தமிழக அரசியல் களம் தற்போது பெரிய மாற்றம் கண்டுள்ளது. இதனை வெறும் உணர்ச்சிப் பூர்வமான மாற்றமாக மட்டும் பார்க்காமல், ஆழமான தர்க்க ரீதியான பின்னணியோடு அணுக வேண்டியது அவசியம். இந்த வெற்றிக்கு அவரது நெடுங்கால திட்டமிடலும், அரசியல் சூழல்களும் எப்படி கனிந்தன என்பதை அலசுகிறார், இயக்குனர் சீனு ராமசாமி;
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது நிதானமான திட்டமிடலுக்கும், மற்றவர்களின் அதீத தன்னம்பிக்கைக்கும் வழங்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பாடம்.
ஒரு கலைஞனாகத் திரையில் ஈர்த்த கைதட்டல்களை, ஒரு தலைவனாகத் தேர்தல் வாக்குகளாக மாற்றிய விஜய்யின் இந்த வெற்றிக்குப் பின்னால் மிக நீண்ட உழைப்பும், மற்ற அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான சறுக்கல்களும் ஒளிந்துள்ளன. அரசியல் களத்தில் விஜய்யை வெறும் திரைப் பிம்பமாக மட்டுமே பார்த்தது தான் மற்ற அரசியல் கட்சிகள் செய்த முதல் மற்றும் மிகப்பெரிய தவறு.
அரசியல் களத்தில் அவரை ஒரு ‘தற்குறி’ என்றும், ‘வெறும் நடிகர்’ என்றும் விமர்சிப்பதிலேயே மற்ற கட்சிகள் நேரத்தைச் செலவழித்தன. ஆனால், விஜய் அந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல், திரைமறைவில் தனது ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ ஒரு ராணுவக் கட்டமைப்பாக மாற்றியதை அவர்கள் கவனிக்க மறந்துவிட்டார்கள்.
2021 மற்றும் 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் அவருக்கு ஒரு சிறந்த பயிற்சி மைதானமாக அமைந்தன. எவ்விதக் கட்சி அடையாளமும் இன்றி 115-க்கும் மேற்பட்ட இடங்களில் தனது இயக்கத்தினரை வெற்றி பெறச் செய்த போதே, அவர் ஒரு தலைவனாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது, மற்ற கட்சிகளுடனான தேவையற்ற பகையைத் தவிர்த்துத் தனது இலக்கில் மட்டும் உறுதியாக நின்றது விஜய்யின் மதி நுட்பத்தைக் காட்டியது.
தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் தரப்பான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனம், விஜய்க்கு ஒரு மிகப் பெரிய நுழைவு வாயிலை அமைத்துக் கொடுத்துள்ளது. அரசு தான் செய்த நன்மைகளை, நலத் திட்டப் பணிகளை பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, புதிய வரவான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறுகளைப் பரப்புவதும், கேலி செய்வதும் எதிர் விளைவையே ஏற்படுத்தியுள்ளன. தன் பலத்தைக் காட்டாமல் எதிரியின் பலவீனத்தைக் குறிவைப்பது தான் ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக அமையும்.
குறிப்பாக, ஒரு தேர்தல் பிரசாரப் பாடலில் கூட “நடிப்பு பருந்து வருது” என உருவகப்படுத்தி விஜய்யை சிறுமைப் படுத்த முயன்றது மக்களிடம் எடுபடவில்லை.
அவருடைய திரை பிம்பத்தையும் தாண்டி, அவரிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களிடம் இத்தகைய முதிர்ச்சியற்ற பிரசாரங்கள் சலிப்பையே உண்டாக்கியுள்ளன. அது அவர்களின் வீரியத்தை மேலும் கூட்டியது.
எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கலைத் துறையைச் சேர்ந்தவர்களின் ஆதரவு ஓரளவு இருக்கும். ஆனால், இம்முறை அந்த ஆதரவு ஐந்து சதவீதம் கூட இல்லை என்பது தான் சமூக நோக்கர்களின் கருத்து.

பரப்புரை செய்தவர்கள் மக்கள் மன்றத்தில் அரசின் நலத்திட்டப் பணிகளைப் பற்றிப் பேசவில்லை. அதிமுகவும் திமுகவும் மட்டுமே போட்டியில் இருப்பது போல மோதிக் கொண்டன. த.வெ.க. செயல்பாடுகள் பற்றி, ஆளுங்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் எந்தக் கருத்துமே சொல்லவில்லை. விஜய் அவர்களின் அரசியல் ரீதியான கருத்துகளுக்குச் சரியான பதில் உண்மையில் யாருமே சொல்லவில்லை. த.வெ.க. கருத்தியல் ரீதியாகப் பலம் பெற்ற இடம் இதுதான்.
இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கும் வாக்குகள், அது முதல்வரின் நலத்திட்டப் பணிகளுக்காக மட்டுமே வந்து சேர்ந்திருக்கின்றன.
ஆயினும், தற்போதைய கூட்டணியில் நிலவும் ஒட்டாத தன்மையையும், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியையும் திமுக தலைமை கவனிக்காமல் விட்டதும், பிரசாரத்திற்குப் புதிய முகங்களைப் பயன்படுத்தத் தவறியதும் அக்கட்சிக்கு ஒரு தேக்க நிலையை உருவாக்கியுள்ளன.
ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வந்த போது முதலமைச்சரைச் சந்திக்காமல் சென்றது போன்ற நிகழ்வுகள், கூட்டணிக்குள் இருந்த விரிசலைப் பகிரங்கப்படுத்தின. எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தலில் விநியோகிக்கப்பட்ட பணம், தந்தவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது என்பது ‘பணத்தால் வாக்குகளைத் தீர்மானிக்க முடியாது’ என்ற வாக்காளர்களின் மௌனப் புரட்சியை நிரூபித்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, அந்த இயக்கம் சந்தித்த பிளவுகள் கொஞ்சநஞ்சமல்ல. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் பிரிவு, வி.கே. சசிகலா அவர்களின் எதிர் பிரசாரம் மற்றும் அந்த இயக்கத்தின் அச்சாணியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் வெளியேறி விஜய் அவர்களுடன் இணைந்தது எனப் பல்வேறு சவால்கள் அந்தக் கட்சியைச் சிதைத்துள்ளன. தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதக் களைப்பு நிலவியது நிதர்சனம். இத்தனை நெருக்கடிகளையும் மீறி எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றது அவரது தனிப்பட்ட உழைப்பாக இருக்கலாம். ஆனால், கட்சியின் ஒட்டு மொத்த ஒற்றுமையின்மை அதன் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
மற்றொரு புறம், அண்ணன் சீமான் ஒரு அசாத்தியமான உழைப்பாளி என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த நிலத்தின் மீதான பற்றும், சுற்றுச்சூழல் மற்றும் இன உணர்வு சார்ந்த அவரது கருத்துகளும் ஒரு புதிய தலைமுறையை அரசியலுக்குக் கொண்டு வந்தன. அவர் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி உருவாக்கிய அந்த மாற்று அரசியல் மற்றும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, இம்முறை முழுமையாகத். விஜய்யை நோக்கிச் சென்றுவிட்டது. ஒருவேளை, இந்தத் தேர்தலில் சீமான் விஜய்யுடன் கூட்டணி அமைத்திருந்தால், அடுத்த தேர்தலில் அவர் இன்னும் கூடுதல் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இப்படித் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் சக்திகள் ஒவ்வொன்றும் ஒருவிதமான பலவீனத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு தர்க்கரீதியான நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே உள்ள கட்சிகள் மக்கள் நலனைப் பேசுவதற்குப் பதிலாகப் புதிய மாற்றத்தைக் கேலி செய்ததும், மூத்த தலைவர்களின் வெளியேற்றமும், மாற்று அரசியலில் நிலவும் கொள்கை முரண்பாடுகளும் விஜய்க்கு ‘சிவப்புக் கம்பளம்’ விரித்துள்ளன. அவர் தனது உழைப்பைத் தரவுகள் மற்றும் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் முதலீடு செய்தார். குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கலைஞர், மற்றவர்களின் தவறுகளையும் ஒன்றிணைத்துத் தமிழக அரசியலில் ஒரு புதிய திசையைத் தீர்மானித்திருக்கிறார்.
2026 தேர்தல் முடிவுகள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்; தமிழ்நாட்டு மக்கள் நிதானமான, தெளிவான மற்றும் நேர்மையான மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இது மற்றவர்களின் தவறுகளால் செதுக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் வாய்ப்பு. முதிர்ச்சியான அரசியலுக்கான மக்களின் அங்கீகாரமாகவே இந்த எழுச்சி எனக்குத் தெரிகிறது.

இதன் பின்னணியில் மிக முக்கியமான ஒரு உணர்வுப்பூர்வமான உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். 1988-ல் ஒரு தந்தை தன் ஒன்பது வயது மகனைத் திரையில் காட்டி, ‘உன்னை நம்பி இந்த நாடு இருக்கு சின்னத்தம்பி’ என்று பாட வைத்த ஒரு தந்தை கண்ட அந்த நாற்பதாண்டு காலத் தீர்க்கதரிசனக் கனவை, ஒரு மகன் தனது உழைப்பால் இன்று நனவாக்கியிருக்கிறார்.
ஒரு கலைஞனாகப் புதியவர்களை நம்புவது, அவர்களை வரவேற்பது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன். திரைத் துறையில் இருந்து ஒருவர் முதல்வராகும் போது அந்தத் துறையின் வளர்ச்சியில், எளிய கலைஞர்கள்,படைப்பாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த புரிதல் அவருக்கு இருக்கும். அதற்கெல்லாம் அவர் தீர்வு காண வேண்டும் என்பது என் போன்ற படைப்பாளிகளின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வளவு தீவிரமான ஒரு அரசியல் கட்டுரையை நான் இதுவரை வெளிப்படையாக எழுதியது இல்லை. இருப்பினும், தொடர்ந்து இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வரும் ஒருவன் என்ற அடிப்படையில் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
கட்டுரையாளர்; சீனு ராமசாமி

இயக்குனர், எழுத்தாளர், கவிஞர்
























சிறப்பாகவே இருந்தது.
திமுகவில் உள்கட்சி மோதல் சீனியர்கள் யாரும் அடுத்த கட்ட ஆட்களை மதிக்காமல் இருந்தது முக்கியமாக மூத்த அமைச்சர்கள்.
அதிமுகவில் பல குழப்பம் அதை சரிசெய்து தேர்தலை சந்தித்தது பெரும் சாதனை.
சீமான் அவர்கள், பேச்சில் தெளிவு இல்லை தலைவன் என்பவன் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும், சுத்தமாக அது இல்லை
விஜய், மக்களின் நம்பிக்கையாக மாறியுள்ளார் என்பதை காட்டுகிறது, விஜய் இதை எப்படி கொண்டுசென்று பலதரப்பு எதிர்ப்புகளை சமாளித்து அவர் நினைத்தது போல ஆட்சி செய்வர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும், மேலும் இந்த தேர்தலில் விஜய் முழுமையக ஈடுபடவில்லை அப்படி செய்திருந்தால் இன்னும் கூடுதலாக பல தொகுதிகள் வெற்றி பெற்று இருக்கும்.
மாற்று என்பது மற்ற காட்சிகள் செய்யும் பேசும் அராஜக செயல்களை செய்யாமல் பேசாமல் முற்போக்கு அரசியல் செய்யதால் மடுட்மே இனி நிற்கமுடியும், விஜய்க்கு அப்படி திராணி இருக்குமா எனபது கேள்வி.