ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே…!

-சாவித்திரி கண்ணன்

‘தலித்துகளுக்கு அதிகாரம்’ என்ற அஸ்திரத்தை தேவைப்பட்டால் பாஜகவே பயன்படுத்தும். எந்தத் தலைவர் சனாதனத்தோடு இடையறாது சமர் புரிபவராக தன்னை அடையாளப்படுத்தி வந்தாரோ, அவரை வைத்தே தன் அரசியல் சித்து விளையாட்டை நிகழ்த்தத் துடிக்கும் என்பது விஜய் முதல்வராவதை தடுப்பதற்கு செய்யப்பட்ட வினோத முயற்சிகளில் வெளிப்பட்டுள்ளது;

கேப்டலிஸ்ட் கட்சிகள், அதன் தலைவர்கள் அத்தனை பேரும் ஒரே ரகம் தான்! புத்தம் புதிதாக ஒருவர் முளைத்து வருகிறார். அவர் நம் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார் எனும் போது இவர்கள் அனைவரும் தாங்கள் பாசாங்குத்தனமாக வெளிப்படுத்திய பகை அரசியலை மூட்டை கட்டி வைத்து ஒன்றுபடத் தயார் ஆனது என்பது சுலபத்தில் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல.

கொள்கை, சித்தாந்தம், உன்னத குறிக்கோள் இவற்றை வைத்து பின்னப்பட்டு உணர்ச்சியும், எழுச்சியும் கொள்ள வைக்கும் இந்தக் கட்சிகள் சந்தர்ப்பவாத சகதியில் எப்படி மூழ்கி இன்று அம்பலப்பட்டுள்ளார்கள் என்பது பரவலாக வெளிப்பட்டுவிட்டது. இது ஏதோ நாம் மட்டும் வெளிப்படுத்தப் போகிற ரகசியமும் அல்ல.

பாஜக ஒரு பாசிச கட்சி என்ற கருத்தாக்கத்தை வைத்து தான் திமுக தன் ஆதரவு தளத்தை உறுதிபடுத்தி இந்த அளவுக்கேனும் வாக்குகள் பெற்றது. அப்படி இருந்தும் பாஜகவின் யோசனைப்படி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க திமுக தலைமை முயன்றது இடதுசாரிகளின் ஏற்பின்மையால் தடைபட்டது.

இதனால் இன்னொரு மாற்று யோசனையை பாஜக சொல்கிறது.

”சரி, அப்படி என்றால், திருமாவளவனை முதல்வராக முன் மொழியுங்கள். ஓரு தலித் முதல்வராவதை எப்படி இடதுசாரிகள் ஏற்காமல் போக முடியும்?  இதற்கு அன்புமணியையும், தினகரனையும் ஒத்துக் கொள்ள வைத்துவிட்டோம் பாஜகவின் ஒரு எம்.எல்.ஏவும் ஆதரிப்பார்…’’என்கிறார்கள்.

உடனே, திமுக தலைமை விசிக தலைவர் திருமாவளவனுக்கு தகவல் தருகிறது. இதையடுத்து தான் வன்னியரசு ‘திருமா அவர்களுக்கு முதல்வராகும் தகுதி உண்டு’ ‘இனி வரும் காலம் திருமா காலம்’ என்றெல்லாம் டிவிட் போடுகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராவோம் என ஆசைப்பட்டு சிவி சண்முகம் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்கள் தவிர்த்த – அதிமுக எம்.எல்.ஏக்களை – பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்து வந்தார். இந்த தகவலால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார். ”அவர் முதல்வரென்றால் நான் அவருக்கு கீழே துணை முதல்வராக இருக்க முடியாது. அவரை துணை முதல்வராக வேண்டுமானால், நான் ஏற்பேன்” என்கிறார்.

அப்போது தான் கட்சிக்குள் கருத்து வேறுபாடு முளைக்கிறது. ”திருமா முதல்வரானால் அந்த அமைச்சரவையில் அதிமுகவினர் 20 அல்லது 25 பேர் அமைச்சராகலாம். இன்னும் ஐந்து வருடம் அதிகாரம் இல்லாமல் எங்களால் தேவிடு காக்க முடியாது” என எடப்பாடிக்கு முன்னாள் அமைச்சர்கள் நெருக்குதல் தருகிறார்கள். ( இந்த அம்சம் வி.சி.சண்முகம் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்டது)

இதற்கிடையே தவெகவின் வேண்டுகோளை பரிசீலித்து இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து விடுகின்றனர். அடுத்த நாள் விஜய் இடதுசாரி கட்சிகளின் அலுவலகம் இரண்டிற்கும் சென்று நன்றி தெரிவித்த நிலையில் விசிக தலைவரை சந்திக்கலாமா? என தவெக தரப்பில் கேட்கப்பட்ட போது  ‘’நாங்கள் இன்னும் அதரவு நிலைபாடு எடுக்கவில்லை’’ என்கிறார்கள்.

திருமாவளவன் தான் முதல்வராவதற்கு இத்தனை முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதைக் கருதி மெளனிகிறார். முன்னதாக இடதுசாரிகள் முடிவெடுத்து ஆதரவு கடிதம் தந்த போது ‘தானும் இடதுசாரிகள் வழியில் தான் முடிவெடுப்பேன்’ என்றவர் திமுகவின் அழுத்தத்தால் தாமதிக்கிறார். தான் முதல்வர் ஆக முன் மொழியப்பட்டு இருப்பது தொடர்பாக கட்சியில் உள்ள தன்னுடைய மிக நெருங்கிய சகாக்களோடு அதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கிறார். இதனால்  முடிவெடுக்க முடியாமல்  இரு நாட்கள் நகர்ந்தன.

இதற்கிடையே  விஜய் கம்யூனிஸ்ட் ஆதரவை பெற்றதைத் தொடர்ந்து கவர்னரை மீண்டும், மீண்டும் பார்த்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் வைத்தது ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வந்தார்.

இதனால், மக்களிடையே விவாதங்கள் எழுந்தன;

”விஜய்யின் பதவி ஏற்பு தாமதமாவதற்கு விசிகவே காரணம்”

”திருமா ஏன் தடுமாறுகிறார்?”

”அவருக்கு என்ன அரசியல் அழுத்தங்கள்?”

போன்ற குற்றசாட்டுகளும், கேள்விகளும் பொதுத் தளத்தில் வலுப்பட்டன…!

மீண்டும், மீண்டும் திமுகவும், பாஜகவும் தந்த அழுத்தத்தின் காரணமாக இறுதியில் பழனிச்சாமி திருமாவளவன் முதல்வராவதை ஒத்துக் கொள்கிறார்.

எனவே, திருமாவளவனை அழைத்து திமுகவின் தலைமை குடும்பம் பேசுகிறது. அழுத்தம் தருகிறது, மன்றாடுகிறது.

இந்த நிலையில் இடதுசாரிகள் விஜய்க்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதும், விஜய் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வந்து நன்றி தெரிவித்த பிறகான ஒரு மாறிய சூழலும் கம்யூனிஸ்ட்களுக்கு திருமாவை ஆதரிப்பதில் தர்மசங்கடத்தை தரும். திருமாவளவன் முதல்வராவது கம்யூனிஸ்ட்களுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஆதரவில் அவர் முதல்வராக்கப்படுவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள்?

திருமாவளவனை முதல்வராக்கினால் அதிமுக அமைச்சர் பட்டாளத்துடன் கூடிய ஒரு அமைச்சரவையை அவர் கட்டுப்படுத்த முடியுமா? இங்கே எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபர் மட்டுமே விடுபட்டுள்ளார். மற்றபடி அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு கட்டுப்பட்டவர்களே.

இந்தச் சூழலில் திருமாவளவனை அதிமுக, திமுக, பாஜக மூன்று பெரிய கட்சிகளும் பின்னிருந்து இயக்கும். இதில் அவர் சுதந்திரமாக செயல்படவோ, முடிவெடுக்கவோ முடியாது. அவர் ஒரு பொம்மை முதல்வராகவே இருக்க முடியும். விஜய் முதல்வராவதை தடுக்க திருமாவளவனை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது என்பதைக் கடந்து ஒரு தலித் தலைவரை முதல்வராக்கி பெருமைப் படுத்த வேண்டும், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தியல் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் கட்சிக்கும் கிடையாது.

மேலும் வெறும் இரண்டு எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சியில் இருந்து ஒருவர் முதல்வராவதை மக்கள் ஏற்பார்களா? திருமாவளவனை முதல்வராக முன் நிறுத்தி இந்த தேர்தல் அணுகப்படவில்லை. அவரே எம்.எல்.ஏவாக நிற்க ஆசைப்பட்டத்தைக் கூட திமுக தலைமை அனுமதிக்கவில்லை. தடுத்து விட்டது. ஆனால், தற்போது ஆதிக்க சக்திகளின் அபிலாஷைகளுக்கு அவர் இரையாக்கப்படுவதாகவே இதனை கம்யூனிஸ்ட்கள் அணுகுவார்கள் என்பதும் விசிகவில் விவாதிக்கப்பட்டது.

108 இடங்களை வென்ற விஜய் முதல்வராவதை தடுக்க திருமாவை ஒரு கருவியாக்கினால் இதன் மூலம் மக்களிடையே உருவாகும் கோபம், கொந்தளிப்பை எல்லாம் விசிகவும், திருமாவும் தானே எதிர்கொள்ள நேரிடும்.

 

மேலும் ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், பழங்குடியினர் உள்ளிட்ட 28 நபர்களை விஜய் எம்.எல்.ஏக்களாக்கி உள்ளார். இதில் நால்வர் பொதுத் தொகுதியில் வென்றுள்ளனர். ஆக, தலித் மக்களின் பேராதரவு இயல்பிலேயே விஜய்க்கு உள்ளது. அதே போல 13 சிறுபான்மையினர் தவெகவில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த நிலையில் தன்னை விஜய்க்கு எதிராக நிறுத்தி ‘பொலிடிகல் கேம்’ செய்தால் மக்களில் கணிசமானோர் தன் மீது அதிருப்தி அடைவார்கள். இது விடுதலை சிறுத்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். இவர்களின் அரசியல் சூதாட்டத்திற்கு நாம் பலியாகக் கூடாது என திருமாவளவன் சுதாரித்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர் தாமதிக்காமல் ஆதவ் அர்ஜுனாவை அழைத்து தவெக ஆட்சி அமைப்பதை ஆதரித்து கடிதம் தந்து விட்டார். இதன் மூலம் தனக்கு நேரவிருந்த ஒரு பேராபத்தையும், அவப்பெயரையும் தடுத்து விட்டார்.

இதன் பிறகு விஜய் மரியாதை நிமித்தமாக விசிக அலுவலகம் வந்து திருமாவளவனை சந்தித்து பேசியது அந்தக் கட்சித் தொண்டர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நம் தலைவர் ஆதரவுடன் விஜய் முதல்வர் ஆக்கப்பட்டார் என்ற பெருமித உணர்வும், சந்தோஷமும் தலித் மக்களிடையே கரைபுரண்டு ஓடியதோடு, திருமாவளவனின் இமேஜும் உயர்ந்தது.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time