கருத்துக் கணிப்புகளைக் கடந்து உண்மையை தரிசிப்போம்!

-சாவித்திரி கண்ணன்

குழப்பத்தைத் தான் தந்துள்ளார்கள்! அவரவர் விருப்பத்தை கருத்து கணிப்பாக்கி உள்ளார்களா? என்றும் தோன்றுகிறது! மனசாட்சியுள்ள வாக்காளர்கள் மறைந்து போகவில்லை. பார்ப்பன லாபியை பக்கபலமாக்கிக் கொண்டது திமுக. தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதமானால், தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலை குறித்த ஒரு அவதானிப்பு;

பிரபல ஊடகங்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள் என்று நினைப்பதே பிழையாகிவிட்ட காலமல்லவா இது?

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எழுதவோ, பேசவோ ஆர்வம் காட்டாத இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் இப்படி கருத்து கணிப்பு நடத்தி மக்கள் கவனத்தை சிதறடிக்கிறார்கள்.

மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதை கண் கூடாக பல இடங்களில் பார்த்த வகையில், ‘ஐந்தாண்டு முடிவில் இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்’ என வலுவாக நம்பினேன்.

ஆனால், அந்த அதிருப்திகளை சரி செய்ய பல இலவசங்கள், பெண்களுக்கு பணம், பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை அள்ளி இறைத்ததோடு, சமூக ஊடகங்களில் பெரும் பிரச்சாரத்தை தனக்கு பாசிடிவ்வாக செய்தது திமுக அரசு.

தமிழகத்தில் கருத்துருவாக்கத்தை வலுவாக கட்டமைக்கக் கூடிய ‘பிராமின் லாபி’யை ஸ்டாலின் வளைத்து போட்டது தான் அவரது மாஸ்டர் பிளான்களில் பிரதானமானது.

ஸ்டாலின் ஆட்சியை ஆதரித்த பிராமண பத்திரிகையாளர்கள்;

நாற்பது ஆண்டுகளாக திமுகவை கடுமையாக விமர்சித்த தினமணி வைத்தியநாதன், கல்கி பிரியன்…ஆகியோர் திமுக ஆட்சியின் குற்றங்களை மறைத்து புகழ்ந்தார்கள். அக்மார் ஆர்.எஸ்.எஸ்காரனான ரங்கராஜ் பாண்டே தந்தை இறப்புக்கு சென்றது தொடங்கி பாண்டேவின் சிபாரிசுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது ஸ்டாலின் ஆட்சியில்! (இதில் அரசு டிவிக்கு ரங்கராஜ் பாண்டேயின் நண்பர் முரளியை சி.இ.ஒ ஆக்கியதை நான் ஆதாரத்துடன் அறம் இணைய இதழில் எழுதியதையடுத்து அவமானப்பட்டு பின் வாங்கினார்கள்.) ஆகவே அவ்வப்போது பாண்டேவும் ஸ்டாலின் ஆட்சியை புகழ்ந்தார்.

திமுகவை கடுமையாக சாடி எழுதிக் கொண்டிருந்த தினமலருக்கு அரசு விளம்பரங்களை அள்ளித் தந்தும், தினமலர் ஓனர்கள் சம்பந்தப்பட்ட கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்குகளை நீர்த்து போக வைத்தும் திமுக அரசு தாஜா செய்ததால், தினமலரும் தன் தாக்குதல் வீரியத்தை குறைத்து முதலமைச்சர் ஸ்டாலின் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியது.

திமுகவை கடுமையாக விமர்சிக்கும் துக்ளக் ரமேஸின் அறுபதாம் கல்யாணத்திற்கு வீடு தேடிச் சென்று முதல்வர் வாழ்த்தினார். அதனால், அதிமுக ஆதரவாளரான துக்ளக் ரமேஷ் தீவிர எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளரானார்.

2021 வரை திமுக எதிர்பாளர்களாகவும், சங்கிகளாகவும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட தினத்தந்தியின் ஹரிஹரனும், அசோக் வர்த்தினியும் தங்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தி, மிக மென்மையான அணுகுமுறையைக் கையாண்டார்கள்.

நடுநிலையாளர் என்று நம்பப்பட்ட அறிவு ஜீவிகள் ஹிந்து ராம், ஜென்ராம், ராஜன்குறை, ஸ்ரீராம் சர்மா, லஷ்மி சுப்பிரமணியன், கவிதா முரளிதரன், யூ டியூப்களில் தொடர்ந்து திமுகவை ஆதரித்துப் பேசும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், ஆண்டாள் பிரியதர்ஷ்ணி, ஆடிட்டர் ராம சுப்பிரமணியன், டாக்டர் ஷர்மிளா போன்றவர்களும், தீவிர கம்யூனிஸ்ட்டாக நம்பப்பட்ட தோழர் மருதையன் போன்றவர்களும் திமுக ஆட்சியை காப்பதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கருதி எழுதியும், பேசவும் தொடங்கினார்கள்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி, ‘திமுக- காங்கிரஸ் பிரியக் கூடாது’ என வெளிப்படையாகவே டிவிட் போட்டார்.  இதன் மூலம், ‘விஜய்யின் தவெக காங்கிரசோடு சேர்ந்து பலம் பெற்றுவிடக் கூடாது’ என பாஜக விரும்பியது அமபலமானது. குமுதம் பத்திரிக்கை உரிமையாளரான வரதராஜன் பக்கா பாஜக ஆதரவாளர் என்றாலும் திமுக ஆட்சியை புகழ்ந்தும், திமுக அரசின் சில குற்றங்களை எழுதாமல் தவிர்த்தும் ஆதரித்தார். அதே போல விகடன் பத்திரிகை முதலாளி சீனிவாசனுக்கு நூலக ஆர்டர் அள்ளித் தரப்பட்டதால், ஜூனியர் விகடன் அதிகமாக திமுக அரசை விமர்சிக்காமல், தவிர்க்க முடியாத சில விஷயங்களில் மட்டும் திமுக அரசை விமர்சிக்கும் மென்மையான அணுகுறையைக் கடை பிடித்தார்.

ஊடகத் துறை ‘பிராமின் லாபி’யை இந்த அளவுக்கு தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட ஒரு ஆட்சியாளரை இது வரை தமிழகம் கண்டதில்லை என்றால், தொழில் துறையில், கலைத் துறை, கல்வித் துறையிலும் கூட ‘பார்ப்பனர் போற்றுதும்’ என்ற மந்திரத்தைத் தான் செயல்படுத்தினார்.

கல்வி, தொழில்துறை, கலை, ஆன்மீகத் துறை பிராமின் லாபி:

தமிழகத்திற்கான கல்வியை உருவாக்கும் குழுவில் பேராசிரியர் இராமானுஜம், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய ஐந்து பார்ப்பனர்களை நியமித்து தேசிய கல்வி கொள்கையையே சிற்சில மாற்றங்கள் செய்து தமிழக கல்வி கொள்கையாக்கினார்.

‘நம்ம ஸ்கூல்’ என்ற மிகப் பெரிய ஸ்கூல் பிராஜக்ட்டிற்கு டிவிஎஸ் வேணு சீனிவாச ஐயங்காரைப் போட்டார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சாகா கூட்டத்திற்கு கோவையில் மாநகராட்சி பள்ளி தரப்பட்டது.  பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இயக்கங்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க யோகா வகுப்புகள் என்ற போர்வையில் உள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா சிமெண்ட் சீனிவாச ஐயருக்கும் திமுக குடும்பத்திற்குமான நெருக்கம் அனைவருக்கும் தெரிந்ததே…!

சங்கர மடம், ஜீயர் மடம் ஆகியவற்றையும் தன் ஆதரவாளர்களாக்கி அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்தார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அரசுடமையாக்கிய ஜெயலலிதாவின் செயலுக்கு நீதிமன்றம் தந்த ஆதரவான தீர்ப்பை உறுதிபடுத்தாமல், அவர்களுக்கே திருப்பி ஒப்படைத்தார். தன் மருமகன் சபரீசனின் ஆன்மீக குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தவறாமல் செயல்படுத்தினார்.

தமிழ், சமஸ்கிருதம் இரண்டையும் கலந்து அனைத்து கோவில் குடமுழுக்குகளை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்திரவை துச்சமாக மதித்து சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தினார். அற நிலையத் துறையை அந்தணர் நலத் துறையாக்கி அர்ச்சகர்களை மகிழ்வித்தார். இதனால் தான் கடும் பாப்பனரான சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர் உமா ஆனந்த்  ”ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சி” எனச் சொன்னார்.

கலைத் துறையில் கமலஹாசன், எஸ்.வி.சேகர், நடிகை வினோதினி ஆகியோர் ஸ்டாலின் புகழ் பாடி வருகிறார்கள். பார்ப்பனப் பெண்ணை மணந்து பார்ப்பன சுற்றத்தோடும், கருத்தியலோடும் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தைத் தான் பாஜக தமிழக அரசியலுக்கு கொண்டு வரத் திட்டமிட்டது. அப்படிப்பட்ட ரஜினிகாந்த் தற்போது  இந்த ஆட்சி குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்காமல் திமுக அரசோடு மிகுந்த இணக்கம் பாராட்டி வருகிறார். ரெட் ஜெயண்ட் எடுத்த இந்தி போராட்டத்தைக் கூறும் ‘பராசக்தி’ படத்திற்கு பார்பனக் கருத்தியலில் ஊறித் திளைத்த சுதா கொங்கராவை இயக்குனராக்கியது திமுக குடும்பம்.

ஆட்சியாளர்கள் மீதான மக்கள் அதிருப்தியை மறைக்கும் அல்லது மறக்கடிக்கும்  கருத்துருவாக்க பிரச்சார லாபியைக் கை கொள்வதில் பிராமணர்களுக்கு மிஞ்சிய சக்தி உலகத்தில் வேறில்லை…! மேலும் தங்களை கேள்விக்கிடமில்லாமல் ஆதரித்து போற்றும் ஆட்சியை தங்கள் பங்கிற்கு தீவிரமாக பாதுகாப்பதை பிராமணர்கள் குலதர்மாக கொண்டவர்கள்.. என்பதற்காகவே இவ்வளவு விரிவாகச் சொன்னேன்.

அனைவரையும் அரவணைத்துச் சென்ற அதி சாமார்த்திய ஸ்டாலின்;

இப்படியாக பாஜக பார்ப்பன லாபியையும் பக்க பலமாக்கிக் கொண்டு,

தி.க வீரமணி, சுப.வீ போன்ற திராவிட லாபியையும் திசைமாற்றி தனதாக்கிக் கொண்டு,

தொழிலாளர் விரோதக் கொள்கையை செயல்படுத்திக் கொண்டே, முற்போக்கு முகாம் கம்யூனிஸ்டுகளையும் திருப்திபடுத்தி வளைத்துப் போட்டு,

அவ்வப்போது சிணுங்கிய காங்கிரசையும் பொறுமையாகக் கையாண்டு…,

கூட்டணியை சிந்தாமல், சிதறாமல் வழிக்கு கொண்டு சென்ற ஸ்டாலினின் அதி சாமார்த்தியம் அசாதாரணமானது.

யாருக்கும் ஒரு விலை உண்டு! அந்த விலையை அறிந்துணர்ந்து தனக்கு ஆதரவாளராக்கிக் கொள்ளும் ஆற்றலும், தாராள குணமும் ஆட்சியாளருக்கு ஏராளமுண்டு.. என்பதை நிதர்சனமாக்கியதே ஐந்தாண்டு ஸ்டாலின் ஆட்சியின் ஆகப் பெரிய  நரித் தந்திரமாகும்.

இன்னொரு வகையில் எந்த இயக்கம் தங்கள் அதிகாரத்திற்கு எதிராக உருவானதோ, அந்த இயக்கத்தை தங்களை கேள்விக்கிடமில்லாமல் ஆதரித்துத் தான் அதிகாரத்தில் கோலோச்ச முடியும் என்ற நிலைமைக்கு கொண்டு வந்தது பார்ப்பனர்களின் நரித்தந்திரமாகும்.

ஆக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் இன்னும் அதிகமாக ஊழல், முறைகேடுகளை அரங்கேற்றுவதோடு, பாஜகவை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டி மறைமுகமாக பாஜக வளர்வதற்கு உதவுவார்கள். கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி இரண்டு மடங்கானதற்கு திமுகவே காரணமாகும். அதனால் தான் அதிமுகவை அரவணைத்து அழித்து விட்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரத் தோதாக திமுக ஆட்சியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாமல் பார்த்துக் கொண்டது பாஜக.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை கிட்டத்தட்ட காணாமலடித்து, திரிணமுள் காங்கிரஸ் காலூன்ற உதவிய பாஜக, தற்போது திரிணமுள்ளை திணறடித்து இரு துருவ அரசியலைச் செய்கிறது. இந்த முறை முடியவிட்டாலும் அடுத்த முறையாவது மம்தாவை தோற்கடித்து மேற்கு வங்கத்தில் காலூன்றும். இங்கேயும் அது போல பாஜக – திமுக என்ற இருதுருவ அரசியலுக்கான திட்டமிடல் தான் நடக்கிறது. இது சத்தியம்.

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வருவது தமிழகத்தில் வலுவான எதிர்கட்சியாக பாஜக காலூன்றவே உதவும். அதிமுக இன்னும் ஐந்து வருடங்கள் தாக்கு பிடித்து வலுவோடு நிற்குமா தெரியவில்லை. அதிமுக பலவீனப்படுவது பாஜகவிற்கு வலு சேர்க்கும். தவெக தன் தனித் தன்மையை தொடர்ந்து பாதுகாத்து களத்தில் நிற்குமா? என்றும் தெரியவில்லை.

திமுக ஆட்சிக்கு வருவதைக் காட்டிலும் எதிர்கட்சியாக இருப்பதே பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும். ஏனென்றால், எதிர்கட்சி அரசியலை சிறப்பாக முன்னெடுப்பதில் – ஆட்சியாளர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதில் -திமுகவுக்கு நிகராக வேறு கட்சி எதுவுமில்லை.

பார்ப்போம், இன்னும் மனசாட்சியுள்ள வாக்காளர்கள் மறைந்துவிடவில்லை. பணபலம், பிரச்சார பலம், அதிகார பலம் ஆகியவற்றால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமானால், வரக் கூடிய ஐந்தாண்டுகள் தமிழகத்திற்கு சோதனைக் காலம் தான்!

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time