அவலமான அரசியல் களம்! கேலிக் கூத்தாகும் ஜனநாயகம்!

-சாவித்திரி கண்ணன்

எப்படியோ சிரமப்பட்டு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுகளை பெற்ற நிலையில், பதவி ஏற்க உள்ளார் விஜய். ஆனால், இந்த ஆதரவு அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதை அவதானிக்கும் போது  அவ நம்பிக்கையே துளிர்க்கிறது. நித்திய கண்டமாக அமையவுள்ள ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? ஒரு அலசல்;

செம திரிலிங்காக போய்க் கொண்டுள்ளது உள்ளது, தமிழக அரசியல்!

பலருடைய புனித பிம்பங்கள் பல்லிளித்துவிட்டன!

திமுக தயவில் முதலமைச்சராக ஆசைப்பட்டு எம்.எல்.ஏக்களை பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.

”பாஜகவின் முகமுடியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க ஒத்துழைக்கமட்டோம்” என்ற கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைபாட்டால் ஸ்டாலின் கண்ட கனவு காலாவதியானது.

விஜய் முதலமைச்சராவதை தடுக்கும் அடுத்த அஸ்திரமாக திருமாவை முதல் அமைச்சராக்கும் முடிவை ஸ்டாலின் எடுத்தார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இணங்கவில்லை. ஆதரவு தந்து விட்ட பிறகு கம்யூனிஸ்டுகளாலும் பின் வாங்க முடியாத நிலைமை.

இதற்கிடையே அதிக மக்கள் வாக்களித்து விஜய் முதல்வர் ஆவதைக் காண ஆவலோடு இருக்கும் சூழலில் அது விசிகவால் தடைபட்டது என்ற அவப் பெயர் எழுவதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் திருமாவிற்கு ஏற்பட்டது. ஆதரவு உண்டா? இல்லையா? என்பதற்கு  திரிமாவளவன் எடுத்துக் கொண்ட மிக அதிக காலகட்டம் பல மர்மங்களை உள்ளடக்கியது. இந்த  அதீத தாமத்தின் பின்னிருந்த பேரங்கள், அரசியல் அழுத்தங்கள் குறித்து வெளியான செய்திகள் வருத்தம் அளிக்கின்றன.

தலித் மக்களில் கணிசமானோர் விஜய்க்கு விரும்பி வாக்களித்துள்ளனர். 28 தலித் எம்.எல்.ஏக்கள் தவெகவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுவும் பொதுத் தொகுதியில் இருந்து நால்வர் வென்றுள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யின் பதவி ஏற்பிற்கு விசிக வால் வில்லங்கம் ஏற்பட்டது என்ற அவப் பெயரை தவிர்க்கும் நிர்பந்தம் காரணமாக ஸ்டாலினை சமாதானப்படுத்திவிட்டு தவெகவிற்கு சப்போர்ட் தந்துள்ளார், திருமா. ”ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பிள்ளை தான் தவெக என்று நான் வைத்த விமர்சனம் அப்படியே இருக்கிறது. எங்களால் விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் போனார் என்ற வரலாற்றுப் பழியை தவிர்க்கவே ஆதரவு தந்துள்ளோம்” என திருமா சொல்லி உள்ளார்.

கிட்டத்தட்ட இதே நிலைபாடு தான் கம்யூனிஸ்டுகளுக்கும். எப்போது ஸ்டாலினை இயக்குவது பாஜக தான் என்று பட்டவர்த்தனமாக தெரிய வந்ததோ, அப்போதே திமுகவுடனான உறவுக்கு முற்ற முழுக்க முற்றுப்புள்ளி வைக்காமல், ”தற்போதும் திமுகவுடன் இருந்து கொண்டே பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்வோம்” என கம்யூனிஸ்டுகள் கூறுவது கடைந்தெடுத்த கயமைத் தனம்.

இதே போல அகில இந்திய அளவில் காங்கிரசோடு கைகோர்த்துள்ள ஐ.எம்.எல்லுக்கு டெல்லியில் அழுத்தம் தரப்பட்டுள்ளது. இஸ்லாமிய வேட்பாளர்களை இந்துக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் தைரியமாக நிற்க வைத்து வெற்றி ஈட்டிய விஜய்யை புறக்கணிப்பதை இஸ்லாமிய மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவர்களும் ஸ்டாலினை சமாதானப்படுத்தி ஆதரவு தந்துள்ளனர்.

தற்போதும் கூட திமுக கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் உள்ள கூட்டணி உறவை தொடர்வதாக அறிவித்துள்ள நிலையில், இவர்களின் ஆதரவு நிலைக்குமா? நீடிக்குமா? என்ற பதற்றம் தவெகவுக்கு இருந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

அதிகாரத்தில் பங்கு என்பதாக இல்லாமல், ‘வெளியில் இருந்து ஆதரவளிப்பது’ என்பது எப்போது வேண்டுமானாலும் சுலபத்தில் வெளியே வருவதற்கான வாய்ப்பை உள்ளடக்கியது.

திமுக ஆட்சி பாஜகவின் சட்ட திட்டங்களை அமல்படுத்திய போது கண்டும், காணாமல் அமைதி காத்த இந்தக் கூட்டணி கட்சிகள் தற்போது தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் விமர்சிப்பார்கள். அதற்கான தூண்டுதல்களை, நிர்பந்தங்களை திமுக உருவாக்கித் தரும். அதாவது, விஜய் உடனுள்ள கட்சிகளின் ரிமோட் கண்ட்ரோல் ஸ்டாலினிடம் உள்ளது.

ஆக, திமுகவுடன் விசுவாசம் பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் மக்களுடையே வெறுப்பிற்கு ஆளாகாமல் இருக்கவே தவெகவிற்கு ஆதரவு என்ற பூமாலையை விஜய் கழுத்தில் போட்டுள்ளனர். அந்த மாலையை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு சுருக்கு கயிறாக மாற்றும் வாய்ப்பை கொண்டுள்ளனர்.

இப்படி ஒரு சூழல் உருவானால் அதை சரிகட்ட அதிமுகவில் ஒரு பிரிவினர் சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பில் தவெகவை ஆதரிக்க காய் நகர்த்துகிறது. அந்தக் கொள்ளை கூட்டம் ஆட்சியில் பங்கு பெறும் சூழல் உருவானால், விஜய் ஆட்சி தாங்காது.

மற்றொருபுறம் அமமுக எம்.எல்.ஏவுக்கு ஆசைகாட்டி ஆதரவு பெறுவதற்கு தவெகவினர் செய்த அத்து மீறல்களை கிரிமினல் குற்றமாக்கி விஜய்யை தண்டிக்கும் சூத்திரக் கயிறையும் பாஜக பெற்றுள்ளது.

ஆளுநரை சந்திக்க விஜய் சென்ற போது ஆந்திர கிரானைட் அதிபர் விஷ்ணு ரெட்டி, பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் ஆகியோரை அழைத்துச் சென்றதானது தவறான பண முதலைகளின் பின்னணியில்  விஜய் இருக்கிறார் என்ற தோற்றத்தை பொது வெளியில் உருவாக்கி உள்ளது.

நடந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

ஆட்சி அமைத்தாலும், விஜய் ஆட்சி ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குள் கவிழவே வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகளின் பேராசையாலும், சுயநலத்தாலும் ஜனநாயகம் கேலிக் கூத்தாகிக் கொண்டுள்ளது.

சாவித்திரி கண்ணன்

ஆசிரியர்,

அறம் இணைய இதழ்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time