தமிழகத்தின் அரசியல் சூழலை தலை கீழாக மாற்றி அமைத்துள்ளது, விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு. இந்த நிகழ்வே ஒரு வலுவான செய்தியை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளது. பல அதிரடி அரசியல் மாற்றங்களை விரைவில் தமிழகம் காண உள்ளது. ஆம், இனி தமிழகத்தில் இரு துருவ அரசியல் தான்;
பதவி ஏற்பு நிகழ்வில் விஜய் அருகில் ராகுல்காந்தி இருந்தது, ஒரு மிக முக்கியமான செய்தியைத் தந்துள்ளது!
இன்றைய தினம் இந்தியாவில் மத வெறி சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் ராகுல் காந்தியை அருகில் வைத்துக் கொண்டு தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றதன் மூலம், பாஜகவிற்கு எதிரான தன்னுடைய உறுதியான நிலைபாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
அதுவும் காங்கிரசை மந்திரி சபையில் சேர்ப்பதை ஜீரணிக்க முடியாமல், எடப்பாடி பழனிச்சாமியை குறுக்கு வழியில் முதல்வராக்க சதி திட்டம் தீட்டிய பாஜகவுக்கு, இந்தக் காட்சி எவ்வளவு கோபத்தை உருவாக்கும் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமலும், இதன் விளைவாக இன்னும் பல நெருக்கடிகளை பாஜக ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும், ராகுலோடு விஜய் பதவி ஏற்பு மேடையை பகிர்ந்து கொண்டதும், இடதுசாரித் தலைவர்களும், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் நிகழ்வில் பங்கேற்றதும் உண்மையிலேயே மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

”இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான அரசாக இது இருக்கும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் நமது சமரசமில்லாத அடிப்படைக் கோட்பாடு. சிறுபான்மை சகோதரர்களுடன் நமது அரசு கூடவே நிற்கும். இதில் 100 சதவிகிதம் உறுதியோடு இருப்பேன். இதில் எந்த சமரசமும் இல்லை” என உறுதிபட விஜய் பேசி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தவெகவும், காங்கிரசும் கைகோர்த்ததில் பிரதமர் மோடி அவர்களின் திமுக மீதுள்ள பாச உணர்வு எப்படியெல்லாம் பொங்கி வழிகிறது பாருங்கள்..! பெங்களுர் நிகழ்வு ஒன்றில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்;
”தமிழ்நாட்டின் நிலைமையைப் பாருங்கள். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நெருக்கமான கூட்டணி கட்சியாக இருந்தது. அரசியல் சூழல் மாறியவுடன் துரோகம் செய்து விட்டது. அதிகாரப் பசியால் காங்கிரஸ், திமுகவின் முதுகில் குத்திவிட்டது’’ என திமுகவிற்காக உருகி, காங்கிரசின் மீது பாய்கிறார், பிரதமர் மோடி.

ஆக, திமுக- பாஜக கள்ளக் கூட்டணி தற்போது அம்பலப்பட்டுவிட்டது. மக்கள் தீர்ப்பை புறந்தள்ளி காங்கிரஸ் மீதான கோபத்தில் தவெக ஆட்சி அமைவதை தடுக்க, திமுக, அதிமுகவை ஒன்று சேர வைத்து, குறுக்கு வழியில் தமிழக ஆட்சிக் கட்டிலை ஆட்டிப் படைக்க நினைத்த பாஜகவின் சதி திட்டம் இடதுசாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் திமுக முதுகில் குத்தியதாம்…!
அது உண்மையில்லை, ஆனால், பாஜக மக்கள் முதுகில் அல்லவா குத்த நினைத்தது…!
எது துரோகம்…? திரைமறைவில் இருந்து கொண்டு திமுகவை ஆட்டிப் படைத்து இங்கு மறைமுக அதிகாரம் செய்து வந்த பாஜகவின் சதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாஜக என்ற பூச்சாண்டியை காட்டி, தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக, அந்த பூச்சாண்டியின் தோளில் அமர்ந்து தான் இந்த மோடி வித்தையை காட்டி, தமிழக மக்களின் காதில் பூச்சுற்றியுள்ளது என்பது ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டு வருகிறது.
இதோ, தற்போது நாடாளுமன்றத்தில் ”திமுகவினர் காங்கிரசாரோடு சேர்ந்து உட்காரமாட்டோம்” என கனிமொழி சபாநாயகருக்கு கடிதம் தந்து, இருக்கைகளை மாற்றக் கேட்டுள்ளார்.
மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இருக்கும் கட்சி தான் திமுக என்றால், காங்கிரசோடு அதே தோழமையை தொடர்ந்து பேணலாமே. தேர்தல் உடன்பாடு இல்லாவிட்டாலும், மதவெறி அரசுக்கு எதிராக காங்கிரசோடு கை கோர்ப்பதை எப்படி தவிர்க்க முடியும்…? ஆக, காங்கிரசாரோடு திமுகவினர் உட்கார மறுப்பது, பாஜகவை நோக்கிய திமுகவின் நகர்வாகவே பார்க்க முடிகிறது.
பாஜக இது வரை தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவை மட்டுமே நம்பி இருந்தது. அதிமுக மிகவும் பலவீனப்பட்டுவிட்ட நிலையில் இனி திமுக, அதிமுக, பாஜக என்று மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தவெக – காங்கிரசை களத்தில் எதிர்க்கும் சூழலை 2029 தேர்தல் களம் காணவுள்ளது.
பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று பெரிய ஜாம்பாவான்களையும் எதிர்த்து ஆட்சி புரிவது என்பது சாதாரணமல்ல. அதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி, முற்போக்கு சக்திகளும் முழு ஒத்துழைப்பை தவெகவிற்கு நல்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் குரல் வளையை நெரித்து சட்டாம் பிள்ளைத்தனம் செய்த ஸ்டாலினின் பிடியில் இருந்து விலகிச் செல்லும் நல் வாய்ப்பை தவெக மூலமாக காலம் இவர்களுக்கு வலிந்து தந்துள்ளது.

எனவே, இடதுசாரிகள், விசிக, ஐ.எம்.யு.எல் ஆகியவை இனி திமுகவுடன் பயணிக்க இயலாது என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும். ஆகவே, தவெக ஆட்சியில், காங்கிரசைப் போல அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டு, அனுபவமில்லாத புதியவர்களை வழி நடத்தி, நல்லாட்சி மக்களுக்கு கிடைக்க ஒத்துழைக்க வேண்டும். அப்படி செய்யும் போது, அதிமுகவில் இருந்து ஒரு பிரிவினர் பிரிந்து வந்து ‘தவெகவை ஆதரிக்கிறோம்’ என்ற பெயரில் அதகளம் செய்வதை தடுக்கலாம்.
ஒன்றிணைந்து செயல்பட கூட்டணி கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய உயர் நிலை கமிட்டி அமைப்பது, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து ஆட்சியை கொண்டு செலுத்துவது ஆகியவற்றை செய்ய வேண்டும். பாஜக எதிர்ப்பில் பாசாங்குத்தனமற்ற நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தவெகவால் உத்திரவாதப்படுத்த முடிந்தால், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பாக்கெட்டிற்குள் போகும் பல லட்சம் கோடி பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்பி, ஆகச் சிறந்த நன்மைகளை மக்களுக்கு செய்ய முடியும். அரசின் ஆடம்பர விழாக்களையும், விளம்பரத்திற்காக செலவிடும் பணத்தையும் மிச்சப்படுத்தி ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு செலவழிக்கலாம்.
நல்லதே நடக்கட்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
























மக்கள் செல்வாக்குள்ள விஜய் படை காங்கிரசுக்கு கிடைத்துள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தி காங் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளூர் தலைவர்களை அங்கீகரிக்க வேண்டும் மாவட்ட கமிட்டிகளை அதிகாரப் படுத்த வேண்டும் காமராஜர் ஆட்சிக்கு வழி பிறந்து விட்டது
மரியாதைக்குறிய திரு சாவித்திரி கண்ணன் அவர்களே, தாங்கள் எழுதும் அனைத்து கட்டுரைகளிலும், பாஜகவை மட்டுமே குறி வைத்து தாக்குதல்களை தொடுக்கிறீர்கள். காரணம் புரியவில்லை. நாட்டை பிளவுப்டுத்தும் நோக்கத்தில் செயல்படும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் தங்களின் கண்களுக்கு தெரிவதில்லை. பிரிவினையை மையப்படுத்தி பேசும் தி.க. மற்றும் திராவிட கட்சிகளின் அளப்பரைகள் தங்களுக்கு தெரிவதில்லை. தமிழக அரசியல் களத்தில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுகவை இயக்கும் சக்தியாக பாஜக இருப்பதாக அடிக்கடி கூறுவது, தங்களின் பிரிவினைவாத ஆதரவு கொள்கைக்கு துணை தேடுவதாக தெரிகிறது. ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் தான் கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் போட்ட கட்சி காங்கிரஸ். இத்தாலி மாலுமிகளை விடுக்க முயன்ற கட்சி காங்கிரஸ். திமுகவை மிரட்டி பணிய வைத்த கட்சி காங்கிரஸ். ஆனால் தங்களில் பல கட்டுரைகளில் பாஜகவை மட்டுமே தாங்கள் அந்நிய சக்தியை போல் பாவிப்பது தங்களின் ஊடக தர்மத்திற்கு சரியானதா?
சோ
சிதம்பரத்தையும், செல்வப்பெருந்தகையையும் தவிர்த்தால் ஒற்றுமைகட்சி எனும் காங்கிரஸ் உருப்படும்.