வெறுப்பு அரசியல் எனும் பருப்பு இனி ஒரு போதும் வேகாது..!

-சாவித்திரி கண்ணன்

வெறுப்பு அரசியலை வீச்சுடன் செய்வதானது, ஒரு கட்சி தான் செய்த அநீதிகளை, அக்கிரமங்களை மற்றவர்கள் பேசவிடாமல் தடுக்கும்  கலையாகும். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை ஒரு மிகக் கொடிய ஆயுதமாக கையாண்ட இரு பிரதான கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். வெறுப்பு அரசியலின் விளைவு குறித்த ஒரு அலசல்;

தமிழகத்திலேயே வெறுப்பு அரசியலை விக்கிரசாக செய்த கட்சி என்றால், அது பாஜக தான்!

அந்த கட்சி கொண்டு வரும் சட்டங்கள், மக்கள் விரோத திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை நாம் மக்கள் சார்பாக எடுத்துச் சொன்னால், சொன்னவர்கள் மீது பாய்ந்து குதறுவார்கள். ”தேசத் துரோகி”, ”இந்து விரோதி”, ”பாகிஸ்தான் கைக்கூலி” என முத்திரை குத்துவார்கள்! இவர்களின் வெறுப்பு பேச்சுக்களுக்கு அதிகமாக ஆளானவர்களில் நானும் ஒருவன்.

இந்த வெறுப்பு அரசியல் தான் அவர்களை இன்று தமிழகத்தில் தனிமைப்படுத்தி 27 இடங்களில் போட்டியிட்டவர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறக் கூடிய நிலைக்கு தள்ளி உள்ளது.

இதே போல வெறுப்பு அரசியலை பாஜகவுக்கு இணையாக பெருவீச்சில் செய்யும் ஒரு கட்சியாக திமுக உள்ளது. இவர்கள் ஆட்சியின் தவறுகளை நாம் சுட்டிக் காட்டினால் ”சங்கி”, ”பாஜக ஆதரவாளர்”, ”திமுகவின் மீது வன்மம் காட்டுகிறோம்” என இன்னும் என்னென்னவோ வகைகளில் அசிங்கப்படுத்துவார்கள்.

இதே பாணியில் அதிமுக, தவெக மீது இவர்கள் பரப்பிய வெறுப்பு அரசியலின் விளைச்சலாகத் தான் இந்த தேர்தலில் படுதோல்வியை பரிசாக பெற்றுள்ளனர்.

இப்படியான மக்களின் தீர்ப்பு கிடைத்த பிறகும் இவர்கள் சுயபரிசோதனைக்கு தயார் இல்லாமல் மேன்மேலும் வெறுப்பு அரசியலையே முன்னிலும் வீரியமாகச் செய்கின்றனர் என்பது தான் கவலையளிக்கிறது.

# மக்கள் நன்றி கெட்டவர்கள்!

# வோட்டிங் மிஷினில் கோல்மால் செய்து பாஜக தேர்தல் ஆணையத்தின் மூலம் தவெகவை ஜெயிக்க வைத்துள்ளது.

# விஜய்யை பின்னிருந்து இயக்குவது பாஜக தான்

என்றெல்லாம் திமுகவினர் பேசுகிறார்கள்!

”மக்கள் நன்றி கெட்டவர்கள்” என்று பழிப்பது பெரும் தவறாகும். நீங்கள் எப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சியை தந்தீர்கள்? என்பதை மறைக்க மக்களை திட்டுகிறீர்கள்.

‘மக்கள், பல்வேறு துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள்.. எத்தனை நாட்கள், எவ்வளவு வீரியமாக போராட்டங்கள் நடத்தினாலும், முதலமைச்சர் அவர்களை அழைத்து பேசமாட்டார், வாயே திறக்கமாட்டார், காவல் துறையை ஏவி ஒடுக்குவார்’ என்பதே ஐந்தாண்டு ஆட்சியில் தமிழக மக்கள் பெற்ற அனுபவமாகும்.

மற்றொருபுறம் கட்டுக்கடங்கா ஊழல், கனிம வளக் கொள்ளை, டாஸ்மாக் விற்பனையை வெறித் தனமாக அதிகரித்து குடும்பங்களை நிர்கதியாக்கியது..என அனைத்தையும் செய்து, பாஜக என்ற பூச்சாண்டியை கவசமாக்கிக் கொண்டீர்கள்.

‘வோட்டிங் மிஷினில் கோல்மால் செய்து பாஜக தேர்தல் ஆணையத்தின் மூலம் தவெகவை ஜெயிக்க வைக்க முடியும்’ என்றால், பாஜகவை  அல்லவா ஜெயிக்க வைத்திருப்பார்கள். ஆனால், 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. அப்படி கோல்மால் செய்வதென்றால், பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தமிழிசை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் என்ற நால்வரை மட்டுமாவது வெற்றி பெற வைத்திருப்பார்களே..! ஆகவே, எந்த லாஜிக்குமற்ற இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்.

‘விஜய்யை பின்னிருந்து இயக்குவது பாஜக’ என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படி என்றால், அவர்கள் ஏன் அவரது ‘ஜனநாயகன்’ படத்தை தடை செய்ய வேண்டும்? கரூர் விபத்து விவகாரத்தில் திமுகவின் கைங்கரியங்களை ஆராயாமல் விஜய்யை மட்டுமே அதிகம் விசாரிக்க வேண்டும்? ஆக, இந்தக் குற்றச்சாட்டும் அநீதியானது. இந்த நிமிடம் வரை விஜய், ”பாஜக கொள்கை விரோதி” என்று சொன்னதில் உறுதியாகவே இருக்கிறார்.

உண்மையில் திமுகவின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியை பாஜக தான் பின்னிருந்து இயக்கியது. இது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ‘அறம்’ இணைய இதழில் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி உள்ளேன்.

திமுகவில் ஆர்.எஸ்.எஸ் மைத்ரேயனை சேர்த்தது,

பாஜகவின் பாதம் தாங்கியான பன்னீர் செல்வத்தையும் அவரது கூட்டாளிகளையும் சேரத்தது,

ஆர்.எஸ்.எஸின் அடியாளான சாதி சங்கத் தலைவர் செல்வகுமாருக்கு ஒரு  தொகுதி தந்தது,

கடைந்தெடுத்த சங்கியான தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் மற்றும் ராஜ்ஜிய சபா சீட்டு தந்தது!

என்பதெல்லாம் பாஜகவை நோக்கிய திமுகவின் நகர்வுகளே.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகியோரை கூட்டணி பந்தத்தால் திமுக முடக்கி போட்டதன் விளைவாக இன்று அவர்களும் சிறுத்து போய்விட்டனர்.  இவர்கள் அனைவருமே ஒரு அருமையான வாய்ப்பை திமுக உறவால் இழந்து விட்டனர் என்பதே உண்மையாகும். இனியாவது இவர்கள் திமுகவிடம் இருந்து விலகி தங்கள் கட்சியை பலப்படுத்தும் முடிவை எடுக்காவிட்டால் இவர்களுக்கு எதிர் காலம் இல்லை.  தவெகவை ஆதரிப்பதில் காங்கிரஸ் முந்திக் கொண்டது. இதை முதுகில் குத்திய செயலாக திமுக விமர்சித்துள்ளது.

தவெகவிற்கான பற்றாகுறையை நிறைவு செய்வது, இன்றைய தினம் மதச் சார்ப்பற்ற  கட்சிகளின் ( பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் அதிமுகவும் மதச்சார்பற்ற கட்சியே) ஒரு அவசியமான ஜனநாயகக் கடமையாகும்.

அதற்கான காரணங்கள்;

# உடனடியாக இன்னொரு தேர்தலை நாடு தாங்காது.

# விஜய்க்கு அரசியல் அனுபவ போதாமை இருப்பதால், அருகிருந்து அந்த அரசை வழி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யலாம்.

குறைந்தபட்ச  செயல் திட்டத்தின் அடிப்படையில்  நிபந்தனையுடன் ஆதரவு தந்து தவறுகள் நடந்தால் சுட்டிக் காட்டலாம். ஓராண்டாவது பரிட்சார்த்த முயற்சி செய்து, திருப்தி இல்லை என்றால், ஆதரவைத் திரும்பப் பெறலாம்.

வெறுப்பு அரசியலில் இருந்து அனைவரும் விடுதலை பெற்று ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் மக்கள் தந்த தீர்ப்பால் உருவாகி உள்ளது.

சாவித்திரி கண்ணன்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time