இன்றைய அரசியல் மக்களுக்கானது அல்ல. இது சந்தைக்கானது. சந்தை, சமூகம், அரசு என்ற மூன்று சக்திகள் இயங்கும் விதத்தில் தான், எது எதை நோக்கி இயங்குகின்றது, அதன் விளைவுகள் என்ன? என்று நாம் தீர்மானிக்க முடியும். மக்களின் எழுச்சி போராட்டங்களை சந்தை எப்படி மழுங்கடிக்கிறது என அலசுகிறார் பேராசிரியர் க.பழனிதுரை
நவீன காலத்தில் தேசிய அரசு உருவான பிறகு பொருளாதாரச் செயல்பாடுகளையும், சமூகச் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகவே அரசு விளங்கியது. இன்றைய மக்களாட்சி நடைபெறும் சூழலில் இந்த மூன்று சக்திகளும் வலுப்பெற்று ஒன்றுடன் ஒன்று இணைந்தும் எதிர்த்தும் செயல்படும் சூழலில் எந்த சக்தி யாருக்காக எப்படி செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவோருக்கு நன்மைகள் வந்தடைகின்றன. அந்த வளர்ச்சி வரலாற்றை நாம் பார்த்து வருகின்றோம்.
இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு பங்கேற்க முடியாதவர்கள் புறம் தள்ளப்படுகின்றனர். இன்று உலகில் புறம் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்தியாவிலும் புறம் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 கோடி. இவர்களுக்குத் தான் அரசு உணவு தானியத்தை பொது வினியோகத் திட்டத்தில் விலை இல்லாமல் கொடுத்து, பட்டினிச் சாவு இன்றி பாதுகாக்கின்றது. இதே போல் இன்ன பிற இலவசத் திட்டங்களை அறிவித்து அவர்கள் வெள்ளையர்கள் காலத்தில் நிகழ்ந்தது போல் அடிப்படை வசதிகளற்று வறுமையின் கோரப் பிடியில் வாழ்ந்து இறந்து விடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது அரசு.

இன்று இதைப் புரிந்துகொள்ள சந்தை அதாவது பொருளாதாரம் அதை வளர்க்க வளர்ந்த கட்டமைப்புக்கள் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். அதேபோல் அரசு, அரசுக் கட்டமைப்புக்கள் உருவாகி, வளர்ந்து செயல்பட்டு தன் செயல்பாடுகளை தானே செய்ய இயலாது சந்தையுடனும், சமூகத்துடனும் கை கோர்த்து செயல்படுவதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சமூகத்தில் எந்தக் குழுக்களெல்லாம் மாற்றத்திற்குத் தகுந்தவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு சூழலை தன்வயப்படுத்திச் செயல்பட்டார்களோ, அவர்களையெல்லாம் சந்தையும், அரசும் வெற்றிப்படிக்கட்டில் நிற்க வைத்துவிட்டது.
இதில் சோகம் என்னவென்றால், இதில் வெற்றி பெற்ற குழுக்கள் இரண்டு.
ஒன்று சந்தைக்காரர்கள்,
இரண்டு அரசியல்வாதிகள்.
இந்த இரண்டு தரப்பும் பணம் செய்வதையே குறிக்கோளாக்கி, செயல்பட்டு வருவதை உலகம் இன்று பார்த்து வருகிறது.

மேற்கூறிய கருத்துக்களை புரிந்து கொள்ள நான்கு தொழிற் புரட்சிகளையும், நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் அரசு உருவாகி வளர்ந்து, பெருத்து தன் செயலை ஆற்ற இயலாது கையறு நிலையில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது சமூகம் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற அது தொடர்ந்து செயல்படும் போது சமூகத்தில் உள்ள எந்தக் குழுக்கள் சமூக, பொருளாதார அரசியல் விடுதலையை பெற்று வாழ்கின்றன, எந்தக் குழுக்கள் புறந்தள்ளப்பட்டு பின் தங்கி இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் புரிந்து கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டும் சக்தி மட்டுமே சமூகத்திற்கு குறிப்பாக புறம் தள்ளப்பட்டு வாழ்க்கையை போராட்டமாக நடத்தி வரும் மக்களுக்கு வழிகாட்ட முடியும். இதை எளிதாகப் புரிந்து கொள்ள சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளை எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1990 வரை, அரசியல் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக களத்தில் நின்று போராடின. மக்களும் அவர்களுடன் இணைந்தனர். போராடி பல பிரச்சினைகளுக்கு அரசின் மூலம் தீர்வும் கண்டனர். அந்தப் போராட்டங்களுக்கு மக்களிடமே நிதியைப் பெற்றுக் கொண்டு செயல்பட்டன. மக்கள் மத்தியில் அரசியல் விவாதம் இருந்தது. கொள்கைகள், கோட்பாடுகள் சித்தாந்தங்கள் விவாதிக்கப்பட்டன.
மக்களுக்கு கட்சிகளின் மேல், தலைவர்களின் மேல், சித்தாந்தங்களின் மேல் ஈர்ப்பும் இருந்தது. மக்கள் கட்சிகளை நோக்கி வந்து கட்சிகளுக்குள் ஐக்கியமாகினர். கட்சிகளில் கட்சிக்காரர்கள் உரிமை கொண்டாடினர். கட்சிகளை அவர்கள் தான் தாங்கிப் பிடித்தனர். கட்சியின் மீதும், கட்சித் தலைவர்கள் மீதும், கொள்கைகள் மீதும் அளவற்ற பற்றும் நம்பிக்கையும் கொண்டு கட்சி எனக்கென்ன செய்தது என்று நோக்காமல் சமூகத்திற்கு அது என்ன செய்யப் போகிறது? என்ற எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டு, செயல்பட்டனர் கட்சிக்காரர்கள்.
முதலில் இந்த பந்தத்தை சந்தை அழித்து எரிந்து விட்டது, தன் அசுர பணபலத்தாலே. சந்தை கட்சிகளுக்கு பணம் தந்தது மட்டுமல்ல, வாழ்க்கைச் சுகத்தை அனுபவிக்க கட்சித் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் கற்றுக் கொடுத்து விட்டது. ஒரு ரூபாய் கட்சிக்காரர் கட்சிக்கு கொடுப்பது ஒரு உணர்வு பூர்வ பங்கேற்பு. இன்று அதே கட்சிக்காரருக்கு கட்சி தரும் பணம் அவர்களை அந்நியப்படுத்தி கட்சியின் பந்தத்திலிருந்து வெளியேற்றிவிட்டது. இன்று கட்சிக்காரர்கள் கட்சியின் பயனாளிகள்.
என்று புதிய பொருளாதாரக் கொள்கை இந்த நாட்டுக்குள் வந்ததோ, அன்றே கட்சிகளை சந்தைப் பக்கம் ஈர்த்து கட்சிகளையும் கம்பெனிகள் ஆக்கிவிட்டன.
என்று கட்சிகள் கம்பெனிகள் ஆனதோ, அன்றிலிருந்து கட்சிகள் போராட்டத்தை விட்டு விட்டன.
கட்சிகள் போராட்டத்தையே மறந்து விட்டன. போராட்டத்திற்கு மாற்றுக் கண்டு பிடித்து விட்டன கட்சிகள். அது தான் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம். கட்சிகள் தாங்கள் இருக்கிறோம் என்பதை காண்பிக்க அந்த ஆர்ப்பாட்டம்.
ஆனால் கவர்ச்சிகரமாக கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கட்சிகளிலிருந்து கொள்கையுடன் செயல்பட்ட கட்சிக்காரர்கள் சினிமா போல் வெளியேற்றப்பட்டு தரகர்களும், ஒப்பந்தக்காரர்களும் கட்சிக்குள் புகுந்து விட்டனர். இதன் விளைவு கட்சிகள் நடத்த அனைத்துக்கும் வாடகைக்கு ஆட்கள் பிடிக்கப்படுகின்றனர். இதற்கான பெரு நிதி சந்தையிலிருந்து வருகின்றது.
இன்றைய வளர்ந்த பொருளாதாரச் சூழலில் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்தனவா? என்றால், இல்லை என்பது தான் பதில். உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை அதை உறுதிப்படுத்துகிறது. மக்கள் பிரச்சினைகள் கூடுகின்றன, ஆனால், அதற்காகப் போராட கட்சிகள் முன்வருவது இல்லை. இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட மக்களே போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகின்றனர். இந்த முப்பது ஆண்டு காலத்தில் அந்தப் போராட்டங்கள் சிறிதும் பெரிதுமாக 50,000 தாண்டி நடந்தேறியுள்ளன என்பதை ஓர் ஆய்வு கூறுகின்றது.

அப்படி போராடி மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டார்களா? வென்றார்களா? அதுவும் இயவில்லை. காரணம், அரசியல் கட்சிகள் அவற்றை முன்னெடுக்கவில்லை. இதில் வெற்றி பெற்றது இரண்டே போராட்டங்கள் தான். ஒன்று விவசாயிகளின் டெல்லிப் போராட்டம். ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் நடத்திய போராட்டம். கல்கத்தாவில் நடந்த மருத்துவர்கள் போராட்டமும் தோல்வியைத் தான் தழுவியது. அதன் விளைவு தான் மக்களுக்கு கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தது. அதே போல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். சித்தாந்தங்கள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். ஒட்டு மொத்தத்தில் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு விட்டனர்.
மக்கள் அரசியலில் ஆர்வமற்று புதிய சக்திக்காக காத்து இருக்கின்றனர். மக்கள் விரக்தி நிலைக்குச் செல்லாமல் சந்தை பொது மக்களை புலன்களைத் தூண்டும் செயல்களுக்குள் புகுத்தி நுகர்வில் புகுத்தி ஒரு மயக்க நிலையில் வைத்துக் கொண்டுள்ளது. மதங்களும் மக்களை புதிய மயக்க நிலைக்கு கொண்டு சென்று விட்டன.
ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டும் மக்கள் பெருந்திரளாக கூடி விடுகின்றனர். மக்கள் தங்கள் கொதிப்பை அடக்க இயலாமல் வெடிக்கும் நிலைக்கு வருகின்ற போது விளைவுகள் பற்றி கவலை கொள்ளாமல், திரள்கின்றனர். ஒட்டு மொத்த மக்கள் திரள் அரசுக்கு அவர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. அந்தப் பெருந்திரளைப் புரிந்து முடிவுகள் எடுப்பதற்குப் பதிலாக அதை அடக்க முயற்சிக்கின்றன நம் அரசும், கட்சிகளும் தன் பரிவாரங்களை வைத்து.
டெல்லியில் ஒரு பெரும் மக்கள் திரள். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக. அதேபோல் டெல்லியில் விவசாயிகளின் பெரும் போராட்டம். அடுத்து ஊழலுக்கு எதிரான பெரும் மக்கள் திரள். அடுத்து தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர் போராட்டம். இதுபோன்று எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. ஒருசில வெற்றி பெற்றன. பல வீழ்ந்தன. இதில் மக்களும் கற்றுக் கொள்ளவில்லை, இதற்குக் காரணம், அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழிகாட்டும் இடத்தில் இல்லை. ஆட்சியாளர்களும் கற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு சந்தைக்காரர்கள். தங்கள் நிதியுடன் ஆலோசனை வழங்கி மக்களை மேய்க்க கற்றுக் கொடுப்பதால்.
ஜல்லிக் கட்டுப் போராட்டத்தை நடத்தியவர்கள் இளைஞர்கள். அதில் ஜல்லிக்கட்டு என்பது தான் அதன் முதல் கோரிக்கை. அடுத்து அங்கு நடந்த நிகழ்வுகளை விவாதங்களை கவனித்தவர்களுக்கும் அவர்களுடன் பயணித்தவர்களுக்கும் அங்கு நடந்த விவாதங்கள் என்னவென்று தெரியும். அங்கு எதிர்காலத்திற்கான பல கருத்தாக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவைகள் கூறும் செய்தி என்ன என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்து விடும். அங்கு நடந்த விவாதங்கள் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், தற்சார்பு வாழ்க்கை, விவசாய மேம்பாடு, வேலை வாய்ப்பு, சுற்றுச் சூழல், கல்வி, மருத்துவம், வணிகம், அரசியல் அனைத்தும் காத்திரமாக விவாதிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு நடத்தி அவர்களை சமாதானப்படுத்தியதாக எண்ணி, ஆட்சியாளர்கள் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் கொதி நிலையை உணர்ந்து செயல்படவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களின் செயல் திட்டம் விவாதம் அவர்களுக்குள் தொடர்ந்த வண்ணம் தான் இருந்தன. அரசியல் கட்சிகள் வழிகாட்டாத நிலையில், அந்தக் கொதிப்பு எங்கோ ஒரு மூலையில் கனலாக இருந்து கொண்டிருந்தது. இதைக் கோடிட்டுக் காட்ட ஒரு நிகழ்வினைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் கருத்துக்களை புரிந்துகொள்ள.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்து நீண்ட இடைவெளிக்குப்பின் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற பல இளைஞர்கள் ஒரு கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் என்னையும் உரையாற்ற அழைத்திருந்தனர். அதில் பேசும் போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவாக வேண்டிய செயல் திட்டங்கள் உருவானதா? அந்தப் போராட்டம் ஒன்றைப் புள்ளியிலா செயல்பட்டது? அந்தப் போராட்டம் உருவாக்கிய தலைமைத்துவம் எங்கே? ஜல்லிக்கட்டுடன் அந்தப் போராட்டம் நிறைவுற்றதா? என்பதற்கான விடைகளைத் தேடுங்கள் என்றேன்.
அதில் பேசிய இளைஞர்களில் ஒரு பெண் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழகத்திற்கான மிகப் பெரும் செயல் திட்டம் விவாதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் ஒற்றைத் தலைமையை உருவாக்கி, அரசியல் கட்சியாக செயல்பட வேண்டாம் என்பது தான் பிரதான அணுகுமுறையாக இருந்தது. உண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்பது ஒருவித புது உளவியலை இளைஞர்களிடம் உருவாக்கியது. இதற்கு ஒரு புது வடிவம் புதுத் தலைமை ஒருநாள் வரும்” என்றார்.
இன்றைய சூழலில் பலர் நினைப்பதுண்டு. அரசியலில் ஊழல் சகஜம். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணுவதுண்டு. இன்றைய அரசியல் போக்கில் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக அவர்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது.
எல்லாக் கட்சிகளிலும் அவ்வப்போது சித்தாந்தத்தைப் பேசுவதும், நடைமுறையில் அதற்கு எதிர் திசையில் பயணிப்பதும், தேர்தல் நேரத்திற்கு மட்டும் மக்களிடம் வந்து விலை கொடுத்து வாக்கை வாங்கி, அதிகாரத்தை குத்தகை எடுப்பதையும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போவதும், ஊழலில் சேர்த்த பணத்தை பாதுகாக்க அரசியலில் பவனி வரும் அரசியல்வாதிகளையும் முற்றிலுமாக புறக்கணிக்கும் ஓர் உளவியலில் ஓர் இளைஞர் கூட்டம் உருவாகி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
அந்த இளைஞர் கூட்டத்தை விமர்சிக்கலாம், தவறில்லை. ஆனால், அவர்கள் தவறிவிட்டது போல் விமர்சிப்பதை ஏற்க இயலாது. இப்படியான விமர்சனமே சந்தை உருவாக்கிய பண நாயக அடிமைத் தனம் தான்!
கட்டுரையாளர்; க. பழனித்துரை
பேராசிரியர், எழுத்தாளர்,
காந்திய செயற்பாட்டாளர்
























1967 க்கு முன் அரசியலில் காந்தீயம் கம்யூனிசம் சோசலிசம் மேலோங்கி நின்றன. பிறகு தீண்டாமை ஜாதிவெறி இனதுவேஷம் முதலாளித்துவம் ஊழல் ஜாதி மத கட்சிகள் சமூகநீதி போர்வையுடன் அரசியலில் தலைதூக்கிவிட்டன.