இந்தியாவின் மிகப் பெரிய தொழில் மையமான நொய்டா, தொழிலாளர் போராட்டங்களால் பற்றி எரிகிறது. அடிமாட்டுச் சம்பளம், அரை வயிற்றுக் கஞ்சி, கண்ணியமில்லாத வாழ்க்கை… என நிர்பந்திக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடியதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது பாஜக அரசு;
இந்தியாவில் ஐ.டி செக்டார் தலையெடுத்து இருபது வருடங்களாகிறது. ஒரு பக்கம் நல்ல சம்பளம் பெற்று வந்த இளைஞர்கள் அடிக்கடி வேலை இழக்கிறார்கள்…, பாதுகாப்பற்ற வாழ்க்கையில் உழல்கிறார்கள் என்றால், மறுபக்கம் பிரம்மாண்ட தொழிற்சாலைகளில் பணி புரியும் எளிய தொழிலாளர்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.
டெல்லி அருகேயுள்ள நொய்டா மற்றும் காசியாபாத், சோனிபட், குர்கான், பானிபட், கவுதம் புத்தா நகர் போன்றவை உத்தரப் பிரதேசத்தின் முக்கியத் தொழில் துறை மையங்கள் என்பதைக் காட்டிலும், இந்திய அளவில் முக்கியமானவையாகும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடமாகும். இங்கு வாகன உதிரிபாகங்கள், விமான உதிரி பாகங்கள், மின் / மின்னணு சாதனங்கள்.. உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழில் மையத்தில் செயல்படும் மிக லாபகரமாகச் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்களும், தேசிய நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு வாழ இயலாத சம்பளத்தை நிர்ணயித்து வழங்கிக் கொண்டுள்ளார்கள்…!

வானுயர்ந்த கட்டிடங்கள், எழிலார்ந்த கண்ணாடி மாளிகைகள், பளபளக்கும் சாலைகளில் சறுக்கிச் செல்லும் சொகுசு கார்கள்..என்பதான இந்தச் சூழலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும், அவர் தம் குடும்பத்தினரும் சொல்லொண்ணா வறுமையில் வாழ்கின்றனர்.
வாழ இயலாத சம்பளம்! வறுத்தெடுக்கும் உழைப்புச் சுரண்டல்;
8 மணி நேரத்திற்கு பதிலாக 10 மணி நேர உழைப்பு தந்தாலும், இவற்றில் வேலை பார்க்கும் ஆண் தொழிலாளர்கள் ரூபாய் 9,000 த்தில் இருந்து 12,000 வரையும், பெண் தொழிலாளர்கள் ரூபாய் 7,000 லிருந்து 11,000 வரையிலும் தான் பெறுகின்றனர்.
இந்த சம்பளத்தில் வீட்டு வாடகை, மின் கட்டணம், செல்பேசி செலவுகள், போக்குவரத்து, மளிகை, காய்கறி செலவுகள், துணிமணி, குழந்தைகள் படிப்பு, மருத்துவ செலவு.. என எப்படி சமாளிக்க முடியும்?
அரை வயிற்றுக் கஞ்சியோடு வாழ்கிறார்கள்…! பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் வேலைக்கு அனுப்புகிறார்கள். ..!

பல ஆய்வுகளின் படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் தற்போது நம் நாட்டில் ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ரூ 26,000 தந்தால் மட்டுமே அவனால் சுயமரியாதையுடன் குடும்பம் நடத்த முடியும்.
இந்தப் பெரிய நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். ஆனால், கடினமாக வேலை செய்யும் தொழிலாளிக்கோ, அடி மாட்டுச் சம்பளம் தந்து மனிதாபிமானமின்றி நடத்துகின்றார்கள்.
இவர்களுக்கு தொழிற்சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. கழிவறை மற்றும் சுகாதார வசதிகள் மிக கேவலமாக உள்ளது. முன்னூறு முதல் 500 பேர் வேலை பார்க்கும் இடத்தில் இரண்டு முதல் நான்கு கழிவறைகளே உள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சரிகட்டிவிட்டு, மிகக் குறைந்த சம்பளத்தை தொழிலாளர்களுக்கு தந்து லாபம் ஈட்டுவதை தங்கள் சாமார்த்தியமாகக் கருதுகிறார்கள். இந்த முதலாளிகளை மகிழ்விக்கும் வண்ணம் சமீபத்தில் நான்கு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை செய்தது பாஜக அரசு.
இந்த தொழிலாளர்களின் வேதனைகளாவன;
மிகக் குறைவான- வாழ இயலாத ஊதியம்.
அதிக நேரம் வேலை வாங்குவது.
காலம் தாழ்த்தி சம்பளம் தருவது.
பாதுகாப்பற்ற பணிச்சூழல்.
ஒப்பந்தக் கூலியாகவே பல்லாண்டுகள் வைத்திருப்பது.
ஆகியவற்றை களையக் கோரி பல முறை கோரிக்கை வைத்தும் நடக்காததால், அண்மையில் தொடர் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது.
புறநகரில் நெரிசலான, குறுகிய குடியிருப்புப் பகுதிகளில் வாழும் இவர்கள், சொற்ப ஊதியத்தால் பல ஆண்டுகளாகத் அல்லாடி வருகின்றனர். சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுகள், குறிப்பாக எரிவாயுப் பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வும் இவர்களை கடுமையாக பாதித்த நிலையில், வாழ வழியின்றி தெருவில் இறங்கி போராடத் துணிந்து விட்டனர், சுமார் 50,000 தொழிலாளர்கள்.

இவர்கள் பல்லாண்டுகளாக தாங்கள் அடக்கி வைத்திருந்த கோபம் பொங்கி வெடித்தது! தங்கள் வயிற்றில் நாளும் கனன்று கொண்டிருக்கும் பசித் தீயை தொழிலாளர்கள் காவல் துறை வாகனங்களுக்கு வைத்தனர். கற்களை வீசி எரிந்தனர். காவல் துறை களத்தில் இறங்கி வேட்டையாடி 350 பேரை கைது செய்து, அடித்து நொறுக்கி சிறையில் தள்ளியது. கைதானவர்களை அவர்கள் குடும்பத்தாரோ, தொழிற்சங்கத் தலைவர்களோ கூட சந்திக்க விடாமல் கெடுபிடி செய்கிறது.
பாகிஸ்தான் சதியாம்!
மறுபக்கம் உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்திய நாத், அவரது அமைச்சர் அனில் ராஜ்பூர் ஆகியோர், ’’இந்த தொழிலாளர் போராட்டம் பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டுள்ளது. இது நிச்சயம் பாகிஸ்தான் சதியே’’ என்று பேசி, நிலைமையை திசை திருப்புகின்றனர்.
இதற்கிடையே தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசிய யோகி ஆதித்தியநாத் 2,500 முதல் 3,000 வரை சம்பள உயர்வு தந்தால் போதும் என கட்ட பஞ்சாயத்து செய்துள்ளார்.

இது மிகக் குறைவு. 26,000 சம்பளம் தற்போது முடியாவிட்டாலும் 20,000 தர வேண்டும் என்கிறார்கள், தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளாவன;
நியாயமான சம்பளத்தை உறுதிபடுத்துங்கள்
சரியான நேரத்திற்கு சம்பளம் தாருங்கள்;
பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் தவிருங்கள்.
பல்லாண்டுகள் வேலை செய்தவர்களை நிரந்தரமாக்குங்கள்.
தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்களை அமல்படுத்துங்கள்.
இந்த குறைந்தபட்ச உத்திரவாதம் கூட தொழிலாளர்களுக்கு தரமுடியவில்லை என்றால், இது என்ன அரசாங்கம்? சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அடிமை பத்திரம் எழுதித் தரும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?
தமிழ்நாட்டிலும் இதே போல பாக்ஸ்சன், சாம்சன் போன்ற வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் தொழிலாளர்களுக்கு அவர்கள் தரும் சம்பளத்தில் 20-ல் ஒரு பங்கே இங்கு தருகின்றனர். அதாவது ‘சீப் லேபர் ‘என்ற உத்திரவாதத்தை மத்திய, மாநில அரசுகளிடம் அவை முன் கூட்டியே உத்திரவாதம் வாங்கிக் கொண்டு தான் இங்கு வருகிறார்கள்.
நம் அரசுகளோ, இப்படி அவர்கள் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுப்பதற்கு தோதாக நிலம், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை மிக மலிவான கட்டணத்தில் தந்து ஊக்குவிக்கிறார்கள்.
அதாவது தொழிலாளியை அடிமையாக்கும் வர்த்தகத்தை ஆதரிப்பதற்கென்றே சிவப்பு கம்பளம் விரித்து அவர்களை வரவேற்கிறார்கள்.
உண்மையிலேயே நம் நாடு சுதந்திரம் பெற்று விட்டதா? இல்லை சூட்சுமமாக அடிமைக் கயிறு கைமாற்றித் தரப்பட்டுள்ளதா? என்பது தான் தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன்
























விடுதலை அடையவில்லை…
இங்கிலாந்தின் வணிகரகளிடமிருந்த தாம்புக் கயிறு இன்று பன்னாட்டுப் பெருநிறுவனங்களிடம், அரசியல் வியாதிகள் தரகுக்காக தமக்கு வாக்களித்தவர்களையே பரத்தைகளாக்குகின்றனர்.
தொழிலாளர்களுக்கான இயக்கங்களோ, தரகு அரசியல் வியாதிகளிடம், ஒட்டுண்ணியாய் ஒட்டிக் கொண்டு பிழைப்பை நடத்துகின்றன.