுத்தாத அவருடைய பண்பே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. எண்பது வயதை  கடந்திருக்கும் அவர், இன்னமுமே இளமையான தமிழையும் மனதையும் வைத்திருப்பதுகூட அந்தப் பண்பினால்தானோ என்னவோ? என நான் அவருக்கு எண்பதாம் அகவைக்கு விழா எடுத்த நேரங்களில் வியந்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளருக்குக் கிடைக்கக்கூடிய உச்சபட்ச மரியாதையையும், அங்கீகாரத்தையும் அவர் பெற்றிருந்தார்.

ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புதிய செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் அவர், எப்பொழுதும் தன்னைத் தயார் நிலையிலேயே வைத்திருந்தார். இதுவரை அவர் எத்தனை மேடைகளைக் கண்டிருப்பார் என்கிற கணக்கு என்னிடமில்லை. ஆனால், நான் கலந்துகொண்ட பல மேடைகளில் அவருடையப் பேச்சுகள், மிக அற்புதமாகவே அமைந்தன. கையில் குறிப்பெதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடைபோல அவர் பேசிச்செல்லும் அழகிற்கு ஒப்பாக இன்னொன்றைச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. வருடமோ தேதியோ மாறாமல் வரலாற்றுச் செய்திகளைப் போகிறபோக்கில் சொல்லும் ஆற்றல், வேறு எவரிடமிருந்தும் அவரை வேறுபடுத்திக்காட்டும்.

இறைத்தூதர் முஹம்மத் என்னும் பெயரில் வெளிவந்துள்ள அவருடைய ஆங்கில பொழிபெயர்ப்பு நூல், அவர் சாதனைகளில் சிகரமாக எனக்குப் படுகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக பன்னூலாசியர் எம். ஆர். எம். அப்துற்-றஹீம் அவர்கள் உழைத்து உருவாக்கிய muhammed the prophet என்ற அற்புதமான ஆங்கில நூலை, தமிழில் அய்யா அப்துல் ஜப்பார் மொழிபெயர்த்திருக்கிறார். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய அந்நூலை தமிழில் மொழிபெயர்ப்பது எளிதான காரியமில்லை. ஒரு மொழிபெயர்ப்பு நூலை மூல நூலுக்கு நிகராக ஆக்கிக்காட்டத் தனித் தகுதி வேண்டும். மொழிப் பயிற்சிக்கு அப்பால், மூல நூலின் தன்மையை உள்வாங்காமல் அப்படியான மொழிபெயர்ப்பைச் செய்ய முடியாது. வாசிக்க ஆரம்பித்தால் ஆற்றொழுக்காக பக்கங்கள் புரண்டுகொண்டே இருக்கும். ஒரு தடையோ ஒரு சந்தேகமோ எழாதவாறு வாக்கியங்களை அவர் அமைத்திருக்கும்விதம் இது, மூலநூலா? மொழிபெயர்ப்பு நூலா? என்னும் ஐய்யத்தை ஏற்படுத்திவிடும். பன்னெடுங்கால வாசிப்பின் திரட்சியை மொத்தமாகக் கலந்து எழுதப்பட்ட அந்நூல்! என் விருப்பப் பட்டியலில் அவ்வப்போது வாசிக்கப்படும் நூலாக அந்நூல்இருக்கிறது.

இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே அறிந்திராத என்னையும் அந்நூல் ஆட்கொண்டு ஆச்சர்யப்படுத்தியது. பெரியார்தாசன் மொழிபெயர்த்த புத்தரும் அவர்தம் தம்மமும் என்ற அம்பேத்கரின் நூலுக்கு சற்றும் குறையில்லாத வகையில் அய்யாவின் மொழிபெயர்ப்பு விளங்குகிறது. தன் வாழ்வில் மேற்கொண்ட கடமைகளில் ஒன்றாகக் கருதியே அந்நூலை மொழிபெயர்த்திருக்கிறார். இரவு பகலாக ஆறு ஆண்டுகள் தொடர்ந்து அப்பணியில் ஈடுப்பட்டு உருவாக்கிய நூல் இது!

அப்துல்ஜப்பார் அய்யாவைப் பற்றிய எண்ண ஓட்டங்களில் எத்தனையோ இருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன், அய்யாவை சந்திக்க விரும்பியத் தகவல்தான் உச்சமானது. உலகப் பத்திரிகையாளர் சந்திப்பை புலிகள் ஏற்பாடு செய்தபோது, அதில் கலந்துகொண்ட அய்யாவை தனிப்பட்ட முறையில் பிரபாகரன் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஒரு மாபெரும் வரலாற்று நாயகனை ரசிகனாகப் பெற்ற பெருமையை அய்யா எளிதாக கடந்திருக்கலாம். ஆனால், என் நினைவுகளில் எப்பொழுதும் மின்னிக்கொண்டிருக்கும் சம்பவம் அதுதான். வானொலி நிகழ்ச்சி மூலம் ஒருவரை ஈர்த்துவிடலாம். என்றாலும், உலகமே வியந்துபார்த்த ஒரு தலைவனுடைய இதயத்தின் அடியாழத்தில் இடம்பிடிப்பது எத்தகையச் பெருச்செயல்? “நான் உங்கள் பரம ரசிகனய்யா” என்று தலைவர் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். அந்த கணத்திலும் அய்யா அப்துல் ஜப்பார் பெருமித உணர்வுகளால் உச்சாடணம் கொள்ளவில்லை.

இத்தனை ஆண்டுகால கலை இலக்கிய பணியில் அவரும் லாபம் சம்பாதித்திருக்கிறார். நல்ல பிள்ளைகளையும் நல்ல நண்பர்களையும் லாபமாக சம்பாதித்திருக்கும் அவர், தனக்குப் பின்னே தன்னைத் தொடர சிலரையாவது உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் அவர் சம்பாத்தியத்திலேயே பெரிய சம்பாத்தியம். வாழ்வை வெற்றி கொள்ள சாதுர்யத்தைவிட, நேர்மையும், எளிமையும் போதுமென்பதே அய்யா போதிப்பது. இளமையில் ஒழுக்கம், முதுமையில் ஆரோக்கியம் என்ற பழச்சொல், என்வரை இதுவரை உண்மையாகி இருக்கிறது என ஓரிடத்தில் கூறியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ செய்ய நினைத்து விடுபட்ட காரியங்களைச் செய்வதிலேயே அவர் கடைசி வரை தீவிரம் காட்டினார்!

ஒரு வாலிபனின் மிடுக்குடன் எதிர்கால நம்பிக்கைகளை எனக்குத் தந்த அவர், மேன்மேலும் எழுதப் போவதையும் பேசப் போவதையும் ஏந்திக்கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால்,இறைவன் அவரை அழைத்துக் கொண்டார் அவர் இழப்பிலிருந்து இன்னும் என்னால் விடுபடமுடியவில்லை!

கட்டுரையாளர்; யுக பாரதி

மணப்பத்தாயம், தெருவாசகம், அந்நியர்கள் உள்ளே வரலாம்… உள்ளிட்ட கவிதை தொகுப்புகளின் ஆசிரியர். கண்ணாடி முன், நேற்றைய காற்று, நானொருவன் மட்டிலும் உள்ளிட்ட கட்டுரை தொகுப்புகளின் ஆசிரியர். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய திரைப்பட பாடலாசிரியர்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time