ஒப்பந்த அடிப்படையில் வேலை நியமனம், உரிமையற்ற அடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்கள் குறைந்த சம்பளம், கூடுதல் வேலை! அதாவது பாதி சம்பளம்! ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உழைப்புச் சுரண்டல்…கண்ணீருக்கும் மதிப்பில்லை, கதறலுக்கும் மதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நல ஆணையம் அனைத்தும் மெளனம் சாதித்தன…இறுதியில் பொங்கி வெடித்தது தொழிலாளர்கள் கலவரம்!
பெங்களூரு விஸ்ட்ரான் இன்போகாம் தொழிற்சாலை கலவரம் சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல, சகிக்க முடியாத மனிதாபிமானமற்ற உழைப்பு சுரண்டலுக்கு எதிரான கோபாவேசமேயன்றி, வேறல்ல!
நிரந்தர தொழிலாளிகள் ஆயிரம் பேர் பணிபுரியும் ஒரு தொழிற்சாலையில், அதைவிட ஒன்பது மடங்கு அதிகமாக ஒப்பந்த தொழிலாளிகள் இருந்தால் அங்கு தொழில் அமைதி இருக்குமா ! 12 மணி நேரம் வேலை வாங்குவது சரியா ? தொழிற்சங்க நடவடிக்கைகளை அனுமதித்து இருந்தால் இந்தத் துயரம் ஏற்பட்டிருக்குமா ? தொழிலாளர்களை குற்றம் சொல்லக் கூடிய தார்மீக பலம் அரசுக்கு உள்ளதா ? பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், நரசரபுராவில் 43 ஏக்கர் பரப்பில் விஸ்ட்ரான் இன்போகாம் என்ற ஆலை உள்ளது.இது மின்னணு சாதனங்களை தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐ போனை தயாரித்துக் கொடுக்கிறது.தைவான் நாட்டைச் சேர்ந்தது. இதில் சமீபத்தில் தொழிலாளர்களால் கலவரம் ஏற்பட்டது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; பொருட்கள் உடைக்கப்பட்டன; கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள சொத்துகள் சேதத்திற்கு ஆளாயின. இந்தச் சம்பவத்தில் 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை மூடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை நிர்வாகிகள், பெருமளவு தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு எடுக்காமல் ஏஜென்சி மூலமாக எடுப்பதால், தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம், வரைமுறையற்ற வேலை நேரம் ஆகியவை நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளன!
நிர்வாகத்திற்கும்,தொழிலாளர்களுக்கும் இடையில் நம்பிக்கை (trust) இல்லாததே இந்த சம்பவத்திற்கு முக்கியமான காரணமாகும்.நல்ல வேளையாக உயிர் இழப்போ, வேறு காயங்களோ ஏற்படவில்லை. ஒரு இடத்தில் பல நூறு ஆட்கள் வேலை செய்யும் போது பிரச்சினை எழுவது இயல்பானதுதான். இவைகளை தீர்ப்பதற்காகத்தான் தொழிற் தகராறு சட்டம் உள்ளது. தொழிற்சங்கங்கள் உள்ளன. நிர்வாகத்தோடு பேசுவதும், பிரச்சினை வந்தால் சமரச அலுவலரிடம் முறையிடுவதும் பல்லாண்டுகளாக சட்டத்தில் உள்ள நடைமுறைகள்தான். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள, சங்கம் வைக்கும் உரிமையை அனுமதிக்காமல், தொழிலாளர்களை சுரண்டுவதை தனது உரிமையாக நிறுவனங்கள் நினைப்பதினால் இத்தகைய கலவரங்கள் ஏற்படுகின்றன.
பெங்களூரில் இருந்து 70 கி்மீ.தூரத்தில் உள்ள விஸ்ட்ரான் ஆலையில் ஐடிஐ படித்து இருந்தாலும்,டிப்ளமோ படித்து இருந்தாலும், பொறியியல் படித்து இருந்தாலும் ஒரே விதமாக, பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. 21,000 ரூபாய் தருவதாக வாக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் குறைத்து வழங்கப்பட்டு வந்ததால் தொழிலாளர்கள் மனக்கசப்பில் இருந்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் 12 மணி நேரம் வரை வேலை செய்தாலும் மிகை ஊதியம் வழங்கப்படவில்லை. ஆறு ஒப்பந்தக்காரர்களிடம் 8490 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களோ மொத்தமே 1343 பேர்தான். உள்ளூரைச் சார்ந்தவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்குவதற்கு நிர்வாகம் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தக்காரர்களிடம் பணம் கொடுத்தாகிவிட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் சேரவில்லை. சனியன்று காலை ஆறு மணிக்கு முதல் ஷிப்டிற்கு வேலைக்கு போனத் தொழிலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டதற்கு சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிள்ள தொழிலாளர் சட்டம்தான் காரணம்” என்கிறார் எதிர்கட்சியைச் சார்ந்த மேனாள் முதலமைச்சர் சித்தாராமையா. “இந்தச் சட்டம் கொடுத்த தைரியத்தினால் தான் நிர்வாகம் 12 மணி நேரம் வரை தொழிலாளர்களை வேலை வாங்கி வந்தது” என்கிறார்.
மாநில அரசு கலவரத்திற்குப் பின்பு ஆய்வு நடத்தியது. குறைந்த பட்ச ஊதியச் சட்டம், சம ஊதியச் சட்டம், ஒப்பந்த தொழிலாளர்களை பணி வரன்முறை செய்யும் சட்டம், நிலையாணைச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம் என பல்வேறு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை, பாய்லர் துறை, தொழிற்சாலைத்துறை என மாநில அரசின் வெவ்வேறு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிர்வாகம் நடந்த சம்பவத்திற்காக, தொழிற்சாலையின் மூத்த நிர்வாகியை வேலை நீக்கம் செய்துள்ளது. ஆலையில் நடந்தது என்ன என்பதை கண்டறிவதற்காக அது தனியாக தணிக்கை நடத்தி வருகிறது. ” எமது தொடர் சங்கிலியில் அனைவரும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.தொழிலாளர்களுக்கு உரியவை தரப்படும்.விதிமீறல்கள் சரி செய்யப்படும் வரை அந்த ஆலைக்கு வேலையைத் தர மாட்டோம்” என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து ஏஐடியுசியின் செயல்தலைவரான எச்.மகாதேவனிடம் கேட்டோம். “நடந்த சம்பவங்களுக்கு மாநில அரசுதான் காரணமாகும்.தொழிலாளர் துறை முற்றிலும் செயல் இழந்துவிட்டது. வெளிநாட்டு முதலீட்டை பெறுவது என்ற பெயரில் தொழிலாளர்களின் நலனை பலி கொடுக்கிறது. தொழிற்சாலையில் சங்கத்தை அனுமதிக்காத போது, தனியாக ஒரு தொழிலாளி எப்படி நிர்வாகத்தை எதிர்த்து வெற்றிபெற முடியும் ? நடந்தவை அனைத்தும் தொழிலாளிகளின் எதிர்வினைதான். இனியாவது மாநில அரசுகள் திருந்தும் என்று நினைக்கிறீர்களா ? இல்லை. நடந்த சம்பவத்தையே காரணமாகச் சொல்லி தொழிலாளர்கள் மீது மேலும் மூர்க்கமான தாக்குதலை நடத்தும். ஆப்பிள் நிறுவனமே செய்த தவறுக்கு வருந்துகிறது. ஆனால் கர்நாடக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் இப்போதும் பார்க்கிறது. செய்த தவறுகளுக்கு யார் பொறுப்பு ? மத்திய,மாநில அரசுகள் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேருவதையும், கூட்டாக பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதி செய்யாதவரை இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது ” என்றார்.
இது போல ஹரியானா மாநிலம் கோர்காவனில், மாருதி சுசுகி ஆலையில் 2012 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஆலை மேலாளர் கொல்லப் பட்டார். இதில் 130 பேர் கைது செய்யப்பட்டு பிணையின்றி சில ஆண்டுகள் வரையிலும் கூட சிறையில் இருந்து 117 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 13 பேர் தண்டிக்கப்பட்டனர். ராகுல் ராய் இதை மையமாக வைத்து ‘ the factory ‘ என்ற ஆவணப் படத்தை எடுத்துள்ளார். ஒரு கொலை வழக்குதான். ஆனால் இதற்கு, காங்கிரஸ் அரசு, கேடி.எஸ். துளசி என்ற பிரபல வழக்கறிஞருக்கு 5.5 கோடி ரூபாயை கட்டணமாக கொடுத்தது. அதாவது, எளிதாக தொழில் நடத்த வேண்டிய சூழலை தருவது என்பதற்காக தொழிலாளர் நலன்களை காவு கொடுத்து பழங்கால அடிமை காலத்திற்கு இந்த சமூகத்தை அழைத்துச் செல்லப் பார்க்கிறார்கள்.
Also read
கலவரம் நடந்ததால் இந்தச் சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது. இல்லையென்றால் அந்தக் கொடுமைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கும்.ஊடகங்கள் கூட விஸ்ட்ரான் ஆலையில் நடந்த கலவரத்தைத்தான் படம் பிடிக்கிறார்கள்.தொழிற்சாலையில் நிர்வாகம் நடத்திய அத்துமீறல் குறித்து பெரிதாக ஏதும் எழுதியதாக தெரியவில்லை. ஒரே நாளில் பூதமாய் இவ்வளவு பெரிய கலவரம் ஏற்படுமா என்ன ? நல்ல பணிச் சூழலில், நியாயமான சம்பளத்தில், நிரந்தரமான பணி என்ற ஆசுவாசத்தில், பரஸ்பர நம்பிக்கையில் தோன்றுவதுதானே தொழில் அமைதி.
Leave a Reply