நினைத்துப் பார்க்க முடியாத அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் கை கோர்க்கிறார்களாம்! தவெகவுடன் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கை கோர்த்து தடுப்பானேன்? இதன் பின்னணி என்ன?
‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும்’ என்ற நிலைபாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன.
மே-5 ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ”தவெக ஆட்சி அமைவதை தடுக்க, ”நம் இரு திராவிட இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்..’’ என்று ஆதரவு கேட்ட தகவல் கிடைத்த போது நம்ப முடியவில்லை.
பெரியாரையும், அம்பேத்காரையும் வழிகாட்டித் தலைவராக அறிவித்து செயல்படும் விஜய் திராவிட கருத்தியலுக்கு எதிராக ஒரு போதும் பேசியதில்லையே. ‘பாஜக கொள்கை விரோதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சமரசமே இல்லை’ என கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்திலும் விஜய் உறுதிபடுத்தி உள்ளாரே.
‘அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம்’ என நாம் அமைதி காத்தோம்.
அதன் பிறகு திமுகவிடம் ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிய செய்தி வந்தது.
’பரவாயில்லையே அதிமுகவில் ஒரு சிலருக்கேனும் சுயமரியாதை இருக்கிறதே? அறச் சீற்றம் இருக்கிறதே.. தலைமையை தட்டிக் கேட்கும் ஜனநாயகம் இருக்கிறதே’ என நினைத்துக் கொண்டோம்.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சுதாரித்துக் கொண்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை புதுச்சேரி தூக்கிச் சென்று தங்க வைத்து, ’’நல்ல செய்தி தரப்போகிறேன். நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்’’ எனப் பேசிய தகவல்கள் வெளியாயின.
”எடப்பாடியார் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியிலேயே தங்கியிருப்பார்கள்” என அந்தக் கட்சி நிர்வாகி அன்பழகன் கூறி இருக்கிறார்.
அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடமும் ஸ்டாலின் தகவல் கூறியுள்ளார்.
கட்சிக் கூட்டத்திலும் ”நான் எந்த முடிவு எடுத்தாலும், நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில் தான் இருக்கனும்” என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் ஸ்டாலின். அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்…’’ என்றும் கூறியுள்ளார், ஸ்டாலின்.
“நிலையான ஆட்சி அமைய, அவசரமான எந்த முடிவையும் எடுக்க” ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி, திமுகவின் உயர் நிலை கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
”பாஜக முகமுடியை போட்டுக் கொண்டுள்ளது அதிமுக . அதிமுகவிற்கு வாக்களிப்பது பாஜகவின் மறைமுக ஆட்சிக்கு வித்திடுவதாகவே முடியும்” என்று மேடைதோறும் ஸ்டாலினும், உடன் பிறப்புகளும் பேசிய வார்த்தைகளின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அதிமுக புனிதமான கட்சியாகிவிட்டதா திமுகவிற்கு? ‘விஜய் ஆட்சி அமைப்பதைக் காட்டிலும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்தால் பரவாயில்லை’ என நினைக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது…?

விஜய் ஆட்சி அமைத்தால், இடதுசாரிகளும், விசிகவும் அதிகாரம் பெறக் கூடிய நிலை உள்ளது. அவர்கள் உடனிருந்து விஜய்யை வழி நடத்தும் வாய்ப்பு ஏற்படும், மதச்சார்பற்ற ஆரோக்கியமான அரசியல் சூழல் கனிந்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரை பிரதிபலிக்கும் ஐ.யு.எம்.எல்லிடமும் தவெக ஆதரவு கேட்டுள்ளது. இந்த சிறிய கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தொடர்ந்தாலும் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.
”பாஜக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமகவிடம் கூட ஆதரவு கோரமட்டோம்” என தவெக திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இப்படியாக பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து தடுப்பானேன்?
பாஜகவின் ஆளுநர் அர்லேகரின் அராஜக செயல்பாட்டுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. ”தவெகவிற்கு பெரும்பான்மை எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்க அவர்களை அழைக்க மாட்டேன். தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் நான் அழைப்பது சாத்தியம் ’’ என்று ஆளுநர் கூறியுள்ளார்.

‘திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து வரும் வரை விஜய்யை அழைக்கப் போவதில்லை’ என ஆளுநர் காத்திருக்கிறார்…என்றால், விஜய்யை எதிர்க்க திமுக, அதிமுக,பாஜக ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
”தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால், 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம்” என தவெக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
தற்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்;
திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே பாஸ் தான். அந்த பாஜக என்ற பாஸ் தான் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்க தன்னுடைய இரு அடிமைகளையும் ஒன்றிணைய கட்டளை இட்டுள்ளது.
அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கட்டளை நடிகர் ரஜினிகாந்த் மூலமாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ”உங்களால் நீண்ட காலத்திற்கு இடதுசாரிகளையும், விசிகவையும் கண்ரோல் பண்ண முடியாது. விரைந்து முடிவெடுங்கள்” எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுகவானது திமுக தயவில் ஆட்சியில் அமர்வதை அதிமுகவின் கடைக் கோடி தொண்டன் கூட ஏற்கமாட்டான். அப்படி அதிமுக தலைமை முடிவெடுப்பது என்பது அந்தக் கட்சிக்கே முடிவுரை எழுதிவிடும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த அசிங்கமான முடிவை எடுத்தால், கட்சியே அழிந்து போவது திண்ணம். திமுக ஒரு தீய சக்தி என அரை நூற்றாண்டுக்கும் மேலாக எம்.ஜி.ஆரால். ஜெயலலிதாவால் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் தொண்டன் எடப்பாடி பழனிச்சாமியை எள்ளவும் ஏற்கமாட்டான்.
அதே போல தவெகவின் விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க தனது பரம விரோதியான அதிமுகவை ஆதரிக்க திமுக முடிவெடுப்பதை அந்தக் கட்சியில் எம்.எல்.ஏக்கள் ஏற்கலாம். ஆனால், 56 ஆண்டுகளாக அதிமுகவை அடிமை கட்சியாக காட்டியே அரசியல் செய்த திமுக தலைமை இன்று திசைமாறி கைகோர்ப்பதை அடி நிலை திமுக தொண்டன் கூட அறவே ஏற்கமாட்டான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதியை முதல்வராக்கி அழகுபார்க்கத் துடித்தார் ஸ்டாலின். அதற்கு குறுக்காக விஜய் விஸ்வரூம் எடுத்து வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதியின் எதிர்காலத்திற்காக விஜய்யின் வளர்ச்சியை முடக்கத் துடிக்கிறார் ஸ்டாலின். இதற்காக எந்தாசிங்கத்தையும் செய்ய தயாராகிவிட்டார் ஸ்டாலின்.
திமுகவில் உள்ள கொள்கை பற்றாளர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். திமுகவின் கொள்கை வழிப் பயணத்தை திசைமாற்றிக் கொண்டு செல்லத் துடிக்கும் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக திமுகவில் உள்ள சுயமரியாதைக்காரர்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என நம்புவோம்.
பாஜகவின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு இரு திராவிட கட்சிகளும் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் இடதுசாரிகளும், விசிகவும் இன்னும் உள்ள முற்போக்கு அமைப்புகளும் ஜன நாயகத்தை காக்கும் வரலாற்று கடமையை சரியாக செய்வார்கள் என்று நம்புவோம்.
சாவித்திரி கண்ணன்
























தங்கள் கருத்து சரியான கருத்து… காங்கிரஸ் tvk க்கு ஆதரவு அளிப்பதால் பிஜேபி யுடன் கை கோர்க்கும் dmk..
மட்டமான அரசியல் நகர்வு..
அடுத்து தேர்தல் வந்தால் admk, DMk வை தூக்கி வீசுவார்கள்… இரு கட்சி தொண்டர்களும்…
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
தாங்களே இந்த அறம் இதழில் விஜய் கட்சி ஆரம்பித்த வேளையில் பாஜக ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்துள்ளார் என தாங்கள் குறிபிட்டதை நினைவு கூற விரும்புகிறேன்.
ஆக இன்றைய இந்தியாவில் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ பாஜக ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் கட்சி நடத்த முடியாது.
மேலும் நடிகர் விஜய் இன்னும் நடிகராகதான் இருக்கிறார். முழுமையான ஒர் அரசியல் இயக்க தலைவராக வெளிவரவில்லை.
தனி பெரும் கட்சியாக வந்த நிலையில் விஜயே களத்தில் இறங்கி செயல்பட்டு இருந்தால் இந்நேரம் மெஜாரிட்டிக்கு தேவையான நம்பரை பெற்று இருப்பார்.
விஜயை விட அரசியல் அனுபவத்தில் மூத்த தலைவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்க , எவரிடமும் விஜய் பேசமாட்டார், ஆனால் அவரின் அடிபொடிகள் பேசுவார்கள் என்றால்,., வளராத நிலையில் ஏன் இந்த தலைகனம்.
கூட மெகா ஊழல் புகழ் செங்ஸ் ., ஆதவ் உள்ளிட்ட நபர்களை வைத்து கொண்டு விஜய் தூய்மையான ஆட்சி கொண்டுவருவது என்பது கானல் நீர்தான்.
அரசியல் களம் வேகத்துடனும் விவேகத்துத்துடனும் செயல் படுபவர்கள் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும்.
இது ஒன்னும் சூட்டிங்களம் அல்ல. கவுண்டமணி திட்டினாலும் அடுத்த படத்தில் திருத்தி கொள்ள.
அரசியல் அனைத்து வகை சூது வாதுகளையும் கைகொள்ளும் திறமை வாய்ந்தவன் தான் அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடமுடியும். இதுதான் உலக அரசியல் பால பாடம்.
அனைவரும் திரையில் நமக்கு வழி விடுவதுபோல் நிஜத்தில் யாரும் வழிவிட மாட்டார்கள்.
அதிமுக + திமுக இனைந்து ஆட்சி இன்றைய காலத்தின் கட்டாயம் என்க.
ஏனெனில் நல்லவர்கள் பின் தமிழகம் சென்றால் யாரும் தடுக்க முடியாது.
திரை பிரபல்யம் மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் ஒருவரை அடியோடு வீழ்த்த காலம் சில செயல்களை வலிந்து செய்ய வைக்கும்
திமுக கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் பாஜக நுழைவதை தடுக்க தவெக வை ஆதரிக்கிறோம் என்று சப்பைக்கட்டு போடுவது அரசியல் ஒழுக்கமா? செஞ்சோற்றுக்கடன் தீர்க்க பூசி மெழுகுகிறார்கள் திமுக மாஜி கூட்டாளிகள்