சினிமா ஆய்வாளரான நிழல் திருநாவுக்கரசு சமுக அக்கறையுள்ள இளம் திரைக் கலைஞர்களை உருவாக்குதல், உலகளாவிய சினிமா ரசனையை வளர்த்தெடுப்பது ஆகிய நோக்கத்துடன் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறார். இதற்கான பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார். அவருடனான பீட்டர் துரைராஜுன் நேர்காணல்;
‘நிழல்’, சினிமா காலாண்டிதழ் 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . சினிமா உலகிற்கு நிழல் இதழின் பங்களிப்பு என்ன?
2001 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நிழல் என்ற இதழை நடத்தி வருகிறேன். தமிழில் இப்படி ஒரு பத்திரிகை வருவது என்பது இது தான் முதல். கேரளா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, பெர்லின் என பல்வேறு இடங்களிலும் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, அவற்றை நிழல் இதழில் எழுதி வருகிறோம். உலகப் புகழ் பெற்ற இயக்குநர்களின் பேட்டிகளை மொழி பெயர்த்து வெளியிட்டோம். புகழ் பெற்ற இயக்குனர்களின் பேட்டிகளை வெளியிடுகிறோம். குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளை நான்காவது இதழிலேயே கொண்டு வந்தோம். இவை அனைத்தையும் சொல்லப்படாத சினிமா என்ற நூலாக்கினோம்.
சினிமா குறித்த இந்த நூலுக்கு வரவேற்பு எப்படி இருந்தது ?
கல்லூரிகளில் காட்சி ஊடகம் பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்ட சமயம் அது. ஆனால், அதற்கென பாடநூல்கள் எதுவும் உருவாகாத நிலையில் இதனை பாட நூலாக வைத்தனர். கோவை பிஎஸ்ஜி கல்லூரியின் விஸ்காம் துறையில் அந்தக் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் குறும்படங்களை மதிப்பீடு செய்யும் வெளித் தேர்வாளராகவும் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன்.
கிராமத்தில் இருந்த வந்த உங்களுக்கு உலகப் படங்கள் பற்றிய ஆர்வம் எப்படி ஏற்பட்டது ?
நான் தஞ்சாவூரில் இருந்து, எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு 1983 ல் வந்தேன். ஒரு சில பத்திரிகைகளிலும் வேலை செய்தேன். அப்பொழுது ‘சென்னை திரைப்பட சங்கம்’ செயல்பட்டு வந்தது. மறைந்து போன இயக்குநர் அருண்மொழி அதில் என்னைச் சேர்த்தார். அங்கு உலகமொழிப் படங்கள் திரையிடப்பட்டன. படம் ஒரு மணி நேரம் என்றால், படம் முடிந்த பிறகு எதிரில் உள்ள தேநீர்கடையில் அந்தப் படத்தைப் பற்றி ஒன்றரை மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சக்கரவர்த்தி, நாயுடு, கல்யாணசுந்தரம், சிவக்குமார், பன்னீர் செல்வம் (அவுட்லுக்) என முக்கியமான ஆளுமைகள் பலர் அங்கு வருவார்கள். இது திரைப்படங்கள் பற்றி விசாலமான பார்வையை எனக்குத் தந்தது. அதன் பிறகு கல்கத்தா, டில்லி, என திரைப்பட விழாக்கள் எங்கு நடந்தாலும் போய் விடுவேன். இத்தகைய படங்கள் தமிழில் வரவில்லையே என்ற எண்ணம் வந்தது. அதன்பிறகு நல்ல படங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்வது, திரையிடுவது என்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்.
நீங்கள் நடத்தும் திரைப்பட பயிற்சிப் பட்டறைகளின் நோக்கம் என்ன?
2003 ஆண்டு முதன் முதலாக அவினாசி காசிப் பாளையத்தில் ஒரு நாள் சினிமா பயிற்சிப் பட்டறை 75 பேரோடு தொடங்கினோம். பிறகு வெவ்வேறு இடங்களில் 3 நாள், 4 நாள்,5 நாள், 6 நாள், 7 நாள், 8 நாள் என அதிகரித்துக் கொண்டே போனது. இந்த பட்டறைகளில் இயக்குநர் அருண்மொழி, தொடர்ந்து பங்கேற்று வழி நடத்தினார். கிராமப்புற மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் எனச் செயல்படுகிறோம்; முதலில் இயக்கம், நடிப்பு என ஆரம்பித்து, பிறகு கேமிரா, திரைக்கதை, எடிட்டிங், ஒப்பனை என பல்வேறு பிரிவுகளில் பயிற்சி தருகிறோம். இது வரை 72 வகுப்புகள் முடிவடைந்துள்ளன. இது வரை இரண்டு முறை தமிழ்நாடு முழுவதும் சுற்றி விட்டோம்.

இத்தகையப் பயிற்சி வகுப்புகளால் பலன் ஏற்பட்டுள்ளதா?
மக்களுக்கான சினிமா, நல்ல ரசனையை வளர்ப்பது இதுவே என் நோக்கம். கடந்த 21 ஆண்டுகளில் இதுவரை 7,000 க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 350 க்கும் மேற்பட்டோர் உதவி இயக்குநர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், கேமராமேன் என திரைத்துறையின் பல இடங்களில் பணி புரிகிறார்கள். 13 பேர் நன்கு அறிந்த இயக்குநர்களாக உருவாகி உள்ளனர். ‘அலங்கு’ படம் இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி, ‘எங்கிட்ட மோதாதே’ ராமு செல்லப்பா, தற்போது வெளிவந்துள்ள ‘நீளிரா’ வை இயக்கிய இலங்கையைச் சேர்ந்த சோமீதரன், ‘டிராபிக் ராமசாமி’ எடுத்த விக்கி என்கிற விக்னேஸ்வரன், ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இயக்கிய , அதியன் என்கிற ஆதிரை, ‘நசீர்’ இயக்கிய அருண் கார்த்திக், ‘கூழாங்கல்’ எடிட்டர் சிவா, problematic family members இயக்கிய கார்த்திக் சித்தார்த் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். எளிய மக்களுக்கான சினிமா என்பது கண்முன்னே சாத்தியமாகி உள்ளது.
ஒரு காலத்தில் சினிமா என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. திரைப்பட ஸ்டுடியோ, திரைப்பட தளம், நடிகர்கள், கேமிரா என அனைத்தும் பணம் படைத்தவர்களிடம் இருந்தது. 1995- ல் சோனி டிஜிட்டல் கேமிரா வந்தவுடன் சினிமா என்பது எட்டாக்கனியாக இருந்த நிலை மாறிவிட்டது. ஆவணப்படம் என்பது ஒரு இயக்கம் போல பெரிய அளவிலானது. இணைய வசதி போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தன.
உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்களை தருவித்து பல இடங்களில் திரையிட்டீர்களே..?
நண்பர் ராமானுஜம் மூலம் ஈரானிய படங்கள், இலண்டனில் இருந்த யமுனா ராஜேந்திரன் மூலம் என படங்கள் எனக்கு கிடைத்தன. இவற்றைப் பெறுவதற்காக பாலு மகேந்திரா, போன்றவர்கள் என்னை அணுகுவார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். Land and Freedom என்ற படத்தை இயக்கிய இங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்டான Ken loch போன்றவர்களின் படங்களை எல்லாம் திரையிட்டோம். MC ராஜா மாணவர் விடுதியில் படம் போடுகிறோம் என்று சொன்னாலே கூட்டம் வரும். கலை, இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த கதைப்பித்தன் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஏற்பாடு செய்த திரையிடலில் 1,500 பேர் கலந்து கொண்டனர். டிவி, டெக், கேசட்டை தோளில் சுமந்து தமிழ்நாடு முழுவதும் திரையிடல்களை செய்துள்ளோம்.
சினிமா தொடர்பான என்னென்ன புத்தகங்கள் எழுதியும், வெளியிட்டும் உள்ளீர்கள் ?
1995 ஆம் ஆண்டு ‘மக்களுக்கான சினிமா’ என்ற நூல் எழுதினேன். இதில் இடது சாரி படங்கள் இடம் பெற்றிருந்தன. சிலி நாட்டின் சர்வாதிகாரியால் நாடு கடத்தப்பட்ட இயக்குநர் லிட்டன் படம், துருக்கி நாட்டின் சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் சிறைக்குள் இருந்து கொண்டே, சிறைப் பிரச்சினைகளை வைத்து எடுத்த ‘wall’, இந்தியாவின் புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் அவசர நிலையை வைத்து எடுத்த ‘புரட்சியின் அலைகள்’, அர்ஜெண்டினா, நிகரகுவா, பொலிவியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் படங்கள் இடம் பெற்று இருந்தன.

‘மறக்கப்பட்ட தமிழ் இசைக் கலைஞர்கள்’ பற்றிய நூல்களை எழுதியுள்ளேன். ‘கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு’, ‘நாதசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை வரலாறு’, தேவதாசி வீணை தனம்மா பற்றி ‘ வீணை அதன் பெயர் தனம்’, ‘மதுரை மாரியப்ப சாமி வரலாறு’, மற்றும் ஆயிரம் படங்களில் இருந்து 3,000 பாடல்களுக்கு ராகம் போட்டு இருக்கிறேன். அது ‘திரையிசையில் தமிழிசை’ என்ற நூல். திரைப்படங்களாக எடுக்கக் கூடிய நாவல்கள் பற்றி ‘நாவலும் சினிமாவும்’, போன்ற நூல்களை எழுதியுள்ளேன். ஓதுவார் பற்றிய சரியான வரலாறை எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
யமுனா ராஜேந்திரன் எழுதிய ‘ஆப்பிரிக்க சினிமா’, 16 அரசியல் இயக்குநர்கள் பற்றி அவர் எழுதிய நூல், சேகுவேரா கவிதை, கூகி வா தியாங்கோ எழுதிய சிலுவையில் தொங்கும் சாத்தான், நிகராகுவா ஜனாதிபதியான செர்ஜியோ ராமிரெஸ் எழுதிய ‘எங்கள் தந்தையரைப் புதைப்பதற்கு’, மற்றும் கலைச் செல்வன் எழுதிய ‘கதை, திரைக்கதை, இயக்கம்’, சுரேஷ்வரன் எழுதிய நடிப்பு, ஜீவா எழுதிய ‘கலையும் அழகியலும்’, என பல நூல்களை நிழல் பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறேன்.
புளூ சட்டை மாறன் திரை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் பத்திரிகைகளில் எப்படி விமர்சனங்கள் வருகின்றனவோ அப்படித்தான் இவருடைய விமர்சனங்களும் உள்ளன. பத்திரிகைகள் தொழில்நுட்ப ரீதியாக எதையும் எழுதுவதில்லை. நடிப்பு, கதை என்பதோடு முடித்துவிடுகிறார்கள். விகடனில் வரும் விமர்சனமும் அப்படித்தான் உள்ளது. சிறுபத்திரிக்கைகள், நாங்கள் நடத்தி வரும் நிழல் போன்றவைகளில் தொழில் நுட்பரீதியிலான விமர்சனங்கள் வருகின்றன. சக்ரவர்த்தி, நாகார்ஜூனன், யமுனா ராஜேந்திரன் (இலண்டன்), ஜமாலன், சொர்ணவேல் (மிக்சிகன் பல்கலைக் கழகம்), விட்டல்ராவ் (பெங்களூர்) போன்றவர்கள் நன்கு எழுதுகிறார்கள். முகமது இல்யாஸ் எழுதுவது சமூகவியல் நோக்கில் உள்ளது. தொழில் நுட்ப விவரங்கள் குறைவு. கதைச் சுருக்கம், தொழில்நுட்ப விவரங்கள், இசை, கேமரா, படத் தொகுப்பு என அனைத்தையும் உள்ளடக்கியதாக திரை விமர்சனங்கள் இருக்க வேண்டும். அப்படி ஓரு வழக்கம் இங்கு இருந்திருந்தால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் போன்ற நடிகர்களைப் பற்றிய பிம்பங்கள் தமிழ்நாட்டில் வந்திருக்காது. ‘எனது நடிகர்கள் விலங்குகள்’ என்று ஹிட்ச்காக் சொல்லுவார். ஒரு படத்திற்கு மூக்கணாங்கயிறு இயக்குநரிடம் தான் இருக்க வேண்டும்.

நீங்கள் செய்த பணிகளில் உங்களுக்கு நிறைவு வந்துள்ளதா?
பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாவிட்டாலும், நான் இதுவரை செய்துள்ள வேலைகள் என்னை ஒரு கோடீஸ்வரனாக உணர வைக்கிறது. இந்த நிழல் பதியம் அகாடமியில் ஆறு மாத பயிற்சி ரூ. 5,000 கட்டணத்தில் நடக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறை பரிசு ரூ.50,000, மாரியப்ப சுவாமி ரூ.1, 50,000 பரிசு, அமரந்தா தனது பெற்றோர் நினைவாக ரூ. ஒரு இலட்சம் விருது, ஆனந்த விகடன் விருது, மனுஷ்யப் புத்திரன் வழங்கிய சுஜாதா விருது, எஸ்.சாமிநாதன் விருது ரூ.25,000, மா. அரங்கநாதன் விருது என எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
என்னென்ன ஆவணப்படங்கள் எடுத்து இருக்கிறீர்கள்?
கவிஞர் இன்குலாப் பற்றி ‘சாகாத வானம்’. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புதுக்கவிதையின் முன்னோடி வைத்தீஸ்வரன் பற்றி ‘கிணற்றில் விழுந்த நிழல்’ போன்றவற்றை எடுத்திருக்கிறேன். மத்திய அரசுக்காக பட்டுப்பூச்சிகள் பற்றிய ஆவணப்படம் எடுத்துள்ளேன்.
திரைத்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் நம்மிடம் இல்லை. திரைப்பட சுருளில் கிடைக்கும் வெள்ளிக்காக சிலர் எரித்து விடுவார்கள். அந்தப் படங்களை பிரசாத் ஸ்டுடியோ போன்றவைகளில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் பாதுகாக்க வாடகை கட்ட வேண்டும். இதற்காக தயாரிப்பாளர்கள் தேவையற்றது என நினைப்பார்கள். 1942 ல் வந்த ‘என் மனைவி’ என்ற படத்தைப் பார்த்தால், பல விவரங்கள் நமக்கு கிடைக்கும். ‘ஜனசந்தடி மிகுந்த மயிலாப்பூரை விட்டுவிட்டு, கிராமப்புறமான கோடம்பாக்கத்திற்கு ஏன் வந்தாய்?’ என்று ஒரு கதாப்பாத்திரம் பேசும். அப்போது கேமரா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை காட்டும். அதற்கு அருகில் இருந்த இரண்டு ஏரிகளை காண்பிக்கும். இப்போது அந்த படம் தான் அங்கு ஏரி இருந்ததற்கு அத்தாட்ச்சி . எனவே எல்லாப் படங்களையும், அது எப்படிப்பட்டதாக இருந்ததாலும், டிஜிடலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் அவை ஆவண மதிப்பு மிகுந்தவை. இதற்கு அதிகம் செலவாகாது.
1970 களில் திமுக அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சி.எஸ்.ஜெயராமன், சேலம் ஜெயலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், குடந்தை சுந்தரேசன் போன்றவர்களின் கச்சேரிகளை பதிவு செய்து ஆவணப்படுத்தினார்கள். பல நாட்டுப்புற கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. மன்மதன் எரியும் போது பாடும் ‘லாவணி’ , குற்றாலக் குறவஞ்சியில் சிங்கன் சிங்கி பாடும் பாடல், ஈரோடு மாவட்டத்தில் ‘ஜிமுக்கி’, போன்ற பல கலைகளை ஆவணப்படுத்த வேண்டும். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை இவைகளைச் செய்ய வேண்டும். ஆந்திரா மாநில அரசு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்து வருகிறது. ஒரு கட்டத்தில் என்ன ஆகும் என்றால், ஆந்திராவில் தான் இப்படிப்பட்ட கலைகள் இருந்தன, தமிழ்நாட்டில் இல்லை என்று புரிந்து கொள்ளப்படும். ஆவணப்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
























நல்ல பேட்டி .. பேட்டி கொடுத்தவருக்கும் எடுத்தவருக்கும் பாராட்டுக்கள் !
மக்களுடைய வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் வெளியே வரவேண்டும் ..
சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் ..சினிமாவில் சீரழிந்து கிடக்கும் தமிழகம் தலை நிமிர வேண்டும் .. செல்லுலாய்ட் பொம்மைகளை பார்த்து மயங்கும் மக்களின் மனம் மாற்றுத்திசைக்குத் திருந்த வேண்டும்.. அரசியலே தெரியாதவர்கள் கூட சினிமாவின் மூலம் மக்களிடம் அறிமுகமாகி ஆட்சி பீடத்தையே பிடித்து விடலாம் என்ற அவலம் அகற்றப்பட மக்களுக்கான சினிமா வளர வேண்டும்.
வாழ்த்துக்கள்!