சட்ட சபையில் வெற்றி! சர்ச்சைகளில் தோல்வி!

-சாவித்திரி கண்ணன்

தப்பிப் பிழைத்தது தவெக ஆட்சி. இன்றைய சட்ட சபை காட்சிகளை, பேச்சுகளை பார்த்த போது ஆளும் கட்சியினரை விடவும் எதிர்கட்சியினரின் பேச்சுகள் சிறப்பாகவும், வலுவாகவும் இருந்தன. எதிர்கட்சியினரை பேசவிடாமல் தடுக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. ஆளும் தரப்பினர் பதில் அளிக்கும் விஷயத்தில் சற்று வீக்காகவே வெளிப்பட்டனர்;

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் எதிர்கட்சிகள் கடுமையாகப் பேசிய போதும் தடுக்காமல் சுதந்திரமாக பேச அனுமதித்தார். இதற்கு முதலமைச்சர் விஜய்யும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இந்த ஆட்சி குறித்த எதிர்மறையான, கடுமையான விமர்சனங்கள் சபையில் பேசப்பட்டால் கடந்த காலங்களில் அதற்கு பதிலடி கொடுக்க ஆளும் கட்சியில் சிலர் அதிரடி காட்டுவார்கள். பேசியவர்களை உண்டு, இல்லை என அவமானப்படுத்தி குதறி எடுப்பார்கள். ஆனால், எந்தக் குறுக்கீடும் இல்லாமல் பேச அனுமதித்தனர் சபாநாயகரும், முதல்வரும்!

உதாரணத்திற்கு உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியும் தவெகவுக்கு 35 சதவிகித வாக்குகள் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆனால், அவர்களை 65 சதவிகித மக்கள் நிராகரித்துள்ளனர் எனப் பேசிய போது ஆளும் தரப்பில் அதற்கு சரியாக பதில் தந்திருக்க முடியும். அதற்கான ஆட்களும் இருக்கின்றனர். திமுகவும், அதிமுகவும் 29 முதல் 32 சதவிகித வாக்குகள் பெற்றுத் தான் கடந்த காலத்தில் ஆட்சி செய்தனர் என்று சுலபமாக பதில் தந்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை.

அதே போல, ”அமமுக உறுப்பினரை திருட்டுத்தனமாக உங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வைத்தீர்கள்” என உதயநிதி பேசிய போது அமமுக உறுப்பினரே தன்னிலை விளக்கம் தர ஆவேசமாக எழுந்து பேசும் போது கூட சபாநாயகர் அவரை உட்காரச் சொல்லிவிட்டு, உதயநிதியை தொடர்ந்து பேச அனுமதித்தார்.

இவை எல்லாம் இன்றைக்கு யார் என்ன பேசினாலும் அமைதியாக செவிமடுப்போம். ஆவேசப்பட்டு பதிலடி தர வேண்டியதில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நல்லபடியாக முடித்து வெல்வதில் மட்டுமே அக்கறை வைப்போம் என்ற அணுகுமுறையில் தவெக செயல்பட்டதோ.. என எண்ணத் தோன்றுகிறது.

இறுதியில் விஜய் மாத்திரமே பேசினார். “குதிரைப் பேரத்தில் எங்கள் அரசு ஈடுபடுகிறது” என்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரைப் பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல” என பஞ்ச் டயலாக் பேசினார்.

அத்துடன், ”முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

”மதச் சார்பற்ற கோட்பாட்டில் உறுதியாக இருப்போம்”

என்று உத்திரவாதம் தந்தார், முதல்வர் விஜய்.

”மகளிர் பாதுகாப்பில் இந்த அரசு இம்மியளவும் தவறு செய்ய இடம் தராது” என்று தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் உத்திரவாதம் தந்தார்.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு எழுதி வைக்கப்பட்டதாக இருந்தாலும், அதை நன்றாகவே பிரசண்டேசன் செய்தார்.

”புஷ்பா பட பாணியிலான ஆட்சி”,

”சேன்ச் என்றீர்கள் எக்ஸ்சேன்ச் தான் நடக்கிறது”.

”குதிரை பேரம்”,

”திருட்டுத்தனம்”

”மக்கள் உங்களை நிராகரித்துள்ளார்கள். உங்கள் நடவடிக்கைகள் எல்லாம் மீம்ஸ் கண்டெண்டுகளாகிக் கொண்டுள்ளன..”

என சரமாரித் தாக்குதல்களை வைத்தார்.

இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோர் தங்கள் ஆதரவு நிலையை விமர்சனக் கண்ணோட்டத்துடனும், அறிவுரை நல்கும் பாணியிலும் வெளிப்படுத்தினார்கள்.

தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா ஆகியோர் திமுக ஆதரவு நிலையில் நின்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பேராசிரியராக இருக்கும் ஜாஹிருல்லா தன்னை கல்வியாளர் என்று சொல்லிக் கொண்டு, தேசியக் கல்விக் கொள்கையை பெயர் மாற்றம் செய்து சென்ற அரசாங்கம் பல கவர்ச்சி திட்டங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் அதையே இந்த அரசும் தொடர வேண்டும் என்ற போது அதிர்ச்சியாக இருந்தது.

பாமகவின் செளமியா அன்புமணி, தேமுதிகவின் பிரேமலதா இருவரின் பேச்சும் மிக அருமையாகவும், தெளிந்த நீரோடை போலவும் அமைந்திருந்தது. செளமியா அன்புமணி பெண்களின் பாதுகாப்பு, போதைக்கு எதிர்ப்பு, ஒது மதுக் கடை மூடப்பட்டால் நான்கு மதுக் கடைகள் பக்கத்து சந்துகளில் முளைப்பது ஆகியவற்றையெல்லாம் பேசிய போது விஜய் அவற்றை அக்கறையுடன் குறிப்பெடுத்துக் கொண்டார்.

ஜோசியர் ரத்தன் பண்டிட்

மொத்தத்தில் இன்று தவெகவை ஆதரிக்கும் கட்சிகளும், எதிர்க்கும் கட்சிகளும் ஜோசியர் ரத்தன் பண்டிட்  வெற்றி வேலுக்கு முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி தரப்பட்டு அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய அரசாங்க அதிகாரம் தரப்பட்டதற்கான கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆகவே இந்த நியமனம் குறித்து முதலமைச்சர் சபையில் தன்னிலை விளக்கம் தருவார் எனப் பேசியவர்களும் எதிர்பார்த்தனர். பார்த்தும், கேட்டும் கொண்டிருக்கும் மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வர் விஜய் பதில் சொல்லவில்லை.

ஆனால், சபை முடிந்த கையோடு அவரது அரசு நியமனத்தை ரத்து செய்து விட்டார். இப்படி ஒரு முடிவை எடுப்பதை சபையில்  விஜய் அறிவித்திருந்தால் அதை அனைவரும் வரவேற்று அவரை வாழ்த்தியே கூட பேசி இருப்பார்கள். ஆனாலும், பேசுவதை தவிர்த்து செயல்பாட்டில் வெளிப்படுத்தி உள்ளார். இது ஒரு வகையில் சரி என்றாலும், சர்ச்சைகள் வரும் போது சரிக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும். அதில் சத்தியம் வெளிப்பட வேண்டும். பதில் சொல்லப்படாத வரையில் சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறக்கும்.

‘பிறர் பேசுவதை அமைதியாக உள்வாங்குவது நல்ல பண்பு. தன் செயல்பாடுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு காது கொடுப்பது’ என்பதே தவறுகள் தெரிய வேண்டும். அப்போது தான் நாம் நன்றாக செயல்பட முடியும் என்பதற்கான பார்வையாகும். இந்த வகையில் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்தாலும் விஜய்க்கு நன்மையே செய்துள்ளனர். ‘நம் நடவடிக்கைகள் உற்று நோக்கப்படுகிறது. ஆகவே நாம் கவனமாகவும், பொறுப்பாகவும் நடக்க வேண்டும்’ என்ற புரிதல் அவருக்கு உருவாகி இருக்கும்.

 

பிரிந்து வந்து ஆதரிக்கும் அதிமுகவினருக்கு அமைச்சர் பதவிகள் தந்து விஜய் ஆதரித்தால் அது இந்த ஆட்சியின் இமேஜையே டேமேஜ் பண்ணிவிடும். அப்போது இன்றைக்கு ஆதரவளித்த இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விலகி விடுவார்கள். அதனால், ஊழல்மிக்க அதிமுக கூட்டத்தை விஜய் வெளியில் இருந்து ஆதரிக்க வைக்கலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றீர்கள். வாழ்த்துக்கள். அதே சமயம் மக்களுக்கு தந்த வாக்குறுதியான நேர்மையான ஆட்சி என்பதிலும் வெற்றி பெற வேண்டும். அதிமுகவின் ஒரு பிரிவோடு ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டு தான் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை வந்தால், ஆட்சியை துறந்து மக்களிடம் மீண்டும் ஆதரவை கோருவதே சிறப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time