மாநில உணர்வுக்கு பணிய நேர்ந்த காங்கிரசின் தேசியத் தலைமை!

-சாவித்திரி கண்ணன்

கேரளாவில் முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கிரசில் நடந்த உச்சகட்ட உள்கட்சிப் போராட்டம் 10 நாட்கள் நீடித்து ஓட்டுப் போட்ட மக்களை சங்கடப்படுத்தியது. உள்கட்சி ஜனநாயகத்தை உதாசீனப்படுத்தி, முதல்வர் பதவிக்கு டெல்லி மேலிடத் திணிப்பு நிகழ்ந்ததை இறுதியில் உள்ளூர் காங்கிரஸார் வீழ்த்தியது வரலாற்று முக்கியத்துவமானது;

இந்தியாவிலேயே படித்தவர்களை அதிகமாகக் கொண்ட மாநிலம் கேரளம். அதே போல முஸ்லீம்களும், கிறிஸ்த்துவர்களும் அதிகமாக வாழும் இடம். இயற்கையை நேசிக்கும் மக்கள், எளிமையாக வலம் வரும் தலைவர்கள், பண விநியோகம் இல்லாத தேர்தல் நடக்கும் மாநிலம் என பல சிறப்புகளைக் கொண்ட கேரளாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும்  ஐஎன்டி கட்சி, ஆர்எஸ்பி கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், சிஎம்பி, கேடிபி, கேசி (ஜே), ஆர்எம்பிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலுமாக மொத்தம் 102 தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

35 தொகுதிகளில் வெற்றி பெற்ற இடதுசாரி அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதே சமயம் கேரளாவில் முதன் முறையாக 3 தொகுதிகளில் வெற்றி பெற்று, தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது பாஜக!

தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாக காங்கிரஸ் சார்பாக யார் முதல்வர் என்பதில் தேவையில்லாத நீண்ட இழுபறி நடந்தது.

காங்கிரசில் மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும், அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவும் யாருக்கு இருக்கிறது என்பதைக் கொண்டு முடிவுக்கு வரும் நேர்மையான அணுகுமுறையை கடைபிடிக்காததால் தான் இந்த காலதாமதமாகும்.

கே.சி.வேணுகோபால்,வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா

இந்த முதல்வர் ரேசில் இருந்த கே.சி.வேணுகோபால் 20 ஆண்டுகளாக முழுக்க, முழுக்க தேசிய அரசியலில் உள்ளவர். காங்கிரசின் தேசிய செயலாளர். ராகுல் காந்தி மற்றும் சோனியாவிற்கு நெருக்கமானவர். மாநில அரசியலுக்கு சரிவர நேரம் தர முடியாதவர். தற்போது எம்.எல்.ஏவாக நிற்காதவர், காரணம்,2024 ஆம் ஆண்டு தான் ஆலப்புழா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார். ஆக, அடிப்படையில் இவர் முதல்வர் போட்டியில் குதித்ததே தவறு. டெல்லி மேலிடம் அழுத்தம் தந்து தன்னை முதல்வர் ஆக்கிவிடும் என நம்பினார்.

அடுத்ததாக களத்தில் முதலமைச்சர்  போட்டியில் இருந்த ரமேஷ் சென்னிதாலாவும் சுமார் 17 ஆண்டுகள் எம்.பியாக தேசிய அரசியலில் இருந்தவர். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு தான் மாநில அரசியலுக்கு வருகிறார்.  மாநில காங்கிரசின் தலைவராகவும் உள்ளார். ஆக, காங்கிரசில் இவரும் முக்கியத் தலைவரே.

இந்த இரண்டு பேருக்கும் இல்லாத ஒரு சிறப்பு வி.டி சதீசன் எனும் வடசேரி தாமோதர சதீசன் அவர்களுக்கு உள்ளது. காரணம் அவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மாநில அரசியலில் மட்டுமே களத்தில் நிற்கிறார். இரு பெரும் சீனியர்களும் தேசிய அரசியலில் கோலோச்சுவதன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்திய போதும், களத்தில் இடதுசாரிகளுக்கு  இணை சொல்லத்தக்க வகையில் கடுமையாக அரசியல் போர் செய்தவர் சதீசன் தான்.

அந்த வகையில் கேரள காங்கிரசின் பல தரப்பு மாவட்ட நிர்வாகிகள், அடி நிலை தொண்டர்கள் ஆகியோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். கூடுதலாக 25 ஆண்டுகள் சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்.  நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கேரளா முன்னாள் முதல் அமைச்சர்களான உம்மண் சாண்டி, ஏ.கே.அந்தோனி ஆகியோர் தலைமையில் பணியாற்றியவர்.

கடந்த ஐந்தாண்டுகளாக சட்டமன்றத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக சங்கநாதம் எழுப்பியதில் சிறப்பான கவனம் பெற்றவர். இந்த தேர்தலிலுமே கூட இவரது பரப்புரை தான் முக்கிய கவனம் பெற்றது. ஆகவே, சொந்தக் கட்சியிலும், கூட்டணிக் கட்சியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் வி.டி.சதீசன் கேரள முதல்வராக வருவதையே ஆதரித்தனர். அது மட்டுமின்றி கேரளாவி காங்கிரசின் அடையாளமாக மக்கள் நினைவில் நிற்கும் தலைவராகவும் மாநில அரசியல் களத்தில் பல போராட்டக் களங்களை கண்டவராவார். குறிப்பாக புதுயக யாத்திரா என்ற பெயரில் கேரளாவில் தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் இவர் நடத்திய யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ராணுவக் கட்டமைப்புள்ள தொண்டர்கள், தலைவர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடு கொடுத்து, மாநில அரசியல் களத்தில் மகத்தான பங்களிப்பை நிகழ்த்தி கொண்டிருந்தவர். சிறந்த பேச்சாற்றலும், சிரித்த முகமும் கொண்ட இவர் காங்கிரசில் மக்கள் செல்வாக்கானவர்.

வி.டி.சதீசனுக்கு ஆதரவாக திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்!

ஆகவே, வி.டி.சதீசனை தேர்வு செய்வதில் டெல்லி தலைமை காலதாமதம் செய்தது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. கே.சி.வேணுகோபாலுக்கு ஆதரவாகவும், ரமேஷ் சென்னிதாலாவிற்கு ஆதரவாகவும் அவர்களது ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. நான் முதல்வராவது தடுக்கப்பட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜூனாமா செய்து விலகிக் கொள்கிறேன் என சதீசன் பேசியதையடுத்து தான் டெல்லி தலைமை யோசிக்க ஆரம்பித்தது.

காங்கிரசின் தேசியத் தலைமை மாநில அரசியலில் மக்கள் செல்வாக்குடன் திகழும் ஒரு தலைவரை அங்கீகரிப்பதில் இன்னும் கூட தயக்கம் காட்டுவதும், தலைமையின் துதிபாடிகளை மாநில முதல்வராக திணிக்க முனையும் அரசியலை கைவிட மறுப்பதும் கவலையளிக்கிறது.

வி.டி.சதீசனை புறக்கணிப்பதை பெரும்பாலான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தது மட்டுமின்றி, கட்சியின் அடிமட்டம் வரை பெரும் கொந்தளிப்பு உருவானதையடுத்தே காங்கிரஸ் தலைமை பணிந்தது. ஒரு வகையில் டெல்லி மேலிடத்திற்கு சதீசனின் முதலமைச்சர் தேர்வில், உள்கட்சி ஜனநாயகத்தை உதாசீனப்படுத்த முடியாது என்ற படிப்பினையும் கிடைத்துள்ளது.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time