கார்ப்பரேட் சந்தை தான் கட்சிகளை வழி நடத்துகிறது!

-பேராசிரியர் க.பழனித்துரை

சந்தை அரசியல் சமூகத்திற்கான அரசியலாகுமா? இன்று மக்களை ஆள்வது யார்?  மத்திய, மாநில ஆட்சிகள் யாருக்கானவை? ஆண்ட கட்சிகள், தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி அனைத்தையும் ஊழல் என்ற சேற்றுக்குள் புதைய வைத்து விட்ட  கார்ப்பரேட் சந்தையின் ஆற்றல் குறித்து அலசுகிறார் பேராசிரியர் க.பழனித்துரை

இன்று மக்களை ஆள்வது யார்? மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் பிரதிநிதிகளா அல்லது தேர்தலுக்கும் அரசியல் நடத்துவதற்கும் யார் மூலதனம் தருகிறார்களோ அவர்களா?

இந்த ஆட்சி யாருக்கானது?

மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுகிறதா? அல்லது அரசியல் செய்வதற்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கும் நிதி தரும் சந்தைக்கா?

இந்தக் கேள்வியை ஏன் நாம் கேட்க வேண்டியுள்ளது?

நாம் பொருளாதாரத்தில் வரலாறு காணாத வளர்ச்சியை தொடர்ந்து சாதித்து வரும் நிலையில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்பை பொது வினியோக முறையில் தரும் விலை இல்லா உணவுப் பொருள்கள் கொண்டு ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர். அப்படி என்றால் நம் நாடு அடைந்த 7 சத பொருளாதார வளர்ச்சி யாருக்குச் சென்றது. இதைக் கேட்க இந்த நாட்டில் யாரும் இல்லையே.

சந்தையை நடத்துபவர்களுக்கு அரசியல் உதவியாக இருக்கின்ற வரை சந்தைக்காரர்கள் அள்ளித் தருவார்கள், அவர்கள் உருவாக்கிய செல்வத்திலிருந்து. அதே போல் ஆட்சியில் உள்ளவர்கள் சந்தைக்கு உதவியாக இருக்கின்றவரை ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் தருவார்கள்.

அரசாங்கத்தையே வாங்கும் அசூர சக்தி பெற்ற சந்தை!

வாக்கை வாங்கலாம், சட்டமன்ற உறுப்பினரை வாங்கலாம், பாராளுமன்ற உறுப்பினரை வாங்கலாம், ஊடகங்களை வாங்கலாம், அறிவு ஜீவிகளை வாங்கலாம், பொதுக் கருத்தாளர்களை வாங்கலாம், ஆராய்ச்சிக் கம்பெனிகளை வாங்கலாம், எதையும் வாங்கலாம். ஏன் ஓர் கட்சியை வாங்கலாம் அரசாங்கத்தை வாங்கலாம். இன்று அந்த அளவுக்கு அசுர சக்தி படைத்ததாக சந்தை வளர்ந்து விட்டது.

இன்று  சந்தை தான் அனைத்தையும் முடிவு செய்கிறது. மக்கள் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, கிடைக்கும் வாழ்வாதாரம் அனைத்தையும் முடிவு செய்கிறது. எப்படிப்பட்ட ஆட்சி மக்களுக்கு வேண்டும் என்று முடிவு செய்வதை விட, எப்படிப்பட்ட ஆட்சி சந்தைக்குத் தேவை என சந்தை முடிவு செய்து அதை உருவாக்கத் தேவையான வாக்குகளை சந்தைப்படுத்த மக்களுக்கு பணம் தந்து வாக்குக்கு விலை தந்து பெற வைத்து விடுகிறது. மக்கள் ஜனநாயகத்தை சந்தை ஜனநாயகமாக மாற்றி வைத்துக்கொண்டு விட்டது சந்தை.

புதிய பொருளாதாரக் கொள்கை திறந்துவிட்ட வாசல்;

இதைப் புரிந்து கொள்ள ஒரு வளர்ச்சி வரலாற்றை இங்கே தருவது தான் தேவையாக இருக்கிறது. 1991-ல்தான் சந்தைக்கு இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி திறந்து விடப்படுகிறது. இதைத் திறந்து விட்டவர் பி.வி.நரசிம்மராவ். எப்படித் திறந்துவிடப்பட்டது என்பதை 1991ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையை வாசித்தால் நாம் அறிந்து அந்த அறிக்கையை வாசித்தவர் பின்னாளில் இரண்டு முறை பிரதமராக இருந்தார். ஆனால் 1991ல் நிதி அமைச்சர். அவர் தான் மன்மோகன்சிங். அதற்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய். தேசத்தை ஒரு இக்கட்டான பொருளாதாரச் சூழலிலிருந்து வெளியேற்ற செய்தது தான்.

கார்ப்பரேட் சந்தையால் கட்டமைக்கப்பட்ட பிம்ப அரசியல்! – இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி.

அன்று அவர்களுக்கு இருந்த வாய்ப்பு அது தான். ஆனால், நம் அரசமைப்புச் சாசனத்தில் உள்ள சோசலிசம் என்ற சொல் பற்றி எவரும் கண்டு கொள்ளவில்லை. இன்று அது ஒரு அலங்காரச் சொல் மட்டும்தான். அதற்கான பொருள் எந்த இடத்திலும் இல்லை. அந்த சந்தைக்கான முன்னெடுப்பை பின்னாளில் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்தபோது அதை மேலும் வலுவாக்கி சந்தைப் பொருளாதாரத்தில் நாட்டைத் தோயச் செய்தார். அதன் பிறகு இந்த புதிய பொருளாதாரத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட மன்மோகன்சிங் பிரதமரானார். அதை இன்னும் வேகமாகவும் வலுவாகவும் காலூன்றச் செய்தார்.

அரசியலே சந்தையானது;

இந்தக் கால கட்டத்தில் தான் சந்தை காட்டாற்று வெள்ளம் போல் பெருகுவதை உன்னிப்பாக கவனித்த அரசியல்வாதிகள் சந்தைக்குள் புகுந்தனர். எல்லாத் தளங்களிலும் அவர்கள் காலூன்றி அவர்களும் சந்தைக்குள் புகுந்து வணிகர்களாக, கார்பரேட் கம்பெனிகளுக்குள் பங்குதாரராக  மாறினர். கல்விச் சந்தை, மருத்துவச் சந்தை, நிலச் சந்தை, கனிம வளச் சந்தை, கட்டமைப்பு உருவாக்கும் செயல் என எதையும் விட்டு வைக்கவில்லை. கடைசியாக அரசியலையும் சந்தையாக்கிவிட்டனர். பெரும்பான்மை அரசியல்வாதிகள் பகுதி நேர அரசியலும், முழு நேர தொழில் செயல்பாட்டிலும் ஈடுபட்டதன் விளைவுதான் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட முடியவில்லை. கவனம் செலுத்த நேரமில்லை.

தேர்தலின்போது பணம் தந்து வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைப் பிடிக்கின்றனர். வாக்கில் ஆரம்பித்த விற்பனை, சட்டமன்ற உறுப்பினர் விற்பனை, பாராளுமன்ற உறுப்பினர் விற்பனை என அனைத்தும் விற்பனைக்கானதாக மாறிவிட்டது. இதற்கு உடந்தையாய் உயர் அதிகார வர்க்கத்தையும் சந்தை உள்வாங்கி, அரசியல்வாதிகளோடு அவர்களையும் ஜோதியில் கலக்க வைத்து விட்டது.

மக்களிடம் இருந்து விலகிய அரசியல்;

ஒட்டு மொத்த அரசியல், ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் அனைத்தும் சந்தை நோக்கி செயல்பட ஆரம்பித்து, சாதாரண மக்களிடமிருந்து விலகி நிற்க அனைவருக்கும் கற்றுத் தந்தது சந்தை. இந்தச் சூழலில் தான் இந்தியா ஒளிர்கிறது என்ற விளம்பரம் வந்தது. அதைச் சரியாக பயன்படுத்தி, மக்கள் படும் வேதனை சொல்லி மாளவில்லை, இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கம் மக்களை வெறுப்பேற்றும் அளவுக்கு அரசியல் எதிர் வினையாற்றி தேர்தலைச் சந்தித்தனர் 2004ல். அப்பொழுது மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் குறைந்தபட்ச செயல்த்திட்டத்துடன் தேர்தலைச் சந்தித்து, அந்த அரசியல் அணி வெற்றி பெற்றது.

சந்தைக்கு தேவையானவர் நாட்டுக்கு தலைவரானார்!

அந்த நேரத்தில் அந்த ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்க தலைவரை தேடிய போது தலைவருக்குப் பதிலாக ஒரு சந்தைக்கான தலைமை ஆலோசகர் அந்த ஆட்சிக்கு தலைமையேற்க சம்மதித்தார். யாரை அன்று ஆட்சிக்குத் தலைவராக தேர்ந்தெடுத்தார்களோ, அவர் தான் 1991-ல் நம் நாட்டின் பொருளாதார கொள்கையை மாற்றியமைத்த மன்மோகன்சிங். மிகவும் நேர்மையானவர். ஆனால் அவர் மக்கள் தலைவர் அல்ல.

நரசிம்மராவ், வாஜ்பாய் கட்டி வளர்த்த இந்திய புதிய பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றார், அந்த மாமனிதர் மன்மோகன் சிங். ஒரு ஐந்தாண்டு அல்ல. இரண்டு ஐந்தாண்டு மக்கள் தலைவராக எவரும் அந்தக் கட்சிகளிலிருந்து கிடைக்காத நிலையில் அவரே ஆட்சித் தலைவராக நீடித்தார். அந்தக் கூட்டணி காலத்தில் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு வளர்ந்த பொருளாதாரத்தினால் அறிவித்து மாநில அரசுகளின் பொறுப்பில் நிறைவேற்ற வைத்தது.

அதே நேரத்தில்தான் கூட்டணிக் கட்சிகளின் எல்லை இல்லா ஊழல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி விழி பிதுங்கினார் மன்மோகன் சிங். கடைசியில் சந்தைக்காரர்களை அதாவது, பெரும் தொழில் அதிபர்களை சி.பி.ஐ அலுவலகம் முன் நிற்க வைத்தார் மன்மோகன் சிங். அப்பொழுதுதான் சந்தை மனிதர்கள், தனக்கானவர்களை தேடினர், கிடைத்து விட்டார். 1991-ல் ஆரம்பித்து வளர்த்த சந்தைப் பொருளாதாரத்தை ஒரு குழப்பத்தில் 2013-ல் கொண்டு வந்து நிறுத்தியது அந்த அரசு.

கோடுகளை எல்லாம் ரோடுகளாக்கிய மோடி

2014-ல் தெளிவுடன் வந்த புதியவர், முந்தைய அரசு போட்ட கோடுகளை எல்லாம் சாலையாக சிமெண்ட் சாலையாக கொள்கைகளிலும், சட்டங்களிலும், திட்டங்களிலும் கொண்டுவந்தார். அவர் போட்ட சாலை சந்தைக்கானது. அதற்கு முன் போட்ட கோடுகள் சந்தைக்கும் சமூகத்திற்குமானதாக இருந்தன. ஆனால், இவரோ சந்தையை பாதுகாப்பாக்கிக் கொண்டார். மக்களுடன் இருந்த கட்சிகள் இந்த சந்தை காலத்தில் தங்களை தங்கள் தொழில்களுக்குள் புதைத்துக் கொண்டன. பகுதிநேர அரசியலில் ஈடுபட்டன. மக்களிடமிருந்து விலகி நின்றன.

அரசியல் + வியாபாரம் = அரசியல்வாதி

அதன் விளைவு மக்கள் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, சந்தைப் பிரச்சினைகளை கவனிக்க ஏதுவாக புதிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளை யாரும் விவாதிக்காமல் பார்த்துக் கொண்டனர். வறுமை, பசி, வேலை வாய்ப்பின்மை, தீண்டாமை, வாழ்வாதாரம், விவசாயிகளின் தற்கொலை, தண்ணீர் பஞ்சம், சுற்றுச் சூழல், அனைத்தும் புறம் தள்ளப்பட்டு நாட்டுப்பற்று, பொருளாதார வளர்ச்சி, உலகம் பாராட்டும் ஒட்டுமொத்த வளர்ச்சி, கட்டுமான வளர்ச்சி என சந்தைக்கான முழக்கங்களை கட்டியமைத்து பழைய விவாதங்களை முற்றிலுமாக புறக்கணிக்க, ஊடகங்களை அதிகார மையம் சந்தைப் பக்கம் கொண்டு சென்றுவிட்டது.

கட்சிகளை ஊழல் சேற்றுக்குள் புதைத்த சந்தை!

சந்தையே ஊடகங்களை பொருள்கள் கொள் முதல் செய்வது போல் செய்து மக்களின் புலன்களைத் தூண்டி நுகர்வு வெறிக்கு மக்களை மதிமயக்கி வைத்துக் கொண்டனர். ஆண்ட கட்சிகள், தேசியக் கட்சியானாலும் சரி, மாநிலக் கட்சியானாலும் சரி அனைத்தையும் ஊழல் என்ற சேற்றுக்குள் புதைய வைத்து விட்டது சந்தை. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது இன்றைய ஆளும் கட்சி. இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் வளம் பெற்றார்களா?  சிரமத்தில் இருக்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள இரண்டு அறிக்கைகளைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

வறியவர்களை அதிகப்படுத்திய வளர்ச்சிப் பொருளாதாரம்;

இந்த அறிக்கை அரசால் தயாரிக்கப்பட்டது. அதை தொழிலாளர் ஆணையத்தின் தலைவராக இருந்த அர்ஜின் சென் குப்தா தயாரித்த அறிக்கை. அந்த நேரத்தில் பொருளாதார வளர்ச்சி 9% ஆகும். அப்போது வாழ்ந்த 104 கோடி மக்களில் 83.6 கோடி மக்களின் தின வருமானம் ரூ 20 மட்டுமே. இன்று மக்கள் தொகை 146 கோடி. இதில் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையைப் படித்தால் நாம் புரிந்து கொள்ளலாம். இன்று இந்தியாவில் உள்ள 70% மக்களின் நிலை பரிதாபகரமானது என்பது அனைத்து மேம்பாட்டு அறிக்கைகளும் கூறுகின்றன.

தேர்தல் அரசியல் எனும் பொம்மலாட்டம்!

ஆனால், இதைப் பற்றிய எந்தவித விவாதம் இல்லாமல் நடக்கும் ஒரு தேர்தல் அரசியலை சந்தை தெளிவாக பொம்மலாட்டம் நடத்துவது போல் அரசியல் கட்சிகளை வைத்து நடத்துகிறது. ஊடகத்தை சந்தை விலைக்கு வாங்கிக் கொண்டது. அது செய்ய வேண்டிய வேலையை அது செய்வது கிடையாது, அறிவுஜீவிகளை சந்தையும், அரசும் வாங்கிக் கொண்டு அரசுக்கு வால் பிடிக்க வைத்து விட்டது.

அரசுப் பணியாளர்களை மக்களை மேய்க்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது சந்தை. நடுத்தர வர்க்க மக்களை சுயநலமாக சிந்தித்து தாங்கள் எப்படி கோடீஸ்வரர் ஆகுவது என சிந்திக்க வைத்து விட்டது. ஏழைகளை குடியிலும், கேளிக்கைகளிலும், உணவிலும் தோய வைத்து விட்டது. இதன் விளைவு இன்று சந்தை மக்களுக்கான அரசியலை தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது.

இன்றுள்ள சந்தைக்கான அரசை அசைக்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை முரண்பட்டு மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது சந்தை. இந்தச் சூழலில் இந்த அரசியல் கட்சிகளின் அரசியலால் நிலைமை மாறப் போவது கிடையாது. இதை மாற்ற சமூகச் சிந்தனை கொண்டோர் ஒன்றிணைந்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அரசியலைக் கட்டும் போது தான் சாத்தியமாகும். தீயவைகள் சமூகத்தில் நடப்பது தீயவர்களால் அல்ல, நல்லவர்களின் அமைதியால் என்று எட்மண்ட் பர்க் கூறுவான்.

நான் நல்லவன் என்று கூறி வீட்டில் அமர்ந்திருக்காமல், இன்னொரு நல்லவருடன் இணைந்து மக்களுடன் செயல்படும் போது மட்டும் தான் மாற்றம் திகழும் என்பதை மனதில் கொண்டு செயல்படப் புறப்பட வேண்டும். அது தான் இன்றைய தேவை.

கட்டுரையாளர்; க. பழனித்துரை

பேராசிரியர், எழுத்தாளர்,

காந்திய செயற்பாட்டாளர்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time