சிறு பட்ஜெட் படங்களே சினிமாவை வாழ வைக்கும்!

மூளையை மழுங்கடித்து பெரும் வசூலை அள்ளும் பிரம்மாண்ட திரைப் படங்களோ, பெரிய நடிகர்களின் படங்களோ சினிமாவை வாழ வைக்காது. மக்களின் வாழ்க்கையை அழகியலோடு, அர்த்தத்துடன் அணுகும் சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருவதே கலைத் துறையை உயிர்ப்போடு வைத்திருக்கும். அதற்கு செய்ய வேண்டியது என்ன? – அலசுகிறார், இயக்குனர் சீனு ராமசாமி;

​​பல நூறு கோடிகள் புழங்கும் பிரம்மாண்டங்களின் நிழலில், ஒரு சாமானிய மனிதனின் மூச்சுக் காற்று எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?

​வாழ்வின் கதைகளில் வரும் மனிதர்களைப் போல, வாழ்வின் மிக நுணுக்கமான வலிகளையும், சாமானியர்களின் மௌனங்களையும் பேசும் ‘சிறு படங்கள்’ இன்று எங்கே போயின?

​​சினிமாவின் எதிர்காலம் என்பது பல நூறு கோடிகள் புழங்கும் பிரம்மாண்டங்களின் வியாபாரத்தில் இல்லை. அது சாமானிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சிறு முதலீட்டுப் படங்களில் தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்த விதச் செயற்கையான பூச்சுகளும் இல்லாத நேரடியான கதைகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட சிறு படங்களே ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை உலக அளவிற்குக் கொண்டு சென்றன.

​வாழ்க்கையை அதன் அசலான தன்மையோடு, உண்மையை திரையில் கடத்தும் ஆற்றல் இந்த எளிய படைப்புகளுக்கு மட்டுமே உண்டு.

புதிய படைப்பாளிகள், புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என சினிமாவின் அடுத்த தலை முறையை உருவாக்குவது இந்தச் சிறு படங்களே.

காதல், சிறை, பரியேறும் பெருமாள், தென்மேற்கு பருவக் காற்று, பசங்க, பீட்சா, காக்கா முட்டை, டுலெட், மண்டேலா, லவ்டுடே, மேற்கு தொடர்ச்சி மலை, சதுரங்க வேட்டை, சூது கவ்வும், வாழை, லப்பர் பந்து, பேரன்பு, நடுவுல கொஞ்ச பக்கத்தைக் காணோம், அழகர்சாமியின் குதிரை, மெளனகுரு, நீர்ப் பறவை , கடைசி விவசாயி, டூரிஸ்ட் பேம்லி, அருவி, குட் நைட் , தலைவா, தலைவி, தாய்க் கிழவி.. போன்ற எத்தனையோ ஏராளமான சிறு படங்கள் வெளியாகி மக்களின் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளன.

ஆண்டுக்கு சுமார் 300 தமிழ் படங்கள் வருகின்றன என்றால், அதில் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படங்கள் 10 சதவிகிதத்திற்குள் தான் உள்ளன. அதே போல இந்திய அளவில் ஆண்டுக்கு 1,800 படங்கள் வருகின்றன என்றால், அதில் 10 சதவிதத்திற்கும் குறைவான படங்களே பெரிய பட்ஜெட் படங்கள். அதே சமயம் சிறு பட்ஜெட் படங்கள் நிறை வந்து நல்ல வருமானம் தருவதால் தான் இந்தியத் திரை உலகம் வாழ்கிறது. சிறிய பட்ஜெட் படங்களே பலதரப்பட்ட நடிகர், நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு தந்து சினிமா துறையை வாழ வைக்கின்றன.

பல படைப்பாளிகளின் சிந்தனைத் திறனும், பற்பல கலைஞர்களின் உழைப்பும், சிறிய தயாரிப்பாளர்களின் முதலீடும் கொண்டு உருவாகும் சிறு பட்ஜெட் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை…இதனால் திரைக்கு வந்து மக்கள் பார்க்காமலே படப் பெட்டிக்குள் முடங்கிய படங்கள் கணக்கில் அடங்காது.

இது அந்த கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் பேரிழப்பு தான். ஆகச் சிறந்த படைப்பாளிகளும், கலைஞர்களும் அடையாளம் தெரியாமலே போய் விடுகின்றனர்.

​முன்பு தமிழ் சினிமாவில் ‘மினிமம் கேரண்டி’ என்ற ஆரோக்கியமான வியாபார முறை இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை முற்றிலும் மாறி, சினிமா என்பது ஒரு சூதாட்டக் களமாகிவிட்டது. ‘உழுதவனுக்காவது நிலம் மிஞ்சும், ஆனால், ஒரு தயாரிப்பாளனுக்கு எதுவுமே மிஞ்சாது’ என்ற வியாபாரப் பாதுகாப்பற்ற நிலை எப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்க்கிறேன். லாபம் வராவிட்டாலும் போட்ட மூலதனத்தையாவது திரும்பப் பெறலாம் என்ற ஒரு சூழல் தமிழ் சினிமாவில் இருந்தது, அது எப்படி மண்மூடிப் போனது?

​விஞ்ஞானத் திருட்டையும், போலிப் பிரதிகள் புழக்கத்தையும் காரணமாக்கி முதல் முறையாக ‘ஆளவந்தான்’ திரைப்படம் தான் அதிக திரையரங்குகளில் (5,00) வெளியானது. அந்த ‘வைட் ரிலீஸ்’ (Wide Release) முறை அப்படியே நம்மைப் பின் தொடர்ந்தது. முதல் மூன்று நாட்களிலேயே ஒட்டு மொத்த வசூலையும் அள்ளிவிடத் துடிக்கும் இந்த முறை, தன் கற்பனையை மட்டுமே நம்பியிருக்கும் சிறு படங்களுக்குக் கழுத்தை நெரிக்கும் செயலாக மாறிப் போனது. பிரபல நடிகர்களை தவிர்த்து எடுக்கப்படும் சிறு படங்கள் ஒரு வார கால அவகாசத்திற்கு பிறகே பிக் அப்பாகும்.

​அண்டை மாநிலங்கள் சினிமாவை எப்படி ஒரு பண்பாட்டு அடையாளமாக மதிக்கின்றன என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

​கேரளா இன்று மாற்று சினிமாவின் சொர்க்கமாகத் திகழ்கிறது. அங்கு அரசுத் திரையரங்குகளில் சிறு முதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

‘CSpace’ என்ற அரசு ஓடிடி தளம் வழியாகக் கலைத் தரம் வாய்ந்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

​நான் புனே சர்வதேச திரைப்பட விழாவில் நடுவராகக் கலந்து கொண்ட பொழுது, அங்கு சினிமாவுக்குச் செய்யப்படும் பல நல்ல திட்டங்களைப் பார்த்து, அவை தமிழகத்துக்கும் வந்து விட வேண்டும் என்ற ஏக்கம் என் மனதில் உருவானது.

​மகாராஷ்டிராவில் பாலிவுட்டின் பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் மராத்தி மொழிப் படங்களைக் காக்க ‘பிரைம் டைம்’ சட்டம் அமலில் உள்ளது. மேற்கு வங்காளத்தில் ‘நந்தன்’ போன்ற அரசு கலை மையங்கள் நல்ல சினிமாக்களை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகின்றன.

​கர்நாடகாவிலோ ஆண்டுக்கு 125 தரமான படங்களுக்கு அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இத்தகைய நல்ல முன்னெடுப்புகள் இன்னும் தொடங்கவில்லை.

​இங்கே நாம் மிக முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டியது, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) பங்களிப்பை.!

இந்தியாவுக்கு அது மிக முக்கியமானது. ஆயினும், அவர்கள் தமிழ் திரைப்படத் துறையின் மீது காட்டும் பாராமுகத்தையும் நான் சொல்லித் தான் தீர வேண்டும்.

​மராத்தி, பெங்காலி மற்றும் மலையாள மொழித் திரைப்படங்கள் சர்வதேச விழாக்களுக்குச் செல்வதற்கும், தரமான கலைப்படங்கள் உருவாவதற்கும் என்.எஃப்.டி.சி ஒரு பெரும் பாலமாக இருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவின் யதார்த்தமான படங்களுக்கு என்.எஃப்.டி.சி ஏன் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது? இனி வரும் காலங்களில் அது மாறும் என்றும் நான் ஆழமாக நம்புகிறேன்.

​அவற்றை அவ்வப்போது நினைவூட்டவும் இங்கு எவரும் முன்வரவில்லை; அதற்கு நம்மவர்களுக்கு அவகாசமும் இல்லை.

நம் கதைகள் உலகத் தரம் வாய்ந்தவை. ஆனால், தேசிய அங்கீகாரமும் நிதி உதவியும் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்காதது ஒரு வரலாற்றுத் துயரம்.

​தமிழ் சினிமாவின் ஆன்மாவைக் காப்பதற்கு முதலில் சிலவற்றைச் செய்தாக வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

​தமிழ் திரையுலகம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை (TFPC Strike – 2026) எதிர் நோக்கியுள்ளது. நடிகர்களின் சம்பளத்தை லாபத்தின் (‘Revenue share’) அடிப்படையில் நிர்ணயிக்க வலியுறுத்தி பொதுக் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் படி தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற் கொண்டுள்ளது. இதற்கு பெப்சி யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஆனால் அவை பெரிய படங்கள் பற்றிய கோரிக்கைகளோடு நிற்கின்றன. ஆயினும், அவர்களும் இந்தச் சிறு படங்களின் மீது கரிசனை காட்ட வேண்டும் என்று ஒரு கலைஞனாக இந்த நேரத்தில் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.

​சிறு படங்களைக் காப்பாற்றக் கீழ்க்கண்ட மாற்றங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் எண்ணம்:

தமிழக அரசு செய்ய வேண்டியவை: 

நான் எக்ஸ் (Twitter) இணைய தளத்தின் வழியாக இரண்டு முறை இந்தக் கோரிக்கையை வைத்திருந்தேன். திரையரங்கில் வாய்ப்பு மறுக்கப்படும் அல்லது வணிகச் சிக்கலில் இருக்கும் தரமான படங்களை அரசு நேரடியாக வாங்கி ஒளிபரப்ப, ஒரு தனி அரசு ஓடிடி (OTT) தளத்தைத் தொடங்க வேண்டும். சந்தையையும் நிதி உதவியையும் வழங்க என்.எஃப்.டி.சியை வலியுறுத்த வேண்டும்.

​தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க அமைப்புகள் செய்ய வேண்டியவை: நானே பாதிக்கப்பட்ட ஒரு மனிதனாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

​வாரத்திற்கு இத்தனை படங்கள் மட்டுமே (குறிப்பாக 2 பெரிய படங்கள் அல்லது 4 சிறிய படங்கள்) வெளியாக வேண்டும் என்ற ‘Release Scheduling’ முறையைக் கட்டாயமாக்க வேண்டும்.

​”பெரிய படங்களுக்கு மூன்று நாட்கள், சிறிய படங்களுக்குக் குறைந்தது இரண்டு வாரங்கள்” என்ற அடிப்படை விதியைத் திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும். கூட்டம் வரவில்லை என்று முதல் காட்சியிலேயே ஒரு படத்தைத் தூக்கும் பெரும் பாவத்தைச் செய்யாதீர்கள். குறைந்தது ஒரு வார அவகாசமாவது வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் ‘நந்தன்’ போன்ற அரசு கலை மையங்கள் நல்ல சினிமாக்களை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகின்றன.

​சிறு படங்கள் கருத்து ரீதியாக மக்களின் மனதில் கருத்தரிக்க அந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு ‘அன்னக்கிளி’ முதல் ‘சேது’ வரை எத்தனையோ உதாரணங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

​பெரிய நிறுவனங்களும் முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு ஒரு சிறு படத்தையாவது தயாரிப்பதோ அல்லது விநியோகிப்பதோ ஒரு அறமாக மாற வேண்டும். எல்லோரும் தொடங்கியது ஒரு சிறு படத்தில் தான் என்ற எண்ணத்தோடு இதைச் செய்தல் வேண்டும்.

உங்கள் நிழலில் இந்தச் சிறு செடிகள் வளர்ந்து உங்களை நன்றியின் சொற்களால் பெருமைப்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

​திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர்கள் சிறு படங்களைத் தயாரிக்க முன் வருவது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். குறிப்பாக, சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களும், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சி.வி. குமார், செழியன் போன்ற படைப்பாளிகளும் நிறுவனங்களோடு இணைந்து இவற்றைச் செய்து வருவதை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

​தாங்கள் நடிக்கா விட்டாலும் சிறந்த கதையம்சம் உள்ள படங்களுக்கு ஊக்கமாக இருப்பது பாராட்டத்தக்கது. அவர்களை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு சிறு படங்களின் சார்பாகவும், புதிய கலைஞர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

​பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றோர் உருவாக்கியது வெறும் திரைப்படங்களை அல்ல; அவை திரையில் எழுதப்பட்ட மானுடக் கதைகள். இத்தகைய ரசனை மிக்க கதையம்சம் கொண்ட படங்கள் மீண்டும் தமிழ் சினிமாவில் வேர் விட வேண்டுமானால், தனிநபர்களின் முயற்சியோடு மத்திய, மாநில அரசின் பங்களிப்பும் மிக அவசியம்.

​திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்குக் கருவி என்கிற அடிப்படையில் இருந்து சற்று விலகி, அது ஒரு சமூகத்தின் ரசனையை வடிவமைக்கும் கலை வடிவம்,

ஒரு பண்பாட்டு அடையாளமாக நிலைபெற வேண்டுமெனில் ‘கதை சொல்லும் கலை’யை மீட்டெடுக்கும் பணியை அரசு திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

​இதில் அரசுக்கு என்ன வேலை என்று சிலர் நினைக்கலாம்.

உலகெங்கிலும் தரமான பன்னாட்டுத் திரைப்படங்கள் எடுக்கப்படும் நாடுகளைக் கவனித்துப் பாருங்கள். சினிமா என்ற கலைக்கு, அவர்களின் பிராந்திய குணம் மாறாமல், பண்பாட்டு கலாச்சாரத்தை வளர்க்க அவர்கள் என்னென்ன வழிகளில் நன்மை செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவற்றையெல்லாம் இங்கும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். சில நாடுகளில், சில இந்திய மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தினாலே மானியம் தருகிறார்கள்.

25 லட்ச ரூபாய் கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் தயாரிப்பதற்கு தருகிறார்கள் அதை இங்கு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

மாநில அரசு தரும் சிறு படங்களுக்கான  ஏழு லட்சம் ரூபாய்  மானியத்தொகை  தமிழ்நாட்டில் அவற்றோடு தமிழ் என் எப் டி சி அதாவது தமிழ் திரைப்படக் கழகம் ஒன்றை உருவாக்கி  உலக தரத்துக்கான கலைஞர்களை தேர்வு செய்து அவர்களால் சிறந்த படங்களை தயாரிப்பதற்கான ஒரு குழுவை தீர்மானித்து இவற்றையெல்லாம் தன் அறிவு கூறும் நூலகத்தால் தமிழ் ஆன்றோர்களால் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

​”சினிமாவுக்கு ஆழமான மனித உணர்வுகளும் நேர்மையான பார்வையுமே ஒரு திரைப்படத்தை மகத்தானதாக மாற்றும்” என்று என் ஆசான் பாலு மகேந்திரா அடிக்கடி சொல்வார்.

​சிறு படங்களைக் காப்பாற்றுவது என்பது வெறும் வியாபாரத்தைக் காப்பாற்றுவது மட்டுமன்று; அது ஒரு சமூகத்தின் கலை மனசாட்சியைக் காப்பாற்றுவதாகும். நமது வேர்களை, நிலத்தை, மனிதர்களின் நிஜமான மொழியை ஆவணப்படுத்தும் சிறு படங்களே தமிழ் சினிமாவின் உண்மையான வெற்றி.

​தமிழ் சினிமா உலக அரங்கில் தனி அரியணை ஏற வேண்டுமானால், முதலில் அதன் அசல் புத்திரர்களை நாம் காப்பாற்ற வேண்டும். சிறு படங்களைக் காப்பது தமிழ் சினிமாவின் ஆன்மாவைக் காப்பதாகும்.

கட்டுரையாளர்; சீனு ராமசாமி

இயக்குனர், எழுத்தாளர், கவிஞர்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time