தமிழ்நாட்டின் தனிப் பெரும் கட்சியாக வடிவெடுத்துள்ளது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த அரசியல் மாற்றத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ளாமல் ஆரோக்கியமான முறையில் நாம் அணுக வேண்டியுள்ளது. மக்கள் தீர்ப்பை மதித்து, மாற்றங்களை உள்வாங்கி மறுமலர்சிக்கு வித்திட வேண்டும் . அதற்கு முன் விஜய் சில சவால்களை சந்திக்க நேரும்;
கூட்டணி இல்லாமல் ஏற்ப்பட்டுள்ள விஜய்யின் இந்த விஸ்வரூபத்தை அவர் அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று அழைத்த போதும் கூட எந்த ஒரு அரசியல் கட்சியும் பொருட்படுத்தி அவரோடு கை கோர்க்கவில்லை. குறிப்பாக இளம் தலைமுறையின் எழுச்சியை எல்லா அரசியல் கட்சிகளும் உதாசீனம் செய்தன. இது எந்த அளவுக்கு மக்களிடம் இருந்து இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளே அன்னியப்பட்டுவிட்டன என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
மாறி, மாறி இரு திராவிடக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்து இயற்கை வளத்தையும், மக்கள் வாழ்வையும் சூறையாடிச் சென்ற சூழலுக்கு இன்றைய இளம் தலைமுறை விஜய் மூலமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
திமுக, அதிமுக அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள்,கவுன்சிலர்கள் என அதிகாரத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலோனோர் ஒரு குறு நில மன்னர்களாக வலம் வந்ததையும், தலைமை தொடங்கி கீழ் நிலை வரை குடும்ப ஆட்சி முறை வலுப்பெற்று வந்ததாலும், மக்கள் ஒரு மாற்றை தேடிக் கண்டடைந்துள்ளனர்.
தனிப் பெரும் கட்சியாக வந்தாலும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறாத நிலை தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது ஒரு வகையில் நன்மையே. அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடத்துவது தவெகவிற்கு நல்லது தான்.
திரை பிம்பத்தை உடைத்து மக்கள் தலைவனாக மாற வேண்டும்;

மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என விஜய் விரும்புகிறார். அதற்கு அவர் முதலில் செய்ய வேண்டியது வெற்றிக்கு உதவிய திரைபிம்பத்தை கலைத்து மக்கள் தலைவனாக மாற்றம் காண்பது தான். தன்னை எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ளாமல் கீழே இறங்கி வந்து மக்களோடு மக்களாக கலந்து பழகினால் மட்டுமே நல்லாட்சி சாத்தியம். இல்லாவிட்டால், கூட இருப்பவர்களும், அதிகாரிகளும் அவரவர் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப விஜய்யை வழி நடத்தி பள்ளத்தில் தள்ளி விடுவார்கள். சந்திப்பதற்கு எளியவராக விஜய் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
அனுபவமின்மை ஒரு மிகப் பெரிய பலவீனம். ஆனால், அதையே பலமாக மாற்ற தகுதியானவர்களை கண்டடைந்து உடன் வைத்துக் கொண்டு, மிக கவனத்துடன் செயல்பட்டால் நன்மை விளையும்.
கஜானா ஒரு சவாலாகும்
ஆர்வக் கோளாறு காரணமாக, தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச திட்டங்களை அமல்படுத்த முயன்றால், ஏற்கனவே காலியாகிப் போன கஜானா அதற்கு இடம் தராது. மேலும், 10 லட்சம் கோடி கடனாளியாக உள்ள தமிழ் நாட்டை மேன்மேலும் கடனாளியாக கூடுதல் கடன் பெற்றால் நாடும், மக்களும் தாங்க மாட்டார்கள். மக்களை சுய சார்பு கொண்டவர்களாக மாற்றுவதே நல்லாட்சியின் சாதனையாகும்.
கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் ஜனநாயகத்தை அமல்படுத்துங்கள். வெளிப்படைத் தன்மையோடு ஆட்சி செய்யுங்கள். நல்லவர்களை அடையாளம் கண்டு உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஊழல் புரிவோரை இரக்கமின்றி தண்டியுங்கள்.

முதல் காரியமாக விஜய் செய்ய வேண்டியது சட்டம், ஒழுங்கை சீர்படுத்துவது தான். அதற்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து காவல்துறை அமைச்சராக்க வேண்டும். ஸ்டாலினைப் போல முதல்வரே காவல் துறை பொறுப்பையும் கையாண்டால், அதில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். ஏனெனில், முதலமைச்சர் என்பவர் அனைத்து துறைகளையும் மேற் பார்வை செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்.
இதே போல தமிழ் நாட்டில் மிதமிஞ்சி போயுள்ள டாஸ்மாக் மது கலாச்சாரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். குடி நோயாளிகளை மீட்டு எடுத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நன்றி சொல்லும்.
உண்மைகளை உணர்த்தும் தீர்ப்பு;
இந்த தேர்தல் தீர்ப்பு பல உண்மைகளை நமக்கு உணர்த்தி இருக்கிறது.
பணத்தால் மக்கள் ஓட்டை வாங்கி ஜெயிக்க முடியாது.
பொய் விளம்பரங்களால் – கட்டமைக்கப்படும் மாயைகளால் – ஊடகவியலாளர்களின் புகழ்ச்சியால் – மக்கள் விரோத ஆட்சியை புனிதப்படுத்திவிட முடியாது.
இலவச நலத் திட்டங்களை விடவும், மக்கள் கண்ணியமாக சுய சம்பாத்தியத்தில் வாழவே விரும்புகிறார்கள்.
கூட்டணிக் கட்சிகள் 25 சேர்ந்தாலும், அவர்கள் கும்பிடு போட்டு ஆட்சியாளர்களின் தவறுகளை பேச மறுத்தாலும், மக்களின் கோபம் விரல் புரட்சியாக வோட்டிங் மிஷின் பட்டன் வழியாக வெளிப்பட்டே தீரும்.
எதிர்கட்சியாளர்களை படு கேவலமாக இழிவுபடுத்துவதன் மூலமாகவோ, ஆட்சித் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை சங்கி என முத்திரை குத்திவிடுவதாலோ உண்மைகள் உறங்கிவிடாது.

அரசு வேலை வாய்ப்புகள் அனைத்தையும் ஒப்பந்த கூலியாக்கி காண்டிராக்ட் விட்டு கமிஷன் பார்ப்பவர்களை மக்கள் தண்டிக்காமல் விடமாட்டார்கள்.
கொள்கைகளை பேச்சளவிலும், கொள்ளைகளையே செயல்திட்டமாகவும் கொண்ட ஆட்சியாளர்களை எத்தனை வேஷம் போட்டாலும் மக்கள் அடையாளம் கண்டுவிடுவார்கள்.
நிர்வாகத்தின் அரிச்சுவடியே அறியாத அப்பாவும்,மகனும் அதிகாரிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போதைப் புழக்கத்தை தடுக்க வக்கற்றும், பாலியல் குற்றங்களை தடுக்க திரானியற்றும் பொம்மையாக வலம் வந்ததற்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர்.
கட்டுக்கடங்கா கனிம வளக் கொள்ளை, இயற்கை வளச் சூறையாடல், வரைமுறையற்ற சொத்து சேர்ப்பு, உரிமைக்காக போராடுபவர்களை காவல்துறை கொண்டு அடக்கி தமிழ்நாட்டை போலீஸ் ஸ்டேட்டாக்கியவர்கள் கார்ல்மார்க்ஸ் சிலையை திறந்து வைப்பதன் மூலமும், கம்யூனிஸ்டுகளை உடன் வைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் கறைகளை மறைக்க முடியாது.
இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டிய ஆட்சி என்று வலுவாகப் எழுதியும், பேசியும் வந்தேன். ஆக, நான் எதிர்பார்த்தது தான் நடந்திருக்கிறது..!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுந்த இளைஞர்களின் எழுச்சியும், கிளர்ச்சியும் எங்கே போயின. ..? கார்ப்பரேட் கட்சிகள் அவற்றை களவாடிச் சென்றுவிட்டனவோ.. என்று கலங்கிய என் போன்றோருக்கு, இல்லை இன்னும் அது உயிர்ப்போடு தான் இருக்கிறது..என இளைஞர்கள் விடை சொல்லியுள்ளனர், கைவிரல் புரட்சியின் வழியாக!
‘’எங்களை விட்டால் பாஜக உள்ளே நுழைவதை தடுக்க ஆளில்லை’’ என்றவர்களால் பாஜகவை தடுக்க முடியவில்லை. அது விஜய்யால் தான் இன்று சாத்தியப்பட்டுள்ளது. விஜய் இல்லாவிட்டால் இங்கு அதிமுக- பாஜக கூட்டணி தான் வென்று இருக்கும்.
மக்கள் தங்களின் அறச் சீற்றத்திற்கு வடிகாலாக விஜய்யை கண்டடைந்துள்ளனர்.
அதிமுகவின் தோல்வி;
அதிமுகவின் தோல்வி என்பது எதிர்பாராதது அல்ல. அந்தக் கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் தன் எதிர்கட்சி பங்குபாத்திரத்தைக் கூட சரியாக செய்யவில்லை. மேலும் பாஜகவின் அழுத்தங்கள், உள் கட்சிப் பிரச்சினைகள் ஆகியவற்றில் தன் தலைமையை உறுதிபடுத்தவே எடப்பாடி பழனிச்சாமி ஐந்தாண்டுகளை செலவிட்டார். மக்கள் நல அரசியலை மறுதலித்துவிட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தலித் மக்களுக்கு திமுக ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிர்த்துப் போராடாமல் – வேங்கை வயல் உள்ளிட்ட பிரச்சினைகளில் கூட்டணி நட்பு கருதி திருமாவளவன் அடங்கிப் போனது அந்த கட்சியின் வீழ்ச்சியாக முடிந்துவிட்டது.
திமுக ஆட்சி மாபெரும் ஊழல்களில் மூழ்கி திளைப்பதையும், மக்கள் விரோத ஆட்சி நடத்துவதைக் கண்டும், காணமலும் செயல்பட்டதோடு, தவெகவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பையும் தவிர்த்த காங்கிரஸ் கட்சி தற்போது அதற்கான பலனை இந்தத் தேர்தலில் பார்த்துள்ளது.
தவெகவின் ஆட்சி எப்படி இருக்கும் எனத் தெரியாது. ஆனால், எடுத்த எடுப்பிலேயே அவ நம்பிக்கையை விதைக்காமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு மக்கள் தீர்ப்பை வணங்கி ஏற்போம். கற்றறிந்த சான்றோர்களும், நல்லோருமாக புதியவர்களை கைப்பிடித்து வழி நடத்தட்டும். தவறுகள் நடந்தால், என் போன்றோர் எப்போதும் தயங்காமல் சுட்டிக் காட்டுவோம்.
சாவித்திரி கண்ணன்
ஆசிரியர்,
அறம் இணைய இதழ்
























புதிய அரசு பதவி ஏற்றவுடன் முதலில் வேங்கைவயல் & நாங்குநேரி சென்று அந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும், முன்பு நிர்வாக ரீதியாக நடந்த தவறு இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவேண்டும், அந்த தண்ணீர் தொட்டியை இடித்து தள்ளிவிட்டு, அங்குள்ள கிராம மக்களை நல்வழி படுத்தி புதிய தண்ணீர் தொட்டி அமைக்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், இது பரவலாக தலித் மக்கள் நம்பிக்கை பெற உதவும்.
தங்களின் கணிப்பு தவறானது. சினிமா மோகத்தில் 30 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்கள் விஜய் நல்லாட்சி தருவார் என்ற நோக்கத்தை விட, சினிமா மோகத்தால் வாக்களித்தவர்கள். இது பல நேரங்களில் நிரூபனமாகியுள்ளது. தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்வு பெற்றவர்களில் பலரின் செயல்பாடுகள், பல்வேறு கேள்விகளை எழுப்பலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயியுள்ளது எதனால் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதை பொருள் கட்டுப்படுத்த , டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விஜய்யால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது. லாட்டரியில் கொள்ளையடித்த ஆதவ் அர்ஜூனாவை அருகில் வைத்துக் கொண்டு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.